இசையற்ற இசை…
கடைசி முறை எழுதியிருந்தது போல் திரு.வாங்கல் மணிகண்டன் அவர்கள் இல்லத்தில் நான் கண்ட மற்றுமொரு ஆச்சர்யமான, அதே சமயம் ஒரு வித குறுகுறுப்பை எற்படுத்திய இசை கருவி இசையை வெளிப்படுத்தா பியானோ. மணிகண்டன் அவர்களின் வார்த்தைகளில் சொன்னால் ஊமை பியானோ. அதென்ன ஊமை பியானோ என்று கேட்டேன், அப்பொழுது தான் தெரிந்தது, அது மணிகண்டன் அவர்களின் ஆழ்ந்த தேடலின் வழியே அவராலே கண்டெடுக்கப்பட்ட இசை கருவி. இசையில் ஆழமான உள்ளார்ந்த தேடல் இருந்தால் ஒழிய இதுபோல் ஒரு சிந்தனை உதிக்க வாய்ப்பேயில்லை. தரமான தேடல். ஊமை பியானோவென்றால் நீங்கள் வாசித்தாலும் ஒ(இ)சையே வெளிவராது அப்படியென்றால், அந்த பியானோ வெளிப்படுத்துவது எதை. சரியாக சொன்னால் நீங்கள் முதலில் இசையை சரியாக புரிந்துகொள்ள வேண்டும், பின்னர் அதன்வழி அந்த ஊமை பியானோவை புரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு அதை நீங்கள் வாசிக்கும் போது அது உங்களுக்கு உங்களையே கொடுக்கும், புரியவில்லையா. சரி விளக்குகிறேன். நீங்கள் பியானோவை கற்றுக்கொள்கிறீர்கள் அந்த பியானோவின் இசையினுள் ஆழமாகச் செல்ல, செல்ல பியானோவில் இருக்கும் ஸ்வர கட்டைகள் எது எதை உங்கள் விரல்கள் தீண்டும்போது எந்தெந்த ஸ்வரங்கள் வெளிவரும் என்பதை கரைத்துக் குடித்ததிருப்பீர்கள். அந்த முழுமையான புரிதல் வந்துவிட்டது என நீங்கள் உணர்ந்தவுடன். இந்த ஊமை பியோனோவின் ஸ்வர கட்டைகளை பார்க்கிறீர்கள். இப்பொழுது உங்களுக்கு எந்தெந்த ஸ்வரத்துக்கு என்ன கட்டைகள் என்பதினை உணர்ந்து கொள்ள வெகு நேரமாகாது. அந்த அற்புதமான புரிதலுடன், இந்த ஊமை பியானோவை நீங்கள் வாசிக்கும் பொழுது ஸ்வரகட்டைகள் உங்களின் விரல்களின் வழி தீண்டப்படும் போது, அதிலிருந்து எதுவுமே வெளிவராது. ஆனால் நீங்கள் ஆழமாக உள்வாங்கிய எந்த கட்டைக்கு என்ன ஸ்வரம் என்பது உங்களின் உள்ளிருந்து கேட்கும்.
நன்றாக யோசித்து பாருங்கள். ஒரு அற்புதமான வாத்திய கருவியை வாசிக்கிறீர்கள், அதிலிருந்து வெளிவர வேண்டிய இசை வெளிவரவில்லை. ஆனால் அதிலிருந்து ஒலிக்க வேண்டிய இசை கோர்ப்புகள் உங்களுக்குள் உங்களுக்கு மட்டுமே கேட்டபடி இருக்கிறது. உங்களால் அதை முழுமையாக உணரமுடிகிறது எனில், நீங்கள் உங்களை கண்டடைந்து வீட்றீர்கள் எனப் பொருள். அந்த நிலைக்கு வந்த பிறகு, உங்களால் எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும், எந்த வாத்தியக் கருவியுமற்று காற்றிலேயே உங்கள் கைகளை தவழவிட்டபடி அந்த இசையை உருவாக்கி கேட்டபடியே இருக்கமுடியும். உங்களுக்கு பயிற்சி செய்ய வேண்டுமென்றால் கூட வாத்தியக் கருவியே தேவையில்லை. உங்களால் ஏதுமற்ற பாலைவனத்தில் கூட தன்னந்தனியாக பயிற்சி செய்யமுடியும். இந்த நிலையில் இசை வாத்தியக் கருவியில் இல்லை உங்களுக்குள் இருக்கிறது. எப்பொழுதும் இருக்கிறது. இந்த நிலையை அடைந்து, அதன் வழி ஒரு கருவியை உருவாக்க வேண்டுமெனில் அது லெசுப்பட்ட காரியமில்லை. இந்த ஊமை பியானோவை பற்றி மணிகண்டன் அவர்கள் விளக்கி கூறியவுடன், அதன் பின்னால் இருக்கும் அவரின் தேடல், உழைப்பு என்பது சாதாரணமானது இல்லை. அசாதாரணமானது என்பது விளங்கியது.
இப்படி ஒரு அசாதாரணமான தேடலை தான் ஒவ்வொருவரும் தங்களின் தொழில்சார்ந்து செய்யவேண்டும். அது அந்த துறையில் உங்களை உச்சியில் கொண்டுபோய் வைக்கும். அதன் பின்னர் எதுவுமே உங்களை சலனப்படுத்த முடியாது. கிட்டதட்ட இப்படி ஒரு நிலையை நோக்கி போகவேண்டுமென்று தான் நான் எடுக்கும் புகைப்படம் தொடர்பான பயிற்சிகளில் சொல்லிக் கொடுக்கிறேன். புகைப்படமெடுப்பதை ஆழ நேசித்தலின் வழியே உங்களை நீங்கள் கண்டடைய வேண்டும். அப்படி ஒரு நிலையில் அது கொடுக்கும் வாழ்வியல் அற்புதமானது. அந்த நிலையில் எதை பார்த்தாலும் அதில் உங்களின் தேடல் இருந்து கொண்டேயிருக்கும் கற்றுக்கொண்டே இருப்பீர்கள். கற்றுக்கொண்டே இருப்பது உங்களை அற்புதமாக செதுக்கும். ஒரு நிலையில் செதுக்கப்பட்ட அற்புதமான சிலையாவீர்கள். அதோடு அது முடிந்துவிடாது. அதனை மேலும், மேலும் மெருகூட்ட தேடியபடி இருப்பீர்கள். தேடல், தேடல், தேடல் மட்டுமே… அது இன்னும் உங்களை தங்கசிலையாய், வைரமாய் இன்னும் விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை போல் மாற்றும். நான் கண்ட அந்த ஊமை பியானோவை போல… மகிழ்ச்சி.
பின்குறிப்பு : இதில் நான் பகிர்ந்திருக்கும் புகைப்படம் நான் எடுத்தது அல்ல, இந்த புகைப்படங்கள் திரு. மணிகண்டன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்தே எடுத்தது. ஊமை பியானோவை பற்றி மணிகண்டன் அவர்கள் சொல்லிகொண்டிருந்த போது ஒரு பிரம்மிப்பில் அதையே பார்த்துக்கொண்டும் அதன் ஸ்வரகட்டைகளை வாசித்துபார்த்து கொண்டும் இருந்ததில் புகைப்படமெடுக்காமல் ஒரு ரசிகனாக மட்டும் எனக்குள் இருக்கும் இசையை தேடிக்கொண்டிருந்தேன். ரசிகனாக மட்டுமான காரணம் நான் இசையை படித்தவனில்லை கேட்டவன்.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916