வாழ்ந்து பார்த்த தருணம்…77

உச்சரிப்பின் ஒலியில் உயிருக்குள் பரவும் உன்மத்தம்…

சில நாட்களாக காதுக்குள் வந்து விழும் விஷயங்களை கவனிக்கையில் என்னப்பா நடக்குது இங்க எனத் தலைசுற்றியது. ஒரு பக்கம் நாட்டமைகளின் நேரத்தை தேவையேயில்லாமல் வீணடித்து தண்டம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மீகுந்த சமூக அக்கரையோடு சோமபான கனவுகள் வண்ணக் காகிதங்களில் பொறுப்பான பாதுகாவலர்களோடு காற்றில் படபடத்துக்கொண்டிருக்கின்றன. இதை எல்லாம் செவிகளில் கேட்கையில் உள்ளம் உவகை கொண்டு புல்லரிக்கிறது. ரொம்ப அரித்தால் சொரிந்து புண்ணாகிவிடும் என்பதால் மரியாதையாக வேறெதன் மீதாவது கவனத்தை திருப்பலாம் என யோசிக்கையில். தேர்வறை கேள்வித்தாள்களில் கொடுக்கப்படும் மூன்று பதில்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம் என்பதை போல், மூன்று விஷயங்கள் மனதுக்குள் தோன்றி மறைந்தன. ஒன்று புத்தகம். இரண்டு பவாவினுடைய உரை. மூன்றாவது ராகதேவனின் இசை. இருக்கும் தாங்கமுடியாத புல்லரிப்பில் மூன்றையுமே தேர்வு செய்தேன். புத்தக அடுக்குகளிலிருந்து கையில் அகப்பட்டது பாலோ கொய்லோவின் ரசவாதி. ஏற்கனவே ஒரு முறை முழுமையாய் படித்திருந்தாலும் பலமுறைகள் மீள்வாசிப்பு செய்ய வேண்டிய அட்டகாசமான புத்தகம் தான் என்பதால் யோசிக்காமல் எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஐம்பதுப் பக்கங்களை தாண்டியவுடன் மீண்டும் லேசாக சோமபான வண்ணக் காகிதங்களின் நினைவுகள் வந்து புல்லரிப்பு எட்டிப் பார்க்க சரியென பவானுடைய உரையை தேடினால். சமீபத்தில் வெளியிட்டப்பட்ட Impossible Friend யோகிராம் சரத்குமார் எனும் திருவண்ணாமலையை சேர்ந்த விசிறி சாமியாரை பற்றிய பவாவினுடைய அட்டகாசமான உரையை கேட்டுக்கொண்டிருந்தேன், வழங்கம் போல் அதகளம். அவருடைய உரை முழுமையாய் முடியும் வரை அதற்குள் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். உரை முடிந்தது ஒரு மாதிரியான நெகிழும் மனநிலையில் ராகதேவனை தேடினால், கூடவே ஒரு தேவதையின் குரலும் மனதுக்குள் ஞாபகம் வர உடல் லேசாக சிலிர்த்து அடங்கியது.

இணையத்தில் மனத்துக்குள் தோன்றிய அந்த பாடலைத் தேடினேன். அந்தப் பாடல் வள்ளி திரைப்படத்தில் வரும் என்னுள்ளே என்னுள்ளே எனும் பாடல். மனதில் தோன்றிய அந்தப் பாடலை பாடிய குரல் தேவதை சொர்ணலாதவிற்காகவே பலகோடி முறை கேட்க வேண்டுமேன மனம் ஏங்கியது. காரணம், இப்பொழுதைய சூழலில் வெயில் அடித்து ஓய்ந்த ஒரு மாலை நேரம் எங்கெங்கோ அலைந்துவிட்டு, உடலின் ஒட்டுமொத்த ஆற்றலும் வெளியேறிய ஆளாய் விட்டுக்குள் நுழைகிறீர்கள். மனம் உடல் இரண்டும் மிக, மிகக் களைப்பாக இருப்பதாய் உணர. அப்படியே குளியலறை போய் ஒரு சின்ன குளியலை முடித்துவிட்டு, வீட்டின் முதல் தளத்தின் முன்னால் இருக்கும் முற்றத்தில் வந்து அமர்கிறீர்கள். மாலை நேர லேசான குளிர் காற்று குளித்து முடித்துவிட்டு வந்திருக்கும் உங்களின் மேல் பட சிறிய சிலிர்ப்பு எழுந்து அடங்க, ஒரு அற்புதமான தேநீர் உங்களின் கரங்களில் கொடுக்கப்படுகிறது, இதமான சூட்டில் இருக்கும் அந்த தேநீர் உங்களின் உதட்டுகளில் பட்டு நாவினுள் பரவுகையில், ஒரு கரம் உங்களின் தலையை வருடினால் எப்படியிருக்குமோ அப்படியான வருடல் தான் இந்தப் பாடல். சில பாடல்களை கேட்கையில் மட்டும் இன்னது தானென்று அறியா வண்ணம் மனம் அப்படியே உருகி கண்களின் ஓரங்களில் நீர் திவலைகள் கீழிறங்குவதை தடுக்கவே முடியாது. அது ஏன் அப்படி என்பதற்கான காரணத்தை எல்லாம் தேடவெல்லாம் முடியாது. அது அப்படித்தான். இந்தப் பாடலும் சரி. இந்தப் பாடலை பாடிய குரல் தேவதை சொர்ணலாதவும் சரி. வேறு ஒரு உலகத்துக்குள் நம்மை அப்படியே இழுத்துச் செல்வார்கள். நீங்கள் உங்களை முழுமையாய் ஒப்படைத்துவிட்டு அமைதியாக தலைசாய்த்து அமருங்கள் போதும். உங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தும் அப்படியே தண்ணிரின் மீது மிதக்கும் தக்கையை போல இலகுவாகி மிதக்க ஆரம்பிக்கும்.

ஒரு பாடலின் இசையும், அந்த பாடலை பாடியவரின் குரலும் கேட்பவரை என்னவெல்லாம் செய்யும் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா?. யோசிக்கவில்லை எனில் பரவாயில்லை. அதனைக் கடைசியாக சொல்கிறேன். பொதுவாக திரைப்படப் பாடல்களை கேட்கும் போது பலப் பாடல்கள் அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படகாட்சிகளை நினைவு படுத்தும். ஆனாலும் ராகதேவனின் பல பாடல்கள் திரைப்படக் காட்சிகளைத் தாண்டி கேட்பவருடைய நினைவு அடுக்களில் ஆழமாய் வேருன்றி இருக்கும் பல காட்சிகளை வெளிக் கொண்டு வரும் வல்லமை படைத்தவை. அந்த வரிசையில் இந்த பாடல் மிக, மிகத் தனித்துவமானது. இந்தப் பாடலை என் வாழ்வில் எத்தனை, எத்தனை முறைக் கேட்டாலும், திரைப்படத்தின் இடம்பெற்ற காட்சியை புறக்கணித்து என்னுடைய நினைவலைகளில் புதைந்திருக்கும் பல நுட்பமான, ஆழமான நினைவுகளில் சலனங்களை ஏற்படுத்தி செல்லும் வல்லமை இந்த பாடலுக்கு உண்டு. இந்த பாடலின் அசல் தொகுப்பில் 1:46 நிமிடங்கள் வரை பரதநாட்டிய தாள ஜதியில் ஒலிக்கும் இசை அப்படியே 1:47 நிமிடங்களுக்கு பிறகு தான் ராகதேவனின் வருடலில் மாற ஆரம்பிக்கும். அப்படியே பாடலின் தொடக்கமெல்லாம் முடிந்து தனியான சொர்ணலாதவின் குரல் 3:52 நிமிடங்களில் ஆரம்பிக்கும். அவரின் குரல் ஆரம்பிக்கும் அந்த முதல் வரி கண் இரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் எனத் தொடங்குகையில் அப்படியே மனம் கரைய ஆரம்பிக்கும் பாருங்கள். யப்பா சாமி. தெய்வமே என மனம் ஆரற்ற ஆரம்பிக்கும். அப்படியே பாடல் முடியும் வரை சொர்ணலதா என்ற தேவதையின் தேவ குரலால் ஆசிர்வதிக்கப்பட்டுக் கொண்டே இருப்போம். இந்தப் பாடல் வரிகளில் இருக்கும் ஆனாலும் என்கிற அந்த ஒற்றை வார்த்தையைச் சொர்ணலாதா உச்சரிக்கும் தன்மை இருக்கிறது இல்லையா?.
அதற்கே உடல் பொருள் ஆவி என அனைத்தும் உருகிவிடும். பாடல் கேட்கையில் அந்த ஆனாலும் என்கிற வார்த்தையை உன்னிப்பாய் கேளுங்கள். இப்படி ஒவ்வொன்றாய் சொல்லி கொண்டே போகலாம், பாடலின் கடைசிய வரிகளான
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப்போலே இன்பமேது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்
இந்த வரிகள் ஒவ்வொன்றும் தனித்தனியான மனநிலைக்கு கிடையில் வெளிப்படுபவை. அதனை அந்தந்த மனநிலைக்கே சென்று உச்சரிப்பார் பாருங்கள் சொர்ணலாதா வாய்ப்பேயில்லை. முதல் வரி இரைஞ்சி வரமாக கேட்பது போலான நிலை. இரண்டாவது வரி அந்த நிமிடத்தின் தன்மையிலிருந்து துணுக்குற்று கேள்வியாக கேட்பது. மூன்றாவதாக தான் கேட்ட கேள்விக்கான விடையை இது தான் என உணர்ந்தவராய் முடிவை சொல்வது. இப்படி ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டே போனால் நாடு தாங்காது என்பதால், இந்த பத்தியின் தொடக்கத்தில் ஒரு பாடல் உங்களை என்ன செய்யும் என்பதை நீங்களாகவே தெரிந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். சூரியன் கதிர்கள் முற்றிலுமாக அடங்கிய மாலை நேரம், இந்தப் பாடலை உங்களின் அலைபேசியில் தரவிறக்கிய பிறகு, அலைபேசியை மெளனமாக்கிவிட்டு பாடல் முடியும் வரை எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என ஆண்டவனை உருகி வேண்டிக் கொண்டு. உங்களின் வீட்டு மொட்டைக்கு மாடிக்கு சென்று, மிகச் சிறப்பான ஒலிவாங்கியை அதாவது ஹெட்போனை உங்களின் காதுகளில் பொருத்தியவுடன், பாடலை ஒலிக்கவிட்டு கண்களை முடி அமையாகி விடுங்கள். உங்களை என்ன செய்யவேண்டும் என்பதை அந்தப் பாடல் முடிவு செய்து கொள்ளும். ராகதேவனின் இசையும், சொர்ணலதா எனும் குரல் தேவதையின் குரலும் உங்களை ஆட்க்கொண்டு ஆசிர்வதிக்க பிராத்திக்கிறேன். மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916