வாழ்ந்து பார்த்த தருணம்…78

ஒரு தரமான மிதிவண்டியும், சில உளுத்துப் போன உளுந்த வடைகளும்…

கரை நல்லது என்ற வார்த்தை இன்றைக்கு மிக முக்கியமான தாரக மந்திரமாகி விட்டது. அந்தத் தாரக மந்திரத்தை மிகுந்தச் சிரத்தையோடு வயது வித்தியாசமின்றி அனைவரும் சொல்கிறார்கள். விற்பனையில் கலக்கும் அந்த சலவைத் தூளே அதற்குச் சாட்சி. இப்படியான பல நல்லதுகள் பல்வேறு சந்தர்ப்பங்களில், நம்முடைய வாழ்வின் முக்கியமான கட்டங்களில் வார்த்தை முத்துக்களாக உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. உதாரணங்கள் ஏராளம். அவற்றில் சில சைக்கிளிங் நல்லது. நீச்சல் பயிற்சி ரொம்ப நல்லது. நடைபயிற்சி நல்லது. மெல்லியதான ஓட்டப்பயிற்சி ரொம்ப நல்லது. கொஞ்சம் வேகமான ஓட்டப் பயிற்சி ரொம்ப, ரொம்ப நல்லது என இன்னும், இன்னும் சொல்ல நிறையவே இருக்கிறது. இன்று ஒவ்வொரு தனி மனிதனும் குறைந்தது இருபதில் இருந்து முப்பது மருத்துவ ஆலோசனைகளை தங்கள் சட்டைபைகளில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான மருத்துவ ஆலோசனைகளில் எத்தனையை அவர் கடைப்பிடிக்கிறார் அல்லது அப்படி கடைப்பிடித்தலின் வழியே குறைந்த பட்சம் ஏதாவது உருப்படியான மாற்றத்தை அதனை சொல்பவர் தன்னுடைய வாழ்வில் சந்தித்திருக்கிறாரா?. மூச். அதெல்லாம் நீ கேட்கக்கூடாது சொன்னது பிடிச்சிருந்தா நல்லாயிருக்கு செய்யுறேன்னு சொல்லிட்டுப் போ. நீ செய்யி, செய்யாம போ. ஆனா என்கிட்ட வந்து நீ சொல்றத நீ முதல்ல செஞ்சியான்னு மட்டும் கேக்காத என்ற பதிலை கேட்டு சிரிக்காமல் கடந்து வர தெரியவேண்டும் என்பது தான் இங்கே மிக, மிக முக்கியம். இப்படியான நகை முரண்கள் தான் வாழ்வினை மிகவும் சுவாரஸ்யமாய் வைத்திருக்கின்றன. இப்படியான ஆலோசனை சொல்லும் நபர்களை பார்க்கையில் எல்லாம் கவுண்டமணி செந்தில் கூட்டணியின் நகைசுவை காட்சி ஒன்று தான் ஞாபகம் வரும். துன்பம் வரும் போது சிரிக்கணும் என்கிற கவுண்மணியின் ஆலோசனையை கேட்டுக்கொண்டிருக்கும் செந்தில், சரியான சந்தர்ப்பம் ஒன்றில் அதற்கு ஒரு எதிர்வினையாற்றுவார் பாருங்கள் அதகளமாய் இருக்கும். முடிந்தால் அந்த காட்சியின் காணொளியை இணையத்தில் தேடிப்பாருங்கள். அந்தக் காட்சியை தேடிப்பார்த்த பிறகு வாழ்வில் யாராவது உங்களுக்கு ஆலோசனையை அள்ளி வீசிக்கொண்டிருக்கையில் அப்படியான காட்சி உங்களுக்கு ஞாபகம் வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.

மேலே சொன்ன பல நல்லதுகள் நம்முடைய அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தவைகளே. மிதிவண்டி, நடை, ஓட்டம், நீச்சல் என இவையாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் வாழ்வின் பிரிக்கமுடியாத அங்கம். ஆனால் தொலைக்காட்சி பெட்டி என்ற ஒன்று நம் வீடுகளுக்குள் என்றைக்கு நுழைந்ததோ, அன்றிலிருந்து மேலே சொன்ன யாவும் நம்மை விட்டு வெகு தூரம் போய்விட்டன. இன்று மேலே சொன்ன அத்தனை விஷயங்களுக்கு பின்னாலும் பயிற்சி என்கிற ஒரே ஒரு வார்த்தையை சேர்த்துக்கொண்டு அதனுள் மிகப்பெரும் வணிகம் நுழைந்து விட்டது. இப்படியான நிலையில் வெற்றிகரமாக ஐம்பது நாட்களை தாண்டி போய் கொண்டே இருக்கும் இந்த நுண்ணுயிர் துரத்தல் காலங்களில் முதல் ஐந்திலிருந்து பத்துநாட்களுக்கு பிறகு வீட்டினுள் பல ஆயிரங்களை, சில லட்சங்களை கொடுத்து வாங்கி வைத்திருந்த எந்த ஒரு பொருளும் நம்முடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கவில்லை என மனம் உணர ஆரம்பித்த தருணங்களில், மனதளவில் சலிப்படைந்து, ஒரு சுபயோக சுப தினத்தில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் எண்ணிக்கை கூட ஆரம்பித்தது. வெளியே வந்தவர்கள் காலை வேளைகளில் மேலே சொன்ன விஷயங்களை பயிற்சிகளாக செய்ய ஆரம்பித்தார்கள். இதில் கவனிக்கப்பட வேண்டியது நகரம், கிராமம் என்கிற வித்தியாசம் எல்லாம் இல்லை என்பதைத் தான். உங்களை வெளியே வரவிடாமல் உள்ளே உட்கார வைத்துச் செய்தால், அதாவது உங்களை வச்சு செஞ்சா தான் சரியா வரும் என இயற்கையோ இல்லை கடவுளோ முடிவு செய்ததால் தான் கொஞ்சமாவது நம்முடைய உடலை பற்றிய பிரஞையே நமக்கு வந்திருக்கிறது. அதில் எத்தனை பேர் இதெல்லாம் ஒரு காலத்தில் நம்முடைய வாழ்வின் அங்கமாக இருந்தது என்பதை உணர்ந்தார்கள் எனத் தெரியவில்லை. சரி அப்படியே வெளியே வந்து பயிற்சிகளில் இறங்கியவர்கள் எத்தனை பேர் அதனை தொடர்வார்கள் என்பதும் மிகப்பெரும் கேள்வி. ஆனால் இன்றைய சூழலில் நம்முடைய வாழ்வில் நுண்ணுயிரியுடன் வாங்க மாப்ள பழகலாம் என்கிற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், வாங்க மாப்ள என நுண்ணுயிரியின் தோள் மீது கையைப் போட்டு பழக வேண்டுமானால் வேறு வழியேயில்லை உங்கள் உடலினை குறைந்தப்பட்ச ஆரோக்கியத்தையாவது தக்க வைத்தபடி இருத்தல் வேண்டும். இப்படியான நிலையில் தான் மாட்னடி மகனே என நுண்ணுயிரி நம்மை பார்த்துச் சிரித்துகொண்டிருக்கிறது.

சரி ஒரு வழியாய் வேறு வழியில்லாமல் தவழ, ஓட, மிதிவண்டி மிதிக்க என இன்ன பிற இத்தியாதிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறோம் சந்தோசம். ஆனால் ஒன்று தாறுமாறாய் இடிக்கிறது. அது நம்முடைய உணவு முறை, நம்முடைய உடலுக்கு மேலே சொன்ன நடை, ஓட்டம் போன்ற இத்யாதி இத்யாதிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மிக முக்கியம் ஆரோக்கியமான உணவும். ஆனால் அதில் எந்த அளவு கவனத்தோடு இருக்கிறோம் என்பதை கவனித்தால் சின்னதாக கிர்ரேன தலை சுற்றுகிறது. இப்படியான நடை, ஓட்டத்தை முடிக்கையில் பசி என்பது இயல்பானது. முன்னர் எல்லாம் அப்படி அதிகாலை எழுந்து வெளியில் போய் விட்டு வந்தால் நம்முடைய பசியினை போக்க வீட்டில் நீர் ஆகாரம் கண்டிப்பாக இருக்கும். நீர் ஆகாரம் என்றால் என்ன என்பதே இந்த தலைமுறைக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. இங்கே விளக்கம் கொடுத்தால் விளங்கிவிடும் வேண்டாம். தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அப்படியிருக்கையில் இன்றைய நிலையில் காலையில் ஓட்டத்தையோ, நடையையோ முடித்துவிட்டு வருபவர்களை கவனிக்கையில், வரும் வழியில் கண்களில் ஒரு வாகான தேநீர் கடை மாட்டிவிட்டால் முடிந்தது கதை. தேநீரோடு நின்றால் கூட பரவாயில்லை. சுடச் சுட சில பல வடைகளை கபளீகரம் செய்த பிறகே அந்த இடத்தை விட்டு நகர முடிகிறது. இன்று காலையில் கூட ஒரு குடும்பமே வயது வித்தியாசம் இல்லாமல் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு சாலையில் இறங்கி போய்கொண்டிருந்தார்கள். பார்க்க மிக சந்தோசமாக இருந்தது. அந்த சந்தோசம் எல்லாம் அடுத்த அரைமணி நேரம் தான். மிதிவண்டியில் போய்விட்டு வந்த மொத்த குடும்பமும் ஒரு வாகான மரத்தடியில் அமர்ந்து ஒரு பெரிய காகித பொட்டலைத்தை பிரித்து எதையோ சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்கள் கையிலிருந்த காகிதம் காற்றில் பறக்க அந்த காகிதத்தில் நீக்கமற பரவியிருந்த எண்ணை வளங்களே சொல்லிவிட்டன அது என்னவென்பதை. திரும்பி பார்த்தால் அவர்களில் கைகளில் சில பல உளுந்த வடைகள் உருண்டு கொண்டிருந்தன. பேசாமல் வரும் காலங்களில் உளுந்த வடைகளை வாங்கி மிதிவண்டியில் மாட்டிய பிறகு சாலையில் இறங்குவது நல்லது என நினைக்கிறேன். அப்பொழுது தான் நேரத்தை வீணடிக்காமல் போகும் போதும், வரும் போதும் வடைகளை கபளிகரம் செய்து முடித்துவிட முடியும், கண்ணு நுண்ணுயிரி, நீ நிறுத்தி நிதானமா ஆடு கண்ணு, உனக்கு இங்க நிறைய நாள் வேலையிருக்கு. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916