மூளைக்குள் மிருதங்கம் வாசிக்கும் அறிவின் அதகளமான ஆட்டம்…
கிட்டதட்ட வெற்றிகரமாக ஐம்பது நாட்களை கடந்து போய்க் கொண்டிருக்கும் ஊரடங்கு நேரங்களில் திரைப்படங்கள் பார்ப்பதை முற்றிலுமாக தவிர்த்தே வந்திருக்கிறேன். காரணம் திரைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தால், தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் திரைப்படங்களை பார்த்து கொண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணம் ஆக்கிரமிக்கும். அதே சமயம் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற எண்ணத்தில் பெரிய ஓட்டை விழும். அப்படியே எழுதினாலும் பார்த்த திரைப்படங்களை பற்றி தான் எழுதத் தோன்றும் என்பதால் முற்றிலும் தவிர்த்துவிட்டேன். இன்றைக்கு நண்பர் ஜானகிராமன் அவர்கள் காலையிலேயே முகநூல் பக்கத்தில் டெனட் திரைப்படத்தின் முன்னோட்டத்தினை பகிர்ந்திருப்பதை பார்த்தவுடன் உள்ளுக்குள் தூங்கிகொண்டிருந்த தீவிரமான திரைப்பட ரசிகன் எழுந்து உட்கார்ந்து விட்டான். எழுந்தவனை தூங்க வைக்க மனமில்லாமல் டெனட் திரைப்படத்தின் முன்னோட்டத்தை செவிகள் கிழியும் அளவுக்கான சத்தத்தில் வைத்துக் கொண்டு ஒலிவாங்கியை காதுகளில் மாட்டியபடி பார்த்துக்கொண்டிருந்தேன். எதிர்பார்ப்பு என்கிற எண்ண அலைகளை மிகச் சிறப்பாகவே எகிறவிட்டது திரைப்படத்தின் முன்னோட்டம். இன்றைய தேதிக்கு டெனட் திரைப்படத்தின் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன் ஆசாதரணமானவைகளை வைத்துகொண்டு ஒரு அற்புதமான திரையனுபவத்தை வெள்ளித்திரையில் கொடுத்துக் கொண்டிருக்கும் மிக முக்கியமான இயக்குநர். தி டார்க் நைட் திரைப்படத்தை சென்னையின் மாயாஜால் திரையரங்களில் நண்பர்களோடு பார்த்துவிட்டு வெளியே வருகையில், அந்த ஜோக்கர் கதாபாத்திரம் அப்படியே மொத்த எண்ண ஓட்டத்தையும் ஆக்கிரமித்திருந்தது. ரொம்ப நேரம் ஜோக்கர் கதாபாத்திரத்தை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தோம். இந்த நிமிடம் வரை அந்த கதாபாத்திர வடிமைப்பின் தாக்கம் மனதின் எதோ ஒரு மூளையில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் தான் 2020ல் ஜோக்கர் திரைப்படத்துக்காக ஜாக்குலின் போனிக்ஸ் ஆஸ்கர் வாங்கினாலும், என்னளவில் ஜோக்கர் திரைப்படத்தில் அவரின் நடிப்பு டார்க் நைட் ஜோக்கர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவரான ஹீத் லேட்ஜர் அளவுக்கு ஈர்க்கவில்லை.
இப்பொழுதெல்லாம் திரைப்படங்களை பார்ப்பதில் நிறையவே ரசனை மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக ஆங்கில திரைப்படங்கள், குறிப்பாக வணிகரீதியிலான திரைப்படங்களை வெறுமனே சுவாராஸ்யம், பிரம்மாண்டம் என்கிற சில பல காரணங்களுக்காக ரசிப்பதெல்லாம் போய், அப்படியான திரைப்படங்களில் திரைக்கதை எனும் வலைப் பின்னலின் வழியே, அந்தக் காட்சிகளின் பின்னால் கட்டமைக்கப்படும் உளவியலை மனம் தேட ஆரம்பித்து விடுகிறது. அப்படியான தேடுதலின் வழியே கிடைக்கும் அனுபவங்களின் ஒரு சிறுபகுதியை தான் தொடராக எழுதிக்கொண்டிருக்கிறேன். அப்படியான உளவியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பது ஒரு அலாதி அனுபவம். இப்படிப்பட்ட நிலையில் இருந்து கொண்டு நோலனை அணுகுகையில் அந்த ஆட்டம் இன்னும் பல மடங்கு சுவாரஸ்யமாகி விடுகிறது. இன்செப்ஷனிலும் சரி, இன்டெர்ஸ்டெல்லரிலும் சரி அவரின் ஆட்டம் அதகளமாய் இருக்கும். டங்ரிக் திரைப்படம் வெளிவரும் முன்னர் அந்த திரைப்படம் மீது எனக்கு இருந்த எதிர்பார்ப்பு, திரைப்படத்தின் முன்னோட்டம் வெளிவந்தவுடன் காணாமல் போனது. அந்த எதிர்ப்பார்பின்மையே அந்த திரைப்படத்தை பார்க்க விடாமல் செய்துவிட்டது. அதே போல் அந்தத் திரைப்படமும் அதற்கு முந்தைய திரைப்படமான இன்டெர்ஸ்டெல்லர் அளவுக்கு அதிர்வை ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்றைக்கு வெளியாகி இருக்கும் டெனட் திரைப்படத்தின் முன்னோட்டம் எதிர்பார்ப்பினை பல மடங்கு ஏற்றியிருக்கிறது. பொதுவாக நோலன் திரைப்படத்தை பொறுத்தவரை வெறும் பார்வையாளனாக இல்லாமல் ஒரு அட்டகாசமான அறிவார்ந்த விளையாட்டை ஆடத்தயாராக இருக்கிறீர்களா என்பது தான் கேள்வியே. யார் யாரெல்லாம் அப்படியான ஆட்டத்துக்கு தயாராய் இருக்கிறீர்களோ அவர்களுக்கு மிக பெரும் திரைவிருந்தாக தன்னுடைய படைப்பை உருவாக்குவது தான் அவரது பாணி. அப்படியில்லாமல் நீங்கள் வெறுமனே பார்வையாளனாக மட்டுமே இருப்பேன் ரொம்பவெல்லாம் யோசிக்க முடியாது என்றால், கொஞ்சம் பிரமாண்டம் அதிகமாக உள்ள பல முறை பார்த்து, சலித்த சாதாரண ஆங்கில படம் பார்க்கும் அனுபவம் தான் உங்களுக்குக் கிடைக்கும்.
முன்னோட்டத்தில் இருக்கும் பல காட்சிகள் இம்முறை ஆட்டம் அதகளமாய் இருக்கும் என சொல்லாமல் சொல்கின்றன. எனக்கு இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. நோலனின் திரைப்படங்களை வெகு சாதாரண ஆங்கில புலமையை வைத்துக்கொண்டு பார்க்க முடியாது. அதுவும் இன்செப்ஷன் போன்ற படங்கள் எல்லாம் பல அடுக்கள் கொண்ட திரைக்கதை யுக்தியில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதனை சாதாரணமான ஆங்கில புலமையை வைத்துக்கொண்டு பார்த்தால் திரைப்படத்துக்கும் நமக்குமான தொடர்பு அறுபட்டுக் கொண்டே இருக்கும். இந்த காரணத்துக்காகவே இன்செப்ஷன் திரைப்படத்தை முதலில் தமிழில். அப்புறம் ஆங்கிலத்தில். அதன் பின்னர் மீண்டும் தமிழில் என மூன்று முறை திரை அரங்கிலேயே பார்த்தேன். அதன் பின் இணையத்தில் எத்தனை முறை பார்த்தேன் என்கிற கணக்கு இல்லை. அதனால் ஆங்கில புலமையில் பெரிய இவன் என்கிற பாவனையோடு எல்லாம் டெனட் திரைப்படத்தை திரையரங்கில் உட்கார்ந்து பார்க்க முடியாது. பெரும்பாலான நேரங்களில் அப்படியான ஆங்கிலத்தில் அமெரிக்காரனையே மிஞ்சும் அளவுக்கானவன் என்கிற பாவனையோடு படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டால், கேட்டும் கேட்காதது போலான பாவணையில் ஓடிவிடுகிறார்கள். இன்னொன்று என்னளவில் இன்செப்ஷன் திரைப்படத்தின் தமிழ் மொழி மாற்றம் மிகச் சிறப்பாகவே இருந்தது. அதனால் டெனட்டும் தமிழில் வரும் என நம்புகிறேன் பார்க்கலாம். வராமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. காரணம் கடைசியாக வெளியான நோலனின் இரண்டு படங்களும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை. ஆனாலும் இப்பொழுது வெளியாகி இருக்கும் முன்னோட்டத்திற்கு பிறகு டெனட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற வாய்ப்பிருப்பதால், தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் என நம்புகிறேன். இல்லையெனில் முறையான சப்டைடிலுடன் வெளியானால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். ஆனாலும் குறைந்தது மூன்று முறை பார்க்க வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். பார்க்கலாம். இந்த முறை நோலன் எப்படியான ஆட்டத்தை திரையில் ஆடப்போகிறார் என்று. மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916