வாழ்ந்து பார்த்த தருணம்…83

நம்மை புனிதர்களாய் ஆக்கிக்கொ(ல்)ள்வோம்…

கடந்து நான்கு நாட்களுக்கும் மேலாக ஒரு விலங்கிற்காக பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ச்சியான எதிர்வினைகள் குவிந்த வண்ணம் இருந்தது. உண்மையில் அதையெல்லாம் பார்க்கையில் உள்ளுக்குள் அப்படியான எதிர்வினைகளின் பின்னால் இருக்கும் இந்த மனித மனதின் உளவியல் தான் மிகவும் அசூயையாக இருந்தது. இவர்கள் தொடர்ச்சியாக ஒரு தனி மனிதன் மேல் தவறை குவிப்பதன் வழியே. அந்த தனி மனிதனை தவிர மற்றவர்கள் அனைவரும் புனிதர்கள் என்பதான பிம்பத்தை மிக, மிக சிறப்பாக கட்டமைத்துக் கொண்டே இருந்தார்கள். நாமும் புனிதர்களே என்கிற பிம்பம் கொடுத்த உந்துதல் காரணமாக, எக்கச்சக்கமான எதிர்வினைகள் குவிந்தபடி இருந்தன. அதிலும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தையும், அதில் குறிப்பிட்ட ஒரு பகுதியியையும், அந்த பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தையும், அங்கு வசிக்கும் ஒரு குறிப்பிட்ட மனிதன் தான் இதனை செய்திருக்க வேண்டும் என மிக, மிக நுணுக்கமான குற்றச்சாட்டு வைப்பதின் வழியே மற்றவர்கள் புனிதர்கள். மற்ற மாநிலங்கள் ஏன் அந்த மாநிலத்தை தவிர இந்த உலகமே புனிதமானது என்கிற பிம்பத்தை நிறுவ களமாடிய அனைவருக்கும் வாழ்த்துகள். இப்படியான நிலைகளுக்கு இடையில் இன்று அங்குள்ள வனத்துறை அதிகாரி சொல்லியிருக்கும் விஷயம் முக்கியமானது. இந்த நிகழ்வு கண்டிப்பாக தனி மனிதால் நிகழ்த்தப்பட்டது அல்ல. வேறு ஒரு காட்டுயிற்காக வைப்பட்டிருந்த கண்ணியில் இந்த உயிர் சிக்கிவிட்டது இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. அங்குள்ளவர்களுக்கும் இந்த நிகழ்வு மிகுந்த மனவேதனையையும், மன உளைச்சலையும் தந்திருக்கிறது என சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தை செய்திகளின் வழியே கேள்வி படுவற்கு முன்பிருந்தே இப்படித்தான் நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என யூகிக்க முடிந்தது. ஆனால் அப்பொழுதே அப்படி எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும் இவர்களுடைய புனித பிம்பத்திலிருந்து விலக்கி வைத்திருப்பார்கள். அதிகாரப்பூர்வ செய்திவரும் வரை காட்டுயிர் சம்பந்தமான விஷயங்களை தேடி படித்துக்கொண்டிருந்தேன். யோசித்துப் பார்த்தால் சமீப ஆண்டுகளில் மனித மனம் எதோ ஒரு நிகழ்வினை எதிர் நோக்கி, அதற்கு உடனடியாக பொங்கி எதிர்வினையாற்றி, தன்னை புனிதப்படுத்தி ஆசுவாசம் கொள்கிறது. இந்தப் பொங்குதலை வெகு சிறப்பாக அவதானித்து பலதரப்பட்ட வகையில் தனக்கான அறுவடையாக மாற்றிக் கொண்டே இருக்கிறது. மற்றொரு மனித சமூகம். அப்படியான அறுவடையை தொடர்ச்சியாக நிகழ்த்தி தன்னை வளர்த்து கொண்டே இருக்கும் அந்தச் சமூகத்தை பற்றி நாம் தெளிவு பெறப் போவதே இல்லை என்பதை, இப்படி தொடர்ச்சியான பொங்குதலின் வழியே வெகு சிறப்பாக நிருபித்துக் கொண்டே இருக்கிறோம்.

இன்றைய மனிதனுக்கு எதோ ஒரு வகையில் தன்னை புனிதமானவனாக காட்டிக்கொள்ளும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. அதுவும் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு எதிராய் எல்லா விதமான அயோக்கித்தனங்களையும் அதன் விளைவுகளை பற்றி கிஞ்சிதும் யோசிக்காமல் அரங்கேற்ற ஆரம்பித்த பிறகு, இந்தப் புனிதப்படுத்துதல் தேவையாய் இருக்கிறது. காரணம் ஆழ்மனதினுள் கொஞ்ச நஞ்சமாய் ஓடிக்கொண்டிருக்கும் மனிதம் என்கிற எண்ண ஓட்டத்திற்கு பதில் சொல்லி சொரிய வேண்டும் இல்லையா அதனால் தான். இதையெல்லாம் விட அங்கே அடிப்பட்டது யானை என்பதைத் தாண்டி. அது எப்படியான நிலையில் இருந்தது என்பது தான் எல்லோருக்குள்ளும் இருக்கும் புனிதன் வெளிப்பட முக்கியமான காரணம். அதே இடத்தில் ஒரு காட்டுப்பன்றி அடிப்பட்டு, யானை இருந்த அதே நிலையில், அதாவது உறைக்கும் படியே சொல்லிவிடுகிறேன். காடுப்பன்றியும் வயிற்றில் குட்டியுடன் இருந்து அடிப்பட்டிருந்தால் கூட, அந்த இடத்தை தாண்டி ஒரு பெட்டி செய்தி அளவுக்கு கூட ஒரு வெங்காயமும் வெளியே வந்திருக்காது. உண்மையைச் சொன்னால் அதனை சமைத்து சாப்பிட்டிருப்பார்கள் என்பது தான் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை. இப்படிப்பட்ட மனநிலையில் இருந்து கொண்டு காட்டுயிற்களில் கூட, இது புனிதமானது, இது கொல்லப்பட வேண்டியது என்கிற ஒரு முழு நீளப்பட்டியலை வைத்து கொண்டு சுற்றிகொண்டிருக்கும் இந்த மனித சமூகத்தை என்னவென்று சொல்ல. ஒரு விலங்கினத்தை தன்னுடைய சுயநலத்திற்காக வழிப்பாட்டு தளத்துக்குள் கூட்டி செல்வதின் வழியே, அந்த விலங்கனத்தை தவிர, மற்றவற்றை மிகச் சிறப்பாக புறக்கணித்து, அப்படி புறக்கணிக்கப்பட்ட விலங்கினங்கள் செத்தால் ஒன்றும் கேடு இல்லை என்கிற மனநிலையை தக்கவைத்து விடுகிறோம். இது எவ்வளவு பெரிய அயோக்கித்தனம் என மனிதனுக்கு உறைக்கவே உறைக்காது. இவ்வளவு தூரம் இணைய பொதுத் தளத்தில் பொங்கும் எத்தனை பேர் உண்மையில் குறைந்த பட்சம் தங்களுடைய வாழ்வில் நெகிழி பைகளை உபயோக்கிப்பதை தவிர்த்து வாழ்கிறார்கள் என யோசித்தால் அதில் ஐந்து சதவீதம் கூட ஒரு ஈரவெங்காயமும் தேறாது என்பது தான் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை. அடிப்படையில் காடுகளையும், காட்டுயிர்களையும் பற்றி கவலைப்பட்டு பொங்கும் ஓவ்வொருவரும் அதற்கான மாற்றத்தை, தங்களிடமிருந்தும், தங்களில் இல்லங்களில் இருந்தும் அதனைத் தொடங்க வேண்டும். அதற்குள் என்னையும் சேர்த்தே சொல்கிறேன். முதலில் அப்படியான மாற்றத்தை நாம் செய்து கொண்டிருக்கிறமா என தங்களை தாங்களே சீர்தூக்கிப் பார்த்துவிட்டு அப்புறம் பொங்கலாம்.

இந்த நிகழ்வு நடந்து, இணையபொதுவெளியிலும், செய்திகளிலும் தொடர்ச்சியான பொங்குதல்கள் வந்து கொண்டே இருந்த போது, யானையை பற்றிய விஷயங்களை தேடிப்பிடித்து படித்துக்கொண்டிருந்தேன். அப்படி படித்துக்கொண்டிருக்கையில் தொடர்ச்சியாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் பல்லுயிரின் உயிரியல் சமநிலையின் முக்கியத்துவம் பற்றி தொடர்ச்சியாக தேடித்தேடி பகிர்ந்து கொண்டிருக்கும் Anbazhagan Periasamy அவர்களின் முகநூல் பக்கத்தின் வழியே Prema Gopalakrishnan அவர்களின் முகநூல் பக்கத்தில் அவர் பதிவேற்றி இருக்கும் கட்டுரைகளை படிக்க சந்தர்ப்பம் வாய்த்தது. இப்பொழுது நடந்து முடிந்த விஷயத்திற்கு இவ்வளவு தூரம் பொங்குகிறோம் இல்லையா, அதெல்லாம் ஒன்றுமேயில்லை, அதைவிட பலமடங்கு குரூரமான அயோக்கியத்தனமான விஷயங்களை மனிதன் தன்னுடைய சுயநலத்திற்காக எப்படியெல்லாம் நிகழ்த்தி கொண்டிருக்கிறான் என்பதை உணர முடிந்தது. அப்படியான கட்டுரைகளை படிக்க வேண்டும் என்கிற அக்கறை இருப்பவர்கள் போய்ப் படித்துக்கொள்ளுங்கள். படிக்க வேண்டும் என யோசிப்பவர்களுக்காக தான், முகநூல் பக்கத்தில் போய் தேட வசதியாக பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறேன். அதுவும் போக யானையும்_பாகனும் எனத் தேடிப்பாருங்கள் இன்னுமொரு கட்டுரையும் கிடைக்கும். அதையும் சென்று படியுங்கள். மனிதன் நாகரிக வளர்ச்சி அடைந்த பிறகு, தனக்கான உணவை தானே என்று பயிரிட்டு உண்ண ஆரம்பித்தானோ, அன்றிலிருந்து இன்று வரை அவனுடைய பயிரிடலின் வளர்ச்சியில் அதிகமாக பலியானது காடுகள் தான். காரணம் வெறும் தரிசுநிலமாக மட்டும் இருக்கும் ஒரு இடத்தை பல்வேறு நிலைகளில் செம்மை படுத்தி, செப்பனிட்டு, அதனை பயிரிட தகுதியான மண்ணாக மாற்றுவதைவிட, எல்லாவிதமான வளங்களையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் வனத்தாயின் வயிற்றை கிழித்து விட்டால் எல்லாமே இலகுவாக கிடைத்துவிடும் இல்லையா?. அதனால் தான் தன்னுடைய நலனை மட்டுமே யோசித்து மற்ற உயிர்கள் எல்லாம் தனக்கும் கீழ் தான் என்கிற ஆணவ மனநிலையில் அழித்தலை இந்த மனித சமூகம் தொடர்ச்ச்சியாக செய்ய ஆரம்பித்து பலநூறு வருடங்கள் ஆகிவிட்டது. ஒவ்வொரு தனி மனிதனும் பல்லுயிர் சமநிலை பற்றியோ அல்லது இயற்கையின் சமநிலை பற்றியோ குறைந்த பட்சமேனும் தேடி தெரிந்துகொண்டு உணராத வரை, இந்த மனித இனம் இயற்கை எனும் பெருவெளியின் உயிர்களை தன்னுடய சுயலாபத்திற்காக கொன்று குவித்து, அதனுடைய குரூதியின் ரத்தத்தில் தொய்ந்தபடி தான் இருக்கும். அதுவரை அந்த குரூதியின் வாடை நம்மை பாதிக்கா வண்ணம் பல்வேறு வாசனை திரவியங்களை நம்மீது தெளித்துக்கொண்டு புனிதர்களாய் நடமாடுவோம். மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916