வாழ்ந்து பார்த்த தருணம்…100

கண்டடைய முடியா கடவுளும், சிக்கிச் சிதையும் விலை மதிப்பில்லா பரிசும்…

மிக முக்கியமாக விவாதிக்க வேண்டிய, தெளிய வேண்டிய ஆயிரம் விஷயங்கள் கண் முன்னர் இருந்தாலும், புறந்தள்ள வேண்டிய விஷயத்தை எடுத்து தெருவில் நிறுத்தாவிட்டால் பொழுது விடியாது என நினைக்கிறேன். சரி நேரடியாக விஷயத்திற்குள். மனிதன் தோன்றி அதன் பின் தனித்தனியான குழுவாக, சமூகமாக, தனித்தனியான கடவுள் வழிபாடாக, அப்புறம் பொருளாராதர ரீதியில் பல குழுவாக, அந்த குழுவுக்குள் பல பிரிவாக இன்னும், இன்னும் முடியாமல் போய்க் கொண்டே தான் இருக்கும் இந்த மனிதனின் பிரிவினை எனும் அக்கபோருக்கு முடிவே இல்லை போல. எனக்கு End Cardடே கிடையாதுடா என்கிற நகைச்சுவை வசனம் மாதிரி நீண்டு கொண்டே போகிறது. இதையும் தாண்டிக் கடவுள் என்கிற விஷயத்திலும், இங்கே இருக்கும் குழுக்களுக்கும், அந்த குழுவுக்குள் உள்ள பிரிவுகளுக்கும் பஞ்சமேயில்லை. கடவுள் இருக்கிறார் குழு, கடவுள் இல்லை குழு, இவர் மட்டுமே உண்மையான கடவுள் குழு, இல்லை மனிதனே கடவுள் குழு என தலைச்சுற்றும் அளவுக்கான குழுக்களும், அதற்குள் பற்பல பிரிவுகளும் நாள் தோறும் புதிது புதிதாக தோன்றிக் கொண்டே இருக்கின்றன. சரி நாம் கடவுளை ஏற்றுக் கொள்கிறோம், ஏற்றுக்கொள்ளவில்லை. அல்லது இயற்கையையே கடவுள் எனச் சொல்கிறோம். இப்படி எதுவாக இருந்தாலும், அனைவரும் பெண்ணின் கருவில் முதல் புள்ளியில் உருவாகும் போது, நமது கரங்களில் கொடுக்கப்படும் மிகப் பெரும் விலை மதிக்க முடியாத பரிசு ஒன்று அல்ல இரண்டு இருக்கிறது, ஒன்று இந்த எண் சாண் உடம்பு. இரண்டாவது நாம் இந்த பூமியில் உயிர்த்திருக்க போகும் நாட்கள். ஒரு சாராசரி இந்தியனின் ஆயுட் காலமாக கூகிள் ஆண்டவரிடம் போய் கேட்டால். தோராயமாக எழுபது வயது என அந்த கூகிள் ஆண்டவர் சொல்கிறார். கொஞ்சம் கூடுதலாக எண்பது என வைத்துக் கொ(ல்)ள்வோம். அதன்படி பார்த்தால் மொத்தமாக 960 மாதங்களும். ஒட்டு மொத்த நாட்களாக தோராயமாக 28800 நாட்களும் நமக்கு கொடுக்கப்படுகின்றன. எந்தக் கடவுள் கொடுத்தால் என்ன. அல்லது இயற்கை கொடுத்தால் என்ன. கொடுக்கப்படுகிறது என்பது தான் இங்கே கவனிக்க வேண்டியது. அப்படி நமக்கு பரிசாக கொடுக்கப்படும் எண் சாண் உடம்பையும், வாழப்போகும் நாட்களையும் நம்முடைய கைகளில் வைத்துக் கொண்டு நாம் உண்மையில் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்.

முதலில் அப்படி நமக்கு கொடுக்கப்படும் ஆரோக்கியமான உடம்பு எப்படிச் செயல்படுகிறது என பார்த்தால் மிக, மிக அற்புதம். நமது உடலுக்குள் இருக்கும் எந்த ஒரு உறுப்பும், நம்முடைய கண்டுபிடிப்பு எதனுடனும் ஒப்பிட முடியா வண்ணம் மிக, மிக சிறப்பாக, நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே செயற்கை இதயத்தை உருவாக்கி விட்டோம். அந்த உறுப்பை உருவாக்கி விட்டோம். இதை உறுப்பை உருவாக்கி விட்டோம் என நாம் வேண்டுமானால் பீற்றிக் கொள்ளலாம். ஆனால், நம்முடைய கண்டுபிடிப்பையும் நம்முடைய உடல் உறுப்பையும் நுணுக்கமாக நேர்மையாக ஒப்பிட்டால், நம்முடைய கண்டுபிடிப்பு நம்முடைய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு அருகில் கூட வரமுடியாத அளவுக்கான மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தில் தான் நம்முடைய கண்டுபிடிப்பின் லட்சணம் இருக்கிறது. சரி எண்ணற்ற கடவுள்களையும் அதன் வழிப்பாட்டு முறைகளையும் பின்பற்றி அதற்காக அடித்துக் கொண்டு சாகிறோமே, நம்முடைய உடலுக்குள் உள்ள உறுப்புகள் என்றைக்காவது நாம் பின்பற்றும் வழிப்பாட்டு முறைகளையோ அல்லது கடவுளையோ மதித்திருக்கிறதா என கவனித்து இருக்கிறோமா?. நம்முடைய உடல் உறுப்புகளுக்கு அப்படியான எவ்வித வெங்காயமும் தெரியாது. நாம் எந்த கடவுளை பின்பற்றுகிறோம், எந்த கிழமை வழிப்பாட்டு தளத்துக்கு போகிறோம் என எதைப் பற்றியும், நம்முடைய உடல் உறுப்புகளுக்கு கவலையில்லை. நீங்கள் இந்த கிழமைகளில் வழிப்பாட்டு தளத்துக்கு தவறாமல் போவதனால், நம்முடைய இதயம் கொஞ்சம் அதிமான அக்கரையுடன் சீராக இயங்க போவதுமில்லை. நாம் போகாமல் இருப்பதினால் தன்னுடைய செயல்பாட்டை அது நிறுத்த போவதுமில்லை. அதனைப் பொறுத்தவரை என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதாக தான் இருக்கும். இன்னும் ஒரு படி மேலே சொல்வதானால் நீங்கள் பின்பற்றும் எந்த வழிப்பாட்டு பின்னனியையும் வைத்துக் கொண்டு, செரிமானம் ஆகாத ஒரு உணவுப் பொருளை நம்முடைய உடல் செரிமானம் ஆக்காது. இன்றைய சூழலில் மிகச் சிறப்பான உதாரணம், பரவிக்கொண்டிருக்கும் நுண்ணியிரி தொற்று. நீங்கள் எந்த கடவுள் வழிபாட்டை பின்பற்றுகிறீர்கள் என கேட்டு அனுமதி வாங்கிய பிறகு அது நம் உடலினுள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் நம்முட்டைய உடலை எந்த லட்சணத்தில் நாம் வைத்திருக்கிறோம், நம்முடைய நோய் எதிர்ப்பு ஆற்றல் எப்படியானதாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே நம்முடைய உடலின் பாதிப்பின் அளவும் கூடவோ, குறையவோ அல்லது மொத்தமாக முடிவுக்கோ வருகிறது.

இப்படி நமக்கு கொடுக்கப்பட்ட ஆகச்சிறப்பான உடலையும், வாழும் நாட்களையும் வைத்துக் கொண்டு, கடவுளை கும்பிடுங்கள் அல்லது கும்பிடாமல் போங்கள். ஆனால் நம்முடைய கைகளில் கொடுக்கப்பட்ட விலை மதிப்பில்லா பரிசான உடலினை, நமக்கு உயிர் வாழ கொடுக்கப்படும் நாட்களில் எத்தனை முறை கவனித்து பார்த்து நம்முடைய உடலை முறையாக பராமரிக்கிறோம்?. அதற்கு தேவையான சரியான, சிறப்பான, ஆற்றலான உணவைக் கொடுக்கிறோம்?. அந்த உடலை எந்த அளவு கவனிப்போடும், அக்கறையோடும் பார்த்துக் கொள்கிறோம் என்கிற அடிப்படை கேள்வியை இன்று கடவுள் இல்லையென்றும், இருக்கிறார் என்றும் அடித்துக்கொள்ளும் பிரகஸ்பதிகளிடம் கேட்டால் ஒருவரும் பதில் சொல்ல முடியாது என்பது தான் நிதர்சனம். ஒரு சின்ன கற்பனையான உதாரணம். உலகின் முதன்மை பணக்கார மனிதன் ஒருவனுக்கு (இங்கே மனிதன் என குறிப்பிட்டுள்ளது ஆண், பெண் இருவரையும் பொதுமை படுத்தித் தான்) சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது. அந்தச் செயல்படாத சீறுநீரகத்தை மாற்றாவிட்டால் அந்தப் பணக்கார மனிதனால் உயிர்வாழ முடியாது. இப்படியான சூழலில் இந்த உலத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் உங்களின் சிறுநீரகம் மட்டுமே அந்த முதன்மை பணக்கார மனிதனின் உடலுடன் ஒத்துப் போகிறது என வைத்துக் கொள்வோம். உங்களின் சிறுநீரகத்துக்கு அந்த பணக்கார மனிதன் என்ன விலை நிர்ணயம் செய்வான் என கற்பனை செய்து பாருங்கள். ஆனால் அந்த நிலையில் உங்களின் உடலினை சரியாக பராமரிக்காத காரணத்தால், உங்களின் சிறுநீரகம் ஆரோகியமானதாக இல்லை. இப்படிப்பட்ட சூழலில், நீங்கள் பின்பற்றும் கடவுளோ அல்லது கடவுளை நம்பாமல் இயற்கையை நம்பும் உங்களின் நம்பிக்கையோ, உங்களின் சிறுநீரகத்தை உடனடியாக அதிசயம் நடத்தி ஆரோக்கியமான சிறுநீரகமாக மாற்றிக் கொடுக்க முடியமா என்கிற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். உண்மையைச் சொன்னால் வாய்ப்பேயில்லை. ஒரு ஈரவெங்காயமும் நடக்காது என்பது தான் நிதர்சனமான பதில். ஆனாலும் நமக்கு பொக்கிஷமாக கொடுக்கப்பட்ட இந்த உடலை பற்றியும், அதனைச் சிறப்பாக பராமரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும், எதை எல்லாம் ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும், அதற்கு எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்கிற சிந்தனையை விட, கடவுளைக் காப்பாற்றவும், அல்லது அதனை மறுக்கவும் அல்லது அந்தக் கடவுளை அசிங்கப்படுத்தவும் அல்லது என்னுடைய கடவுளே உண்மையான கடவுள் என கூவவும் தான், அதிகமாக நம்முடைய நேரம் வீணாய் போய்க் கொண்டிருக்கிறது. மேலே சொல்லியிருப்பதில் நாம் எந்த பிரிவில் இருந்தாலும் சரி, நமக்கு கொடுக்கப்பட்ட இந்த விலை மதிப்பில்லா உடலையும், அதனை சிறப்பாக வைத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட பொக்கிஷமான நாட்களின் அருமையும் தெரியாமல் தேவையே அற்ற கூத்துக்களை அடித்துவிட்டு, அதன் பின் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்காத இந்த உடம்பை வைத்துக் கொண்டு என்ன பயன்?. அதன் பின் நீங்கள் எப்படியான ஆளாக இருந்தும் ஒரு பிரயோசனமும் இல்லை. சிவாஜி படத்தில் ரஜினி பேசும் வசனம் போல் இந்த ஒழுங்கற்ற உடலை வைத்துக் கொண்டு மொத்தமாக நக்கி கொண்டு தான் போக வேண்டும். மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916