எங்களுக்கு என்ன என்கிற வலியான கேள்வியிலிருந்து ஒரு ஆன்ம தேடலிசை…
இந்த உலகத்தில் மோசமான வலிகளில் ஒன்று புறக்கணிப்பு. தன்னை சிந்தித்து செயல்படுபவன், அதனாலேயே தான் மனிதன் என மார்தட்டிக்கொள்ளும் இந்த மனிதனிடம் தான், அப்படியான புறக்கணிப்பு அதிகம் இருக்கிறது. பெரும்பாலும் விலங்குகளிடம் இல்லை. ஆனால் இந்த மனித சமூகத்தில் நம்முளைக்குள் நிறத்தால், மதத்தால், உடலால், பேச்சால், அறிவால், தவறி பயன்படுத்திவிட்ட வார்த்தையால் என இந்த வாழ்வில் நித்தம், நித்தம் செலுத்தப்படும் பலவிதமான குருட்டுத்தனமான நம்பிக்கைகளின் அடிப்படையில், அன்றாடம் எத்தனை, எத்தனை புறக்கணிப்புகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறோம், அப்படியான புறக்கணிப்பின் வலி எப்படி இருக்கும் என உணரும் தருணம் இருக்கிறது இல்லையா, அந்தப் புள்ளி தான் மிகப் பெரும் அகத் தெளிவு. அப்படியான ஒரு தெளிவு வரும் வரை, நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் செலுத்தும் புறக்கணிப்பை நம்பி நாமும் நம்மையே புறக்கணித்து கொண்டே இருப்போம். அப்படியான புறக்கணிப்பை உணரும் தருணங்களில் ஏற்படும் வலியை கடக்க முடியாமல் திணறுவதை பல பேரிடம் பார்த்திருக்கிறேன். அதை வெற்றிகரமாக கடந்து வருவது தான் இந்த மனித வாழ்வின் மிக, மிக முக்கியமான திருப்புமுனை. அப்படி அதைக் கடந்து வரும் தருணத்தில் இருந்து உணரப்படும் வலியை மனதுக்குள் இருத்தி தன்னை புறகணித்த, எள்ளி நகையாடிய நபர்களை பார்த்து, அந்த வலி கொடுக்கும் ஆன்மாவில் இருந்து ஒரு கேள்வியை வீசினால், அது தான் What About Us (எங்களுக்கு என்ன) என்கிற பாடலின் அடிநாதமே. இந்தப் பாடலின் வழியே கேட்கப்படும் கேள்விகளை, புறக்கணிப்பின் வலிகளை அறிந்து கொள்ள வேண்டுமெனில் இணையத்தில் இருக்கும் இந்த பாடலின் வரிகளை தேடிப்பிடித்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வழக்கம் போல் இணையத்தில் உலவிக் கொண்டிருக்கையில் டச் நாட்டில் 2019 நடந்த ஒரு சர்வதேச குரல் தேடல் மேடையில் 14 வயதே நிரம்பிய Sezina என்கிற பெண் குழந்தையின் குரலில் மிக, மிக சிறப்பாக ஒலித்த பாடல் தான் மேலேக் குறிப்பிட்டது. இந்தப் பாடலை கண்டைந்தது அப்படித் தான். சில பாடல்களின் மீதான ஈர்ப்பு, அந்தப் பாடலின் வரிகள் பாடப்படுவதற்கு முன்னரே நம்முடைய மனதுக்குள் ஆழமாய் சென்று சிம்மாசனமிட்டு அமர்ந்துவிடும். இந்தப் பாடலும் அப்படியானது தான். மிக, மிக மெல்லிய லயத்தில் ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் தொடக்க இசை கொடுக்கும் ரசவாதம் மிக, மிக தனித்துவமானது. அந்த லயத்திற்குள் நுழைந்தவுடன், புறக்கணிப்பின் வழியை தன் ஆன்மாவில் இருத்தி, முதல் வரியை பாடத் தொடங்கும் அமெரிக்க பாடகியும், பாடலாசிரியையுமான பிங்கின் (Pink) குரலில் அந்த வரிகளை கேட்கையில், அப்படியே ஒரு வித இனம்புரியா வலி நம்முள் பரவுவதை உணர முடியும். சில பாடல் வரிகள், அது பாடப்படும் பாடகரின் ஆன்மாவில் இருந்து வெளிப்படும் போது, அது ஒரு உன்னதமான நிலையை அடைந்துவிடுகிறது. எங்களுக்கு என்ன என்கிற கேள்வியுடன் தொடங்கும் இந்தப் பாடலின் முதல் வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் ஓராயிரம். இந்த உலத்தின் எந்த ஒரு மூலையிலும் புறக்கணிப்பின் வலியை உணரும் ஒருவரால் மிக எளிதாக இந்தப் பாடலை அதன் ஆன்மாவோடு உள்வாங்க முடியும். அதன் வழியே தன்னை உணர முடியும்.
மேலே சொன்னதை எல்லாம் தாண்டி இந்தப் பாடல் பாடப்பட்ட விதமும், அது படமாக்கப்பட்டிருக்கும் விதமும் வாய்ப்பேயில்லை தாறுமாறு. அதுவும் இந்தச் சமூக புறகணிப்பினால் மனித மனதினுள் உருவாகும் வலியை மிக, மிக சிறப்பாக காட்சி மொழியில் செதுக்கி இருக்கிறார்கள். அதுவும் அந்தப் புறக்கணிப்பை எல்லாம் தன் மனதிற்குள் அப்படியே நம்பி தன்னை தானே எப்படியெல்லாம் மிக, மிக மோசமாக ஒருவன் வருத்திக் கொள்வான் என்பதையும், அது தரும் வலியில் எப்படி உழல்வான் என்பதையும் காட்சி மொழியின் வழி(லி)யே அற்புதமாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். இப்படியான மனித மனதின் மிக சிக்கலான உளவியல் தன்மையை காட்சி மொழியாக்குவது சவாலானது. அப்படி அதனை தன்னுடைய உடல் மொழியின் வழியே வெளிப்படுத்துவதும் சவாலானது. அப்படியே இரண்டையும் வெற்றிகரமாக திரையில் கொண்டு வந்தாலும், அது எளிமையாய் எல்லோராலும் புரிந்து கொள்ளும் தன்மையில் வெளிப்படுவது அதை விட சவாலானது. இப்படியான அத்தனை சவால்களையும் மிக, மிகச் சிறப்பாக கடந்து அற்புதமாக இந்தப் பாடல் எடுக்கப்பட்டிருப்பதால் தான், இன்றைக்கு இந்த பாடல் 29 கோடி பார்வையாளர்களையும் கடந்து தன்னுடைய பயணத்தை நிறுத்தாமல் மிக, மிக சிறப்பாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இப்படியானப் பாடலை குரல் மேடையில் தேர்ந்தெடுத்து பாடுவதும், அந்தப் பாடல் வெளிப்படுத்தும் வலியை, ஆன்மாவை தன் குரலின் வழியே சிறப்பாக வெளிப்படுத்துவதும் சிக்கலானது. அந்தச் சிக்கலை மிகச் சிறப்பாக கையாண்டு பாடியிருக்கும் Sezina என்கிற பெண் குழந்தை இந்தப் பாடலை அற்புதமாக பாடியிருக்கிறார். அப்படி Sezina என்கிற பெண் குழந்தை பாடிய மேடைப் பாடலையும் அசலான பாடலையும் இணையத்தில் தேடிப் பாருங்கள். ஒரு சின்ன வேண்டுகோள் இந்தப் பாடலை கேட்பதற்கு முன்னர் இணையத்தில் What About Us என்கிற இந்த பாடலின் வரிகளைத் தேடிப் பிடித்து சில வரிகளையாவது படித்து அது வெளிப்படுத்தும் அர்த்தத்தை உள்வாங்கிய பிறகு கேட்டீர்கள் என்றால், கண்டிப்பாக உங்களின் ஆன்மாவை இந்தப் பாடல் உலுக்கத் தவறாது. முடிந்தால் இந்த அசல் பாடலின் காணொளிக்கு கிழே எழுத்தப்பட்டிருக்கும் பின்னூட்டங்களையும் சென்று படியுங்கள். அப்பொழுது நிறையவே புரியும். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு 9171925916