வகுப்பறை எனும் போதிமரம்…
சென்னையில் வேலம்மாள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புகைப்பட பயிற்சி எடுக்க தொடர்ச்சியாக சென்றுகொண்டிருக்கிறேன். எப்பொழுதுமே அதுவும் பள்ளியில் மாணவ, மாணவிகளுடம் ஒரு உரையாடலை நிகழ்த்தியபடியே பயிற்சி கொடுப்பது சுகம். அவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டே இருக்கலாம். அந்த இடத்தில் நான் கற்றுக்கொடுக்கிறேன் நீ கற்றுக்கொள் என்ற மனநிலை இருக்கக்கூடாது என நினைக்கிறேன். நான் எப்பொழுது சென்றாலும் அவர்களுடன் அமரும் போது கண்டிப்பாக உயரம் கூடுதலான இருக்கையைப் பயன்படுத்தியதில்லை. அவர்களுக்கான சிறிய இருக்கையில் அவர்களோடு ஒருவராக அமரும் போதே அங்கே ஒரு அற்புதமான புரிதல் தொடங்கி விடுகிறது. அதன் பிறகு அவர்கள் கேட்கத் தயாராகிவிடுகிறார்கள்.
முதலில் அவர்களிடம் இருந்து நிறைய கேள்விகள். சார் எந்த கேமரால எடுக்கபோறோம். என்ன எடுக்கப்போறோம். எவ்வளவு நேரம் இப்படி நிறைய கேள்விகள் வந்து விழுந்துகொண்டே இருக்கும். பதில் அவர்களுக்குப் புரியும் மொழியில் தீர்க்கமானதாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன், அந்த கேள்வி பதில்களிலேயே உள்ளார்ந்த கற்றுக்கொடுத்தல் ஆரம்பமாகிவிடும். சரியாக கவனித்தால் கற்றுக்கொடுத்தல் என்பதை விட அந்த மாணவ மாணவிகளிடம் ஒரு உரையாடலின் வழி எனக்கு தெரிந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே. அவர்கள் அதிலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள் என்பதே சரி. எனக்கும் அவர்களுக்குமான அந்த உரையாடல் என்பது, எனக்கும் அவர்களுக்குமான இடைவெளியை குறைத்து, என்னை அவர்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ள வைக்கிறது.
அப்படிப்பட்டப் புரிதல் வந்துவிட்டால், அதன் பிறகு நான் சொல்ல வரும் விஷயத்தை எளிதாக புரிந்த ஒரு மாணவனோ, மாணவியோ தாங்கள்ப் புரிந்து கொண்டதை மற்ற மாணவ மாணவிகளுக்கு எளிதாக கடத்திவிடுகிறார்கள். அப்படி அவர்களுக்குள் நடக்கும் பகிர்தலை உற்றுநோக்கியபடியே இருப்பேன். அது தான் அந்த மாணவ, மாணவிகளை, அவர்களின் மொழியை, அவர்களில் என்னையும் ஒருவனாக ஆக்கும் புரிதலை எனக்குக் கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் அவர்களிடமிருந்து நான் தான் கற்றுக்கொள்கிறேன். அப்படி என்னுடைய பகிர்தலை உள்வாங்கும் போது, அது அவர்களுக்கு கொடுக்கும் மாற்றம் அருமையானதும் கூட. அந்த மாறுதலை தங்களுடன் அவர்கள் நிறுத்துவதில்லை. தங்களுடைய வீட்டிற்கும் எடுத்துச் செல்கிறார்கள். அது தான் அவர்களின் முழுமையான வெற்றி என நினைக்கிறேன்.
அப்படிபட்ட மாற்றத்தை வீட்டிற்கும் எடுத்துச் சென்ற மாணவனது தாய் ஒருவர், அடுத்த நாள் என்னைப் பார்க்க பள்ளிக்கே வந்துவிட்டார். அன்றைய வகுப்பு தொடங்க தாமதமானதால் என்னிடம் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் மேலாக நின்றபடியே பேசிக்கொண்டிருந்தார். நான் அமருங்கள் என பல முறை வற்புறுத்தியும் கேட்கவில்லை. அவர் ஒரு முன்னாள் பத்திரிகையாளரும் கூட. நிறைய எழுதியிருக்கிறார். இப்படிப்பட்ட தருணங்கள் தான் என்னை மேலும், மேலும் அடுத்த தலைமுறையினரிடம் நான் கற்றதை கொண்டு செல்ல மிகப்பெரும் தூண்டுகோலாக இருக்கிறது. மாணவ, மாணவிகளின் மனதில் உளவியல்ரீதியில் ஏற்படும் ஆரோக்கியமான மாற்றம் தான், எனதுப் புகைப்படத்தின் வாயிலான உளவியில் எனும் பயிற்சியின் அடிப்படை. தொடர்ச்சியாக மாணவர்களை நோக்கியதான இந்த உரையாடல் தொடர்ந்தபடி இருக்கிறது. அது மிக, மிக ஆரோக்கியமான மாற்றத்தை நோக்கியதான ஆழமான பயணம். இந்தப் பயணம் என்றும் தொடரும். வகுப்பறை என்பது அற்புதமான ஒரு போதிமரம். அது மாணவர்களுக்கு மட்டுமல்ல…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916