கற்றுக்கொடுத்தலின் உடல்மொழி…
இம்முறை சென்னை வேலம்மாள் பள்ளியின் வேறு ஒரு கிளையில் மாணவர்களுக்கான புகைப்படப் பயிற்சி எடுக்க சென்றிருந்தேன். எங்கு சென்றாலுமே என்னுடைய முதல்வேலை மாணவ, மாணவிகளுக்கான எனக்குமான இடைவெளியை குறைப்பது தான். அதுவே நான் எடுத்துச் செல்லும் விஷயத்தை மிகச்சரியாக அவர்களிடம் சென்று சேர்ப்பதற்கான முதல்படி. அப்படி அந்த மாணவ, மாணவிகளுக்கும் எனக்குமான இடைவெளியற்ற ஒரு தன்மையை அவர்களிடம் உணர்த்திவிட்டாலே போதுமானது. அதன் பிறகு நான் கொடுக்கும் விஷயங்களை அவர்களே அடுத்தடுத்த தளத்திற்கு மிகச்சுலபமாக நகர்த்தி கொண்டு போய்விடுவார்கள். காரணம், நான் கற்றுக்கொடுப்பது புகைப்படக்கலையை. அதில் படிப்பதை விட கூர்மையாக கேட்டலும், அதை செயல்படுத்துவதுமே மிக முக்கியம். அதன் பிறகு என்னுடைய வேலை அவர்களை சரியாக செய்ய வைப்பது மட்டுமே. இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர் & மாணவர்கள் என்ற இடைவெளியோடு கற்றுக்கொடுப்பது பலனளிக்காது என்பதே, பல இடங்களில் புகைப்படக்கலையை கற்றுக்கொடுத்தலின் வாயிலாக மாணவ, மாணவிகளிடம் என்னுடைய அனுபவத்தில் நான் கண்டுணர்ந்து கொண்ட மிகப்பெறும் பாடம். நான் படிக்கும் காலங்களில் ஆசிரியர் மாணவர்களுக்குமான இடைவெளி என்பது பெரியது. ஒரு எல்லைக்குள் இருந்து மட்டுமே ஆசிரியர்களுடன் பேச முடியும். அதைத் தாண்டுவது மரியாதையானது அல்ல என சொல்லப்பட்டே வளர்க்கப்பட்டோம். அதுவும் பாடப்புத்தகத்தை தாண்டி எதுவுமே இல்லை என்ற நிலை. ஒரு நாளில் விளையாட்டுக்கு என ஒத்துக்கப்படும் நேரத்தைக்கூட படிப்பு என்ற பெயரில் கபளீகரம் செய்துவிடுவார்கள். பெரும்பாலான ஆசிரியர்கள். இன்று அப்படியில்லை ஆசிரியர் மாணவர்களுக்கான இடைவெளியை முதலில் நொறுக்கினால் ஒழிய, அவர்களிடம் நெருங்குவதே கடினம். அப்படியே அந்த இடைவெளி அந்த மாணவர்களால் உணரப்பட்டால், நான் சொல்லிக் கொடுக்கும் விஷயத்தை அவர்கள் ஆன்மாவோடு கண்டிப்பாக உள்வாங்க மாட்டார்கள். அப்புறம் என்ன சொல்லி கொடுத்து, என்ன பயன். எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போலத் தான்.
முதலில் அதற்கு என் உடல்மொழி மிக முக்கியம் என நினைக்கிறேன். காரணம், என்ன தான் அவர்களிடம் புகைப்படத்தை எல்லாம் மடிகணினியில் காண்பித்து விளக்கினாலும், புகைப்படம் எடுக்குமிடத்தை தேர்வு செய்து வந்து நின்ற பிறகு, சார் நீங்க முதலில் எடுங்க. அப்புறம் நாங்க எடுக்கிறோம் என சொல்லிவிட்டார்கள். நான் தான் வகுப்பறையிலேயே புகைப்படம் எப்படி எடுக்கவேண்டுமென நிறைய புகைப்படங்களை காட்டி விளக்கினேனே என்று சொன்னால், அது இருக்கட்டும் சார், இப்ப வகுப்பறையில் என்ன சொல்லி கொடுத்தீர்களோ அதுபடி நீங்கள் முதலில் எடுங்கள், அதை பார்த்து நாங்கள் எடுக்கிறோம் எனச் சொல்லிவிட்டார்கள். அங்கே நான் புகைப்படம் எடுப்பதை அவர்கள் பார்ப்பதின் வாயிலாக, எனது உடல்மொழியிலிருந்து அனைத்தையும் கவனித்து, அதன்பின்னரே அவர்கள் எடுக்க ஆரம்பிக்கிறார்கள். அங்கு வந்து நின்றுகொண்டு நான் தான் உங்களுக்கு தெளிவாக சொல்லி கொடுத்தனே என்றால் அது வேலைக்கே ஆகாது. அதுவே, அவர்கள் சொல்வதை கேட்டு அதன் படி நான் மாறினால், அவர்கள் தாங்கள் வீட்டிற்கு செல்லும் நேரம் கடந்தும் கூட, அதனைப் பொருட்படுத்தாமல், தாங்கள் எடுத்த புகைப்படங்களின் மீதான என்னுடைய கருத்தை கேட்கவேண்டும், அதன் மூலம் தாங்கள் எதில் எல்லாம் மாறவேண்டுமெனக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில், முழு ஆர்வத்தோடு பேசிக்கொண்டிருந்தார்கள். நான் நேரம் ஆகிவிட்டது என்று சொன்னாலும், அது ஆகட்டும் சார், நீங்க சொல்லுங்க சார். என்பதே அவர்களின் குரலாக ஒலிக்கிறது. அதுவே கற்றுக்கொடுத்தலில் எனக்கான மகிழ்ச்சி.
என்னுடைய நோக்கம் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பது. நான் சொல்வதை அவர்கள் முழுமையான ஈடுபாட்டுடன் கேட்க வேண்டும் என்பதே. அதை மட்டுமே மனதில் கொண்டு அவர்களைக் கவனிப்பேன். அந்த இடத்தில் நான் ஆசிரியன் என்ற ஈகோவை மனதில் இருத்தி, அவர்களிடம் என் முன்னே நீ இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும், இப்படி தான் அமர வேண்டும், உன் கைகளை இப்படித் தான் வைக்கவேண்டும், என பல இப்படித்தான்களை அவர்களுக்கு சொன்னேனேயானால் அங்கு ஒன்றுமே நடக்காது. அதுவும் போக ஆசிரியர் என்ற இடத்திலிருந்து யாரும் சொல்லி கொடுப்பதை அவர்கள் விரும்புவதில்லை, அவர்கள் விரும்புவது பகிர்தலை. அதுவே மிக முக்கியம். அதற்கு என்னை அவர்களில் ஒருவனாக மாற்றி, என்னுடைய உடல்மொழியை மிகச்சரியாக கையாண்டால் ஒழிய, நான் பகிர நினைக்கும் எதுவுமே அவர்களிடம் சென்று சேராது. அதனால் எனக்கும் பயனில்லை, அவர்களுக்கும் பயனில்லை. அப்படி பயனற்ற ஒன்றை கடமைக்கு செய்வதை விட, நான் அவர்களை புரிந்து மாறுவதே சரியாக இருக்குமென நினக்கிறேன். என்னுடைய மாற்றம் என்பது அவர்களையும் சேர்த்தே மாற்றிவிடுகிறது. அதன் பிறகு அவர்கள் எதை செய்தாலும் ஒன்றுக்கு நான்கு முறை தாங்கள் செய்வது சரியா எனல் கேட்டபடியே செய்யத் தயாராவே இருக்கிறார்கள். அது என்னுடைய வெற்றியல்ல அவர்களின் வெற்றி. மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916