இலக்கை எப்படிப் புரிந்துகொள்வது…
முடிந்த ஞாயிறுக்கு முன்பாக ஒரு அலைப்பேசி அழைப்பு. ஞாயிறு உங்களுக்கு வேறு ஏதேனும் முக்கிய பணி இருக்கிறதா எனக் கேட்டார் நண்பர். தற்போது வரை இல்லை என்றேன். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது என்னுடைய அம்மா வரும் ஞாயிறு எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடன் கோவிலுக்கு வரவேண்டும் என்று சொல்லி இருந்தார். ஆனால் அழைத்த நண்பர் சொன்ன பணி அதை விட முக்கியமானது. ஆதரவற்ற இல்லத்தின் வழியாக படிக்கும் மாணவிகள் ஒரு நாற்பது பேர் இருக்கிறார்கள். அவர்களிடையே நீங்கள் பேசவேண்டும். அது குறிப்பாக எட்டாம் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு. அவர்கள் தாங்கள் அடைய நினைக்கும் இலக்கை பற்றிய புரிதல் ஏற்படும்படியான பேச்சாக இருக்க வேண்டும் என்பதே மையக்கருத்து. என்னுடைய அம்மா கண்டிப்பாக என்னுடன் கோவிலுக்கு வரவேண்டும் என்று சொன்னதை மனதின் ஓரத்தில் தூக்கி வைத்துவிட்டு. அழைத்து பேசிய நண்பரிடம் உடனடியாக என்னுடைய ஞாயிறு வருகையை உறுதிசெய்தேன். காரணம், இதைவிட வேறு மிகச்சிறந்த இறைப்பணி எதுவாக இருக்க முடியும்.
ஞாயிறு அன்று அந்த இல்லத்தில் என்னுடைய பேச்சு மட்டுமன்றி, பல்வேறு நிகழ்வுகள் நண்பரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிந்தனையுடன் கூடிய அறிவு திறனை வளர்க்கும் படியான விளையாட்டுக்கள். ஓவியப் பயிற்சி இப்படி நிறைய. இந்த நிகழ்வுகளுக்கு இடையில் ஒன்றை மணி நேரம் நான் அவர்களிடைய பேச வேண்டும். பொதுவாக மாணவர்களோ, மாணவிகளோ அவர்களிடையே பேசும் போது, அவர்கள் விரும்பும் மொழி எது என்பதை புரிந்து பேசுவது முக்கியம் என நான் நினைக்கிறேன். அப்படி அவர்களின் மொழி அறிந்து பேசும் போது, நாம் சொல்ல வரும் விஷயம் மிக, மிக எளிதாக அவர்களிடம் சென்றடைந்து விடுகிறது. அவர்களிடத்தில் நான் பேசும் வார்த்தைகள், அவர்கள் விரும்பும் மொழியின் வழியே சென்றடையும் தருணத்தில், அவர்களின் முகத்தில் பற்றி படரும் நம்பிக்கையின் ரேகைகளை காணும் போது, மனதினுள் உணரும் ஒருவித ஆத்ம திருப்தி இருக்கிறதே, அது தான், அது தான் ஆகச்சிறந்த இறைப்பணி என்பதை புரிந்துகொள்ள வெகு நேரம் ஆகவில்லை.
இன்றைய மாணவ, மாணவிகளுக்கு தங்களின் இலக்கை நிர்ணயிப்பது என்பது பெரும்பாலும், தங்களை சுற்றி இருக்கு சமுகம் கொடுக்கும் அழுத்தத்தாலேயே அவர்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதனைத் தவிர்த்து தங்களுக்கு உண்மையிலேயே எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை சரியாக புரிந்து இலக்கை நிர்ணயிப்பது என்பது தான் சரியாக இருக்கும். அதைத் தான் அவர்களிடத்தில் பேசும் பேச்சின் ஊடாக சொல்லிக் கொண்டே இருந்தேன். அவர்களிடத்தில் முதலில் உங்களின் இலக்கு என்ன கேட்ட போது, பெரும்பாலான மாணவிகள் சொன்ன பதிலில், அந்த மாணவிகளாக தங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை உணர்ந்து நிர்ணயித்து இருக்கிறார்களா, இல்லை தங்களை சுற்றி இருக்கும் சமூகம் கொடுக்கும் அழுத்ததால் நிர்ணயித்து இருக்கிறார்களா என்பதை உணர முடிக்கிறது. அதற்காக அவர்களிடத்தில் நீங்கள் நிர்ணயித்து இருக்கும் இலக்கு சரியில்லை என்று சொல்வது போல் முட்டாள்தனம் ஏதுமில்லை. அவர்களிடம் பேசும் போது முழுக்க, முழுக்க வார்த்தைகள் நேர்மறையாய், நம்பிக்கையாய் அதே சமயம் பேச்சின் ஊடாக நுட்பமாக நீங்கள் விரும்பும் துறை எது என்பதை உங்களுக்கு நீங்களே தெளிவாகிய பிறகு, இலக்கை பற்றி யோசியுங்கள் என்று சொல்லும் போது, அந்த மாணவ, மாணவிகளால் மிக, மிக எளிமையாக அதனை எவ்வித உறுத்தலுமற்று ஏற்றுக்கொள்ள முடிகிறது. அது தான், அந்த தெளிவு தான் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மிக, மிக முக்கியமான விஷயமாக நான் கருதுகிறேன். அதை விடுத்து சமூகம் கொடுத்த அழுத்தத்தால் நிர்ணயிக்கப்படும் இலக்கை வைத்துகொண்டு ஓடுபவர்களால், சமீபத்தில் வந்த ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் வருவது போல், அவர்களை அவர்களே வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு தான் இலக்கை நோக்கி ஒடவேண்டும். அதுவும் போக, அது கொடுக்கும் மன அழுத்தமும் மிக மோசமானது. இவற்றை எல்லாம் உணர்ந்து, தவிர்த்து தங்களின் இலக்கை தாங்களே முழுமனதோடு விரும்பி தேர்ந்தெடுத்து ஓடும் போது, இந்த உலகமே அவர்களின் வசமாகும் என்பதில் மாற்று கருத்தில்லை. தொடர்ச்சியாக அப்படியான புரிதலை அவர்களிடையேக் கொடுத்துக்கொண்டிருப்பது தான் என்னுடைய ஆகச்சிறந்த பணி என நான் கருதுகிறேன். நன்றி, மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916