தூக்குவாளியின் மூடியில் ஒரு தேவ அமிர்தம்…
காலை ஒரு ஐந்து மணியிருக்கும் தூக்கம் லேசாக கலைந்தது.. அதன்பின் தூக்கம் வருவது சிரமம் தான் என தெரிந்தும் படுக்கையை விட்டு ஏழ மனம் வரவில்லை. புரண்டபடியே படுத்திருந்தேன். ஒரு அரைமணிநேரம் கழித்து இதற்கு மேல் முடியாது என்று மனம் ஒப்புக் கொண்டவுடன் எழுந்துவிட்டேன். தூக்கம் முழுமையாக கலைந்த பின்பும் படுக்கையில் உழல்வது ஒரு சுகம் தான். இப்போழுது தான் வீடு மாறியிருக்கிறேன். புதியதாக வந்திருக்கும் வீட்டின் முதல் தளத்தில் தான் இப்பொழுது வாசம். வாடகை வீடு தான். முதல் தளம் என்றவுடன் அடுக்குமாடி குடியிருப்பு என நினைக்க வேண்டாம். மொத்தமே அவ்வளவு தான் வீடே. தரை தளத்தில் ஒரு சின்ன அறை. அதன் இன்னொருப் பக்கத்தில் ஒரு நான்கு சக்கர பெரிய வாகனம் நிற்பதற்கான பெரிய கதவுடன் கூடிய ஒரு அறை. அது அந்த வீட்டின் உரிமையாளரின் வாகனம் நிறுத்துவதற்கான இடம் அவ்வளவே. மேலிருக்கும் வீட்டின் முற்றத்தில் இருந்து பார்த்தால் கண்ணுக்கு தெரியும் இடம் வரை வயல்வெளி தான். காலை எழுந்து பல் துலக்கிவிட்டு வந்தவுடன் முற்றத்தில் வந்து நின்று அந்த வயல்வெளியை பார்த்தபடி ஏகாந்தமாய் காற்று வாங்குவது ஒரு சுகம். வீடு மாறும் போது என்னுடைய அம்மா போட்டது இரண்டு மிக முக்கியமான நிபந்தனைகள்.
ஒன்று தண்ணீர் தட்டுப்பாடு இருக்கக்கூடாது. இரண்டாவது வீட்டில் இருந்து எங்கும் போய் வர போக்குவரத்து வசதி எளிதானதாய் இருக்க வேண்டும். இரண்டு நிபந்தனைகளும் சரியாக இருந்தால், தூரம் ஒரு பிரச்சனையில்லை எனச் சொன்னதால், மதுரைக்குள்ளிருந்து கொஞ்சமே கொஞ்சம் விலகி இந்த வீடு. சுற்றிலும் வயல்வெளிக்கு இடையே. இப்பொழுது முற்றத்திற்கு வருவோம். நான் காற்று வாங்கியபடி நின்று கொண்டிருந்த நேரத்தில் கீழே சின்ன சலசலப்பு என்னவெனப் பார்த்தால். வீட்டின் எதிரில் இருக்கும் நிலத்தில் அடர்த்தியாய் வளர்ந்த நாற்றுகளை எடுத்து, மாற்றி நடுவதற்கான வேலைக்கு ஆட்கள் வந்திருந்தார்கள். அவர்கள் பேசும் சத்தம் தான் கேட்டது. அவர்கள் வரும் போது காலை ஒரு ஆறரை மணி இருக்கும். வந்தவுடன் நேராக நான் தங்கியிருக்கும் வீட்டின் கீழே நான்கு சக்கர வாகனத்தை உள்ளே விடுவதற்காக ரோடுவரை போட்டிருக்கும் சிமெண்ட் தளத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஒரு தூக்குவாளியில் பழைய சோறு. அதற்கு தொட்டுக்கொள்ள ஒரு அக்கா ஊறுக்காய், இன்னொரு அக்கா துவையல், இன்னொரு அக்கா நேற்றைய முருங்கை குழம்பு என வைத்துக்கொண்டு, அந்தச் சோற்றை அள்ளித் தூக்குவாளியின் முடியில் வைத்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.
தூக்குவாளி என்ற சொல்லே இந்த தலைமுறையில் எத்தனைப் பேருக்கு தெரியும் எனத் தெரியவில்லை. அப்புறம் தற்பொழுதைய தலைமுறையில் ஒரு பிரிவினரிடம் பிரபலமாக இருக்கும் இன்னொரு விஷயம், நிறைய வகை, வகையான உணவுகளை தேடி, தேடி ருசிப்பதை தங்களின் தேடலாக வைத்திருக்கிறார்கள். அதற்குத் தங்களை Foodie என்று சொல்லிக் கொள்வதை கவுரமாகவும் கருதுகிறார்கள். அந்த Foodieக்கள் இந்த பழைய சோறை ஒரு நாளேனும் ருசித்துப் பார்க்க வேண்டும். அதுவும் குறிப்பாக இந்த விவசாய வேலைக்கு வரும் மக்கள் கொண்டு வரும் உணவை ருசித்துப் பார்க்க வேண்டும் என்கிற யோசனை மனதில் ஓடியது. சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த அக்காக்களை மேஸ்திரி விரட்டிக்கொண்டே இருந்தார். நேரமாச்சு வேகமா, வேகமா எனக் கத்திக்கொண்டிருதார். சாப்பிட்டது போக மீதமிருக்கும் சோறு மதியத்துக்கு. சாப்பிட்டப் பின் வயலில் இறங்கி நாற்றை தொட்டு வணங்கியோ அல்லது அதனை சிறிது கொய்து முடியில் சூடிக் கொண்ட பிறகோ தான் நாற்றைப் பிடுங்க ஆரம்பிக்கிறார்கள். அது தான் அவர்கள் அந்த மண்ணுக்கும், அந்த நாற்றுக்கும் கொடுக்கும் மிகப்பெரும் மரியாதை.
நிலமும் அதில் விளைவிக்கப்படும் உணவுதானியமும் லெட்சோபலட்சம் மக்களின் பசியாற்றவல்லது. அதனை உணர்ந்து அதற்கான மரியாதை செலுத்துவதை எந்த ஒரு விவசாயியோ அல்லது விவசாய வேலைக்கு வருபவர்களோ செய்யத் தவறியதே இல்லை. செருப்புக் காலுடன் தவறிக்கூட விளைவிக்கப்படும் நிலத்தில் அவர்கள் இறங்குவதே இல்லை. சோற்றையும் வீணாக்குவதில்லை. ஆனால் தங்களுடைய தட்டில் விழும் உணவு எங்கியிருந்து வருகிறது எனத் தெரியாத, அந்த உழைப்பை, அந்த உழைப்பின் பின்னால் இருக்கும் அறத்தை பற்றி தெரியாத அல்லது தெரிந்து கொள்ள விருப்பப்படாத ஒரு தலைமுறை, பணம் கொடுத்தால் எல்லாம் கிடைத்துவிடும் என நம்புகிறது. அவர்கள் உணவை வீணடிப்பதை பற்றி கொஞ்சமே, கொஞ்சமேனும் யோசிப்பதேயில்லை. பசியாற்றுவது வணிகமாக மாறியபோது கூட குறைந்தபட்ச அடிப்படை அறத்துடன் தான் இருந்தது. ஆனால் இன்று எல்லாமே தலைகீழ். எந்த ஒரு உணவு வணிக கடைகளிலும் குப்பைக்கு போகும் உணவைப்பார்த்தாலே மனம் பதறுகிறது. பசிக்கான உணவை உத்தரவிட்டு உண்பதைவிட, ருசிக்காக சொல்லிவிட்டு பிடிக்கவில்லையெனில் அது குப்பைக்கு தான் போகிறது. அது குப்பைக்கு போவதை பற்றி கிஞ்சிதும் யோசிப்பதேயில்லை. உணவகங்கள் பசியாற என்கிற நிலைமாறி, அது பெரும் பொழுது போக்கு தளமாகவும், முற்றிலும் வணிக நோக்கம் மட்டுமே பிரதானமாகயும் மாறிக்கொண்டே வருகிறது. இது எதுவுமே அந்த நிலத்தில் பயிரிட இறங்குபவனுக்கு தெரியாது. அவனைப் பொறுத்தவரை நிலம் என்பது வணக்கப்பட வேண்டியது. அதில் அவன் விளைவிக்கும் உணவு என்பது நிலம் நமக்களிக்கும் கொடை. அதற்காக இந்த நிலத்திற்கு காலமெல்லாம் நன்றி சொல்ல வேண்டும். அந்த நிலத்திடம் நல்ல விளைச்சலைத்தா என வேண்டி நிற்க வேண்டும் என்று அவன் முழுமையாய் நம்புகிறான். ஆனால், நாம் அவன் வணங்கி விளைவித்துத்தரும் உணவு தானியத்தை வீணாக்கி, அவனுடைய நம்பிக்கையில் ஏறிமிதித்து உணவு வணக்கப்பட வேண்டியது அல்ல என பொழுது போக்காக கூத்தடித்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒன்று, ஒரு நாள் அந்த நிலம் நம்மை ஏறிமிதிக்கும், அப்பொழுது என்ன கத்தினாலும் ஒருவனும் வரமாட்டான்.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916