விழித்திருக்கும் மனித தேனீக்களின் ஒற்றை இரவு…
குறிப்பாக மதுரையின் இதயப்பபகுதிகளில் இருக்கும் பிரதான வீதிகளின் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் இரவு என்பது தனித்துவமானது. அந்த இரவை மதுரைக்குள் இருந்து கொண்டு நேரில் சென்று அனுபவிக்காதவர்களை நினைத்து நான் பரிதாபபடுகிறேன். காரணம், அது மதுரை என்ற ஊரின், அங்கு வாழும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியல் அடையாளம். நாம் எந்த ஊரில் வாழ்ந்தாலும் அந்த ஊரின் நிலப்பரப்பையும், அங்குள்ள மக்களின் வாழ்வியல் சார்ந்த மனநிலையையும், ஊர் வீதிகளின் தன்மையையும் புரிந்து கொண்டு வாழ்வது என்பது ஒரு அட்டகாசமான அனுபவம். பொதுவாக எனக்கு ஒரு பழக்கமுண்டு, நான் புதியதாய் எந்த ஊருக்கு சென்றாலும், அங்கு இருக்கக் கிடைக்கும் நேரத்தை பொறுத்து, இரண்டு விஷயங்களை கண்டிப்பாய் செய்துவிடுவேன். ஒன்று அந்த ஊரில் இருக்கும் பிரதான மக்கள் கூட்டம் அதிகம் கூடும் கடைவீதியை தெரிந்து கொண்டு, அங்கே போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு அங்கிருக்கும் ஏதோ ஒரு ரோட்டோர கடையில் உணவருந்துவது. இரண்டாவது அங்கிருக்கும் திரையரங்கு சென்று படம் பார்த்துவிடுவது. இந்த இரண்டுமே ஒரு ஊரையும், அங்கு வாழும் மக்களின் மனநிலையையும் பற்றி எளிதாய் உள்வாங்கி கொள்ள இலகுவான வழி என்பது என்னுடைய தனிப்பட்ட அனுபவ பாடம்.
எனக்கு 1999 வருட தீபாவளிக்கு முந்த இரவை மறக்க முடியாது. காரணம் சுமார் ஆறு அல்லது ஏழு நண்பர்கள் சேர்ந்து தீபாவளிக்கு முந்தைய இரவில் மதுரைக்குள் சுற்ற வேண்டுமென முடிவு செய்தோம். முதலில் மதுரை மதி திரையரங்கில் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் திரைப்படத்தை இரவுக்காட்சி பார்த்துவிட்டு வெளி வந்து, இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு. அப்படியே மதுரையின் பிரதான வீதி தொடங்கும் இடமான நேதாஜி வீதியில் நுழைந்து சுற்ற ஆரம்பித்தோம். நண்பர்களுக்குள் நக்கலும் அரட்டையுமாக மிக, மிக அற்புதமான இரவாக அது மாறியது. அதில் ஒரு நண்பன் அங்கிருக்கும் ஒரு பெல்ட் கடைக்குள் எங்களுடன் வந்திருந்த நண்பர்களில் இருவரை கூட்டிக்கொண்டு நுழைந்தான். மீதமுள்ளவர்கள் மாப்ள நீ போய் வாங்கிட்டு வா நாங்க இங்கனக்குள்ள சுத்திகிட்டு இருக்கோம் என்றவுடன், அவன் சரியெனச் சொல்லிவிட்டு கடைக்குள் போய்விட்டான். நாங்கள் ஒரு அரைமணி நேரம் சுற்றிவிட்டு வந்தால், அவனை வெளியில் காணவில்லை. உள்ளே ஒரு நண்பனை அனுப்பி போய் பார்த்து வர சொன்னால், அவன் பார்த்துவிட்டு வந்து, டேய் அவன் இன்னும் பேரம் பேசி முடிக்கலடா எனச் சொன்னவுடன், சரி அவன் வரட்டும் என அப்படியே அங்கிருக்கும் ஒரு கடை வாசலில் அமர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்து விட்டோம். கடைசியில் உள்ளே பெல்ட் வாங்க போன நண்பன் சுமார் ஒன்றை மணி நேரம் கழித்து வெளியே வந்தான். கையில் ஏதுமில்லை. என்ன மாப்ள என்று கேட்டால். இல்ல மாப்ள பேரம் படியலடா என்றான். எங்களுக்கு இவ்வளவு நேரம் இவனுடைய பேரம் பேசும் பேச்சை தாங்கிய அந்த கடைக்காரனை நினைத்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியாமல், அந்த நண்பனை வகையாக ஓட்டிக்கொண்டே சுற்றி கொண்டிருந்தோம். சுற்றல் முடிந்த நேரம் அதிகாலை நான்கரை மணி. அப்படியான ஒரு அற்புதமான இரவுக்கு பிறகு எத்தனையோ தடவை முன் கூட்டியே திட்டமிட்டும், அப்படியான ஒரு இரவு மதுரை வீதி உலா அமையவே இல்லை. இம்முறை நான் யாரிடமும் சொல்லாமல் கண்டிப்பாக, நான் மட்டுமாவது கண்டிப்பாக போயே தீருவது என முடிவு செய்து கொண்டேன். அதற்கு ஏற்றாற் போல் முந்தைய தடவை போனது போல் ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு மதுரை வீதிக்குள் இறங்குவது என முடிவு எடுத்து, இம்முறை இரண்டு புதிய திரைப்படங்களுமே தீபாவளிக்கு முந்தயைய நாளே வெளியாவதால், அதில் பிகிலுக்கு இணையத்தின் வழியாக முன்பதிவு செய்துவிட்டேன். மனைவிடமும் சொல்லவில்லை அவளும் பல முறை என்னிடம் நான் அப்படியான இரவு சுற்றலை இதுவரை அனுபவித்தது இல்லையென சொல்லியிருந்தால். திரைப்படத்துக்கு முன்பதிவு செய்ததும் அவளுக்கு தெரியாது. ஒரு நாள் முன்னதாக அவளிடம் சொன்னவுடன், மிகவும் சந்தோசத்தோடு நானும் கண்டிப்பாய் வருவேன் என சொல்லிவிட்டால். எங்களின் மகளை மனைவியின் தங்கை வீட்டில் விட்டுவிட்டு (மனைவியின் தங்கை வீடு திரையரங்க்குக்கு அருகில் தான் இருக்கிறது) இரவு எழரை மணி காட்சி திரைப்படத்துக்கு மனைவின் தங்கை கணவரையும் அழைத்து சென்று, சகலையையும் இரவு வீதி உலா கூட்டணியில் சேர்த்துக்கொண்டு திரைப்படம் முடிந்ததும், இரவு பத்து மணிக்கு இரண்டு இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கட்ராபாளையம் சென்று, அந்தச் சந்திற்குள் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு, களத்தில் இறங்கினோம். தீபாவளிக்கு முந்தைய இரவின் கோலகலமான வீதி உலா இனிதே துவங்கியது.
கட்ராபாளைத்திலிருந்து நேராக நேதாஜி வீதியை அடைந்து, அங்கிருந்து, தங்கமயில் நகை கடையைக் கடந்து, மீனாட்சி அம்மன் கோவிலின் வழியே சென்று முட்டும் இடத்தில், வலது புறமாக திரும்பி, நல்லி சில்க்கை கடந்து நாச்சியார் கடை இருக்கும் பிரதான வீதிக்குள் நுழைந்து, அப்புறம் விளக்குத்தூண், அப்படியே நடந்து, மதுரை பேமஸ் ஜிகர்தண்டா, அப்படியே ஜிகர்தண்டாவை ஒரு கை பார்த்துவிட்டு, கீழவாசல், அப்படியே ஆனந்தா மெட்டல், அப்புறம் இத்துடன் முடிச்சிகலாம் என அப்படியே திரும்பி, சென்மேரிச் தேவலாயம் அருகே வரை நடந்து வந்து ஆட்டோ பிடித்து, கட்ராபாளையம் வந்து, இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேரும் போது, மணி அதிகாலை இரண்டரை மணி. நான், என்னுடைய மனைவி மற்றும் மனைவின் தங்கை கணவர் என மூன்று பேருக்கும் கண்டிப்பாக இது மறக்க முடியாத இரவு நேர வீதி உலா. இந்த இரவைப் பற்றி பேசி, பேசி சந்தோசப்பட பல நூறு விஷயங்களை இந்த ஓர் இரவுக்குள் கடந்து வந்திருக்கிறோம் என நினைக்கும் போது, அது கொடுக்கும் மனதிருப்தி கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. இவையெல்லாம் போக ஒருவருக்கு ஒருவர் எளிதாக பேசி புரிந்துகொள்வதற்கான மனநிலை வாய்க்கும் இடமாகவும் இதனை நான் கருதுகிறேன் மூன்று பேருமே நிறையவே பேசினோம், உள்வாங்கினோம், வேடிக்கை பார்த்தோம், கூட்டத்தில் ஒருவரை ஒருவர் தவற விட்டோம், ஒருவருக்கு ஒருவர் கிண்டலடித்துக்கொண்டோம். இப்படியே நிறையவே சொல்லிக் கொண்டே போகலாம். இன்றைய சூழலில் மனித உறவுகளுக்கு இடையேயான நெருக்கம் குறைந்து கொண்டே வருகிறது. பொதுவில் இருவர் பேசிக்கொள்ளும் போது இயல்பாக பேசுவது மிகவும் அருகிக்கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தங்களின் இயல்பான இருத்தலை, அதற்கான மனநிலையை உருவாக்கி கொடுக்கும் சூழல், இது போன்றதொரு சந்தர்ப்பத்தில் அமைவதை கண்டிப்பாய் மறுப்பதற்கில்லை, கண்டிப்பாக, இப்படியான வாய்ப்பு உங்களுக்கு இருக்கும் பட்சத்தில், அதனைக் கண்டிப்பாய் தவறவிடாதீர்கள். குறிப்பாக உங்களிடம் இருக்கும் அலைபேசியை அனைத்து ஓரமாக வைத்துவிட்டு செல்லுங்கள். இங்கே கற்றுக்கொள்ள, புரிந்துகொள்ள, அடுத்தவர் பேசுவதை காது கொடுத்து கேட்க என ஓராயிரம் அற்புதமான அனுபவங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது. வாருங்கள் கைகோர்த்து நடக்கலாம்… மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916