மலை முகடுகளில் எதிரொலித்த மரணவெளியின் ஓலம்…
சாவு, சென்னைப் போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில், ஒரு மனிதனின் இறப்பு அந்தக் குடியிருப்பில் இயங்கும் சமூகத்தில் எப்படி அணுகப்படுகிறது என்பதை கவனித்தால், கண்டிப்பாக நாமெல்லாம் மனிதர்கள் தானா என்ற மிகப்பெரும் சந்தேகம் மனதினுள் தோன்றி மறைவதை தவிர்க்கவே முடியாது. இப்படிப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் நிகழ்ந்த மரணங்களை எதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்கொண்ட போதெல்லாம், அங்கே வலிந்து உருவாக்கப்பட்டிருக்கும் சூழல் என்னை மிக, மிக மோசமாக பாதித்திருக்கிறது. காரணம், மனிதனுக்கும் விலங்கினத்துக்கும் உள்ள வித்தியாசம் எது என்பதை வேறுபடுத்தி காட்டும் மிக முக்கியமான குணாதிசியமாக சுட்டிக்காட்டப்படுவது தான் சிரிப்பும், அழுகையும். இதனைப் பலர் சொல்லி பல நூறு முறைக் கேட்டிருக்கிறேன். படித்தும் இருக்கிறேன். ஆனால் சென்னை போன்ற பெருநகர அடுக்குமாடி குடியிருப்பில் நிகழும் இறப்பும், அந்த இறப்பை அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் விதத்தையும் கவனித்தால், அங்கே அழுகை என்பதே பெரும்பாலும் இருக்காது. அப்படியே இருந்தாலும், அந்த அழுகை ஒரு மிகப்பெரிய கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும். அதுவும் வாயை திறந்து அழுவதெல்லாம் அடுக்குமாடி குடியிருப்பின் பண்பாட்டை இழிவுபடுத்துவது போலான செயல். இது தான் அங்கே எழுதப்படாத சட்டம். இன்னும் நிறைய சட்டங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்குள் இருக்கிறது. அது தனிக்கதை. அது இப்பொழுது வேண்டாம். இப்படிப்பட்ட சூழலில் வளரும் சமூகம் தன்னை சுற்றி நடக்கும் எந்த ஒரு நிகழ்வுகளையும் எப்படி உள்வாங்கி எதிர்வினையாற்றும் என யோசித்தால் உண்மையில் தலைச்சுற்றிவிடும். இதையெல்லாம் பார்க்கும் போது என்னளவில் சென்னை போன்ற பெருந(ர)கரங்களின் மீதான பார்வை என்பது முற்றிலுமாக மாறிவிட்டது.
இப்படிப்பட்ட மனிதர்கள் மட்டும் தான் பெருநகரங்களில் வசிக்கிறார்களா, மனிதம் என்பதே இங்குள்ள மனிதர்களிடத்தில் இல்லையா எனக் கேட்டால் கண்டிப்பாய் இருக்கிறது. ஆனால் அப்படி மற்றவர்களின் துக்கத்தை தன்னுடைய துக்கமாக எண்ணி தோள்கொடுக்கும் சமூகத்தை, இந்த நகரம் கொஞ்சம்கூட இரக்கமேயின்றி நகரத்துக்கு வெளியே நகர்த்திவிடுகிறது அல்லது அடுக்குமாடி குடியிருப்போடு தாங்கள் வாழும் பகுதி தான் இந்த நகரத்தின் மிக முக்கியமான பகுதி என்ற மாயையை மிக, மிகச் சுலபமாக உருவாக்கி விடுகிறது. அப்படியானால் மற்ற பகுதி? ஒத்துக்குப்புறம், அது எங்களை போன்றவர்கள் வாழ தகுதியில்லாத பகுதி என்பது தான் இந்த அடுக்குமாடி குடியிருப்புவாதிகளின் கோட்ப்பாடு. அடுக்குமாடி குடியிருப்பில் நிகழும் இறப்பை கடக்கும் போது எல்லாம், தமிழில் கதறல் என்ற ஒரு வார்த்தை உண்டு, அதன் அர்த்தம் எல்லாம் இவர்களுக்குத் தெரியுமா என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனால் உண்மையான இழப்பின் கதறலும், அரற்றலும் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் நிகழ்வு ஒன்றைக் என் கண்முன்னே கண்டேன்.
கடந்த மாதம் ஒரு மிக முக்கியமான அலுவல் சம்பந்தமாக ஒடிசா மாநிலத்தில் இருக்கும் ஓர் மலைகிராமத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. உண்மையில் அங்கு சென்ற பிறகுதான் வாழ்வை எப்படி வாழவேண்டும் என்பது விளங்கியது. இன்றைய நகர சமூகம் வானத்தை அண்ணாந்து பார்த்தே பல மாதங்கள் ஆகிறது என்பதை பெருமையாக சொல்லிகொள்ளும் சமூகம். ஆனால் அங்கிருக்கும் மலைகிராம மக்களின் ஒவ்வொரு நாள் விடியலுமே சூரியனை வணங்குவதில் இருந்து தான் தொடங்குகிறது. ஒரு நாளின் விடியலில் இருந்தே அவர்களுக்கும் நமக்குமான வித்தியாசம் தொடங்கிவிடுகிறது. நாகரிகம் என்ற பெயரில் இயற்கைக்கு எதிராய் நாம் செய்யும் அயோக்கியத்தனம் எதையும் அவர்கள் செய்வதே இல்லை. உணவு, உடை, உறைவிடம் என்ற ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளில் கூட அவர்களின் எளிமையும், அழகும் பிரமிக்க வைக்கிறது. தாங்கள் புதிதாய் காணும் ஒரு பொருளையும், மனிதனையும், அவர்கள் பணத்துடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதேயில்லை. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி ஒரு மலைகிராமத்திற்கு சென்ற போது ஊருக்குள் நுழையும் இடத்தில் இருந்த வீட்டின் வெளியே ஒரு பெண்ணின் புலம்பல் கேட்டுக்கொண்டிருந்தது. புலப்பியபடியே இருந்த அந்த பெண்ணுடன் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார், அதை பார்த்துக்கொண்டே வந்த அலுவலை முடிக்கும் அவசரத்தில் ஊருக்குள் போய்விட்டோம்.
ஊருக்குள் செல்லும் போது மூன்று பெண்கள் தங்களின் தலைக்குமேல் தங்கள் வீடுகளில் தயாரித்த உணவை அந்த பாத்திரத்தோடு எடுத்துக்கொண்டு கடந்து போனார்கள். நான் எதோ விஷேச வீட்டுக்கு எடுத்துப் போகிறார்கள் என நினைத்து கொண்டிருந்தேன். எங்களின் அலுவல் முடிந்து கிளம்ப மாலை ஐந்தரை மணி ஆகிவிட்டது. அங்கே குளிர் அதிகமென்பதால் சீக்கிரமே இருட்டி விட்டது. அந்தக் கிராமம் கிட்டதட்ட ஐந்து மலைகளால் சூழப்பட்டு நடுவில் வீற்றிருக்கும் ஒரு மலை கிராமம். நாங்கள் அலுவலை முடித்து ஊர் வாசலில் நிறுத்தியிருக்கும் வாகனத்தில் ஏறும்போது தான் அந்த தகவல் எங்களுக்கு சொல்லப்பட்டது. நாங்கள் ஊருக்குள் நுழையும் போது ஒரு பெண்ணின் புலம்பலை கடந்து சென்றோம் இல்லையா, அந்த வீட்டின் மிக முக்கியமான நபர் ஒருவர் இறந்துவிட்டார் என்பது தான் எங்களுக்கு சொல்லப்பட்ட தகவல். அப்பொழுது தான் கவனித்தேன் காலையில் புலம்பிக்கொண்டிருந்த அந்த பெண்ணின் கணவர் தான் இறந்தது. அந்த மலை கிராம வழக்கப்படி இறப்பு நடந்த வீட்டிற்கு, ஊர் மக்கள் தங்களின் வீட்டில் சமைத்து எடுத்து வந்து கொடுப்பார்களாம், என்னை கடந்து போன அந்த மூன்று பெண்களும் அவர்கள் சமைத்த உணவை இறப்பு வீட்டிற்கு தான் எடுத்து வந்திருக்கிறார்கள். அன்றைக்கு எனப் பார்த்து அந்த கிராமத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு முழுவதுமாக இருளாக இருந்தது.
அந்த மலைகிராமத்தில் மாலை நேரக்குளிர், மின்சாரமற்ற வெளிச்சமில்லா இருட்டு என அந்த பேரமைதிக்கு நடுவே அந்த இறப்பு வீட்டில் இருந்து மனதை பிசையும் குரலில் ஒரு அரற்றலோடு பாடல் ஒன்று காற்றில் பரவியபடியே இருந்தது. அங்குள்ள கிராமத்தில் யாராவது வீட்டில் இறந்து விட்டால் அந்த துக்கத்தை கடக்க பாடலாக பாடுவார்களாம். தமிழ்நாட்டில் இறப்பு வீடுகளில் பாடப்படும் ஒப்பாரியை போல எனச் சொல்லலாம். எனக்கு ஒடிசா மலைகிராம மொழித் தெரியாது. ஆனாலும் அந்த பெண்ணின் குரலில் வெளிப்பட்ட கதறலும், வேதனையும், அரற்றலும் அந்த பெண்ணை தேற்றுவதற்காக, கூடவே தாங்களும் அந்த பாடலுடன் சேர்ந்து பாடிக்கொண்டிருக்கும் பெண்களின் குரலும் என அந்த சூழலே ஒரு வித சோகத்துடன் கூடிய கலக்கத்தை ஏற்படுத்த கண்களில் ஓரத்தில் நீர் திரள்வதை தடுக்கமுடியவில்லை. ஒரு அசலான அரற்றலும், கதறலும் எப்படியிருக்கும் என்பதை கண் எதிரே கேட்டேன், அது அங்குள்ள மலை முகடுகளில் பட்டு எதிரோலிப்பது போலவே இருந்தது. இதை எழுதும் போது கூட அந்த குரலும், அதன் வலியும் மனதின் ஓரத்தில் கண்களில் நீருடன் தோன்றி மறைகின்றன. இவையனைத்தையும் கேட்டுக்கொண்டே என்னுடைய மனதினுள் போலித்தனமில்லா அந்த அரற்றலின் பின்னால் இருக்கும் வலியை, அந்த பெண் கடந்து வர வேண்டுமேன மனதுக்குள் பிராதித்தபடியே இருக்கிறேன். கடைசியாக ஒரு கேள்வி, நாம் நம் இயல்பிலிருந்து யோசிக்கும்போது யாரைப்போல் வாழ்கையை வாழ ஆசைப்படுகிறோம், அடுக்குமாடி குடியிருப்பு வாழ்வையா அல்லது அந்த மலைகிராம பெண்ணை போன்றதொரு வாழ்வையா, எது உண்மையில் போலித்தனமற்ற வாழ்வு. விடையை உங்களின் விருப்பத்திற்கே விடுகிறேன்…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916