அரை அங்குலத்தில் அடக்கிவிட முடியுமா…
போன வாரத்தில் ஒரு நாள் நண்பர் ஒருவர் பார்ப்பதற்கு வந்திருந்தார். இயல்பாய் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது உங்களுடைய எழுத்துக்களை படித்திருக்கிறேன். படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும், இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது. எனக்கு தேவையான விஷயங்களும் இருக்கின்றன. ஆனால் அதில் ஒரே ஒரு பிரச்சனை என்றார். எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் ஏற்புடையதாக இருந்தால் கண்டிப்பாக அதனை சரி செய்துவிடுகிறேன் எனச் சொன்னேன். கொஞ்சம் தயங்கிவிட்டு. இல்லை என்னுடைய அலைப்பேசியின் திரையில் உங்களுடைய எழுத்தை முகநூலின் வழியே படிக்க ஆரம்பிக்கையில், அதன் 5 அங்குல திரைக்குள் மட்டுமே அடங்கும் அளவுக்கு மட்டும் எழுதமுடியுமா. காரணம் விரலை தொட்டு நகர்த்தி படிக்கும் அளவுக்கு நீளமாக இருக்கிறது. அதே சமயம் அப்படியே படித்தாலும், படிப்பதற்குள்ளாக ஏதாவது அலைபேசி அழைப்பு வந்து படிப்பதை தடுத்துவிடுகிறது. முழுவதுமாக படிக்கவே முடியவில்லை என்றார். இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல். சரிங்க நீங்க சொல்வதையும் யோசிக்கிறேன் என பொதுவாக சொல்லிவைத்தேன். வேறன்னத்த சொல்ல.
முன்னால் நம்முடைய பாட்டி காலங்களில் இல்லை. நம்முடைய அம்மாவின் வளர்ப்பில் கூட கதை சொல்வது என்பது மிக முக்கியமான பண்பு. இப்பொழுது கூட சில பள்ளிகளில் கதை சொல்லல் என்பது மிக, மிக முக்கியமான பாடம். அந்தக் கதை சொல்லப்படும் போதோ அல்லது கதை புத்தகம் படிக்கும் போதோ, ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் என ஆரம்பிக்கும். இந்த ராஜா எங்கிருந்தார். எந்த நாட்டை ஆண்டார். அவரின் மனைவி மற்றும் மக்கள். அவரின் அரண்மனை. அவருடைய ஆட்சியின் தன்மை. அவருடைய ராஜசபை உறுப்பினர்கள் என அந்த ராஜாவையோ அல்லது சொல்லப்படும் கதை யாரை பற்றி. எதைப் பற்றி பிரதானமாக பேசப் போகிறதோ. அதைப் பற்றி முழுமையான விவரணைக்கு பிறகே கதையின் முக்கியமான புள்ளிக்கே வருவார்கள். அதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அதன் பின்னனியை குறைந்தபட்சமாவது தெரிந்து கொள்ளாமல், அதை கேட்டோ, படித்தோ பயன் இல்லை. பின்னனி தெரிந்து கொள்ளாமல் நீங்கள் படிக்கும் அல்லது கேட்கும் எந்த ஒரு விஷயமும் வெறும் தகவல் மட்டுமே. வெறும் தகவலாக உள்வாங்கி எவ்வித பயனும் இல்லை. விளக்கம் எல்லாம் தேவையில்லை விஷயத்தை சொல்லுங்கள், எனத் தகவலாக மட்டும் ஏன் உள்வாங்கி கொள்கிறார்கள். அதனால் என்ன பயன் என்று யோசித்தால். ஆங் ஒரு பயன் இருக்கிறது.
அது என்னவென்றால் கூட்டமாக பேசிக்கொண்டிருக்கும் போது, தங்களை விஷயம் தெரிந்தவ(றா)ராக. தகவல் களஞ்சியமாக வெளிப்படுத்திக் கொண்டு. எங்களுக்கும் விஷயம் தெரியுமில்ல என சுயத் தம்பட்டம் அடித்துக் கொள்ளத் தான். அப்படி வெளிப்படும் தகவலின் பின்னனியை கேட்டால் முழித்துக் கொண்டு நிற்க வேண்டியது தான். சிங்கம் திரைப்படத்தில் ஒரு காட்சி வருமே, ஏற்கனவே பல முறை கேட்டது தான் பார்த்தது தான் என்றாலும், ராதாரவி விவேக்கிடம் அலைப்பேசி வழியே மளிகை கடைக்கு பேசித் தகவல் ஒன்றை கேட்கச் சொல்ல, விவேக் கேட்டுவிட்டு சொல்வதற்கும். அதே ராதாரவி சூர்யாவிடம் அதேத் தகவலைக் கேட்கச் சொல்கையில் அவர் கேட்டு விட்டு சொல்லும் தகவலுக்கும் இருக்கும் வித்தியாசம் தான் இன்றைக்கு உள்ள பெரும் பிரச்சனையே. இதைப் படிக்கையில் அந்தக் காட்சியை பார்க்காதவர்கள் யூடுப்பில் பார்த்து விடுங்கள். இங்கே பெரும்பாலானவர்கள் விவேக்காக தான் இருக்கிறோம். எதிலும் அவசரம், நிதானம் கிலோ என்ன விலை என்ற நிலைக்கு வந்து வெகுகாலம் ஆகிற்று. ஐந்து அங்குல திரைக்குள் உள்ளதை படித்தால் போதுமென்றால், நம்முடைய வளர்ச்சியும் அந்த ஐந்து அங்குலம் அளவிற்குத் தான் இருக்கும். இங்கே நம் கண் முன்னே இருக்கும் இயற்கையின் படைப்பில், எதிலும் அவசரமில்லை. நிதானமாகவே இருக்கிறது. கரு உருவானவுடன், அந்த கரு ஒரு குழந்தையாய் முழுமையடைந்து வெளிவர பத்து மாதம் என்பது இயற்கையின் அடிப்படை விதி. நீங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், அந்த இயற்கையின் நிதானத்தை அவரசப்படுத்தி ஒரு ஆணியையும் கழட்ட முடியாது. இப்படிபட்ட சூழலில், இன்று நாம் பல சந்தர்ப்பங்களில் நிறுத்தி நிதானமாய் படிப்பதில் இருந்து, எதிலும் நிதானம் என்பதே இல்லை எனும் போது. ஒரு குழந்தையைக் கூட உருவாக்கும் தகுதியை இந்த உடலே இழக்கிறது. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கொண்டு, யப்பா எங்காளால முடியல, எனக்கு குழந்தை வேணும் என, இன்றைய நவீன மருத்துவரின் முன்னால் போய் வெட்கமே இல்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதிலும் கூட மருத்துவரிடம் போய் என்னால ரொம்ப நாள் காத்திருக்க முடியாது. ஒரு ஐந்து மாதத்தில் பெத்துகிடலாமா என கேட்டாலும் கேட்போம்.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916