வயலினுள் படர்ந்திருந்த நிலாவெளிச்சமும், வைக்கோலும், இளையராஜாவும், ஒரு ஏகாந்த இரவும்…
இன்று கொஞ்சம் வெளியூர் வரை சிறுபேருந்து ஒன்றில் பயணிக்க வேண்டியிருந்தது. கொஞ்சம் தொலைதூரப் பயணம் என்பதால் போய் திரும்ப மாலை ஆகிவிட்டது. பின்னர் மதுரை வந்திறங்கி இரு சக்கர வாகனத்தில் வீடு வந்து சேர 5:30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. வந்ததும் சிறிது அலுப்பில் தூங்கிவிட்டேன். ஒரு 6:45 மணி இருக்கையில் சின்னதாக முழிப்பு தட்டியது. அதற்கு மேல் தூங்க முடியவில்லை. அப்பொழுது தான் கவனித்தேன் எங்கிருந்தோ ஒலிப்பெருக்கியின் வழியே இளையராஜாவின் பாடல் ஒன்று காற்றில் கரைந்து வந்து காதை நிறைத்தது. நன்றாக கவனித்த போது தான் தெரிந்தது. கேட்டுக்கொண்டிருந்த பாடலின் ஒலியின் அளவு சிறிது நேரம் மிக அருகாமையில் கேட்டது. கொஞ்ச நேரம் கழித்து சிறிது சிறிதாக தூரம் கூடிக் கொண்டே இருந்தது. பின்னர் நெருங்கி கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வந்து கேட்டது. இவை அனைத்தையும் தூங்கம் கலைந்து விழித்தவுடன் படுக்கையிலிருந்து ஏழாமலேயே கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த ஒலி லயம் அட்டகாசமாய் இருந்தது. சிறிது நேரம் கேட்டுக்கொண்டிருந்தவுடன், ஒலியின் அளவு கூடி குறைவது எதனால் என்கிற குறுகுறுப்பில் எழுந்து வெளியில் வந்து, முதல் தளத்தில் இருக்கும் முற்றத்தில் நின்று பார்க்கையில், அந்த இரவின் குளிர்காற்று உடலினை வருடிச் செல்ல. அதனை உள்வாங்கியபடி கவனித்தால், வீட்டின் நேர் எதிரே பிரதான சாலைக்கு அடுத்து இருக்கும் வயலில் வேலைபார்த்து கொண்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்து இளையராஜா பாடல் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த வாகனம் அந்த நிலத்தில் அறுவடை முடிந்து நெல்லை பிரித்தெடுத்த பிறகு போடப்பட்டிருந்த வைக்கோலை சுருட்டி உருளையாக மாற்றும் வாகனம்.
அந்த வாகனத்திலிருந்த ஒலிப்பெருக்கியில் தான் இளையராஜாவின் பாடலை அந்த ஓட்டுநர் ஒலிக்க விட்டிருந்தார். அந்த வயலை சுற்றிலும் இரவின் அடர்த்தி சூழ்ந்திருக்க. அந்த வாகனத்தின் முன்னும் பின்னும் ஒளி உமிழும் விளக்குகளை எரியவிட்டபடி, அந்த ஓட்டுநர் பாடலை கேட்டுக் கொண்டே வாகனத்தை முன்பின்னும் நகர்த்தியபடி வைக்கோலை வாகனத்தின் பின்னே பொருத்தியிருந்த இயந்திரத்தின் வழியே அள்ளி உள்ளிழுத்து. பின்னர் சுருட்டி உருளையாக ஆங்காங்கே வைத்துக் கொண்டிருந்தார். இதனை எதிரில் இருக்கும் வீட்டின் மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவன், சட்டென கிழே இறங்கி வயலினுள் போய் புகைப்படமெடுக்க ஆரம்பித்துவிட்டேன். ஒரு அட்டகாசமான இரவு. அறுவடை முடிந்து வைக்கோல் மட்டுமே மிஞ்சியிருக்கும் வயல்வெளி. இந்த இரவின் அடர்த்திக்குள் இருந்து பார்கையில், ஒளியை உமிழ்ந்தபடி சின்னதாக ஒரு வாகனம் வைக்கோலை சுருட்டியபடி வேலை செய்து கொண்டிருக்கிறது. அந்த வாகனத்திலிருந்து ஒளிபரவும் இடங்கள் மட்டும் பிரகாசமாய் இருக்க, மற்ற இடங்கள் எல்லாம் அடத்தியான இருள். அந்த வாகனத்தின் இயந்திர சத்தத்தின் பின்னனியில் அட்டகாசமான இளையராஜா பாடல். அப்படியே மிக சன்னமாய் வீசும் குளிர்க்காற்று, இதைவிட வேறு என்ன வேண்டும் ஒரு புகைப்பட கலைஞனுக்கு, இயந்திர சத்தத்துடன் காதுகளில் வந்து விழும் பாடலை கேட்டபடி புகைப்படமெடுக்க பெரிய புகைப்பட கருவியெல்லாம் தேவையில்லை. அலைபேசியே போதும். அதில் எடுக்கும் புகைப்படங்களே அட்டகாசமாய் கதை சொல்லும்.
அந்த வாகனம் வயலின் ஒரு மூளையிலிருந்த வைக்கோலை எடுத்து சுருட்டி உருளையாக மாற்றிப் போட்டுவிட்டு, அடுத்தாக அப்படியே அடுத்த மூளைக்கு நகர்கையில், அதிலிருந்து ஒலிக்கும் இளையராஜாவின் இசையும் காற்றில் கரைந்து நகர்ந்தபடியே இருந்தது. அந்த நகர்வு தான் சில சமயம் அருகாமையிலும், பின்னர் தூரமாய் கேட்டது. இன்று நகரத்தில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு வைக்கோல் போர் என்றால் என்னவென்று தெரியுமென தெரியவில்லை. போன வாரம் கூட ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது இப்படிச்சொன்னார், ஒரு ஆசிரியரின் மகனிடம் பேசிக்கொண்டிருந்த போது, இந்த அரிசி எந்த மரத்திலிருந்து வருகிறது என அவன் கேட்டானாம். இவரும் நக்கலாக அது மரத்திலிருந்து வரலை, கொடியிலிருந்து வருகிறது என்று சொல்லிவிட்டு. அப்புறமாக அரிசி விளைச்சலை பற்றி விளக்கி சொல்லியிருக்கிறார். இன்றையத் தலைமுறை அப்படித்தான் இருக்கிறது. பாடப்புத்தகத்தை படி என சொல்லும் அதே நேரத்தில். சிறிதளவேனும் அவர்களிடம் பொது அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசுவதேயில்லை. அப்புறம் எப்படி அவனுடைய எண்ணங்கள் விரிவடையும் எனத் தெரியவில்லை. வெறும் பாடப் புத்தகத்தில் இருப்பதை மட்டுமே படிக்கும் ஒருவன். கண்டிப்பாக ஆகச் சிறந்த அடிமையாய் வேண்டுமானால் உருவாகலாம். ஆனால், கண்டிப்பாக தன்னை சுற்றியிருக்கும் மக்கள், சமூகம், நிலம் இன்னும் அவன் அறிந்துகொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்களை பற்றிய அடிப்படையான அறிவோ அல்லது குறைந்தபட்ச புரிதலோ இல்லாமல் வளர்ந்து எதைச் சாதிப்பான். எப்படி இந்த உலகத்தை எதிர்கொள்வான் என யோசித்தால் அதற்கு பதில் தான் இல்லை. முதலில் தங்களின் பிள்ளைகளை வானுயற கட்டித்தினுள் செயற்கையாய் உருவாக்கி வைக்கப்படிருக்கும் உயிரற்ற வடிவங்களை கொண்டுபோய் காட்டி. அதன் முன்னால் இருந்து புகைப்படமெடுத்து சமூல வலை தளங்களில் பதிவேற்றுவதை விட்டுவிட்டு. உண்மையாக உயிர்ப்போடு இருக்கும் இயற்கைக்கு அருகில் அழைத்து வாருங்கள். அது தான் இந்தத் தலைமுறை கற்க வேண்டிய முதல் பாடம். மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916