வாழ்ந்து பார்த்த தருணம்…57

கொஞ்சம்கூட சுய அறிவற்று மற்றவர்களின் நேரத்தை ஏன் எடுத்துக்கொ(ல்)ள்கிறோம்…

அலைபேசி என்ற ஒன்று, என்று இந்தச் சமூகத்தின் கைகளில் கிடைத்ததோ, அன்றிலிருந்து பெரும்பாலான நேரங்கள் பேசிக் கொண்டே இருப்பது மிக, மிக அதிகமாகி விட்டது. யாரையும், எப்பொழுதும், எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு பேச முடியும் என்ற தொழில்நுட்பம், வரம் என்பதை விட, மிகப் பெரும் சாபமாக மாறிக் கொண்டே வருகிறது. ஒருவரை தொடர்பு கொண்டு பேசும் முன்னர், ஏன் பேச வேண்டும், எதற்கு பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என எதையுமே யோசிக்காமல், சும்மா இருந்தேன் அதான் கூப்பிட்டேன் எனப் பேச தொடங்கி, தொடர்பு கொண்டு பேசும் நபர் என்ன சூழ்நிலையில் இருக்கிறார். நம்முடன் பேசக் கூடிய நிலையில் இருக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் முக்கியமான வேலையில் இருக்கிறாரா என்று சிறிதளவேனும் யோசிக்காமல் அப்புறம் சொல்லு என பேசிக் கொண்டிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை. மற்றவர்களின் நேரம் மற்றும் அவர்களின் மனநிலை என எதைப் பற்றியும் கவலையில்லை, எதிர் முனையில் கேட்பவர் நாம் பேசுவதை வெட்டியாக கேட்டுக்கொண்டிருந்தால் போதும் என்கிற மனநிலை, எனக்கு நேரம் வெட்டியா இருக்கு, அதனால் உன்னுடைய நேரத்தையும் வீணாக்குகிறேன் என்கிற மனநிலை இன்று சர்வசாதாரணமாக பெரும்பாலோனோருக்கு பரவி வியாபித்துவிட்டது.

நாம் பேசுவதில் என்றுமே வல்லவர்கள். ஒருவகையில் யோசித்தால், பேச்சுத் தான் இந்த உலகத்தையே பல்வேறு சந்தர்ப்பங்களில் புரட்டிப் போடிருக்கிறது என்பது வரலாற்றை திரும்பி பார்த்தாலே தெரியும். ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழ். நாம் பேசும் பேச்சுக்களில் ஆழ்ந்த சிந்தனையோ அல்லது செரிவான அறிவுடன் யோசித்தலோ அல்லது எதிர்கால வாழ்வியல் சார்ந்த புதியதான யோசனைகளோ இல்லவேயில்லை. சும்மா நேரத்தை கடத்தவும், மற்றவர்களின் குறைகளை தேடித்தேடி சுட்டிக்காட்டவும், அதுவும் சம்பந்தப்பட்ட நபர்கள் இல்லாத நேரமாக பார்த்து அவர்களின் குறைகளை பேசிக் கொண்டு, அதன் வழியே நம்முடைய பிம்பத்தை மிகச் சிறந்தவராக கட்டமைத்து கொண்டே இருப்பதில் அப்படியான ஒரு அலாதி போதை. அந்த போதையில் திளைப்பதிலேயே பெரும்பாலான நேரங்கள் கழிகின்றன. அதிலும் அலைபேசியின் வழியே பேசும் பேச்சுக்களின் பங்கு மிக, மிக அதிகம். திடீரென ஒரு நாள் அலைபேசி வழியே அந்த நாள் முழுவதும் பேசப்படும் பேச்சுக்களை, இந்தியா முழுவதும் இருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்களின் வழியே, அந்த ஒரு நாள் பேச்சுக்களை மட்டும் ஆய்வுசெய்து, மிக முக்கியமான வெளியிடக் கூடாதவைகளை மட்டும் விட்டுவிட்டு, இந்த வெட்டிப்பேச்சுகள் எத்தனை மணிநேரம், எத்தனை பேரின் குறைகளை, எத்தனை ஆயிரம் முறை இந்த ஒரே நாளில் மட்டும் திரும்ப, திரும்ப பேசப்படுகிறது மற்றும் உண்மையில் உருப்படியான கலந்துரையாடல் என்று எதாவது நடக்கிறதா என்பதை நுணுக்கமான இந்த ஆய்வின் வழியே ஒரு அறிக்கையாக தொகுத்தால் நம்முடைய பேச்சின் லட்சணம் தெரிந்துவிடும்.

யாரை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசலாம் என்ற நிலை. என்னளவில் மிகப்பெரும் சாபம். அந்தப் புள்ளியில் இருந்து இன்று வரை அந்த தொழில்நுட்பத்தின் வழியே நாம் அடைந்திருக்கும் முன்னேற்றம் கண்டிப்பாக நம்முடைய நேரத்தை நம்மிடமிருந்து பிடுங்கி, நம்மை சுயமாக யோசித்து முடிவெடுக்கும் திராணியற்றவர்களாக மாற்றியிருக்கிறது. காரணம் இப்படியான தொடர்பு சாதனங்கள் இல்லாத நாட்களில் எதேனும் மிக, மிக முக்கியமான விஷயத்தை பகிர வேண்டும் என்றால், அதற்காக பல வழிகளையும் யோசித்து, சக மனிதனோடு பேசி விஷயம் போய் சேரும் நேரம் வரை பல வழிகளில் பல்வேறு மனிதர்களுடன் தொடர்பிலேயே இருப்போம். இன்று அந்த நிலை இல்லை. நாளை நமது பக்கத்து அறையில் ஒருவர் இருந்தால் கூட, அவரிடம் சொல்ல வேண்டிய தகவலை குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டு, அவர் பார்க்கிறாரா இல்லையா என்பதை கூட கவனிக்க நேரமில்லாமல், அலைபேசிக்குள் இருக்கும் நமக்கான உலகத்தோடு தொடர்பு அறுந்துவிடாமல் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக கவனமாய் இருப்போம். ஒரு வேளை பக்கத்து அறையில் இருப்பவனின் உடல் நிலை மிகவும் கவலைகீடமாக இருந்து, அவன் ஈனக்கூரலில் நம்மை அழைத்தால் கூட நம் காதுகளுக்கு அது எட்டாது. காரணம். நாம் காதுகளுக்குள் தான் ஒலிவாங்கியை வைத்துக்கொண்டு வேறு உலகத்துக்குள் நம்மை ஒப்படைத்திருப்போமே. பக்கத்து வீட்டிலோ அல்லது பக்கத்து அறையிலோ, எவன் செத்தால் எனக்கென்ன, நாற்றம் அடிக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்பது தான் இன்றைய நிலை… நம்முடைய உடலும் அப்படி ஒரு நாள் நாற்றமடிக்கும் என்பதை ஏன் உணரத் தவறுகிறோம் என்பது தான் தெரியவில்லை. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916