ஆள் இல்லாத சாலைகள் என்ன நீங்கள் ஆட்டம் போடுவதற்கா…
இன்று காலை முகநூல் பக்கத்தில் நண்பர் ஒருவரால் ஒரு காணொளி பகிரப்பட்டிருந்தது. ஒரே ஒருவரின் மிக மோசமான அலட்சியம் என்பது ஒரு நாட்டையே எந்த அளவு சிதைக்கும் என்பதற்கு அந்த காணொளியே சாட்சி. (https://m.facebook.com/story.php?story_fbid=10216899908313514&id=1339264392) அந்த காணொளியின் முகநூல் இணைய சொடுக்கினை மேலே அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கிறேன். சென்று பாருங்கள். இதையெல்லாம் பார்க்கும் போது நம்முடைய மக்களின் நடைமுறை பழக்க வழக்கங்களை பார்த்தால், அடிமனதில் ஒரு வித பயம் கவ்வுவதை தவிர்க்க இயலவில்லை. காலையில் இருந்து கவனித்தால் சாலைகளில் குறைந்த பட்சம் அரைமணி நேரத்திற்குள் கண்டிப்பாக ஐம்பது இருசக்கர வாகனங்களாவது கடந்து செல்கின்றன. அதில் எத்தனை சதவீதம் பேர் தவிர்க்கவே முடியாத தேவைக்காக வெளியே வருகிறார்கள் எனப் பார்த்தால், கண்டிப்பாக அப்படி வெளியே வருபவர்கள் ஒன்றில் இருந்து இரண்டு சதவீதம் இருந்தாலே பெரிய விஷயம். அதிலும் 90லிருந்து 95 சதவீத பேரிடம் முககவசமும் இல்லை. குறைந்தபட்சம் தன்னிடம் இருக்கும் சின்ன துணியை வைத்துக்கூட முகத்தை மறைக்கவில்லை. அதிலும் கணிசமாக பெண்கள், குழந்தைகள் வேறு. இதில் யாருமே தன்னை தற்காத்து கொள்ளும் எந்த விதத்திலான முன்னேடுப்புகள் எதுவுமே இல்லாமல் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இரு சக்கரவாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லபவர்கள் ஒரு பக்கம் என்றால், சாலைகள் ஆள்அரவமற்று தான் கிடக்கின்றன அதனால் அப்படியே காலார போய் வரலாம் என சுற்றுபவர்கள் தனி ரகம். நேற்று தான் ஊரடங்கே தொடங்கியிருக்கிறது. வெறும் 24 மணிநேரத்தை தான் கடந்திருக்கிறோம். அதற்குள் ஒருவர் சலிப்பாக என்னப்பா எங்கயுமே போக முடியல என சொல்லிச் செல்கிறார். அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, அடுத்தாக, இன்னும் முழுசாக 20 நாட்கள் 480மணி நேரங்களை எப்படி இந்த மக்கள் கட்டுக்கோப்புடன் கடக்க போகிறார்கள் என்ற எண்ணம் தோன்றி தலைசுற்றியது. அதுவும் இந்த 21 நாட்களோடு முடிந்து போகக் கூடிய விஷயமா என்பதையும் ஒன்றுக்கு நூறு முறை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. அப்படி 21 நாட்களுக்குள் இந்த இக்கட்டான நிலை முடிய வேண்டுமெனில் ஒவ்வொரு தனி மனிதனிடமும் மிகப்பெரும் கட்டுக்கோப்பான மனநிலையும், சுயகட்டுப்பாடும் தேவை. ஆனால் இவை இரண்டும் உண்மையில் நம் மக்களிடம் இருக்கிறதா என்பது ஊர்றரிந்த ரகசியம். இந்த இடத்தில் தான் நாம் நம்முடைய வாழ்க்கையை எப்படிப்பட்டதாக வாழ்ந்திருக்கிறோம் என்பதற்கான சாட்சியாக வரும் காலங்கள் இருக்கப் போகிறது. நம் உடலும் மனமும் நம் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் எவ்வளவு தூரம் சிதைந்துபோயிருக்கிறது என்பது கண்கூடாக தெரிந்தும், நம்மால் ஒன்றுமே செய்யமுடியாமல், அந்த இயலாமையையும் ஒத்துக்கொள்ள முடியாமல், அதெல்லாம் எங்கள யாரும் ஒண்ணும் செய்ய முடியாது என்று வெட்டிப்பேச்சு வீரர்களாக சுற்றிக்கொண்டிருக்கிறோம்.
அப்படியான வீரர்கள் சமூகத்தில் இருந்து விலகி தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் தனித்து வைத்திருப்பதை கேலியாக பார்க்கும் மனநிலையை என்னவென்று சொல்ல. தற்போதைய சூழலின் தன்மையை உணர்ந்த மனிதன் ஒரு கணவனாக, தகப்பனாக, மகனாக, தாயாக, மனைவியாக, மகளாக, இருக்கும் யாருக்கும் தான் சார்ந்திருக்கும் குடும்பத்தின் மீதான அக்கறையிலும், காதலிலும் எப்பாடுபட்டாவது இந்த சூழலில் இருந்து தன்னை சார்ந்தவர்கள் அனைவரையும் வெற்றிகரமாக கடத்தி கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கும். அப்படியானவர்களின் மனதிற்குள் தோன்றும் பயம் என்பது பயமல்ல அக்கறை. அந்த அக்கறையும் கூட தன் உடல் மற்றும் உயிர் சார்ந்தது அல்ல. அது தன்னை சார்ந்தவர்களின் ஆரோக்கியத்தின் மீதானது. இதைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் கேளிப்பார்வை பார்ப்பவர்களது அக்கறையின் நிலையை நினைத்து பார்த்து பரிதாபப்படுகிறேன். இந்த இக்கட்டான கடுமையான, சூழ்நிலையின் தன்மையை இன்னும் சரியாக உள் வாங்காமல் புரிந்து கொள்ளாமல் இருப்பவர்களை கூட கொஞ்சம் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையின் அனைத்துவிதமான பாதிப்புகளையும் தெரிந்து, புரிந்து, உள் வாங்கிய பிறகும் இந்த 21 நாட்களும் சமூக தனித்திருத்தலின் வழியே, தன்னை தன் வீட்டிற்குள் வைத்துக்கொள்ள அனைத்துவிதமான சூழல்களும் சாதகமாக இருந்தும், விளைவுகளை பற்றி சிறிதளவு கூட சிந்திக்காமல், சர்வ அலட்சியமாக சுற்றி கொண்டிருப்பவர்கள் தான் உண்மையில் மிக, மிக மோசமான சமூக விரோதிகள். இவர்களின் இந்த அலட்சியம் கண்டிப்பாக இவர்களை மட்டுமல்ல, அதனைத் தாண்டி எத்தனை, எத்தனை பேரின் வாழ்வையும், நாட்டையும் மிக, மிக மோசமாக பாதிக்கும் என்பது தான் மேலே கொடுத்திருக்கும் சொடுக்கின் வழியே தென்கொரிய நாடு சந்தித்துக்கொண்டிருக்கிறது. தயவுசெய்து சூழ்நிலையின் வீரியத்தை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916