உளவாளியின் வழியே உருவாக்கப்படும் உளவியல் பிம்பம்… 04
இது ஒரு தொடர்க் கட்டுரையின் நான்காம் பகுதி ஆதலால் முதல் மூன்று கட்டுரையை படிக்காதவர்கள் படித்து விடுங்கள். சரி மீண்டும் ஸ்கைஃபால் (Skyfall) திரைப்படத்தில் இருந்தே தொடங்கலாம். தொடர்ந்து ஸ்கைஃபால் (Skyfall) திரைப்படத்தை பற்றி சொல்ல நிறைய காரணம் இருக்கிறது. அதில் ஒன்று இந்த திரைப்படத்தின் வசனங்கள் நிறைய இடங்களில் ஆழமாக சிந்திக்க வைக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும். இது எல்லா திரைப்படங்களுக்கும் அமையாது. பாண்ட் படங்களில் நிறைய வசனங்கள் வணிகரீதியில் எழுத்தப்பட்டு கைத்தட்டல் வாங்கக்கூடியவையாக இருக்கும். ஆனால் ஸ்கைஃபால் (Skyfall) திரைப்படம் சற்றே அதிலிருந்து விலகியிருக்கும். பாண்ட் படங்களுக்கே ஊரிய வசனங்கள் இருந்தாலும், அதையும் தாண்டி நிறைய இடங்களில் மிக ஆழமாக நுட்பமாக எழுத்தப்பட்ட வசனங்கள் ஸ்கைஃபால் (Skyfall) திரைப்படத்தில் உண்டு. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் படத்தின் பிரதான நாயகனின் எதிர் கதாபாத்திரம் அறிமுகமாகையில், அந்த கதாபாத்திரம் சொல்லும் அந்த எலிக்கதை அட்டகாசமாய் இருக்கும். சரி பாண்ட் படத்தை பற்றிய அதுவும் அதன் பின்னால் இருக்கக்கூடிய ரொம்ப நுணுக்கமான அந்த வல்லரசு என்ற பதத்தை எப்படி உளவியல்ரீதியாக உலக மக்களின் மனதுக்குள் செலுத்துகிறார்கள் என்பதை சொல்லிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஸ்கைஃபால் (Skyfall) திரைப்படத்தை பாராட்டவும் செய்ய என்னக் காரணம். அவர்கள் செய்யும் நுணுக்கமான உளவியல் விஷயத்தை ஆராயும் நேரத்தில் நமக்கு தேவையானதை மட்டுமே எடுத்துக்கொள்ளும் மனநிலையும் தேவை என்பது இங்கே மிக, மிக முக்கியம்.
சரி வல்லரசு பதத்திற்குள் மீண்டும் வருவோமேயானால் ராம்போ ஃபர்ஸ்ட் பிளட் 2 திரைப்படத்திற்கு அடுத்த படியாக ஃபர்ஸ்ட் பிளட் வரிசையின் மூன்றாம் பாகமாக ஃபர்ஸ்ட் பிளட் என்ற பெயரை சுத்தமாக துடைத்தெறிந்து விட்டு ராம்போ 3 என்ற பெயரில் திரைப்படம் வெளியாகிறது. அதாவது இந்த வரிசை திரைப்படத்தின் முதல் பாகத்தில் இருந்த திரைப்படத்தின் பெயர் மூன்றாம் பாகத்தில் நீக்கப்பட்டு பிரதான நாயனின் பெயரான ராம்போ என்ற பெயரை மட்டும் தாங்கி வருகிறது. ராம்போ யார் என்று ஏற்கனவே முதல் கட்டுரைகளில் பார்த்தாகி விட்டது. ஸ்டொலனின் நாயக பிம்பத்தின் வழியே கட்டமைக்கப்பட்ட வல்லரசு பிம்பத்தை வெற்றிகரமாக இதுவரை வெளியான திரைப்படங்களின் வழியே கட்டமைத்த பிறகு நேரடியாக, அந்த வல்லரசு பிம்பம் தான் பெயரே. உலக முழுவதும் இருக்கும் திரைப்பட ரசிகர்களாக இருக்கும் மக்களின் மனதில், அதாவது அமெரிக்க மக்களின் மனதையும் சேர்த்தே சொல்கிறேன். ராம்போ என்றால் அமெரிக்கா என்பது மிக, மிக அழமாக ஊடுருவியிருக்கும். அப்படியான மனநிலையில் திரைப்படத்தை பார்க்கையில் ராம்போ செய்யும் அனைத்து விதமான சாகசங்களும் அமெரிக்காவின் சாகசமாக தான் நம்மால் உணரப்படாமலே நம் மனதில் படியும். இப்பொழுது ராம்போ என்ன செய்தாலும் அமெரிக்கா என்ற நாட்டின் பின்னனியையும் சேர்த்தே நாம் உள்வாங்குவோம். அப்படியான மனநிலை தான் அவர்களுக்கும் தேவை. இப்படி அவர்கள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து பார்வையாளனின் மனதை, ராம்போ கதாபாத்திரம் என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். அது எப்படி பார்வையாளன் மனதை மாற்ற முடியும் நீங்கள் கேட்டீர்களானால், ராக்கியில் இருந்தே தொடங்கிய இந்த ஆட்டம் உச்சபட்சமாக வெற்றிகரமாக ஃபர்ஸ்ட் பிளட் இரண்டாம் பாகம் வரை தொடர்ந்தது எனச் சொல்லலாம். அதற்கு மிக, மிக அட்டகாசமான உதாரணம். இரண்டாம் பாகத்தின் ஒரு முக்கியமான காட்சியில் ராம்போ கதாபாத்திரம் தன் கையிலிருக்கும் வெறும் வில்லையும் அம்பையும் மட்டும் வைத்துக் கொண்டு, தான் வைத்திருக்கும் அம்பின் நுணியில் சிறிய அளவிலான பம்பரம் போன்ற உலோக உருளை ஒன்றை சுற்றி பொருத்தி விட்டு, அந்த அம்பை ஏய்தி தன்னை சுற்றியிருக்கும் வியட்நாம் ராணுவ முகாம்கள் அனைத்தையும் அழிப்பான் ராம்போ. ஏற்கனவே முந்திய மற்றும் இந்த இரண்டாம் பாகத்தில் அந்த உலோக உருண்டை மிக சக்திவாய்ந்த குண்டு என்பதை பார்வையாளன் நம்பும் வகையில் மிக, மிக நுட்பமாக கட்டமைத்து விட்டிருப்பார்கள். அதுவும் போக அவன் அமெரிக்காவின் பிரஜை ஆயிற்றே, அமெரிக்காக்காரன் சொன்ன சரியான தான் இருக்கும்.
அதுவும் அந்த காட்சி எப்படி எடுக்கப்பட்டிருக்கும் எனில், ராம்போ கதாபாத்திரம் அம்பில் அந்த உலோகத்தை பொருத்தும், அதற்கு ஒரு அண்மைக்காட்சி, அடுத்த காட்சி வில்லின் நாணில் அதை வைத்து இழுக்கும், அதற்கு அடுத்த காட்சியாக ராம்போவின் முகத்தில் இருந்த தெளிவான காட்சி மாறி ராம்போவின் முகம் தெளிவற்றதாகி, அம்பின் நுனியில் இருக்கும் அந்த உலோகத்தில் தெளிவாகி நிலைக்கும், மிகபெரிய திரையில் இதனை பார்க்கையில் இந்த இத்தாக்கூண்டு சின்ன பம்பரமா இப்படி வெடிச்சு சிதறுது என்ற கேள்விக்கே அதைவிட பெரியதான நம்முளைக்குள் இடமில்லை, காரணம் அந்த வில்லையும், அம்பையும் தாங்கி நிற்கும் அந்த உடம்பின் கட்டமைப்பும், அதன் பின்னால் இருக்கும் வல்லரசு அமெரிக்காவின் பிம்பமும் நம்முடைய மூளையை மழுங்கடித்திருக்கும். வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான் நம்முடைய வேலை. இதன் உச்சபட்சமாக அந்த காட்சியின் முடிவில் மேலிருந்து தாக்கும் ராணுவ வானுர்தியின் (Military Helicopter) வழியே ராம்போவை நோக்கி போடப்படும் மிகப் பெரிய குண்டு ராம்போ நின்றிருக்கும் ஒட்டுமொத்த அருவியையே பற்றி எரிய வைக்கும் நிலையில், ராம்போ அப்படியே அங்கிருக்கும் நீருக்குள் குதித்து தப்ப, அப்படியும் விடாமல் வானுர்தியை தாழ்வாக பறக்க வைத்து மேலிருந்து இயந்திர துப்பாக்கியால் தண்ணிருக்குள் துளைத்தெடுக்க, அதிலும் தப்பி சடாரேன நீருக்குள் இருந்து வெளிப்பட்டு ஆங் அதே தான் தன்னுடைய வில்லிருந்து குண்டு தாங்கி வெளிப்படும் அம்பால் அந்த வானுர்தியையே சுக்கல், சுக்கலாக நொறுக்கிவிடுவார். மறுபடியும் நீங்கள் அது எப்படி அத்துக்கூண்டு உலோக குண்டு வானுர்தியை, அதுவும் ஆயுதம் தாங்கிய ராணுவ வானுர்தியை தகர்க்கும் என்ற கேள்வி மூச் கேட்கவே கூடாது, கேட்கவேக் கூடாது என்பதை விட திரைப்படம் பார்க்கும் பார்வையாளன் அப்படியான கேட்கும் மனநிலையையிலே இருக்கவே மாட்டான் என்பது தான் சரி. மேலே விவரித்திருக்கும் காட்சியின் மீது சந்தேகிப்பவர்கள் தாராளமாக, புல்லரிக்க வைக்கும் அந்த அட்டகாசமான சண்டைக்காட்சியை கண்டு சிலாகிக்க இணையத்தில் யூடுபில் சென்று பார்த்துக் கொள்ளலாம். இத்தாக்கூண்டு பம்பர உலோகத்தை வைத்து வித்தை காட்டிய அமெரிக்கா மன்னிக்கவும் ராம்போ கைகளில் ஆயுதங்கள் கிடைத்தால் என்ன செய்வான், அது தான் மூன்றாம் பாகம் ராம்போ 3. அதையும் தாண்டி நேருக்கு நேர் சண்டையிடும் ராம்போவின் கைகளில் இருக்கும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களும் கூட தனித்தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, பலவிதமான வடிவங்களில் உருவாக்கப்பட்டு, அதையும் அண்மைக் காட்சிகளாக காட்டும் ஒரு பாணி ஸ்டோலன் திரைப்படங்களில் குறிப்பாக ராம்போ வகையறா திரைப்படங்களில் இருந்து தொடங்கியது எனச் சொல்லலாம். அப்படியான காட்சிகளைப் பார்க்கையில் நம்முளைக்குள் கட்டமைப்பட்டிருக்கும் அந்தப் பட்சி அமெரிக்காரன் எப்படியேல்லாம் கத்தி வச்சிருக்காரன் பாரு எனச் சொல்லி சிலாகிக்கும். காரணம் கட்டமைக்கப்பட்ட பிம்பம் அப்படி. மீண்டும் பயணிக்கலாம். மகிழ்ச்சி…
இதையும் கொஞ்சம் படித்துவிடுங்களேன்.
இந்தத் தொடரில் பகிரப்படும் நான் எடுத்த புகைப்படங்கள் ஒரு வகையில் இந்த தொடரோடு சம்பந்தபட்டவை. அதைப் பற்றிய விளக்கத்தையும் இதோடு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நண்பர் ஒருவரிடம் கலந்துரையாடும் போது குறிப்பிட்டார். இந்தத் தொடரில் இருந்து அதையும் சேர்த்தே எழுதலாம் என்ற வகையில். இந்த தொடரோடு ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே இணைத்திருக்கிறேன். அதைக் கவனித்தால் ஒரு குறிப்பிட்ட வட்ட மேஜை அதனை சுற்றிய இருக்கைகளின் மீது மட்டுமே வெளிச்சம் இருக்கிறது, இதில் நீங்கள் காண்பது ஒரு மிகப் பெரிய அறையில் இருக்கும் ஒரே ஒரு சிறு பகுதியை மட்டுமே. இந்த வெளிச்சம் உள்ள பகுதியை மட்டும் வைத்து மொத்த அறையும் இப்படி தான் இருக்கும் என நம் மனம் முடிவு செய்துவிடுகிறது. இரண்டாவது அப்படி வெளிச்சம் விழும் இடத்தில் இருக்கும் அந்த மேஜையும், அதனைச் சுற்றி இருக்கும் நாற்காலிகளும் மிகச் சிறப்பாக வெள்ளைத் துணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அந்த வெள்ளைத் துணிக்கு உள்ளிருக்கும் அந்தப் பொருளின் தரம் பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் வெளியில் நாம் பார்க்கும் வெளிபுற அலங்கரிப்பை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளிருக்கும் பொருளின் தரத்தையும், வெறுமனே பார்ப்பதால் மட்டுமே முடிவு செய்கிறோம். வல்லரசு என்ற பிம்பமும் மேலே சொன்ன வெளிச்சம் படும் இடத்தில் இருக்கும் மேல் பூச்சை மட்டுமே வைத்துக்கொண்டு, அப்படியான கட்டமைப்பின் வழியே நமக்கு காட்டப்படுவது தான், நாமும் நம்முன்னே காட்டப்படும் அல்லது செய்தி வழியே கேள்விப்படும் விஷயங்களை மட்டும் வைத்து ஒட்டு மொத்தமாக ஒரு தேசத்தை பற்றிய பிம்பம்பத்தை விதம் விதமாக உருவாக்கி சிலாக்கிறோம். ஆனால் இன்றைய சூழலில் அந்த வல்லரசு என்ற பிம்பத்தையும். அமெரிக்கா என்ற கனவு தேசத்தையும். இந்த பூமியில் தோன்றிய கண்ணுக்கே தெரியாத ஒரு உயிரியல் ஆட்டம் தன்னுடைய பரவலின் வழியே வெளிச்சம் போட்டுக் காட்டி கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய சொல்ல முடியும். இதுவே போதும் என்பதால். மகிழ்ச்சி
கடைசியாக வன்முறையின் ருசி இன்னும் முடியவில்லை :
ராம்போ மூன்றாம் பாகம் பற்றி அடுத்த கட்டுரையில் இன்னும் விரிவாக பார்க்கலாம்…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916