உளவாளியின் வழியே உருவாக்கப்படும் உளவியல் பிம்பம்… 06
இது ஒரு தொடர் கட்டுரையின் ஆறாம் பகுதி. ஆதலால் முதல் ஐந்துக் கட்டுரைகளை படித்துவிட்டு இதனை தொடர்தல் நலம். எப்பொழுதும் போல் ஸ்கைபால் (Skyfall) திரைப்படத்தில் இருந்தே தொடங்கலாம் தான். ஆனால் போதும் பாண்டை பற்றி நிறைய பேசிவிட்டோம். ஆதலால் வேறு ஒரு புள்ளியில் இருந்து தொடங்கலாம். என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா, நாம் என்று கைத்துப்பாக்கியை போன்ற ஆயுதத்தை விளையாட்டு பொருளோடு சேர்த்தோம் என்று. கண்டிப்பாக அதைப் பற்றி யோசிக்கவோ, சிந்திக்கவோ வாய்ப்பேயில்லை. இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு துப்பாக்கி என்பது மிக, மிக முக்கியமான விளையாட்டு பொருள். அதுவும் அந்தத் துப்பாக்கி வருடங்கள் செல்ல, செல்ல நவீன வடிவம் எடுத்துக் கொண்டே இருக்கிறது. நான் சொல்வது விளையாட்டு துப்பாக்கியை, நிஜ துப்பாக்கியை அல்ல. துப்பாக்கி என்பதை வெற்றிகரமாக விளையாட்டு பொருளோடு சேர்த்ததிலிருந்து, அது ஒரு வன்முறை ஆயுதம் என்ற பிம்பம் போய். அது பாதுகாப்பு என்ற வட்டத்துக்குள் வந்து விடுகிறது. சிறு வயதிலேயே அந்தத் துப்பாக்கி என்பது பாதுகாப்பு என்ற எண்ணமும் ஆழ்மனதில் ஆழமாக பதிந்தும் விடுகிறது. அப்படியான எண்ணவோட்டதோடு திரைப்படத்தை அணுகும் போது நவீன துப்பாக்கி வைத்திருக்கும் நாயகன் பாதுக்காப்பாளனாக ஆகிவிடுகிறான். அதுவே அந்த நாயகனின் பின்னனியில் முக்கியமான நாடு இருந்தால். அந்த நாடு தான் நாயகன். அந்த நாயகன் தான் அந்த நாடு என்பதை வெற்றிகரமாக கட்டமைத்துவிட்டால் முடிந்தது கதை. அந்த நா(டு)யகன் காக்கும் கடவுளாக ஆகிவிடுகிறான். இதை தான் அமெரிக்கா தன் நாட்டை காப்பவனாக கட்டமைத்து, அதன் மற்ற நாடுகளையும் காப்பவனாக மாற்றி கடைசியில் உலகத்தையே காப்பவனாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
ராம்போ 3 வெளியான வருடம் 1988. கிட்டத்தட்ட ஸ்டோலனின் சகாப்தம் முடிவடையும் தருவாய்க்கு வருகையில் 1985ல் ஒரு திரைப்படம் வெளிவந்து உலகெங்கும் சக்கைபோடு போடுகிறது. அந்தத் திரைப்படம் தான் காமாண்டோ. நாயகன் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர். அர்னால்ட் 1969லேயே திரைப்படத்துறைக்குள் நுழைந்துவிட்டாலும், 1982ல் கேனான் தீ பார்பனியன் திரைப்படத்தின் வாயிலாக பரவலாக அறியப்பட்டு, காமாண்டோ திரைப்பட மாபெரும் வெற்றியின் வழியே உலகம் முழுக்க தெரிந்த முகமாகிறார். இங்கேயும் ஸ்டோலனுக்கும், அர்னால்டுக்கும் ஒரு மிக முக்கிய ஒற்றுமை உண்டு. அது அந்த கட்டுக்கோப்பாக வளர்த்தெடுக்கப்பட்ட உடல். அந்த உடலை வைத்து தான் இங்கே விளம்பர யுக்தியே. அதுவும் போக உலக ஆணழகன் போட்டியின் வெற்றியாளன் என்ற பிம்பமும் சேர்ந்து கொள்ள, ஸ்டோலன் ராணுவ வானுர்தியை ஒற்றை ஆளாக தகர்த்தால், அர்னால்ட் அந்த வானுர்தியை அப்படியே தன் கைகளாலேயே தூக்கிவீசி விடுவார் என்ற நிலைக்கு நாயக பிம்பத்தை கட்டமைத்துவிட்டார்கள். ஸ்டாலனை கட்டமைக்க கொஞ்சம் காலம் தேவைப்பட்டது. அதனை ராக்கியில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக ராம்போ 3 வரை வெற்றிகரமாக கட்டமைத்தார்கள். அர்னால்ட் கதை அப்படியில்லை. ஏற்கனவே வெற்றிகரமக உருவாக்கி முடிக்கப்பட்ட பிம்பத்திற்குள் வாகாக வந்து அமர்ந்துவிட்டார். அதனால் வித்தை காட்டுவது தான் வேலையே. அதனால் காமாண்டோ படத்திலேயே பறக்கத் தொடங்கும் விமானத்தில் இருந்து குதிப்பது. சிறு ஏவுகணை தாங்கிய ஆயுதத்தை ஒற்றை ஆளாக கையாள்வது என பல சண்டைகாட்சிகளை எடுத்து தள்ளியிருப்பார்கள். குறிப்பாக அவர் தன் மகளை மீட்க கிளம்பும் காட்சி வெகு பிரபலம். உடல்முழுவதும் குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள், ஒன்றுக்கு இரண்டு இயந்திர துப்பாக்கிகள், கத்திகள் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவர் கிளம்புகையில், இவன் முன்னாடி ராணுவமே நிக்கமுடியாது எனத் தோன்றும். இந்தக் காட்சியின் பாதிப்பில் தான் 1987 வெளிவந்த ரஜினியின் மனிதன் திரைப்படம் எடுக்கப்பட்டது. இதே போல் மேலாடையில் குண்டுகள், கையில் இயந்திர துப்பாக்கிய என அப்படியே காமாண்டோ படத்தின் காட்சியை நகல் எடுத்திருப்பார்கள். காமாண்டோ திரைப்படம் தான் அர்னால்டை ஒரு வெற்றிகரமான சண்டை நாயகனாக கட்டமைத்த முதல் திரைப்படம். அதன்பின் அவர் மோதியது எல்லா சாதாரண சொத்தைகள் இல்லை. அப்புறம் எவ்வளவு நாள் தான் சக மனிதன், சக நாடு என சண்டை போட்டுகொண்டிருப்பது. இன்னொன்று இதே போன்ற திரைப்படங்கள் எல்லா நாடுகளிலும் எடுக்க வேறு ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் நாம் என்ன சாதாரண ஆளா வல்லரசு. அதனால் மனிதர்களோடு சண்டைபோடுவதை மற்றவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். நாம் அடுத்தாக வேற யோசிப்போம்.
அப்படி யோசித்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் பிரடேட்டர். வேறு ஒரு கிரகத்திலிருந்து இந்த பூமிக்கு வரும் ஒரு மனிதனை மன்னிக்கவும், மனிதன் அல்ல ஏலியன் இதுவும் அவர்கள் வைத்த பெயர் தான். அப்படியான ஏலியனை எதிர்கொள்வது தான் பிரடேட்டர் திரைப்படமே. ஒரு மீட்புக்காக காட்டுக்குள் செல்லும் ஏழு ராணுவ வீரர்கள் ஒரு வேற்றுக்கிரக ஏலியனிடம் மாட்டுகிறார்கள். பிறகு என்ன ஆனது என்பது தான் கதை. அந்த ஏழு பேரில் ஒருவர் தான் அர்னால்ட். பின்னர் என்னவாகும் என உங்களுக்கே தெரியும். அது தான் நடந்தது. இப்படித் தான் சகமனிதன், சகநாடு என்பதெல்லாம் போய். வேற்றுகிரகவாசியை வெற்றிகரமாக ஒரு ராணுவ வீரன். அதுவும் அமெரிக்க ராணுவ வீரன் வீழ்த்த, இந்தப் படம் அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க மிகப்பெரும் வெற்றி. அமெரிக்காரன் சுட்டா வேற்றுகிரகவாசிகூட பச்சை நிற ரத்தத்தை கொட்டியாவது செத்துப் போவான் என்று ஒரு சுபமூர்த்த நாளில் இந்த உலக மக்களுக்கு சொல்லப்பட்டது. அந்த அமெரிக்க மக்களையும் சேர்த்தே சொல்கிறேன். அது எப்படி சார், மூச் கேள்விக்கே இங்கே இடமில்லை. உலக ஆண் ஆழகன் பட்டம் பெற்றவன், அதுவும் அமெரிக்க ராணுவ வீரன் சுட்டா அது எப்படி ஏலியன் சாகாம இருப்பான் சொல்லு. ஆமா, ஆமா அமெரிக்க எசமான் சொன்னாச் சரியா தான் இருக்கும். இவர்கள் இப்படி வேறு கிரகம். வேறு கிரகவாசி என போய்க் கொண்டிருக்கையில் இன்னுமொரு விஷயத்தையும் வெற்றிகரமாக நிறுவிக் கொண்டே இருந்தார்கள். அது என்ன? தங்களை எதிர்ப்பவர்களை அல்லது தங்களுக்கு போட்டியாக வந்துவிட வாய்ப்பிருக்கிறது என கருதியவர்களை இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?. நம்முடைய கண்முன்னே தான் அவர்கள் செய்தது அத்தனையும் நடந்தது. ஆனால் நாம் தான் கவனிக்க தவறிக் கொண்டே இருக்கிறோம். காரணம், அவர்கள் கட்டைமைத்த பிம்பம் நம்முடைய முளையை மழுங்கடித்துக் கொண்டே இருக்கிறது. அவர்களுக்கும் அது தான் வேண்டும். நாம் சிந்திக்கவே கூடாது அல்லது சிந்திக்க விடவே கூடாது என்பது தான் அவர்களின் குறிக்கோளே. உண்மையில் நம்முடைய சமகாலத்தில் திரைப்படத்தில் மட்டுமல்ல, நிஜத்தில் நாயகனாக ஜொலித்த ஒருவர் உண்டு. எனக்கு தெரிந்து திரைப்படத்திலும், திரைப்படத்துக்கு வெளியே இயல்பான வாழ்விலும் கதாநாயகனாக வாழ்ந்த ஒரே ஒரு நபர் அவர் மட்டுமே. அவர் யார், அவரை இந்த ஹாலிவுட் என்ன செய்தது என்பதை அடுத்ததாக பார்க்கலாம். மகிழ்ச்சி.
கடைசியாக புகைப்பட விளக்கம் :
பகிர்ந்திருக்கும் புகைப்படத்தில் இருப்பது நெற்பயிர். அதற்கு பாய்ச்சப்பட்டிருக்கும் தண்ணிரில் சின்னதாக பச்சை வண்ணத்தில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது, எதோ ஒரு செடியின் இலைகள் என்று தோன்றுகிறது இல்லையா?. விவசாயத்தை பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அது இலை இல்லை எனச் சொல்லிவிடுவார்கள். ஆனால் மற்றவர்களுக்கு அது இலை தான். உண்மையில் அது நெற்பயிருக்கு தெளிக்கப்படும் ஒருவித ரசாயான உரம். அதனை உரம் என்று சொன்னால் கூட பார்பவர்களின் கண்களுக்கு அது இயற்கையானது என்ற மனநிலை தோன்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த மாதிரி வண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை பயன்படுத்தும் விவசாயிக்கு கூட ஒரு கட்டத்திற்கு மேல் இந்த உரத்தில் இருக்கும் வண்ணம் மனமாற்றத்தை ஏற்படுத்திவிடும். இப்படியான வழிகளில் தான் இந்த மண்ணை ரசாயான உரத்தின் வழியே சிதைத்து கொண்டிருக்கிறார்கள். மண்ணுக்கு ரசாயான உரம் என்றால் மனதிற்கு. விடை உங்களுக்கே தெரியும். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916