வாழ்ந்து பார்த்த தருணம்…81

ஒரு வித ஜென் மனநிலையும், ஆப்பிளின் அக்கப் போரும்…

இது சற்றே நீளளளமான கட்டுரை. தங்களின் உயர்வான நேரத்தை செலவிட முடியா வண்ணம் பரப்பாக ஓடிக்கொண்டிருப்பவர்கள், இதனை வாசித்தலைத் தவிர்த்தல் நலம்…

சரியாக பிறந்த நாளைக்கு முந்திய நாள் காலை என்னுடைய மடிகணினிக்குள் இருக்கும் மென்பொருட்களுக்கு என்னுடைய எழுத்துக்கள் மேல் என்ன கோபம் எனத் தெரியவில்லை. திடீரென மென்பொருள் யாவும் கணினிக்கும் தங்களுக்குமான தொடர்பை துண்டித்துக் கொண்டன. இப்படிச் சொல்லக் காரணம் என்னுடைய எழுத்துக்களை தட்டச்சு செய்வது எல்லாமே என்னுடைய மடிக்கணினியில் தான். அதனால் தான் ஒரு கை ஒடிந்தது போல் ஆகிவிட்டது. என்னுடைய மடிக் கணினி கொஞ்சம் எடை கூடுதலான கனம் அதிகமானது. அதனை எப்போழுதும் என் முதுகில் இருக்கும் பையில் தூக்கி கொண்டே தான் சுற்றிக் கொண்டிருப்பேன். காரணம், எழுதுவதற்கான விஷயங்களும் அதற்கு உண்டான மனநிலையும் எப்பொழுது மனதுக்குள் தோன்றும் என்பது எதுவுமே என் கைகளில் இல்லை. அது அப்படியே பழகிவிட்டது. கண்முன்னே கடந்து போகும் விஷயங்கள் மற்றும் இணையத்தில் படித்துக் கொண்டிருப்பது அல்லது அப்பொழுதைய நேரத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் என எதாவது ஒன்று சடாரென எழுதத் தூண்டும் வகையிலான விஷயமாக மாறும். அப்பொழுது உடனடியாக மடிக்கணினி கையில் இருத்தல் நலம். அப்படியான சமயங்களில் எந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேனோ, அந்தச் சூழல் உடனடியாக ஒத்துவரும் பட்சத்தில் மடிக்கணினியை திறந்து தட்டச்சு செய்ய ஆரம்பித்து விடுவேன். பல நேரங்களில் அப்பொழுது செய்யும் வேலையிலிருந்து விலக்கிக் கொண்டு தட்டச்சு செய்வது கடினம். அது போன்ற சமயங்களில் ஐந்து நிமிடம் மட்டும் ஒதுக்கி, எழுத வேண்டுமென மனதுக்குள் ஓடும் மொத்த சாரத்தையும், கட்டுரையின் தலைப்பாக மாற்றி, ஒரு தலைப்பையும் அதன் பின் கீழே நாலே நாலுவரியையும் தட்டச்சு செய்துவிடுவேன். அதன் பின் எத்தனை நாள் கழித்து எழுத அமர்ந்தாலும், மடிக்கணினியில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தவுடன், ஏற்கனவே தட்டச்சு செய்து வைத்திருக்கும் அந்த தலைப்பும், அதன் கீழ் இருக்கும் நான்கு வரியும் போதும், மொத்த கட்டுரையின் வார்த்தைக் கோர்வைகளும் மனதிற்குள் குதிரை வேகத்தில் ஓட ஆரம்பித்து விடும்.

பல்வேறு சந்தர்ப்பங்களில், கூட பணிபுரியும் நண்பர்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள், எழுதக்கூடிய நேரம் என்பது உங்களுக்கு எப்படி வாய்க்கிறது என. பெரும்பாலான நேரங்களில் அப்படியான கேள்விகளை எதிர்கொள்ளும் தருணத்தில், ஒரு சின்ன சிரிப்புடன் கடந்து விடுவேன். காரணம், அப்படியே பதில் சொல்ல எத்தனித்தாலும் சொல்ல வரும் விஷயத்தை நின்று நிதானமாக கேட்கும் அளவுக்கான பொறுமையோ அல்லது அதனை காதுகொடுத்து கேட்கும் மனநிலையோ, பெரும்பான்மையான சமயங்களில் கேள்வி கேட்டவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அவர்களின் மனம் தினப்படி செய்ய வேண்டிய வேலையை பற்றி மட்டுமே பரபரப்பாக சிந்திக்க பழகிவிட்ட பிறகு, அதனை ஒன்றுமே செய்ய முடியாது. அதனால் விளக்கிச் சொல்வதைவிட, சொல்லாமல் சின்ன சிரிப்புடன் கடந்து செல்வதே மேல் எனத் தோன்றிவிடும். அதுவும் போகக் கடந்து செல்லும் வாழ்வில் சில வற்றை பற்றி விளக்கி சொல்லி புரியவைக்கவெல்லாம் முடியாது என்பது என்னுடைய தீர்மானம். வயலில் நாற்று நடும் பெண்களிடம் போய் அதெப்படி சரியான இடைவெளிவிட்டு நாத்தை நடுறீங்க எனக் கேட்டால் அவர்களால் எப்படி பதில் சொல்ல முடியாதோ?. அப்படியான பல விஷயங்கள் நம்முடைய அன்றாட வாழ்விலும் உண்டு. நாம் தான் அதனை புரிந்து கொள்ளாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறோம். அப்படியே கேட்டாலும் நம்மால் பதிலையும் பொறுமையாக கேட்க இயலாது. அப்படி ஒரு நாள் நாற்று நடும் பெண்ணிடம் ஒருவர் கேட்ட பொழுது அருகில் இருக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. அதில் நாற்று நடும் பெண்மணி சொன்ன பதில் தான் அதகளம். என்னத்த சொல்ல, அப்படி கண்டிப்பா உனக்கு தெரிஞ்சிகிடணும்னா நீயே வந்து நட்டுப்பாரு என்றாரே பார்க்கலாம். அந்த பதிலால் கேள்வி கேட்பவர் மிரளாமல் இறங்கி நாத்தை நட்டு பார்க்க தயாராய் இருக்கும் மனநிலையில் தன்னை வைத்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் வெளியில் இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கும், கேள்வி மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும் வெறும் பார்வையாளர்களாக இருந்துவிட்டு போக வேண்டியது தான். களத்தில் இறங்குகிறோமா அல்லது வெறும் பார்வையாளர்களா மட்டும் இருக்க போகிறோமா என்கிற முடிவு அவரவர் கைகளில். ஆனால் அன்று அந்த பெண்ணிடம் கேள்வி கேட்ட நபர் வயலுக்குள் இறங்கி நாற்றை நட்டார் என்பதை இந்த தருணத்தில் பதிவு செய்துவிடுகிறேன். என்னிடமும் எழுத ஆரம்பிக்கும் முன்பு வரை நிறைய தயக்கங்கள் இருந்ததை கண்டிப்பாக மறு(றை)ப்பதற்கில்லை. அப்படியே எழுத ஆரம்பித்தவுடன், எழுதி முடித்த கட்டுரைகளை, குறைந்தது எழுத்திற்க்கு சம்பந்தமே அல்லாத இரண்டு மூன்று நண்பர்களிடம் எழுதியதை அனுப்பி கருத்து கேட்ட பிறகு தான் பதிவேற்ற ஆரம்பித்தேன். இந்த கருத்துக் கேட்பு எல்லாம் முதன் நான்கு கட்டுரை வரை மட்டுமே. அதன்பின் எழுதியதை குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து முறையேனும் மீள்வாசிப்பு செய்தபிறகு பதிவேற்றிவிடுவேன் அவ்வளவே.

பொதுவாக எதனை செய்வதற்கு முன்னாலும் அதனை உளப்பூர்வமாக, ஆத்மார்த்தமாக விரும்ப வேண்டுமேன நினைக்கிறேன். அந்த வகையில் யோசித்தால் என்னுடைய எழுதுக்களும் அப்படியானது தான். நன்றாக கவனித்துப் பார்த்தால் எழுதும் நேரங்களில், எழுதப்படும் வார்த்தை கோர்வைகளை மனதிற்குள் ஓடவிட்டபடி வேறேந்த சிந்தனையும், எழுதும் சிந்தனையை சிதைக்காத வண்ணம், ஒரே ஒரு ஒற்றைச் சிந்தனையோடு எழுதிக் கொண்டிருக்கும் மனநிலை ஒவ்வொரு முறை எழுத உட்காரும் போதும் உள்ளுக்குள் ஊடுருவதை கவனித்தே வருகிறேன். அந்த ஒற்றை மனநிலைக்கான பயிற்சிதான் என்னை எழுத தூண்டிக் கொண்டே இருக்கிறது. ஒற்றைச் சிந்தனையை பல்வேறு பயிற்சிகளின் வழியே செய்ய முடியும் என்பதை தாண்டி, நீங்கள் உளப்பூர்வமாக நேசித்து ஈடுபடும் எந்த ஒரு செயலிலும் கொண்டு வரமுடியும் என்பதை எனக்கு என்னுடைய எழுத்துக்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. இப்படியான மனநிலை தான் மடிக்கணினி முழுவதுமாக செயலிலந்து போன நேரத்திலும் மனதளவில் பெரியதான பாதிப்பையோ அல்லது தளர்வையோ ஏற்படுத்தவில்லை என நினைக்கிறேன். இதையெல்லாம் தாண்டி என்னுடைய எழுத்துக்களை தட்டச்சு செய்ய பயன்படுத்தும் மடிக்கணினி ஆப்பிள் நிறுவனத்தை சேர்ந்தது என்பதால், அதனை சரி செய்துக் கொடுக்க நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பழுதுநீக்கும் கடையில் கொடுப்பதை தவிர வேறு வழியே இல்லை. மென்பொருளில் ஏதேனும் பிரச்சனை என்றால் கூட அதனை சரி செய்து கொடுக்க நட்புவட்டத்திலேயே நண்பர்கள் உண்டு. ஆனால் மொத்தமாக அடிப்படை மென்பொருளே கணினியுடன் தொடர்பை துண்டித்திருந்தது. உள்ளிருக்கும் வன்பொருளில் (Hardware) தான் பிரச்சனை என்பது உறுதி ஆகிவிட்டது. அதுவும் ஆப்பிள் நிறுவனத்தில் பொருட்கள் வேலை செய்யும் வரை கில்லி. ஆனால் பிரச்சனை என வந்துவிட்டால் அதுவும் வன்பொருள் பிரச்சனையெனில் நம் பொருளாதாரத்தில் பெரிய ஓட்டையே விழும் அளவில் தான் ஒவ்வொரு பொருளின் விலையும் இருக்கும். சரி செய்து வாங்குவதற்குள் கொஞ்ச நஞ்மல்ல நிறையவே நாக்கு தள்ளிவிட்டது. அதுவும் போக மொத்தமாக அந்த மடிகணினியில் எதையும் மீட்டெடுக்க முடியாது என சொல்லி விட்டார்கள் என்பதால் என்ன செய்வதென தெரியாமல் ஒரு வித ஜென் மனநிலைக்கு போய்விட்டேன். நல்லவேளையாக ஒரு மூன்று மாதம் முன்பு தான், என்னுடைய மடிக்கணினியில் இருந்து சில முக்கியமான தரவுகளை மட்டும் தனியாக எடுத்து புதியதாக வாங்கியிருந்த external hard diskகில் எடுத்து வைத்திருந்தேன். அதனால் மனம் கொஞ்சம் அசூவாசமாய் ஆனது. மடிக்கணினியில் அதனை வாங்கிய நாளில் இருந்து சில வருடங்களாக சேமித்து வைத்திருந்த எதுவுமே திரும்ப வராது எனத் தெரிந்தும், அதனை எளிதாக எடுத்துக்கொண்டு, அடுத்தது என்ன என்கிற மனநிலைக்கு என்னை கொண்டு சென்றது கண்டிப்பாக மேலே சொன்ன விஷயங்கள் தான். இதற்கு முன் இப்படியான இழப்புக்களை எப்படி எதிர் கொண்டேன் என்பதும், மற்றவர்களும் இது போன்ற சூழலை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை கவனிக்கையில், தற்பொழுதைய சூழலை நிறையவே நேர்மறையாக எதிர்கொண்டதாக எண்ணுகிறேன். ஒரு வகையில் மடிகணினி பழுதானது என்பது, வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பிகொண்டு அலட்சியமாக இருந்தால் என்ன நடக்கும் என்பதை பாடமாக சொல்லியிருக்கிறது. அதையும் தவிர தொழில்நுட்பம் சம்பந்தமாக பல்வேறு விதமான விஷயங்களை அறிந்து கொண்டு அதில் கடைபிடிக்க வேண்டியவற்றையும் சொல்லி கொடுத்துவிட்டு போயிருக்கிறது. அந்த வகையில் மிகச் சிறப்பான பாடத்தை கற்றுக்கொடுத்து விட்டு மீண்டும் என்னுடைய தட்டச்சு எழுத்துக்களை உள்வாங்கி பிரதிபலித்து கொண்டிருக்கும் மடிகணினிக்கு நன்றி. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916