வாழ்ந்து பார்த்த தருணம்…86

இந்தச் சமூகம் வாழ்க்கையின் வெற்றியாக எதனை முன்னிறுத்துகிறது…

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புதின் மரண செய்தியை கண்டிப்பாக என்னால் அவ்வளவு எளிதில் கடந்து வர முடியவில்லை. காரணம் அவரின் மரணத்துக்கு பின்னான அதற்கான காரணங்களாக வெளிவரும் செய்திகள் எதுவுமே ஜீரணிக்கும்படி இல்லை. வாழ்வில் தான் கண்ட கனவை அடைவதை விட, அப்படியான கனவை அடைந்துவிட்ட பின் அதனை அங்கிகரிக்காமல், தன் துறை சார்ந்த சக மனிதர்களாலேயே புறக்கணிப்படுவதும், அதன் பொருட்டு தன்னை சுற்றி உருவாக்கப்படும் வெறுமையையும் எதிர்கொள்ளக்கூடிய தருணங்கள் மிக, மிக ரணமானது. அதனால் தான் அந்த வெறுமையை தாண்ட முடியாத அவரின் ரண வலியுடன் கூடிய மறைவிற்காக இதயப்பூர்வமாக பிராத்திக்கிறேன். இவ்வளவு தூரம் இந்த மரணம் என்னை பாதிக்கக் காரணம். தற்பொழுதைய காலத்தில் இன்றைய தலைமுறையின் மனதிற்குள்ளும் இப்படியான எண்ண ஓட்டங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அப்படியான மனநிலை கொண்ட இன்றைய பதின்ம வயது பள்ளி செல்லும் தலைமுறையினரை அடிக்கடி எதிர்கொள்கிறேன். எப்படியெனில் என்னுடைய பணிகளில் மிக முக்கியமானதாய் கருதும் என்னுடைய புகைப்பட பயிற்சி வகுப்புகளின் வழியே இன்றைய தலைமுறை மாணவ, மாணவிகளிடம் தொடர்ச்சியாய் உரையாடிக்கொண்டிருக்கிறேன். அப்படியான இன்றைய பதின்ம வயது தலைமுறையினரிடம் தொடர்ச்சியாக உரையாடுகையில், ஓரு விஷயத்தை கூர்மையாக கவனித்தபடியே இருக்கிறேன். அதில் இன்றைய தலைமுறையினரிடம் அவர்களது பெற்றோர்களாலும், சுற்றத்தார்களாலும் மற்றும் பலராலும் தொடர்ச்சியாய் சொல்லி சொல்லி வளர்க்கப்படும் விஷயம் ஒன்று இருக்கிறது. அந்த விஷயம் எப்படியாவது புகழின் வெளிச்சம் உன் மேல் படும்படியான இடத்திற்கு வந்துவிடு என்பதாக அது இருக்கிறது. மேலே சொன்ன விஷயங்களை பொதுவான வார்த்தைகளில் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அந்தப் புகழ் என்பதனை பற்றிய ஒரு மாய பிம்பத்தை பல நிலைகளில் பல்வேறு வார்த்தைகளில், சில நேரங்களில் பொதுவில் கூட எழுத முடியாத விஷயங்களால், அந்த புகழின் மீதான மாய பிம்பம் இன்றைய தலைமுறையின் கனவுகளுக்கு பின்னால் கட்டமைக்கப்பட்டு கொண்டே வருகிறது. இரண்டு நாளைக்கு முன்னர் கூட முகநூலில் ஒரு முக்கியமான அறியப்பட்ட நபர் ஒருவர், ஒரு காணொளியினை பகிந்திருந்தார். அந்தக் காணொளியில் நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறது. அந்தப் பாடல் ஒரு திரைப்படத்தின் வணிக வெற்றிகாக என்கிற போர்வையில், இடைச் செருகப்படும் கவர்ச்சிப் பாடல். அந்தப் பாடலின் நடனம் முழுவதுமே குடும்பத்துடன் உட்கார்ந்து காண தகுந்தது அல்ல. ஆனால் அப்படியான பாடலுக்கு ஆடுவது ஐந்து வயதே நிரம்பிய பெண் குழந்தை. அதனுடைய முகபாவணைகளை கூட என்ன மாதிரியான அர்த்தத்தில் சொல்லி கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை.

இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது கூட யாருக்கேணும் அந்தப் பாடலை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தால். அந்தக் குறிப்பிட்ட நடனத்தை பார்க்க கூடிய எவ்விதமான விஷயங்களையும் மேலே குறிப்படவில்லை. ஆனாலும் சாதாரணமாக நீங்கள் மேலே குறிப்பிடுள்ள விஷயங்களை ஆங்கில வார்ர்தைகளில் தட்டச்சு செய்தாலே போதும். மேலே சொன்னதாவது ஒரு நடன காணொளியைப் பற்றி மட்டுமே. ஆனால் இது போன்ற பல்வேறு நடனங்களை கூகிள் ஆண்டவர் வாரி வழங்கிவிடுவார். இப்படி எல்லா வகையிலும் நம்முடைய குழந்தைகளின் மனதிற்குள் பலவிதமான ரியாலிட்டி ஷோக்கள் என்கிற பெயரில் மிகப் பெரும் மனசிதைவினை உருவாக்கி கொண்டே வருகிறார்கள். இன்றைய இளைய தலைமுறையினரிடம் தான் வாழும் காலத்தில் எப்பாடு பட்டாவது இந்த நாடே திரும்பிப் பார்க்கும் படியான புகழின் வெளிச்சத்திற்குள் சென்று விட வேண்டும் என்கிற உந்துதல் மனதுக்குள் ஒரு அழுத்தமாக இருந்து கொண்டே இருக்கிறது. அப்படியான அழுத்தத்தை இன்றைய தலைமுறையின் மூளைக்குள் விதைக்கும் அன்பானவர்களிடம், ஒரே ஒரு சின்னக் கேள்வி. இது வரை கடந்த பல ஆண்டுகளாக தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ என்கிற பெயரில் பல நிகழ்ச்சிகள் நடந்து முடிந்திருக்கின்றன. இன்றைக்கும் நடந்து கொண்டும் இருக்கின்றன. இது வரை நடந்து முடிந்த ரியாலிட்டி ஷோவில் எத்தனை, எத்தனை பேர் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் வழியே வெற்றியாளர்களாக வெளியே வந்து இருப்பார்கள். ஆனால் அப்படி வெற்றியாளர்களாக வந்தவர்கள் எத்தனை பேர் இந்தச் சமூகத்துக்குள் அந்த வெற்றியை தக்கவைத்து இன்றும் எல்லோராலும் அறியப்படுபவர்களாக, வெற்றியாளர்களாக இருக்கிறார்கள் என்று என்றைக்காவது யோசித்திருகிறீர்களா?.

கண்டிப்பாக இல்லை. கடந்து போகும் வாழ்க்கையில் நமக்கு அப்படியான உருப்படியான வாழ்க்கைக்கு மிக அவசியமான அறிவுப்பூர்வமான கேள்வியெல்லாம் தோன்றவே தோன்றாது. ஏன் எதை பலி கொடுத்தாவது புகழ் என்கிற அந்த புள்ளியை நோக்கி எப்படியாவது நம்முடைய குழந்தைகள் போய் சேர்ந்துவிட வேண்டும் எனக் கனவு காண்கிறோம் என புரியவே இல்லை. இன்றைய இளம் தலைமுறை என்றைக்காவது ஒரு நாள் தான் அடைந்த தோல்விக்காவோ அல்லது தனக்கு ஏற்படும் ஒரு மனவலிக்காகவோ தன்னை சார்ந்த, தன்னிடம் அன்பு செலுத்தும் ஒருவரிடம் வந்து, தனக்கான அந்த வலியையும், தோல்வியையும் சொல்லி அழுது இருக்கிறார்களா. உண்மையில் இது தான் கவலையளிக்கக் கூடிய மிக, மிக முக்கியமான விஷயம். அப்படியான ஆறுதல் கொடுக்கும் தோள்கள் இன்றைக்கு குறைந்து கொண்டே வருகின்றன. இதனை சும்மா போகிற போக்கில் எல்லாம் சொல்லவில்லை. தொடர்ந்து புகைப்பட பயிற்சியின் வழியே இன்றைய தலைமுறை மாணவ, மாணவிகளிடம் உரையாடுதலின் அடிப்படையிலேச் சொல்கிறேன். அந்தப் புள்ளியில் இருந்து பார்க்கையில், அப்படி எல்லாவகையிலும் தன்னுடைய திறமையால், சீரான வளர்ச்சியால் புகழ் என்கிற இலக்கை அடைந்துவிட்ட ஒருவருக்கு, தன்னை சுற்றி நடக்கும், தன் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டைகளாக இருக்கும், பல்வேறு தடைகளை கடக்கும் மனத்திடம் இல்லாமல் போயிருப்பது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய வலியை தரும் விஷயம். வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் நமக்கு அத்தகைய நபர்களை பார்க்கையில், நினைத்தது எல்லாமே அந்த நபருக்கு வாய்த்திருக்கிறது என்கிற பெருமூச்சும், ஆற்றாமையும் தான் மனக்கண்களுக்குள் தோன்றி மறையும். ஆனால் அப்படியான வெற்றிக்கு, பின்னால் இருக்கும் மிகக் கடுமையான உழைப்பும், அதற்காக ஒதுக்க வேண்டிய நேரங்களும், ஓய்வில்லா பயிற்சியும், தன்னுடைய வெற்றியை அங்கரிக்காத சமூக புறக்கணிப்பும், இன்னும், இன்னும் நிறைய வலிகள் நம் கண்களுக்கு தெரியாது. அதனால் தான் இன்றைய தலைமுறைக்கு வாழ்வின் மீதான ஆகப் பெரும் நம்பிக்கையை கொடுத்து, எது வந்தாலும் எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதைச் சொல்லி கொடுக்க வேண்டுமென்பதே மிக, மிக முக்கியமாக அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம். ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு எப்படியாவது தன்னுடைய பிள்ளைகள் புகழ் வெளிச்சத்தை அடைந்துவிட வேண்டும், தோல்வி அடையவேக் கூடாது என்று சொல்லிச் சொல்லி வளர்ப்பதால் வரும் விளைவுகள் மிக மோசமானதாய் இருக்கும். அப்புறம் கதறி ஒரு பிரோஜனமும் இல்லை. இன்றைய தலைமுறையின் மனதிற்குள் ஆழமாக போய் சேர வேண்டிய மிக முக்கியமான வார்த்தைகள் பணத்தை நோக்கி ஓடுவது, புகழை நோக்கி ஓடுவதெல்லாம் அப்புறம். அதற்கெல்லாம் முன்னர் மனதிற்குள் ஆழமாய் இருத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம். இந்த வாழ்வின் மீதான காதலுடன் கூடிய ஆழமான நம்பிக்கை மட்டுமே. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916