நம்முடைய அடையாளத்தை இங்கே யார் கட்டமைக்கிறார்கள்…
ஓ அவன் சொன்னானா அப்ப சரி… இப்படியான வார்த்தைகளை பல முறை, பலரும் தங்களுடைய காதுகளில் கேட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். அதே நேரம் இப்படியான வார்த்தைகளை நாமும் சொல்லியிருப்போம். எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உண்மை மனிதர்களின் கதைகளில் முதல் கதையான அறம் என்கிற கதையின் கடைசி வரிகளாக, வார்த்தைகளின் வீரியத்தை பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார். ஒருவர் சொல்லும் சொல், அதாவது வார்த்தையென்பது வில்லிருந்து புறப்படும் அம்பைp போல, அந்த அம்பு வில்லில் பூட்டப்படுகையில் அது ஒரு சொல். வில்லில் இருந்து விடுபட்டவுடன் அது நூறு சொல், யாரை அந்த சொல் தாக்க வேண்டுமோ அவரை அது தாக்கியவுடன் அது ஆயிரம் சொல். இப்படித் தான் அறம் புத்தகத்தில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். நடைமுறை வாழ்வில் இருந்து யோசிக்கையில் அது சத்தியமான உண்மை. இவ்வளவு வலிமை மிக்கதான வார்த்தைகளை, நம்முடைய தினசரி வாழ்வில் பயன்படுத்தும் சொற்களில் வழியே எப்படி பயன்படுத்துகிறோம் என யோசித்திருக்கிறோமா?. அந்த அடிப்படையில் யோசித்தால், இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் என்னுடைய வார்த்தைகளின் வழியே சொல்லியிருக்கும் சொல் ஒருவனை அடையும் போது ஆயிரம் சொல்லாக மாறி எப்படிப்பட்ட தாக்குதலை கொடுக்கும் என அந்தச் சொல்லினை சொல்லும் போது கன நேரமாவது சிந்தித்திருக்கிறோமா, நாம் ஒவ்வொரு முறையும் நம் நாவிலிருந்து வெளிப்படுத்தும் சொல்லின் வழியாக தான் ஒருவனை பற்றிய பிம்பத்தை பொதுவெளியில் உருவாக்குகிறோம். அப்படியான சொற்கள் ஒருவனது வாழ்வில், அவனது நம்பிக்கையில் எதோ ஒரு வகையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிற உண்மையை நம்முடைய மனம் ஏனோ எப்பொழுதுமே ஏற்றுக் கொள்வதே இல்லை.
இப்படிச் சொன்னால் உடனே அப்படிப்பட்ட வார்த்தையை கடந்து வருவது தான் வாழ்வு என்கிற வியாக்கியானம் உடனடியாக பரிசாக கொடுக்கப்படும். ஆனால் அப்படியான வியாக்கியானம் கொடுப்பவர்களே, இப்படிப்பட்ட வார்த்தைகள் தன்னை நோக்கி வருகையில் அதனை கடந்து வருவதில்லை என்பது தான் இங்கிருக்கும் மிகப் பெரிய நகை முரண். இப்படி நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் மீதான வீரியத்தையும், உன்னதத்தையும் உணர்ந்து கொள்ள தவறுவதால், எளிதாக, சொற்களைப் பிரயோகிக்காமல் கடந்து போய்விடக்கூடிய பல அற்பமான விஷயங்களுக்கும், தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி, யாவரின் மனதையும் மிக, மிக எளிதாக சிதைத்து விடுகிறோம். அந்தச் சிதைவின் வழியே ஒரு நபரை பற்றிய ஒரு விதமான பிம்பம் பொது வெளியில் உருவாக ஆரம்பிக்கும் இல்லையா. அந்தப் பிம்பத்தையும் தொடர்ந்து தக்க வைக்க விரும்பும் நம்முடைய ஆழ்மன குரூரம் அதனைச் சிரத்தையோடு தொடர்ச்சியாக நம்முடைய வார்த்தைகளை வழியே மிக, மிக சிறப்பாக கட்டமைத்து கொண்டே இருக்கும். அதுவும் அப்படியான வார்த்தைகளை நாலு பேர் கூடும் இடத்தில், அப்படியான வார்த்தைகளால் காயம்பட்ட நபரையும் நடு நாயகமாக நிறுத்தி வைத்துக் கொண்டு எள்ளலாக பேசுவதென்றால் அப்படியே புல்லரித்து புளாங்கிதமடைந்து விடுகிறோம். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளும் அன்றைய நிலையில் பிறரை காயப்படுத்தலாம், அவரை பற்றிய மிக, மிக மட்டமான பிம்பம் ஒன்றினை எளியதாக உருவாக்கிவிடலாம். ஆனால் அப்படியான வார்த்தைகளை பொது வெளியில் பயன்படுத்தும் நம்மை பற்றிய பிம்பமும், அந்த கணமே அங்கேயே உருவாக ஆரம்பிக்கிறது என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அப்படியான பிம்பம் அந்த நிமிடத்தில் நம்மை எதுவுமே செய்யாமல் இருக்கலாம். ஆனால் காலம் ஒன்று இருக்கிறது இல்லையா?. அது கண்டிப்பாக நாம் பயன்படுத்திய வார்த்தைகளுக்கான விளைவை உறுதியாக கொடுத்தே தீரும்.
இப்படியான கட்டமைப்பு நம்மை சுற்றி நம்மை அறியாமலேயே உருவாக்கப்பட்டு உலவ விடப்படுகிறது என்பதை உணராமல் தான் பெரும்பாலான சமயங்களில், பலபேர் தனக்கு எம்மாதிரியான விஷயங்களின் மேல் உண்மையில் ஈடுபாடு இருக்கிறது என்பதை கண்டுனர முடியாமலேயே போய்விடுகிறது. அதனால் நம்மை நோக்கி வரும் ஓவ்வோரு வார்த்தைகளின் மீதும் மிகப்பெரும் சுயவிமர்சனம் செய்தபிறகு ஏற்றுக்கொள்ளுதல் நலம். அப்படியான சுயவிமர்சனம் உண்மையாக நடுநிலையான மனநிலையோடு இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி வேறேதையும் செய்யத் தேவையில்லை. காரணம், எப்பொழுதுமே நம்மை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை விட, நம்மை பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு தான் நாம் கொடுக்கும் முக்கியத்துவம் மிக, மிக அதிகமாக இருக்கிறது. அப்படியிருக்கையில் வெளியிலிருந்து நம்மை நோக்கி வரும் ஒற்றை வார்த்தையே மிக, மிக எளியதாக நம்மீதான நம்முடைய பிம்பத்தை சிதைத்து சின்னப்பின்னமாக்கிவிடும். அப்படி சிதைத்தால் என்னவாகி விட போகிறது என்கிற மனநிலை தான் இன்று பரவலாக பெரும்பான்மையோரின் மனநிலைக்குள் இருந்து ஆட்டிப் படைக்கிறது. அதுவும் சில நேரங்களில் ஒரு குழுவாக நின்று பேசிக்கொண்டிருக்கையில் தனிப்பட்ட ஒருவரின் மீது குவியும் கவனத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், போகிற போக்கில் சில வார்த்தை முத்துகளை உதிர்த்துவிட்டு போய்விடுகிறோம். அப்படியான வார்த்தைகள் குறிப்பிட்ட நபர் மீதான பிம்பத்தை சிதைப்பதோடு மட்டுமல்லாமல், அந்தக் குழுவுக்குள் உருவாக்கப்பட்ட அந்த நபரின் மீதான பிம்பத்தையும் மிக, மிக எளிதாக சிதைத்து விடுகிறது. இப்படியான நிகழ்வுகளில் பாதிப்படையும் ஒரு நபர் சிறிதளவாவது சிந்தித்து தம்முடைய அனுபவத்தின் வழியே அந்த சூழலை அணுகாமல் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டால், முடிந்தது கதை. மொத்தமாக அந்த நபர் ஒன்றுமில்லாமல் போய்விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆனால் அப்படி ஒரு நபர் ஒன்றுமில்லாமல் போனால் கூட, அதற்கு காரணகர்தாவான அனைத்து பிரகஸ்பதிகளும், அடுத்த நபரை ஒன்றுமில்லாமல் ஆக்க கிளம்பிவிடுவார்கள். அவர்களுக்கு அது தான் அவர்களுடைய வாழ்வின் ஆகச்சிறந்த சுவாரஸ்யமே. இந்தப் புள்ளியில் இருந்து சற்றே சிந்தியுங்கள் நம்முடைய வாழ்வில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளும் சரி, நம்மை நோக்கி வரும் வார்த்தைகளிலும் சரி, கவனம் செலுத்தாவிட்டால், நம்மை பற்றிய நம்முடைய பிம்பத்தை மற்றவர்களிடம் கட்டமைக்க கொடுத்து விட்டோம் என அர்த்தம். அப்படி கொடுத்து விட்டால் இந்த சமூகத்துக்கு இடையில் கடைசி வரை நாம் மிகச் சிறப்பான கோமாளி பொம்மைகளாய் தான் வளம் வருவோம். மகிழ்ச்சி.
கடைசியாக :
உன்னுடைய அடையாளம் ஒன்றாக இருக்கலாம்
அல்லது ஓராயிரமாக கூட இருக்கலாம், ஆனால்,
அந்த அடையாளத்தினை நீ கண்டுணராதவரை,
அதன் மீது நீ கவனம் செலுத்தாத வரை,
அந்த அடையாளத்தை நீ அங்கிகரிக்காத வரை,
உன்னை தவிர மற்றவர்களால், உன் அடையாளம்,
அடையாளம் காணப்படும் என நீ நம்பி கனவுகாணும் வரை,
நீ பிடுங்கி எறிவது எல்லாம் தேவையற்ற ஆணிகள் தான்…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு