அலட்சியப்படுத்தலை விளையாட்(டாய்)டில் கடப்போம்…
கொஞ்ச நாளைக்கு முன்பு வரை ஒரு வாசகம் அடிக்கடி காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கும். இந்த வயசுல என்ன விளையாட்டு அல்லது உன் வயசு பசங்களோட விளையாடாமா சின்ன பசங்களோட விளையாடுறீயே என்பது போலான சொற்கள் காதுகளில் விழும். இது போன்ற வார்த்தைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு, அதன் பின் விளையாட்டின் மீதான கவனம் சிதறிவிடும். மேலே சொல்லப்படும் வாசகங்களை உதிர்க்கும் பிரகஸ்பதிகள் பெரும்பாலும் எந்த ஒரு விளையாட்டிலும் எப்பொழுதும் ஈடுபடாத, தன்னுடைய உடலை எந்த வகையிலும் வருத்திக் கொள்ளாதவர்களாக இருப்பதை கூர்ந்து பார்த்தால் அவதானித்து விடலாம். மேலே சொன்ன வார்த்தைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், அந்த வார்த்தைகளை ஒரு பொருட்டாகவும் மதிக்காமல், எப்பொழுதும் சாகசத்திற்கு தயாராக இருக்கும் மனிதர்கள், எங்கேயும், எப்பொழுதும் தனக்கு விருப்பமான விளையாட்டு நடந்தாலும் களத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்த பிறகு தான் பேசவே ஆரம்பிப்பார்கள். இப்படியான விளையாட்டு என்பது ஒரு வகையில் மனிதனின் உடலையும் மனதையும் ஒரு முகப்படுத்தும் மிக சிறப்பானதொரு நுட்பமானக் கலை. ஆனால், இன்றைய நிலையில் முதல் வரிகளில் கூறிய வார்த்தைகள் எல்லாம் காதுகளில் பட வாய்ப்பில்லை. காரணம் களத்தில் இறங்கி விளையாடுவதைத் தற்பொழுதைய சமூகம் கொஞ்சம், கொஞ்சமாக மறுதலித்துக் கொண்டும், மறந்து கொண்டும் இருக்கிறது. இன்று எந்த விளையாட்டாக இருந்தாலும், எல்லாமே ஆறு அங்குல அலைப்பேசி திரை அல்லது அறுபது அங்குல தொலைக்காட்சி திரை தான். இது போதும் விளையாட என்கிற மனநிலை மட்டுமல்லாது, உடலை வளைக்கத் தேவையே இல்லை. நல்ல வாகான இடமாக, தோதான இருக்கையாக தயார் செய்து கொண்டு அமர்ந்துவிட்டால் நேரம் காலம் பார்க்காமல், மொத்த உடல் உறுப்புகளில் இரண்டே இரண்டு விரல்களை, அதுவும் நோகாமல் நகட்டிக் கொண்டே இருந்தால் இருபத்தி நான்கு மணி நேரம் தாண்டியும் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல். அங்கேச் சாப்பிட்டு, அங்கேயேத் தூங்கி அப்படியே பக்கத்திலேயே ஒரு சின்ன ஓட்டையையும் தயார் செய்து வைத்து விட்டால். உட்காரும் நிலையை மட்டும் கொஞ்சமாக நகர்த்தி உடல் கழிவை வெளியேற்றும் நேரத்தையும் வீணாக்காமல் விளையாட்டை தொடர்ந்து கொண்டே இருக்கலாம். இப்படி நோகாமல் விளையாட ஆயிரம் வசதிகள் இருக்கையில் மைதானமாவது, மண்ணாங்கட்டியாவது.
எதில் விளையாடினால் என்ன? ஏன் மைதானம் என்கிற களத்தில் விளையாடுவது மட்டும், எந்த வகையில் சிறப்பானது என்கிற கேள்வி நம்முடைய மனதிற்க்குள் தோன்றலாம். இதற்கு வழுவானக் காரணங்கள் பல இருந்தாலும், மிக முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது நம்முடைய உடலின் ஆற்றல் எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை சோதிக்க மைதானமே மிகச் சிறப்பான களம். இரண்டாவது நம் எதிரே ஆடும் நபர்களின் வழியே சக மனிதனைப் படிப்பது மட்டுமில்லாமல், சூழ்நிலையின் தன்மைக்கேற்ப எம்மாதிரியான முன்னெடுப்புகளைப் செய்யலாம் என்பதையும், அதே சூழலில் எம்மாதிரியான விஷயங்களை முன்னெடுக்கக் கூடாது என்பதையும் கற்றுக் கொண்டே இருக்க முடியும். ஒரு சரியான முன்னேடுப்பு வெற்றியையும், ஒரு சின்ன தவறான முன்னேடுப்பு தோல்வியையும் பரிசளிப்பதை கண்முன்னே பார்க்க முடியும். இதையெல்லாம் தாண்டி மைதான களத்தில் மட்டுமே நம்முடைய மூளையின் எண்ண செயல்பாடுகள், நூறு சதவீதம் நாம் ஆடும் விளையாட்டுக்குள் இருக்கும். இதனைக் கண்கூடாகவும் பார்க்க முடியும். அப்படி இருப்பதனால் என்ன பயன்? என்கிற கேள்வி அடுத்ததாக தோன்றினால். இன்று வாழ்வின் ஓவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். நம்மை, நம்முடைய திறமையை வெளிப்படுத்தும் நேரத்தில் அதனை அலட்சியப்படுத்துவதில் ஆரம்பித்து, அதனைப் புறக்கணிப்பது, அப்படியான திறமைகளை வளரவிடாமல் செய்வது. மற்றும் தொடர்ச்சியான ஒரே மாதிரியான வேலைகளத்தால் மனம் சலிப்படைவது. அந்தச் சலிப்பால் எதன் மீதும் ஈடுபாடு இல்லாமல், எந்தச் செயலையும் முழுமையுடன் சிறப்பாக செய்ய இயலவில்லை என்கிற ஒரு வித விரக்தி நிலையில் பலர் பேசுவதைக் கேட்க நேர்கிறது.
அதற்குச் சமீபத்திய நாட்களில் செய்திகளின் வழியே தொடர்ச்சியாக இளம் வயதினர் தன்னை தானே மாய்த்து கொள்வதை படித்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்கிறோம். ஒரு வகையில் இன்றைய இளைய தலைமுறையினர், ஒரு சிறிய தோல்வியையோ அல்லது ஒரு சின்ன புறக்கணிப்பையோக் கூட தாங்க முடியாத அளவு மனதளவில் மிக, மிக பலகீனமானவர்களாக இருக்கிறார்கள். இதற்கு பிரபலமானவர்கள், தொழிலில், வாழ்வில் மிகப் பெரிய வெற்றியாளர்களாக இந்த உலகத்தினரால் முன்னிறுத்தப்பட்டவர்கள் கூட விதிவிலக்கல்ல. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் இன்று பலருக்கும் அவரவர் துறையில் புறக்கணிப்பும், அலட்சியப்படுத்துதலும் சர்வ சாதாரணம். அப்படியானவர்கள் தங்களின் அழுத்தமான மனநிலையில் இருந்து தங்களை விடுவித்து கொள்ள மிக, மிகச் சிறப்பான களம் தான் விளையாட்டு. ஆனால் அப்படியான விளையாட்டு வீட்டின் வெளியே இருக்கும் மைதானத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான் இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம். இப்பொழுது எல்லாம் எங்க மைதானம் இருக்கு என்று கேட்கிறவர்களுக்கு, கண்டிப்பாக இருக்கும். நாம் தான் தேடி போவதில்லை என்பது தான் பதில். நமக்கு பிடித்தமான திரைப்படத்தை, நமக்கு பிடித்தமான திரையரங்கில் பார்க்க, நமக்கு பிடித்தமான உணவை, நமக்கு பிடித்தமான உணவகத்திற்கு சென்று சாப்பிட என இப்படி நமக்கு பிடித்தமான என்கிற அடைப்பு குறிக்குள் இருக்கும் அனைத்திற்காகவும் எவ்வளவு தூரமும் பயணப்படத் தயாராக இருக்கும் நாம். நமக்கு பிடித்தமான நம்முடைய மனதினை இயல்பாய் வைத்துக் கொள்ள ஏன் மைதானத்தை தேடி செல்லக் கூடாது. ஒவ்வொரு நாள் காலையும் அதற்கான நேரத்தை ஒதுக்கி, உங்களின் மனதுக்கு நெருக்கமான ஏதாவது ஒரு விளையாட்டை தேர்தெடுத்து மைதானத்திற்கு சென்று விளையாடிப் பாருங்கள். உங்களின் அனைத்து விதமான மன அழுத்தங்களின் இருந்தும் மிக, மிக எளிதாக விடுபடும் சூட்சமம்,அப்படியான விளையாட்டிற்க்குள் தான் ஒளிந்திருக்கிறது என்பதை மைதானத்தில் ஆடிப்பார்த்தவர்களால் உணரமுடியும், உங்களில் மனதிற்குள் உள்ள எல்லாவிதமான மன அழுத்ததிற்கான வடிகாலாக கண்டிப்பாக மைதானம் இருக்கும், வரலாற்றை ஒரு முறை திருப்பி பாருங்கள் விளையாட்டு இல்லாத வரலாறே கிடையாது. இதிகாசத்திலிருந்து இன்றைக்கு வரை விளையாட்டே ஒரு மிகப் பெரும் வரலாறு தான். உங்களின் பயிற்சியும் மன ஒருகிணைப்பும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில், அங்கே புறகணிப்பிற்கெல்லாம் வேலையே இல்லை. சர்வதேச அணியில் சென்று விளையாடுவதெல்லாம் விளையாட்டை தொழில்முறையில் எடுத்து கொள்பவர்களுக்கானது. ஆனால் அதைத் தாண்டி பல்வேறு துறைகளில், பல்வேறுப் பணிகளை தங்களுடையத் தோள்களில் சுமந்து ஓடிக் கொண்டே இருப்பவர்கள், அப்படியான தங்கள் தொழில்துறை சார்ந்த களத்தின் புறப்பணிப்பில் இருந்து விடுபட, அப்படியான புறக்கணிப்பை தங்களுடைய கால்களின் இடுக்களில் மாட்டிய தூசியைப் போல் அலட்சியமாய் கடந்து வர, விளையாட்டை ஒரு வாய்ப்பாக உங்களால் தேர்ந்தெடுக்க முடிந்தால், சந்தேகமே வேண்டாம் நீங்கள் ஆடும் களமே சர்வதேச களம் தான். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916