வாழ்ந்து பார்த்த தருணம்…93

மழைச்சாரல் துளிகளில் இசையினை மீட்டும் கரங்கள்…

இன்றைய சூழலில் தொடர்ச்சியாக காதுகளில் விழும் செய்திகளும், அதன் வீரியமும் எதோ ஒரு வகையில் நம்முடைய ஆழ்மனதை ஒழுங்கற்று உழலும் மனநிலைக்கு தள்ளிக் கொண்டே இருக்கின்றன. இப்படியான நேரங்களில் ஆழ்மனதின் எண்ண அடுக்குகளை பின்னோக்கி செலுத்தி சில ஆபூர்வமான, காதலான, சிலிர்ப்பான தருணங்களை, மீள் உருவாக்கி உலவ விட்டு அதனுள் சஞ்சரிப்பது என்பது, நம்மை உயிர்ப்பாய் வைத்திருக்க நல்லதொரு உபாயம். அப்படியான ஆழ்மனதின் எண்ண அலைகளுக்குள் பின்னோக்கி பயணப்படுகையில், மேலே கொடுத்திருக்கும் தலைப்பு அனிச்சையாக தோன்றியது. மேலே கொடுத்திருக்கும் தலைப்பை வாசிக்கையில் பல பேருக்கு பலவிதமான எண்ணவோட்டங்கள் மனதினுள் தோன்றி மறையலாம். ஆனால் அதெல்லாம் ஒரு வெங்காயமும் தோணலை என்று சொல்பவர்களின் மனநிலையை நினைத்தால் என்ன சொல்வது எனத் தெரியவில்லை. அப்படியானவர்களுக்காக பரிதாபப்படுகிறேன். காரணம், இன்று வாழ்வின் பொக்கிஷமாய் கடந்து வரும் கணங்களின் ஆழத்தை உயிர்ப்புடன் பார்க்கும் மனநிலை குறைந்து கொண்டே வருகிறது. முதலில் அப்படியான மனநிலையிலிருந்து எந்த ஒரு நிகழ்வையும் அணுக ஆழமான ரசனையும், அதற்கான மனநிலையும் அமைய பெற வேண்டும். நமக்கு இன்று எதனையுமே ரசிப்புத் திறனுடன் பார்க்கும் மனநிலையை வாய்க்கப் பெறவில்லை. நம்மைச் சுற்றி நடக்கும் எதையுமே எளிதில் கடந்து போக பழகிக் கொண்டே இருக்கிறோம். அப்படி எந்த ஒரு நிகழ்வையும் கடந்து போய்விட்டு, அப்புறம் சொல்லுங்க வேற என்ன என்கிற கேள்வியோடு அப்படியான நிகழ்வு முடிந்தும் விடுகிறது. அது எப்படியான மிகச் சிறப்பான நிகழ்வாக இருந்தாலும் இது தான் கதி. ஒரு விஷயம் எங்கோ படித்ததாக ஞாபகம். வாழ்வின் இறுதி நாட்களில் நம்மிடம் மிச்சமிருக்க போவது நம்முடைய வாழ்வின் ஆகச் சிறந்த கணங்களுடைய நினைவுகளின் எச்சங்கள் தான். ஆனால் தன் வாழ்வின் ஓய்வான நாட்களில் மட்டுமல்லாது, எப்பொழுதெல்லாம் நம்மை சுற்றி இருக்கும் சூழல் நமக்கு உவப்பானதாக அமையப் பெறவில்லையோ, அப்பொழுது எல்லாம் அப்படியான கணங்களை மீட்டெடுக்க தெரியாதவர்களின் நேரங்கள் கண்டிப்பாக இனிப்பானதாக இருக்கப் போவதில்லை.

இன்றைய சூழலின் இறுக்கத்தில் இருந்து விடுபட அப்படியான கணங்களை மீட்டெடுத்து அசைப் போட்டுக் கொண்டிருந்த பொழுது நிறைய சுகமான நினைவுகள் வந்து, சூழலின் இறுக்கத்தில் இருந்து மனதை விடுவித்து, இலகுவாக்கி எழுதவைத்தன. அப்படியான நினைவடுக்குகளில் ஒளிந்திருந்த என்னால் மிகவும் ரசிக்கப்பட்ட ஒரு நபரை பற்றி எழுத வேண்டும் என உந்துதல் இருந்து கொண்டே இருந்தது. அப்படிப்பட்ட மனநிலை வெளிப்பாட்டின் முதல் புள்ளி தான் மேலே உள்ள தலைப்பு. பொதுவாக நம்முடைய வாழ்வின் மிக, மிக முக்கியமான பதின்ம வயதுகளின் தொடக்கத்தில், நம்முடைய ரசனை ஒரு விதத்தில் முழுமை பெற்றும், முழுமைபெறாமலும் குழப்பான நிலையிலேயே இருக்கும். அப்படியான மனநிலையில் உழன்று கொண்டு, பல்வேறு விதமான ரசிப்புடன் கூடிய அவஸ்தையுடன் சுற்றி கொண்டிருக்கையில். எதனை ரசிப்பது எதனை விடுவது எனத் தெரியாமல் எதைப் பார்த்தாலும், அதில் ஏதோ ஒன்று சிறப்பாக இருப்பதாக தோன்றும். அப்படிப்பட்ட மனநிலையில் சுற்றி கொண்டிருந்த சமயம், என்னையும் அறியாமல் ஒரு நபரை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்திருந்தேன். அந்த நபர் ஒரு பெண் தான் என்பதை தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. காரணம், பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் அப்படி இல்லாமல் இருந்தால் தான் பிரச்சனையே. இப்படியான நம்முடைய எதிர்பாலின கவனக்குவித்தலையோ, ஈர்ப்பையோ எப்படிப்பட்ட மனநிலையில் இருந்து புரிந்து கொள்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இருந்துவிட்டால். அதனை மிகச் சிறப்பான கணங்களாக மனதுக்குள் செதுக்கி வைத்துவிட்டு, அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து விடலாம். அது ஒரு அட்டகாசமான கண்ணா மூச்சு விளையாட்டு. விளையாட்டை விளையாட்டாய் பார்க்கும் மனநிலை வாய்த்தவர்கள் வரம் பெற்றவர்கள். அப்படி விளையாட்டான ஈர்ப்பு எப்படி அந்தப் பெண்ணின் மீது குவிந்தது என யோசித்தால். பதின்ம வயதுகளில் நம்மிடம் இருக்க வேண்டும் என யோசிக்கும் பண்புகளில் சில நம்மிடம் இருக்காது. அப்படி நாம் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்த பண்பு இன்னொருவரிடத்தில் இருப்பதை அவதானிக்கும் தருணத்தில் இயல்பாகவே, அந்த நபரை ரசிக்க ஆரம்பித்து விடுவோம். அதுவும் அப்படியான நபர் எதிர்பாலினமாக இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.

என்னுடைய பண்புகளாக இருக்க வேண்டும் என யோசித்து. ஆனால் என்னால் என்னுள் இயல்பாக கொண்டு வரமுடியாத பண்புகளால் நிறைந்த பெண்ணாக அந்த பெண் இருந்ததே, என்னுடைய ரசிப்பின் எல்லைக்குள் அந்த பெண் வர போதுமானதாய் இருந்தது. இந்நாள் வரை வெகு சிலரிடம் மட்டுமே கண்டு கொண்ட பண்புகளில் முதன்மையான பண்புகள் பலவும் அன்று அந்த பெண்ணிடம் இருந்தன. ஆனால் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்த உலகம் அன்றிலிருந்து இன்று வரை அழகு என்கிற சொல்லிற்கு அடிப்படையாய் சொல்லி வைத்திருக்கும் தோலின் நிறத்தில் இருந்து. எதையுமே தன்னகத்தே கொண்டிராத பெண் தான் அவர். ஆனாலும் அவரது பண்புகளுக்காகவே அவரை ரசித்தேன். சில பேருக்கு மட்டுமே இந்த உலகம் பலகீனம் என சொல்பவற்றை பலமாக மாற்றும் திறன் வாய்த்திருக்கிறது. நீங்க என்னடா பலகீனம்னு சொல்றது. அத நான் நம்பணும். போங்கடா சொம்பைகளா என எகதாளமாய், சர்வ அலட்சியமாய் அந்தப் பெண் என் கண்முன்னே சுற்றி கொண்டிருப்பார். எவனும் என்னை கவனிக்கனும்னு அவசியமில்லை. என்னை என்னால் ரசிக்க முடிந்தால் போதும் என்கிற அவரின் அந்த புரிதல் இருக்கிறது இல்லையா?. அன்றிலிருந்து இன்று வரை அப்படியான மனநிலையுடன் இருக்கும் நபர்களை பார்ப்பது அபூர்வம். அவரின் அந்த மனநிலை இன்று வரை எனக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மனநிலையோடு தான் எல்லாவற்றையும், எல்லோரையுமே அணுகுவார். இதனால் அவரின் அந்தப் பண்பு சில பேரால் திமிர் என எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அதை பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாக நினைவில் இல்லை. படிப்பிலும் சரி, ஒழுக்கத்திலும் சரி சிறிதளவு கூட அவரை பற்றி தப்பித் தவறி சின்னதாகக் கூட குறை சொல்ல முடியாது. அவரின் உடல்மொழி, நடை என அனைத்திலும் ஒரு அலட்சியமான பாவணை எப்பொழுதும் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பதை பல முறை கவனித்து ரசித்திருக்கிறேன். அந்த அலட்சியம் கண்டிப்பாக அலட்சியமல்ல. வெளிப்புறத் தோற்றத்தால் ஒருவர் ரசிக்கப்பட வேண்டும் என்றால் இன்னென்ன விஷயங்கள் அந்த நபரிடம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அப்படியான நபர்கள் ரசிக்கபட வேண்டியவர்கள் அல்ல. அலட்சியபடுத்தி புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என நம்முடைய மூளைக்குள் இந்த உலகம் கட்டமைத்து வைத்த அனைத்திற்கும் எதிரானது தான் அவரின் அந்த அலட்சியம். அதனாலேயே அவரின் அலட்சியம் எனக்குப் பிடித்தது. அது ஒரு மிக சிறப்பான ஆழமான ரசிக்கத்தக்க எதிர்வினை. அந்த வயதில் என்னுடைய இந்த ரசனையை கவனித்த நண்பர்கள் சிலர். இந்தப் பெண்ணிடம் அப்படி என்ன இருக்கிறது என இவ்வளவு ரசிக்கிறாய் என என் முகத்திற்கு நேராகவேக் கேட்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து சின்ன சிரிப்பை உதிர்த்துவிட்டு கடந்து வந்து விடுவேன். காரணம் தன்னுடைய அழகிற்காகவும் நிறத்திற்காகவும் ஆண்கள் பூசிக்கொள்ளும் முக அழகு களிம்புகளை தங்களுடைய முகத்தில் பூசிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் இவர்களுக்குத் தன்னுடைய நிறத்தால் தன்னை புறக்கணிக்கும் இந்த உலகத்தை அலட்சியமாய் புறக்கணித்து கடந்து போகும் அந்த பெண்ணை பற்றி பேசத் தகுதியே இல்லை. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916