வாழ்ந்து பார்த்த தருணம்…94

நன்றி செலுத்துவதின் வழியே தப்பித்தல்…

சில நாட்களுக்கு முன்பு எனக்கு நெருக்கமான நண்பன் ஒருவனிடம் நீண்ட நேரமாக அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். இது தினப்படி இயல்பாக நடப்பது. அப்படி பேசிக் கொண்டிருக்கையில் சில அபூர்வமான தகவல்கள் எங்களுக்குள் பரிமாறப்படும். அப்படி நண்பன் பகிர்ந்த இரண்டு தகவல்கள் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தின. முதலில் நண்பனை பற்றி ஒரு தகவலைச சொல்லிவிடுகிறேன். நண்பனுக்கு மலையேற்றத்தில் ஆர்வம் அதிகம். அப்படி எப்பொழுது எல்லாம் அவனுக்கு நேரம் வாய்க்கிறதோ, அப்பொழுது எல்லாம் குழுவாக மலையேற்றம் போவோருடன் தன்னை இணைந்து கொண்டு மலையேற்றம் சென்றுவிட்டு வருவான். அப்படி ஒரு முறை அவன் செல்கையில், அங்கே நடந்த ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டான். அவன் குழுவுடன் மலையேற்றம் போனது இந்தியாவில் இருக்கும் முக்கியமான காடுகளில் ஒன்று. கூடவே ஒரு வனத்துறை அதிகாரியும் ஒரு குறிப்பிட்ட இடம் வரை வாகனத்தில் வழி காட்ட வந்திருக்கிறார். அப்பொழுது ஒரு முக்கியமான வளைவை அவர்களுடைய வாகனம் கடக்கையில் ஒரு காட்டு யானை அந்த முகட்டில் மிக தளர்வான மனநிலையில் அமர்ந்து கொண்டு இருந்திருக்கிறது. அதன் கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டே இருந்திருக்கிறது. அதனை கவனித்த அந்த வாகனத்தில் இருந்த குழுவினர், அதைப் பற்றி வனத்துறை அதிகாரியிடம் கேட்க, அவர் சொன்ன தகவல் தான் ஆச்சர்யத்தின் உச்சம். அவர்கள் யானையைப் பார்த்துக்கொண்டே கடந்த போன அந்த முகட்டில் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் இரவு நேரத்தில் ரோந்துக்கு தனியாக வந்திருக்கிறார். காரணம் அந்த காடு சந்தனமர கடத்தலில் ஈடுபடும் நபர்கள் அதிகமாக பயன்படுத்தும் இடமாம். அதன் காரணமாகவே இரவு நேர ரோந்துக்கு வந்திருக்கிறார். இரவு நேரம், காடு அதனால் வாகன வெளிச்சத்தை தவிர, வேறு ஒரு வெளிச்சமும் இல்லை, அவர் வாகனத்தை ஒரு ஓரமாக சிறுநீர் கழிப்பதற்காக நிறுத்தி நடந்து போய்விட்டு திரும்பி வாகனத்தில் ஏற வருகையில், ஒரு யானை கண்ணில் பட்டிருக்கிறது. அவர் சுதாரித்து வண்டியை எடுப்பதற்குள் யானை அவர் அருகே வந்து அவரை தூக்கி வீசிவிட்டது. சம்பவ இடத்திலேயே வனத்துறை அதிகாரியின் உயிர் பிரிந்திருக்கிறது. நடந்த இந்தச் சம்பவம் அனைத்தையும் அந்த வனத்துறை அதிகாரி தன்னுடன் பயணித்த மலையேற்ற குழுவினருக்கு சொல்லியவர். அடுத்ததாக அந்த இரவு முடிந்த அடுத்த நாள் காலை ஆனவுடன், அவரை தூக்கி வீசிய அந்த யானை தன்னுடைய தவற்றை உணர்ந்து, தான் தூக்கி வீசிய அந்த முகட்டுக்கு வந்து அழுதபடியே உட்கார்ந்திருக்கிறது. இது தான் யானையின் உயரிய பண்பு, இந்த யானை குறைந்தது ஒரு வாரத்திற்கு இந்த இடத்தை விட்டு நகராது, உணவு எதனையும் உட்கொள்ளாது. அப்படியே அழுதபடி குறைந்தது ஐந்து நாட்களில் இருந்து ஒரு வாரம் வரை அமர்ந்திருக்கும். என்ன செய்தாலும் அந்த இடத்தை விட்டு போகாது எனச் சொல்லியிருக்கிறார்.

இதனை கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அவ்வளவு பெரிய உருவம், ஒரு காட்டின் முகட்டில் அமர்ந்து தான் செய்த தவறிற்காக அழுவதை கற்பனை செய்து பார்த்தேன், ஒரு நிமிடம் கண்கள் அப்படியே கலங்கிவிட்டது. இப்படியான கானுயிர்களை தான் நாம் மனிதனுடன் ஒப்பிட்டு விலங்கை போல் நடந்து கொள்ளாதே என உவமையளவில் அந்த கானுயிரை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். சரி இப்பொழுது இரண்டாவது சம்பவம். இதே போல் மற்றோரு முறை வேறு ஒரு மலையற்ற நண்பர் குழுவுடன் என்னுடைய நண்பன், வேறு ஒரு காட்டுக்குள் பயணிக்கையில், அன்று அந்த குழுவுக்கு வழிகாட்டியாக வந்த வனத்துறை அதிகாரி சொன்னது. அந்த காட்டில் அதற்கு முன்பு வரை புலி இனம் கிடையாது. புலி இனத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக, அந்தக் காட்டிற்குள் ஒரு ஆண் புலி மற்றும் ஒரு பெண் புலியை, இந்தியாவின் வேறு ஒரு பகுதியின் காட்டிலிருந்து இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். அப்படியே அந்த புலிக்கு உணவாக பத்து மாடுகளையும் காட்டிற்குள் விட்டிருக்கிறார்கள். அப்படி விடப்பட்ட புலிகளையும், மாடுகளையும் தொடர்ச்சியாக கண்காணித்து கொண்டே இருந்திருக்கிறார்கள். அப்படி கண்காணிக்கையில் இரண்டு புலிகளும் மாதம் ஒரு மாட்டை மட்டுமே தங்கள் உணவுக்காக எடுத்துக் கொண்டிருக்கின்றன. அது எப்படி என அந்த அதிகாரியிடம் கேட்ட மலையேற்ற குழுவுக்கு கிடைத்த பதில் தான் இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம். புலி மாதத்திற்கு ஒரு மாட்டை மட்டுமே இரையாக்கி கொள்ள முக்கியமான காரணம். காட்டுக்குள் விடப்பட்ட புலி தன்னுடைய வளர்ச்சிக்கு, தனக்கு இரையாகும் மாட்டினத்தின் வளர்ச்சி எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறது. அதனாலேயே மாட்டினுடைய வளர்ச்சியின் சமநிலையை பொறுத்தே தன்னுடைய இரையின் தேவையை அமைத்துக் கொண்டிருக்கிறது. நாம் வெளியில் இருந்து பார்த்து அனுமானிப்பது போல் அல்ல காட்டு விலங்குகள். மற்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் விலங்கிலிருந்து, மரம் செடிக்களை உண்ணும் விலங்குகள் வரை, அனைத்து விலங்குகளுமே எதோ ஒரு வகையில், அதனதன் உணவுக்கான தேவையின் அடிப்படையில், இயற்கையின் சமநிலையை கவனித்தபடி தான் இருக்கும். அதற்கு ஏற்ப தன்னுடைய தகவமைப்பை மாற்றிக் கொள்ளும் எனச் சொல்லியிருக்கிறார். மீண்டும் ஒரு முறை முன்னர் கூறியது தான் இப்படியான உன்னத பண்புகளை கொண்டுள்ள விலங்கினங்களை தான் நாம் மனிதனோடு ஒப்பிட்டு சிறுமைபடுத்துக்கிறோம். உண்மையில் யார் விலங்குகள்!?.

மேலே சொன்ன இரண்டு சம்பவங்களோடு சமகாலத்தில் நடக்கும் சில சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். சில வாரங்களுக்கும் முன்னர் வீட்டில் திடீரென மதிய உணவை வெளியில் வாங்கிச் சாப்பிடலாம் என முடிவாகியது. எல்லோரும் வெளியில் போக வேண்டாம். உணவை வாங்கி வந்து விடலாம் என வெளியில் உணவு வாங்க ஒரு பிரபலமான உணவகத்திற்கு சென்றிருந்தேன். மூன்றிலிருந்து நான்கு பேருக்கு தேவையான உணவுகளை பைகளில் பொதித்து பொட்டலமாக வாங்கி வந்தாகிவிட்டது. அனைவரும் அமர்ந்து சாப்பிட்டாகி விட்டது. உணவு பொதித்துக் கொண்டு வந்து பைகளை குப்பையில் போட செல்லும் போது தான், சாப்பிட்ட உணவை எதில் பொதித்து பொட்டலமாக கொடுத்திருக்கிறார்கள் என்பதன் மீதான கவனமே திரும்பியது. அனைத்து பொட்டலங்களுமே முழுக்க, முழுக்க நெகிழியினால் செய்யப்பட்ட பெட்டிகள். சிறியது, பெரியது என ஒரு ஏழு எட்டுப் பெட்டிகளில் அடைத்து கொடுத்திருந்தார்கள். அந்தப் பொதிகளை தூக்கி குப்பையில் வீசுகையில் தான் அதனை கவனித்தேன். அப்பொழுது தான் ஒரு விஷயம் மனதினுள் தோன்றி ஒரு ஆழமான வலியை கிளறியது. இன்றைய காலகட்டத்தில் வழிப்பாட்டு தளங்களில் நடத்தப்படும் சொற்பொழிவுகளில் இருந்து (அது எந்த மதம் சார்ந்த வழிபாட்டு தளமாக இருந்தாலும் சரி), அது போக பல விதமான பயிலரங்களிலும், பயிற்சி வகுப்புகளிலும் தவறாமல் இடம்பிடிக்கும் முக்கியமான விஷயம் நன்றி செலுத்துதல். அப்படி நன்றி செலுத்துதல் பட்டியலில் இடம்பெறும் முக்கியமான விஷயங்களில் இயற்கையும் ஒன்று, நாம் அனைவரும் உயிர்வாழ தேவையான விஷயங்களை நமக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் இயற்கைக்கு நன்றி எனச் சொல்லாமல் எந்த ஒரு குழு கூட்டமும் பெரும்பாலும் நிறைவடைவதில்லை. ஆனால் நாம் உண்மையில் இயற்கைக்கு நன்றியுடைவர்களாக இருக்கிறோமா என்கிற கேள்வியை, நம்மை நோக்கி நாமே ஆயிரம் முறையேனும் எழுப்ப வேண்டியது மிக முக்கியமானது என நினைக்கிறேன். மேலே குறிப்பிட்டிருந்த குப்பையில் கொண்டு போய் நெகிழிபைகளை வீசுகையில் அந்த நன்றி சொன்ன நிமிடம் தான் மனதினுள் வந்து போனது. அந்த நிமிடம் அந்தக் குப்பையில் விழுந்த நெகிழிப்பை அப்படியே முகத்தில் ஓங்கி அறைந்தது. அந்த நிமிடம் மேலே உள்ள இரண்டு சம்பவங்களில் குறிப்பிட்டிருக்கும் கானுயிரியின் பண்புகளுடன் ஒப்பிட்டால், நாமெல்லாம் ஒரு சாதாரணமான நெகிழிபைகளை பயன்படுத்தும் விஷயத்தில் கூட மாறமுடியவில்லயெனில், நாம் எப்படி இயற்கையின் சமநிலையை பற்றி கொஞ்சத்திற்கு கொஞ்சமேனும் யோசிப்போம். ஆனால் நாம் போய்யா, இயற்கையாவது, சமநிலையாவது, வெங்காயமாவது என்கிற மனநிலையில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறோம். அப்படியான வெங்காய மனநிலை, இந்த இயற்கைக்கு எதிரான நம்முடைய அயோக்கியதனமெனில் வேறொன்றுமில்லை. அன்று இரவே மீண்டும் சூழல் காரணமாக மறுபடியும் இரவு உணவை வெளியில் வாங்க வேண்டிய கட்டாயம், இம்முறை யோசிக்காமல் வீட்டிலிருந்து துணிப்பையையும், பாத்திரங்களையும் எடுத்த பிறகே கிளம்பினேன். இனிமேல் எப்பொழுதும் உணவையோ அல்லது வேறு எதையுமோ வெளியே வாங்க வேண்டி வந்தால் கண்டிப்பாக துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்துவது என முடிவெடுத்து, மடிகணினி வைத்திருக்கும் பைக்குள் துணிப்பைகளை எப்பொழுதும் வைத்தபடியே தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சில சமயங்களில் அலட்சியம் காரணமாக நிராயுதபாணியாக சென்றுவிட வேண்டி வந்துவிடுகிறது. அந்த அலட்சியத்தில் இருந்து முதலில் விடுபட வேண்டும். அதனைத் தாண்டி இந்த இயற்கையை நேசிக்கிறேன், எனக்கு இயற்கை என்றால் மிகவும் பிடிக்கும், இயற்கையான இடங்களுக்கு பயணப்படுவது என்னுடய கனவு, இயற்கைக்கு நன்றி சொல்லாமல் என்னுடைய நாள் நிறைவடைந்ததே இல்லை, என்னுடைய வீட்டை இயற்கையான மரங்களுக்கு இடையில் அமைக்க வேண்டும் என்பது போன்ற வார்த்தை வியாக்கியானங்களையும், மதிப்பீடுகளையும் எல்லாம் தூக்கி தூரமாக கிடாசிவிட்டு, உண்மையில் செயலில் அதனை எந்த அளவில் நாம் கடைப்பிடிக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் சீர்தூக்கிப் பார்த்தாலே நாம் இயற்கைக்கு நன்றி செலுத்துவதின் லட்சணம் பல்லிளித்துவிடும். மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916