பலகீனமாக்கும் கண நேரத்தைக் கடத்தல்…
திரைத்துறைக்குள் பணிபுரிந்த காலங்களில் தொடர்ச்சியாக திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பது, ஏதோ தினசரி ஆற்ற வேண்டிய தவிர்க்கவேக் கூடாத மிக முக்கியமான கடமைகளுள் ஒன்றாக இருந்தது. இன்றும் அப்படியான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனால் என்ன மாதிரியான சாதகங்களும், பாதகங்களும் இருக்கின்றன என்பதைப் பற்றி நிறையவே எழுதலாம். ஆனால் இது அதனைப் பற்றி அல்ல. அப்படி திரைப்படங்களை பெரும் கடமையாக பார்த்து தள்ளி கொண்டிருந்த காலங்களில், சில திரைப்படங்களில் இடம் பெற்ற காட்சிகள் மறக்கவே முடியாத காட்சிகளாக, அதுவும் இயல்பான வாழ்வில் பல நேரங்களில் திரைப்படத்தில் பார்த்த அப்படியான காட்சிகளுடன் ஒப்பிடக்கூடிய பல சம்பவங்கள் ஒத்துப் போவதை கவனித்திருக்கிறேன். அப்படி ஒரு காட்சியைத் தான் இப்பொழுது எழுத வேண்டும் எனத் தோன்றியது. 1999ல் வெளியான Pushing tin என்கிற ஆங்கில திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி தான் அது. முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இந்தத் திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்ற திரைப்படம் எல்லாம் இல்லை. ஆனாலும் கலந்துரையாடல்களில் மேற்கோள் காட்டுவதற்காகவே சில நேரங்களில் திரைப்படங்கள் பார்க்க வேண்டியது இருக்கும். இந்த மேற்கோளும் தனிக்கதை அதைப் பற்றியும் தனியாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம். அப்படி மேற்கோளுக்காக பார்க்கப்பட்ட திரைப்படம் தான் மேலே குறிப்பிடிருந்தது. இந்தப் படம் காலம், காலமாக ஒரே துறையில் பணிப்புரியும் இருவருக்கிடையே நடக்கும் யார் பெரிய ஆள் என்கிற பின்னனியில் நகரும் கதை களத்தை கொண்டது, அப்படியான களத்தில் இருவருக்கும் இடையில் நடக்கும் போட்டியில் ஒருவரை ஒருவர் தங்களை தாங்களே பெரிய ஆட்களாக நிறுவ எந்த எல்லை வரைப் போவார்கள் என்பதை பல காட்சிகளின் வழியே திரைப்படத்தில் வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.
திரைப்படத்தின் பிரதான கதை களன் நடைப்பெறும் இடம் வானில் பறக்கும் விமானங்களுக்கான பாதையில் எதிரில் வரும் விமானங்களைப் பற்றி விமான ஓட்டிகளுக்கு சொல்லி வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறையின் முக்கியமான பொறுப்பில் இருக்கும், திரைப்படத்தின் பிரதான நாயகனுக்கும், அங்கே புதிதாக பணிக்குச் சேரும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்துக்கும் நடக்கும் யார் இங்கே நாட்டாமை என்கிற போட்டி தான் கதை. கதை களனைப் பற்றி எளியதாக புரிந்து கொள்ள வேண்டுமெனில், இங்கே நம் ஊரில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் உட்கார்ந்து கொண்டு அங்காங்கே நிறுவப்பட்டுள்ள ஒளிப்பதிவு கருவிகளின் வழியே போக்குவரத்தை ஒழுங்கு படுத்துகிறார்கள் இல்லையா, அப்படி வானத்தில் நடைப்பெறும் விமான போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி ஒன்றோடு ஒன்று மோதல் ஏற்படாமல் தடுக்கும் கட்டுப்பாட்டு அறை தான் கதை நடைபெறும் முக்கியமான களன். இந்தக் கட்டுப்பாட்டு அறையில் பிரதான நாயகன் பல இக்கட்டான தருணங்களில் அதாவது ஒரு விமானம் வரும் பாதையில் இன்னொரு விமானமும் வந்து விட்ட இக்கட்டான தருணங்களில் அதன் மோதலை மிகச் சிறப்பாக தவிர்த்து அந்தச் சூழலை மிகச் சிறப்பாக கையாண்டு இருப்பான். அதனால் அந்த அலுவலகத்தில் அவனுக்கென்று தனி மதிப்பீடு எல்லோர் மத்தியிலும் உருவாகியிருக்கும், இப்படிப்பட்ட நிலையில் புதியதாக ஒருவன் அந்த அலுவலகத்தில் பணியில் இணைகிறான், அப்படி புதியதாக வருபவனைப் பற்றி அவன் அந்த அலுலவலகத்தில் பணியில் சேர்வதற்கு முன்பாகவே, அவன் ஏற்கனவே பணிபுரிந்த அலுவலகத்தில் அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தான் என்பதை அவன் பணிக்கு சேரும் புதிய அலுவலகத்தில் அதாவது பிரதான நாயகன் பணிபுரியும் அலுவலகத்தில் வேலைப் பார்பவர்கள் சிலாகித்து பேசி கொண்டிருப்பார்கள், அப்பவே பிரதான நாயகன் வருபவனை எப்படியாவது நாம் முந்த வேண்டும், அவனை எப்படியெனும் அசிங்க படுத்திவிட வேண்டும் என முடிவு செய்துவிடுவான்.
இப்படி போய்க் கொண்டிருக்கும் ஆட்டத்தில், ஒரு சந்தர்பத்தில் அந்த அலுவலகத்தில் வேலையில் உள்ள அனைவரும் சேர்ந்து ஒரு கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள். அந்த கொண்டாட்டத்தில் பிரதான நாயகனும் இருப்பான். கொண்டாட்டம் நடக்கும் இடத்தில் ஒரு சிறிய கூடை பந்து மைதானம் இருக்கும். இந்த சூழலில் தன்னுடன் வேலை செய்யும் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்ப அங்கிருக்கும் கூடைப்பந்தாட்ட பந்தை எடுத்து அங்கிருக்கும் உயரமான கூடை வலைக்குள் போட்டு கொண்டே இருப்பான். அவனைச் சுற்றி அவனுடன் பணிபுரியும் நண்பர்கள் அனைவரும் அவனை கூடைக்குள் ஓவ்வொரு முறை சரியாக போடும் போதும் பெரும் ஆரவாரத்துடன் 1,2,3 என எண்ணி கொண்டிருப்பார்கள். அங்கே யாருமே அத்தனை முறை சரியாக கூடையினுள் போடவே முடியாத ஒரு எண்ணிக்கைக்கு அது போய்விடும். அப்பொழுது அவன் எல்லோரையும் பார்த்து சிரித்து விட்டு அந்த மைதானதுக்கு அருகில் ஏற்பாடு செய்யப்படிருக்கும் மதுகூடத்திற்கு போய்விடுவான். அவன் மது அருந்திக் கொண்டிருக்கையில் வெளியில் ஆரவாரம் கேட்க ஆரம்பிக்கும், அவன் கூடைக்குள் பந்தை போடுகையில் எப்படி சுற்றி நின்று சக பணியாளர்கள் 1,2,3 என எண்ணி ஆரவாரம் செய்தார்களோ அப்படியான ஆரவாரம் கேட்கும், பிரதான நாயகனுக்கு புரிந்துவிடும் புதியதாக வேலைக்கு வந்தவன் கொண்ட்டாடத்தில் நுழைந்து தன் வேலை காட்டிக்கொண்டிருக்கிறான் என்று. அப்பொழுது பிரதான நாயகன் கூடைக்குள் சரியாக எத்தனை முறை செலுத்தினானோ அதனையெல்லாம் புதியதாக வந்தவன் சர்வ அலட்சியமாக கடந்து போய் கொண்டே இருப்பான். பிரதான நாயகனுக்கு இப்பொழுது என்ன செய்வதென தெரியாது. புதியதாக வந்தவன் பந்தை போட்டு முடித்ததும் கொண்டாட்டத்தில் இருந்து கிளம்பிச் செல்ல, அப்படி அவன் கிளம்பி செல்லும் போது அவன் குறிப்பிட்ட தூரம் வரை கடந்து செல்வதற்காக காத்துகொண்டிருதவன் போல், அங்கிருக்கும் கூடை பந்தை எடுத்து புதியதாக வந்தவனை நோக்கி நாயகன் எறிய, அதை அவன் பிடித்து விடுவான். இப்பொழுது நம்முடைய நாயகன் புதியதாக வந்தவனிடம், இப்ப நீ நிற்கும் இடத்தில் இருந்து இந்த கூடைக்குள் பந்தை போடு எனச் சொல்வான். அங்கே நின்று கொண்டிருக்கும் அனைத்து பணியாளர்களும் நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது புதியதாக வந்தவன் தூரத்தில் இருக்கும் கூடையை நோக்கிப் பந்தை வீச, பந்து கூடைக்குள் விழாமல் தவறிவிடும். இப்பொழுது நாயகனுக்கு ஒரே குதூகலம், பந்து தவறியதும் புதியதாக வந்தவன் நமது நாயகனை பார்த்து இப்படிச் சொல்வான். உன்னால் இங்கிருந்து இந்த பந்தை கூடைக்குள் போட முடியுமா எனத் தெரியாது. ஆனாலும் வெகு சாமார்த்தியமாக என்னை வீழ்த்தி விட்டாய் எனச் சொல்லிவிட்டு போவான். நம்முடைய நடைமுறை வாழ்விலும் பல சந்தர்பங்களிலும் இப்படி நம்மை பலகீனமாக்கும் கணங்களை பல்வேறு தருணங்களில் பலர் நமக்கு பரிசளித்துக் கொண்டே இருப்பார்கள். அது போன்ற நேரங்களில், அப்படியான கணங்களை எப்படி புத்திசாலித்தனமாக கடக்கிறோம் என்பதை வைத்துத் தான் பல நேரங்களில் நம்மைப் பற்றிய பிம்பம் இங்கே கட்டமைக்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் நம் கைகளில் கொடுக்கப்பட்ட பந்தை எப்படியாவது கூடைக்குள் எறிந்து விடலாம் என நினைக்கிறோம். ஆனால் நம்முடைய ஆழ்மனதிற்கு தெரியும் எறிய முடியாது என, ஆனால் நம்மைச் சுற்றி இருக்கும் பார்வைகளின் அழுத்தம் காரணமாகவே எறிய முடியாது எனத் தெரிந்தும் பந்தை எறிந்துவிட்டு கூடைக்குள் விழாத பந்தை பார்த்தபடி அடுத்து என்ன செய்வதென தெரியாமலேயே முழித்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதே நேரம் பந்தை நம்மிடம் கொடுத்தவனிடமே நீ ஒரு முறை செய் அதனைப் பார்த்து செய்து விடுகிறேன் எனச் சொல்லிப்பாருங்கள். பந்தை நம்மிடம் கொடுத்தவனின் லட்சணம் பல்லிளித்து விடும். ஆனால் அப்படியான மனநிலைக்குச் செல்ல வேண்டும் எனில், பந்து நம் கையில் இருக்கையில் நம்மைச் சுற்றி இருக்கும் பார்வைகள் கொடுக்கும் அழுத்தத்தை முற்றிலுமாக புறக்கணித்துப் பழக வேண்டும். இல்லையெனில் கடைசி வரை தவறிய பந்தை பரிதாபமாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916