வாழ்ந்து பார்த்த தருணம்…106

உதாசீனப்படுத்தப்படும் அக அழகின் வலியிலிருந்து வெளிப்படும் கூக்குரலின் பாடல்…

இன்று தொலைக்காட்சி இல்லாத வீடுகள் என்பதே இல்லை. தொலைக்காட்சி என்ற ஒன்று இந்த சமூகத்துக்குள் வருவதற்கு முன்னால் கூட நம்மிடையே ஒரு மிக மோசமானப் பழக்கம் இருந்தது. ஆனால் அன்றையப் பொழுது அது குறைவாக இருந்தது. அது என்ன பழக்கமெனில் நாம் காணும் ஒருவரை அவருடைய உருவத்தை, நிறத்தை, முகத்தை வைத்து மதிப்பீடு செய்வது. தொலைக்காட்சி என்ற ஒன்று வந்து அதனுள் விளம்பரங்கள் என்பது பிரதானமான பிறகு, நம்முடைய மூளைக்குள் செலுத்தப்படும் எதிர்மறை விஷயங்களுக்கு குறைவே இல்லை. அதில் மிக, மிக மோசமானதும், அயோக்கியதனமானதும் எது எனில், உங்களின் முகம் கருமையாக பொலிவிழந்து இருக்கிறதா, உங்களின் உடல் மோசமான உணவு பழக்கத்தால் பருமனாக இருக்கிறதா என்பது போன்ற பல தரப்பட்ட எதிர்மறை வார்த்தைகளின் மீது தான் இந்த விளம்பரங்களையேக் கட்டமைக்கிறார்கள் என்பது தான், மேலே சொல்லியிருக்கும் இரண்டு வார்த்தைகளின் அமைப்பைப் பார்த்தால், கருப்பு என்பதே பொலிவிழந்தது என்பதாகவும், உடல் பருமனாக இருப்பவர் மோசமான உணவு பழக்கத்தோடு தான் இருப்பார் என்பதாகவும் மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு விடுகிறது. இதனை நம்முடைய வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிகளின் வழியே தினசரி ஒரு முறை, இரு முறை அல்ல கணக்கிலடாங்க முறை, 24 மணி நேரமும் நம்முடைய மூளைக்குள்ளும், காதுக்களுக்கும் செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டபடியே தான் நாம் நமது வீட்டுக்குள் உலவிக் கொண்டிருக்கிறோம். அப்படியானால் நாம் வீட்டிலிருந்து வெளியில் செல்கையிலோ அல்லது நம்மை தேடி ஒருவர் வீட்டிற்கு வருகையிலோ, அந்த நபர் கருப்பாகவோ அல்லது உடல் பருமனாகவோ இருந்தால் எந்தக் கண்ணோட்டத்தில் அவரைப் பார்ப்போம். கண்டிப்பாக, உறுதியாக நேர்மைமறை சிந்தனையோடு அல்ல, இப்படி தன்னுடைய வெளிப்புற தோற்றத்தால் புறக்கணிக்கப்படும் ஒருவனின் வழி எப்படியானதாக இருக்கும், அப்படி உருவான வலியில் இருந்து ஒரு பாடல் தொடங்கினால், அந்தப் பாடல் எப்பேர்ப்பட்ட வலியுடன் இருக்கும். அப்படியானப் பாடல் தான் நான் விரும்பும் அனைத்தும் (All I want) என்று தொடங்கும் அந்தப் பாடல்.

இந்தப் பாடலின் முதல் நான்கு வரி இருக்கிறது இல்லையா?. அது நம்முடைய ஆழ்மனதினுள் கடத்தும் வலி இருக்கிறதே, அதனை உணர்ந்தால், நாம் சக மனிதன் மீது வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் மதிப்பீட்டின் மீது மிகப் பெரும் கோபம் வரும். வலி மிகுந்த அந்த நான்கு வரிகள்
நான் விரும்புவது வேறு ஒன்றும் இல்லை
நீங்கள் என் கதவைத் தட்டுவதைக் கேட்க
‘உங்கள் முகத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க முடிந்தால், காரணம்
நான் உறுதியாக ஒரு மகிழ்ச்சியான மனிதனாக இறக்க முடியும்

தன்னுடைய உருவத்தால் புறக்கணிக்கப்படும் ஒருவனின் வலியை இதை விட வலி மிகுந்த வார்த்தைகளல் சொல்ல முடியாது. அதுவும் இந்தப் பாடலை பாடியிருக்கும் விதம் ஒன்று இருக்கிறதே, அது தான் மிக, மிக உன்னதமானது. உண்மையில் இசை என்பது இந்தச் சமூகம் ஆணித்தரமாக நம்பி கடைப்பிடிக்கும் எல்லாவிதமான மத கோட்பாடுகளிலும் மிக, மிக முக்கியமான இடத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறது. ஆனால் நாம் தான் அப்படியான இசையைத் தேடி கேட்பதையும், அதற்குள் கரைந்து போவதையும் அலட்சியப்படுத்திக் கொண்டே இருக்கிறோம், எத்தனை எத்தனை இசை கோர்வைகள் இன்றைக்கு இணையதிற்குள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் நாம் உண்மையில் ஒரு அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு, ஒரு நாளின் எவ்வளவு நேரத்தை அதற்காக காவு கொடுக்கிறோம். அப்படியாக காவு கொடுக்கப்படும் நேரத்தில் ஒரு உருப்படியான உன்னதமான இசையை தேடி கண்டைந்து, அதன்பின் கண்டைந்த இசையை கேட்பதற்கு ஒரு பத்து நிமிடங்கள் ஒதுக்கி அதற்கான மனநிலையோடு கேட்கிறோமா என்கிற கேள்வியை உங்களின் ஆழ்மனதிடம் கேளுங்கள். அப்படி உங்களால் கேட்க முடியும் எனில் கண்டிப்பாக உங்களை சுற்றியுள்ள எதன் மீதும் உங்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் உருவாகாது. இப்படியானப் பாடலை கேட்கையில் உங்களுக்குள் ஒரு வித வலி தோன்றி கண்கள் ஈரமாகும் இல்லையா, அது தான் உங்களின் ஆன்மா, ஆனால் இங்கே அழுகை என்பதே கோழைத்தனம் என்றான பிறகு என்னத்த சொல்வது. அழுகையைப் பற்றி, அதன் உளவியலைப் பற்றி கண்டிப்பாக தனியாக ஒரு கட்டுரையில் பேசலாம்.

ஏற்கனவே இந்தப் பாடலைப் பற்றி என்னுடைய 32வது பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இருந்தாலும் இன்னொரு முறை கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும் எனத் தோன்றியதால், அதுவும் போக இப்பொழுது தொடர்ச்சியாக இசையை பற்றியதான கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன், இப்படியான மனநிலையில் இந்தப் பாடலை பற்றியும் எழுதினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது, இந்த பாடல் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2015 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச குரல் தேடல் மேடையில், Stevie McCrorie என்பவரால் பாடப்பட, அதன் மூலம் எனக்கு அறிமுகமான பாடல் தான் (All I want) என்று தொடங்கும் இந்தப் பாடல். சும்மா சொல்லக் கூடாது அந்தக் குரல் தேடல் மேடையில் Stevie McCrorie இந்தப் பாடல் வெளிப்படுத்தும் வலியை தன்னுடைய குரலில் ஏற்றி மிக மிக சிறப்பாக பாடியிருந்தார். அதனால் தான் Stevie McCrorie குரல் தேடல் மேடையின் காணொளியே மூன்று கோடி பார்வையாளர்களை நெருங்கியிருக்கிறது. இந்தப் பாடலை உருவாக்கியவர்கள் Kodaline என்ற Ireland நாட்டின் ராக் பேண்ட் இசைக்குழு என்பது பின்னர் தேடிப்பிடித்து படிக்கும் போது தெரிந்தது கொண்டது. இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் இசை கோர்வையின் காணொளி மிக மிக சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தன்னுடைய தோன்றத்தினால் புறக்கணிக்கப்படும் பிரதான பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் Stevie Russellலின் உடல்மொழி அற்புதமாக அந்த வலியை வெளிப்படுத்தியிருக்கும். அசலான பாடலின் காணொளியும் பதினைந்து கோடி பார்வையாளர்களை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. 2015ல் நடந்த அந்தக் குரல் தேடல் மேடையின் காணொளி மற்றும் All I want என்கிற பாடலின் அசலான காணொளி தொகுப்பையும் தேடிப் பாருங்கள். எப்பொழுதும் சொல்வது தான் முடிந்த வரை இந்தப் பாடலின் வரிகளை இணைத்தில் தேடி படித்துவிட்டு பாடலுக்குள் கரைந்து போவது நலம். மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916