நாடி நரம்புகளுக்குள் நங்கூரமாய் நுழைந்து தெறிக்கவிட்ட நலமான வார்த்தைகள்…
இரண்டு வாரமாக எழுதவில்லை. காரணம் உடல் நலன் சிறப்பானதாக இல்லை. ஆனாலும் பயம்படும்படியாய் எல்லாம் ஒன்றுமே இல்லை. சற்று ஓய்வு அவ்வளவே. இன்றைய சூழலில் இதனைப் பொது வெளியில் சொல்லக் கூட கூச்சப்படும்படியாக தான், இன்றைக்கான நிலைமை இருப்பதை யோசித்தால் மிகுந்த கவலையாய் இருக்கிறது. காரணம் சிலத் திரைப்படங்கள் வெளிவரும் முன்பு செய்யப்படும் அதீத விளம்பர வியாக்கியானங்களை கவனித்தால் தெரியும். அப்படி அதீதமாய் விளம்பரப்படுத்தப்பட்ட அந்தத் திரைப்படம் வெளியான பின் எங்கு யாரை பார்த்தாலும், நாம் கேட்கும் முதல் கேள்வியே அந்தத் திரைப்படத்தை பார்த்தீர்களா என்பதாகத் தான் இருக்கும். நலமாக இருக்கிறீர்களா என்று கேட்பதே மேலே சொன்ன கேள்விக்கு அப்புறம் தான் கேட்கப்படும், இப்படியான கேள்வியின் வழியே அந்தத் திரைப்படத்தை எப்படியெனினும் பார்த்துவிட்டு தான் மறுவேலையே பார்க்கவேண்டும் என்பதான அழுத்தத்தை, நம்மை சுற்றியுள்ள இந்தச் சமூகமே நம்மிடம் தினம் தினம் கொடுத்துக் கொண்டே இருக்கும். இன்றைய விளம்பர உலகின் சாபக்கேடு அப்படியானது. இந்த இடத்தில் இருந்து தான் இன்றைய சூழலையும் பார்க்கிறேன். மேலே சொல்லியிருக்கும் அதீதமான திரைப்பட விளம்பரத்துக்கு கொஞ்சமும் சளைக்காதது தான், இன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கும் மற்றும் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழல். கண்முன்னே மிக, மிக மோசமாய் இந்தச் சமூகம் அப்படியாக கட்டமைப்படும் சூழலுக்குள் சிக்கி கொஞ்சம், கொஞ்சமாய் பலியாகி கொண்டிருப்பது வேதனை. வாழ்வில் முதல் முறையாக பல நாட்களாக இறப்பை மட்டுமே பிரதான செய்தியாக முன்னிறுத்தப்படும் மிக, மிகக் கேவலமான சூழலில் இருந்து கொண்டு, அதனை உணர்ந்து தவிர்க்காமல், நாமும் நம் வீட்டின் பிரதான அறையில் அமர்ந்து அதனைக் காணொளி செய்தியாகவோ, பத்திரிக்கை செய்தியாகவோ அல்லது அலைபேசி பகிர்தலின் வழியாகவோ அல்லது இணைய வெளியிலோ தினம், தினம் கேட்டோ, பார்த்தோ, படித்துக் கொண்டோ இருக்கிறோம். கண்டிப்பாக இன்றைக்கு நடப்பதை பார்த்தால் போர் சூழல் கூட மனிதனை இவ்வளவு நம்பிக்கையற்று பயமுறுத்துமா எனத் தெரியவில்லை. இன்றைய சூழலில் இப்படியான செய்திகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு, அதனைத் தாண்டி நமக்குச் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன அதில் கொஞ்சம் கவனம் செலுத்துதல் நலம். இல்லா விட்டால் நம்முடைய உடலும், மனமும் கண்டிப்பாக நம்முடைய சொல் பேச்சைக் கேட்காது.
இப்படியான சூழலில் உடல் நலம் சீராகும் வரை கொஞ்சம் ஓய்வாய் இருந்து விட்டு, மீண்டும் இசைக்குள் முழ்கி திளைக்க இணையத்திற்குள் உலவிக் கொண்டிருக்கையில், தற்போழுதைய சூழலின் இறுக்கத்தை நொறுக்கும் பாடல் ஒன்று, ஒரு அட்டகாசமான குரல் தேடல் மேடையை தெறிக்கவிட்டது. அந்த மேடையில் பாடலை அவள் பாட ஆரம்பித்த 8வது 9வது 10வது நொடிகளில் விருப்பக்குறியை தாங்கி நிற்கும் நடுவர்களின் சுழல் நாற்காலிகள் அவளை நோக்கி திரும்பி விட்டன. அதன் பின் அந்த மேடையே அவள் வசம் தான். சும்மா அதிர விட்டார் அந்த மேடையை என்று சொல்வதெல்லாம் சும்மா. அப்படியான இந்தப் பாடல் பாடப்படுவதற்கு முன்னர் ஒரு அட்டகாசமான மெல்லிய லயத்தில் உச்சரிக்கப்படும் வரிகளை, பாடலின் கூற்று அல்லது வாக்குமூலம் என வைத்துக் கொள்ளலாம். அப்படியான கூற்றை சொல்லிய பின் தான் பாடலே பாடப்படத் துவங்கும். அந்தக் கூற்றை அவள் சொல்லி முடிக்கும் சரியாக 52வது நொடியிலிருந்து அவள் பாடத்தொடங்கிய பிறகு தான் பின்னால் இசை தொடங்கி ஒலிக்க ஆரம்பிக்கும். அந்த நொடியில் இருந்து ஆரம்பமாகும் அந்த இசை சும்மா ஜிவ்வென நம்முடைய நாடி நரம்புக்குள் ஏற ஆரம்பிக்கும் பாருங்கள் செம்மம. அந்த இசை தரும் உற்சாகம் அலாதியானது. அப்படி சரியாக 52வது நொடியில் அவள் கூற்றை முடித்து விட்டு பாடத்தொடங்கும் முதல்புள்ளியில், நீங்கள் பார்க்கும் திரையின் வலது ஓரத்தில் இருக்கும் ஒரு பெண் நடுவரின் முகப்பாவணைகளை கவனிக்க தவறாதீர்கள். அது தான் இந்தப் பாடலை அவள் எப்படி இந்த மேடையில் தெறிக்கவிட போகிறாள் என்பதற்கான அத்தாட்சியே. இதையெல்லாம் விட முத்தாய்ப்பாக சரியாக 1:58லிருந்து 2:20க்குள் இந்த பாடலை அவள் முடிக்கும் போது நான் நன்றாக உணர்கிறேன் என்கிற இந்த பாடலின் பிரதான வார்த்தையை அவள் கையாண்ட விதம் ஒன்று இருக்கிறது இல்லையா. அது தான் வாய்ப்பேயில்லை சும்மா தெறி. இந்தப் பாடல் பாடப்பட்ட குரல் மேடை, பெரு நாட்டில் 2019 ஜனவரியில் நடந்த சர்வதேச குரல் தேடல் மேடை. அந்தப் பாடலை பாடிய பெண்ணின் பெயர் Nicole la rosa.
மேலே சொல்லியிருக்கும் பாடலின் அசல் வடிவத்தின் பெயர் Feeling Good. இந்தப் பாடலை பாடியிருப்பவர் Michael Bublé. இவர் கனடா நாட்டை சேர்ந்த பாடகர். பாடலாசிரியர் மற்றும் பாடல் தொகுப்பினை தயாரிக்கும் தயாரிப்பாளரும் கூட. கிட்டத்தட்ட இந்த பாடல் முழுவதுமே, ரகசிய உளவு அமைப்பின் பிரதான நாவல் மற்றும் திரைக்கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தின் பாதிப்பில் தான், இல்லை அந்தக் கதாபாத்திரத்தை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த விஷயம் தான் இந்த பாடலை மிக, மிகத் தனித்துவமாக மாற்றியிருக்கிறது. இந்தப் பாடல் மொத்தமாக படமாக்கப்பட்ட விதமும் சும்மா சொல்லக்கூடாது அட்டகாசம். இந்தப் பாடல் பாடதொடங்குவதற்கு முன்னதாக ஒரு கூற்று ஒன்று மெல்லிய லயத்தில் பாடப்படும் எனச் சொன்னேன் இல்லையா, அதனை கீழே மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். அந்தக் கூற்று இன்றைய இக்கட்டான சூழலுக்கு நடுவில், எப்படியான ஆகச் சிறந்த நம்பிக்கையான வார்த்தைகளாய் எழுதப்பட்டிருக்கிறது என கவனியுங்கள். அந்த கூற்றைப் பாடும் Michael Bublé குரலும் அட்டகாசம். வாழ்வின் ஒட்டு மொத்தமான நம்பிக்கையை நம்மீது கூற்றாக இறக்கி வைத்து விட்டு தான் இந்தப் பாடலே ஒலிக்கத் துவங்கும். மிகப்பெரும் நம்பிக்கையும், உற்சாகத்தையும் கொடுக்கும் இந்தப் பாடலை கேட்கத் தவறாதீர்கள். ஏன் தவற விடக்கூடாது என்பதற்கு 2009 ஆண்டே வெளியான இந்த பாடலின் காணொளியில் கீழே இன்றைக்கு 2020 ஆண்டு எழுதப்பட்டு கொண்டிருக்கும் பின்னூட்டங்களே சாட்சி.
பறவைகள் உயரமாக பறக்கின்றன
நான் எப்படி உணர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்
வானத்தில் சூரியன்
நான் எப்படி உணர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்
வருடி சறுக்கி செல்லும் தென்றல்
நான் எப்படி உணர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்
இது ஒரு புதிய விடியல்
இது ஒரு புதிய நாள்
இது ஒரு புதிய வாழ்க்கை எனக்காக
நான் நன்றாக உணர்கிறேன்
நான் நன்றாக உணர்கிறேன்
இதையெல்லாம் தாண்டி Nicole la rosa அந்த குரல் தேர்வு மேடையில் மிகச் சிறப்பாக தேர்வான பிறகு நடந்த பாடல் போட்டி மேடையில் மீண்டும் ஒரு முறை Michael Bublé – Feeling Good என்கிற இந்த பாடலை பாடியிருக்கும் காணொளியும் இணையத்தில் இருக்கிறது தேடிப்பாருங்கள். மேலே சொன்ன Nicole la rosa முதன் முதலில் பெரு நாட்டின் குரம் தேடல் மேடையில் பாடிய இணைய காணொளியினையும் மற்றும் Michael Bublé – Feeling Good அசலான பாடல் காணொளியினையும் தேடிப் பாருங்கள் தெறிக்கவிடுங்கள். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916