வாழ்ந்து பார்த்த தருணம்…113

என்னத்த…

சம்பவம் ஒன்று : இரண்டு நாளைக்கு முன்பு ஒரு வேலையாக வங்கி வரை போக வேண்டியிருந்தது. என்னுடைய அம்மாவையும் கூடவே கூட்டிச் சென்றிருந்தேன், அவருடைய பெயரில் இருக்கும் வங்கி கணக்கில் தான் ஒரு முக்கியமான வேலை. காலை 10:30க்கு வங்கிக்கு போயாகிவிட்டது. அது தனியார் வங்கி அல்ல, வங்கிக்குப் போனதும், இரு வேறு கணக்குகளில் பணம் செலுத்த வேண்டி இருந்ததால், பணம் கட்டும் ரசீதுகளை எடுத்து நிரப்பிவிட்டு, காசாளருக்கான வரிசையில் போய் நின்றேன். வங்கியினுள் பெரிதான கூட்டமெல்லாம் இல்லை. மொத்தமாக பத்து பேர் இருந்திருப்பார்கள் அவ்வளவே. பத்து பேருக்கு குறைவாக கூட இருந்திருக்கலாம். காசாளரிடம் பணம் செலுத்த வரிசையில் நிற்கையில் எனக்கு முன் ஒரு நடுத்தர வயது பெண்மணி, அவருக்கு முன்னதாக ஒருவர் பணத்தை செலுத்திக் கொண்டிருந்தார். எனக்குப் பின்னால் யாருமில்லை. முதலாமவர் பணம் செலுத்தி முடித்ததும் எனக்கு முன்னால் நின்ற பெண் தன் கையில் வைத்திருந்த தன்னுடைய வங்கி கணக்கு புத்தகத்தில் பண பரிவர்த்தனைகளை அச்சேற்றக் கொடுத்தார். அந்தக் கணக்கு புத்தகத்தை வாங்கி பார்த்த காசாளர் உடனடியாக புத்தகத்தை அந்த பெண்ணிடமே திருப்பிக் கொடுத்து, உங்களுடைய கிளையில் போய் அதனை அச்சில் ஏற்றிக் கொள்ளுங்கள் எனக் கொடுத்துவிட்டார். புத்தகத்தை கையில் வாங்கிய அந்த நடுத்தர வயது பெண்மணி, சத்தமாக அங்கே ரொம்ப கூட்டமாக இருக்கு நிக்கமுடியல, அதனால் தான் இங்கு வருகிறோம், ஏன் இப்படி அலைகழிக்கிறீர்கள் என திட்டிக்கொண்டே போய்விட்டார். அடுத்ததாக என் முறை என்னுடைய கைகளில் இருந்த இரு வேறு கணக்கு ரசிதுகளை தனித்தனியாக பணத்துடன் கொடுத்து பணம் செலுத்திய பிறகு, வங்கியின் கணக்கு புத்தகத்தை அவரிடம் நீட்டினேன், அதனை வாங்கியவர் ஏன்பா நீ பணம் கட்டுனதுல ஒரு கணக்கு இந்த புத்தகத்துல உள்ளது தான, அதோட இந்த புத்தகத்த சேர்த்து குடுக்க மாட்டியா என சலித்துக் கொண்டே அச்சு இயந்திரத்துனுள் புத்தகத்தை செலுத்தினார். மூன்று பக்கங்கள் வரை பணபரிவர்த்தனைகள் அச்சானது, அது முடிந்தவுடன் புத்தகத்தை கையில் எடுத்தவர், மாசா மாசம் வந்து புத்தகத்தை கொடுத்து பதிவு செய், இப்படி ஓரேடியா வந்து கொடுத்தேன்னா எப்படி என திரும்பவும் காசாளரிடம் இருந்து மீண்டும் ஒரு முறை சலிப்பு வெளிப்பட்டது. இதையெல்லாம் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, காசாளருக்கு வாடிகையாளர்களின் வேலையை முடித்த பிறகு செய்ய வேண்டிய அலுவலக வேலைகள் நிறைய இருக்கிறது போல பாவம் என நினைத்துக் கொண்டே, வங்கியின் கணக்கு புத்தகத்தை அவரிடம் இருந்து வாங்கினேன். அந்தப் புத்தகத்தை வாங்கிய மறுநொடி காசாளரை கவனித்தால் அவர் நிதானமாக தன்னுடைய அலைபேசியை எடுத்து நொண்ட ஆரம்பித்திருந்தார். பின்னர் என்னுடைய வங்கியின் வேலைகளை முடித்துவிட்டு கிளம்ப அரைமணி நேரங்களுக்கு மேல் ஆனது. ஆனால் அதன் பின் எந்த ஒரு நபரும் காசாளரிடம் பணம் கட்ட வரவில்லை. கிளம்பும் போது தான் கவனித்தேன் காசாளர் தனது இருக்கையில் இருந்து வெளியே வந்து நல்ல வசதியான, வாகான இடத்தில் அமர்ந்துகொண்டு, சக பணியாளருடன் அரட்டை அடித்தபடி அதே நேரம் தன்னுடைய அலைபேசியினுள் அலைபாய்ந்து கொண்டிருந்தார். வாழ்க வாடிக்கையாளர்கள்.

சம்பவம் இரண்டு : போன மாதத்தில் ஒரு நாள் ஒரு முக்கியமான நண்பர் ஒருவருடன் பல்பொருள் அங்காடி ஒன்றிற்க்கு பொருட்கள் சிலவற்றை வாங்குவதற்காக சென்றிருந்தேன். அந்தப் பல்பொருள் அங்காடியில் பணியில் அமர்ந்தப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலும் பதின்ம வயது பெண்கள். நானும் நண்பரும் சென்றது சில விளையாட்டு பொருட்கள் வாங்க. விளையாட்டு பொருட்கள் விற்பனை பிரிவிற்கு சென்றவுடன் அங்கிருக்கும் ஒரு பதின்ம வயது பெண், வாடிக்கையாளர் வந்திருக்காங்க என்னன்னு பாரு என இன்னொரு பெண்ணை பெயரை சொல்லி அழைத்தார். வந்தவர் சிறு சலிப்புடனே வந்து என்ன சார் வேணும் எனக் கேட்டார். வேண்டியதைச் சொன்னவுடன் ஒன்றை எடுத்து கொடுப்பதற்குள்ளாகவே அடுத்து என்ன வேணும் எனக் கேட்டார். அவர் கேட்ட விதம் இருக்கிறது இல்லையா, அதற்குள் சீக்கரம் சொல்லித் தொல எடுத்துக் கொடுத்துட்டு போகணும் வேறு வேலை இருக்கிறது என்கிற தொனி அப்பட்டமாக வெளிப்பட்டது. அப்பொழுது தான் கவனித்தேன் அவர் எனக்கான பொருட்களை எடுத்துக் கொடுக்க வருவதற்குமுன் எங்கிருந்து வந்தார் எனப் பார்த்தால், கடையின் ஒரு மூலையில் அவருடன் கூட வேலை செய்யும் சக பெண்கள் தங்களின் கைகளில் அலைப்பேசியை வைத்துக்கொண்டு தங்களுக்குள் அரட்டை அடித்து, சிரித்தபடி விளையாடிக் கொண்டிருதார்கள். எங்களுக்கு பொருள் எடுத்துக் கொடுத்தவர் சலிப்புடன் எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தவன், கூட வந்திருந்த நண்பரிடம் பணம் செலுத்தும் இடத்தில் கண்டிப்பாக இந்தக் கடையின் முதலாளியில் ஒருவர் தான் அமர்ந்திருப்பார் அவரிடம் சொல்லலாம் என சொல்லிக்கொண்டே, வாங்கிய பொருட்களுக்கான பணத்தை கட்ட பணத்தை கட்டுமிடம் வந்தால், நினைத்தது போலவே அந்த பல்பொருள் அங்காடியின் முதலாளிகளுள் ஒருவர் தான் பணம் வாங்கும் இடத்தில் அமர்ந்திருந்தார். அவரும் பணிப் பெண்ணிடம் இவங்க வாங்குன பொருட்கள் என்னன்னு சீக்கிரமா சொல்லு எனக் கேட்டு, மொத்த பணத்துக்கான ரசிது கொடுக்கும் இயந்திரத்தை வேகமாக இயக்கி ரசிதை எடுத்தவர், பணம் இவ்வளவு எனச் சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டார். பணம் கட்டியதும், வாங்கிய பொருட்களை கையோடு கொண்டு வந்த பைகளில் வைத்துவிட்டு அவரிடம் பேசலாம் என நிமிர்ந்தால், அந்த முதலாளியின் கைகளிலும் அலைபேசி விளையாட்டு ஆரம்பமாகி இருந்தது. பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர் அங்கிருந்து போய்விட்டாரா இல்லையா என்று கூட நிமிர்ந்து பார்க்க நேரம் இல்லாமல், அலைபேசிக்குள் விளையாட்டில் முழ்கிவிட்டார். பொருட்கள் வாங்கியது முதல் தளம், தரைத்தளம் போய் பேசிக்கொள்ளலாம் என இறங்கினால், கடையின் மொத்த கணக்கையும் பார்க்கும் இடத்தில் கணினியின் முன் அமர்ந்து கொண்டிருந்த மற்றொரு பிரகஸ்பதியின் கைகளிலும் அலைபேசி அசைந்தாடியபடி இருந்தது. அவரையும் வெறுமனே பார்த்துக் கொண்டே என்ன சொல்வதென தெரியாமல் அந்த அங்காடியில் இருந்து நண்பருடன் வெளியேறினேன்.

மேலே சொல்லியிருக்கும் இரண்டு சம்பவங்களும் வெறும் இரண்டு உதாரணங்கள் மட்டுமே. இதனை படித்துக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேருக்கு கண்டிப்பாக இதே போலான பல உன்னதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். இன்றைக்கு, அதுவும் இந்த நுண்ணுயிர் தொற்றுக்கு பிறகான விளைவுகளில் மிக முக்கியமானது இந்த அலைபேசிக்குள் முழ்கிப் போவது. இது ஒரு பக்கம் என்றால், இன்றைக்கு முன்னெடுக்கப்படும் இணைய வழி கல்வி என்பது எப்படியான நிலைக்கு இன்றைய தலைமுறையை கொண்டு போகும் என யோசித்தால் தலைசுற்றுகிறது. இப்படிப்பட்டவர்களை போய் படி எனத் சொன்னால் என்னத்த படிப்பார்கள் சொல்லுங்கள். இந்த லட்சணத்தில், தாய் மொழியில் அதுவும் தமிழில் படிப்பது, எழுதுவதெல்லாம் இனி வளரும் தலைமுறைக்கு எந்தளவு ஈடுபாடானதாக இருக்கும் என தெரியவில்லை. எழுத்தாளர் சாரு அவர்கள் ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பது போல் தான் போல, சுமார் ஐம்பது வருடங்களுக்கு அப்புறம் தமிழ் செத்துவிடும். அன்றைய காலகட்டத்தில் தமிழ் என்பது இலக்கியத்தில் மட்டுமே மிஞ்சியிருக்கும் எனச் சொல்லியிருந்தார். அதுவும் போக தமிழ் சீரழிந்து போனதற்கு வணிக எழுத்தும் முக்கியமான காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். முற்றிலும் உண்மை. யோசித்துப் பார்த்தால் இன்றைக்கு அப்படியான வணிக எழுத்தும் கூட வாசிக்கப்படுமா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறிதான். இன்றைய தலைமுறையின் வாசிப்பு என்பது தன்னை, தன் திறனை மேம்படுத்திக் கொள்ள அல்ல, அது முழுக்க முழுக்கப் பணம் ஈட்ட மட்டுமே என்கிற மனநிலையை நோக்கி என திரும்பிய பிறகு, அந்தப் பணத்தை ஈட்ட எனக்கு என்ன மொழி தேவையோ அதனை மட்டுமே படித்துக் கொள்கிறேன். அதுவுமே, பணம் ஈட்ட தேவையான அளவுக்குள் தெரிந்து கொண்டால் போதும் என்கிற நிலைக்கு போய்விட்டது. தாய்மொழி தமிழை பற்றி யோசிக்கக் கூட தயாராயில்லை. வெக்கமே இல்லாமல் சொல்வதானால் சுயமாக சிந்திக்கவோ, அறிவார்ந்து யோசிக்கவா, ஒரு உருப்படியான உரையாடலை முன்னெடுக்கவோ இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அதற்கெல்லாம் வேலையே இல்லை. அப்புறம் என்னத்த படிச்சு என்னத்த.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916