நாற்று…
நாற்று நடல், நெல் பயிரடலின் மிக முக்கியமான பணி. ஆனால் நாற்று என்றால் என்ன என்பது, இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு எத்தனை பேருக்கு தெரியும் எனத் தெரியவில்லை. ஆனால் இன்றைய பிள்ளைகளுக்கு எதனை கற்றுக் கொடுக்கிறோமோ இல்லையோ, புதிது புதிதான நவீனரக வாகனங்களில் ஆரம்பித்து, நவீனரக உணவு பண்டங்கள், உடைகள், தொழில்நுட்ப கருவிகள், அலைபேசிகள் மற்றும் இன்ன பிறவற்றை பற்றி அக்கறையாக, பொறுப்பாக சொல்லிக் கொடுத்து, இன்றைய தலைமுறையை, இன்றைய நவீன உலகின் பிதாமகர்களாக ஆக்குவதில் மட்டும் மிகுந்த ஆர்வத்தோடே நாம் சுற்றிக் கொண்டு இருக்கிறோம். அதில் தவறில்லை. ஆனால் அதையும் தாண்டிய, நாம் உயிர்ப்போடு உலவ தேவையானவற்றை சேர்த்து சொல்லிக் கொடுத்தல் நலம். அப்படி சொல்லிக்கொடுப்பதை வெறுமனே சொற்களுடன் நிற்காமல், அந்த சொற்களுக்கான விளைவுகளை, செயல்களை காண வைப்பது மிக, மிக முக்கியம். இந்த நான்கு சக்கர வாகனத்தில் என்ன மாதிரியான வசதிகள் இருக்கின்றன என இன்றைய தலைமுறை கேட்பதை பெருமையாக கருதி அதனைப் பற்றி உடனடியாக அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க தயாராக இருக்கும் நாம். சாலையில் செல்லும்போது கண்ணில் படும் வேளாண் சார்ந்த, இந்த மண் சார்ந்த, மரபு சார்ந்த விஷயங்களைப் பற்றிய இன்றைய தலைமுறையினரின் கேள்விகளுக்கு, உண்மையான, அக்கறையான, பொறுப்பான, புரிதலான பதில்களை அவர்களுக்கு சொல்கிறோமா என உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். கண்டிப்பாக இல்லை. அப்படியான கேள்விகளை எதிர்கொள்ளும் நேரத்தில், பொறுப்பான பதில்களைச் சொல்லாமல், ஒரே வார்த்தையில் அலட்சியமாக நாம் சொல்லும் பதிலில் இருந்து தான் இந்த தலைமுறை ஒ இது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்கிற மனநிலையை நோக்கி நகர்ந்துவிடுகிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் ஒரு தாயோ, தகப்பனோ தன்னுடைய பிள்ளைகளோடு சாலையில் பயணப்படுகிறான் என வைத்துக்கொள்வோம், (அந்த பயணம் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம், அதனை உங்களின் கற்பனைக்கே விடுகிறேன்) அந்தப் பயணத்தில் போகும் பாதையில் கண்ணில் படும் தூரத்தில். அங்கே விவசாய நிலத்தில் ஏதோ ஒரு வேலை நடந்து கொண்டு இருக்கிறது. அதனைப் பார்த்தவுடன், பிள்ளைகளிடம் இருந்து. அங்க என்ன பண்ணுறாங்க என்கிற கேள்வி பெற்றோரை நோக்கி கேட்கப்படும் போது, ஒரே வார்த்தையில் விவசாய வேலை அல்லது ஏதோ பயிரிடல் செய்யுறாங்க என அவர்களின் கேள்விக்கான பதிலை ஒரே வார்த்தையில் முடித்துவிடுவோம். சரியா.
ஆனால், அதே அந்த பிள்ளை தன்னை தாண்டி ஒரு உயர்ரக நான்கு சக்கர வாகனம் கடந்து போவதை பார்த்து, இது என்ன வாகனம் என தன்னுடைய பெற்றோரிடம் கேட்டால். அந்த வாகனத்தை பற்றிய என்னென்ன விபரங்களை எல்லாம் நாம் அவர்களுக்கு எடுத்துச் சொல்வோம். அந்த வாகனத்தின் விலை உட்பட என்பதை தனியாக இங்கே உங்களுக்கு விளக்கத் தேவையே இல்லை. அது அவரவர் மனசாட்சிக்குத் தெரியும். இந்த இடத்தில் நீங்கள் பிள்ளைகளாக இருந்து யோசியுங்கள். அப்படி யோசிக்கையில், இயல்பாகவே அந்தப் பிள்ளைகள் இரு வேறு சூழல்களை பார்த்து, அந்த இரண்டு சூழல்களில் இருந்தும் தாங்கள் புதியதாக ஒன்றை தெரிந்து கொள்ளும் மற்றும் கற்றுக் கொள்ளும் நோக்கில் தான் கேட்ட கேள்விகளுக்கு என்ன மாதிரியான பதில்களை பெற்றிருக்கின்றன என்கிற மனநிலையில் இருந்து யோசித்தால், அந்தப் பிள்ளைகளுக்கு தன்னுடைய வாழ்வில் எது முக்கியமானது என்கிற எண்ணம் தோன்றும்? என யோசியுங்கள். கண்டிப்பாக சந்தேகமேயில்லாமல் அந்த நான்கு சக்கர வாகனத்தின் மீது தான் கவனம் முழுமையாக இருக்கும். அது தான் முக்கியம் என்கிற எண்ணம் ஆழமாக வேருன்றும். ஆனால் நம்முடைய பிள்ளைகள் பாட புத்தகத்தில் படிப்பது என்ன? இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயம் தான் இந்தியாவின் இதயம் என்பதாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு எப்பேர்ப்பட்ட முரணான ஒன்றினை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நான்கு சக்கர வாகனத்தைப் பற்றி ஒரு பிள்ளை தெரிந்து கொள்வது எவ்விதத்திலும் தவறு இல்லை. ஆனால் அதே நேரம் இந்த மண் சார்ந்தும், மரபு சார்ந்தும், பயிரிடல் சார்ந்த விஷயங்களையும் கண்டிப்பாக நான்கு சக்கர வாகனத்தை பற்றி சொல்லிக்கொடுக்கப்படும் அதே அக்கறையோடு அவர்களுக்கு புரியவைக்கப்பட வேண்டும் என்பதே ஆதங்கம். நாம் பெரும்பாலும் உயிரற்ற பொருட்களின் மீது வைத்துத்திருக்கும் அக்கறையிலும், கரிசனத்திலும் சிறிதளவாவது சக உயிரின் மீதும், இந்த நிலத்தின் மீதும், இந்த இயற்கையின் மீது வைப்போம் என்பதை மனதில் இறுத்துவோம். அதையே இன்றைய தலைமுறைக்கும் கடத்த வேண்டியது பெற்றோர்களாகிய நம்முடைய கடமை. அதே நேரம் ஒரு வேண்டுகோள்.
இன்றைய மழை காலகட்டத்தில் பல ஊர்களில், பல இடங்களில் விவசாய வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கண்டிப்பாக நீங்கள் இருக்கும் ஊர் நகரமாக இருந்தாலும், பயணப்படும் தூரத்தில் விவசாய வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இதுவரை நீங்கள் அப்படி சென்று பார்த்ததில்லை எனில், கொஞ்சம் விசாரித்தால் தெரிந்துவிடும். கொஞ்சமாக விசாரித்து தெரிந்து கொண்டு, அப்படியான விவசாயம் நடைபெறும் இடங்களுக்கு உங்களின் பிள்ளைகளை அழைத்துப் போங்கள். இந்த நோய் தொற்று காலத்தின் ஊரடங்கின் போது ஒரு நிலைக்கு மேல், எப்படா இந்த ஊரடங்கு முடியும், வணிகவளாகம், பொழுது போக்கு பூங்கா, திரையரங்கு எல்லாம் திறப்பான் என தேவுடுகாத்தோம். திரையரங்கு இன்னும் திறக்கப்படாவிட்டாலும் மற்றவைகள் திறந்து இன்றைக்கு உங்களின் பணத்தை கபளீகரம் செய்யத் தயாராகிவிட்டன. இவையெல்லாமே இன்னும் எவ்வளவு நாள் ஆனாலும் அதே இடத்தில் நகராமல் அங்கேயே தான் இருக்கப் போகின்றன. ஆனால் விவசாயம் என்பது அப்படியானது அல்ல. அது காலநிலைப் பார்த்து, சார்ந்து செய்யப்படுவது. அதனால் உங்களது பிள்ளைகள் பொழுது போக்கு பூங்கா போயோ அல்லது மிகப்பெரிய வணிக வளாகம் போயோ எதனையும் கற்றுக்கொண்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. அதற்கு அப்புறமாக போய் கொள்ளலாம். அதனால் முதலில் அவர்களை விவசாயம் நடக்கும் நிலத்திற்கு அழைத்துப் போங்கள். இன்றைக்குப் பரவலாக விவசாய நிலங்களில் நாற்று நடும் வேலைகள் நடைபெற ஆரம்பித்திருக்கின்றன. நீங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போகையில், அவர்களையும், அங்குள்ள விவசாய வேலையில் இருப்பவர்களின் அனுமதியோடு, சிறிது நேரம் நாற்றை நட வையுங்கள். நாற்று நடும் அனுபவமே அற்புதமானது. அலாதியானது. நீங்கள் எத்தனைக் கோடிக் கொட்டிக் கொடுத்தாலும், இப்படியான அனுபவத்தை, இந்த உலகின் எவ்வளவு பெரிய வணிக வளாகத்தின் குளிருட்டப்பட்ட கான்கிரீட் சுவர்களுக்குள்ளும் கொடுத்திடமுடியாது. அதுவும் போக அவர்கள் விவசாயம் சார்ந்து கேட்கும் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லையென்றால் பரவாயில்லை, அந்தப் பிள்ளைகளுக்கு கேட்கும் கேள்விகளுக்கு அந்த நிலத்தில் இருப்பவர்களிடத்தில் பதில் இருக்கிறது. நீங்கள் கேட்டால் அவர்கள் சொல்வார்கள். நீங்கள் போய் கேட்க வேண்டும் அவ்வளவே. காரணம் நாம் தான் நம்மை அறிவாளிகள் என நம்பிக் கொண்டு, சுற்றிக்கொண்டு அவர்களிடம் எதுவும் கேட்பதில்லை. ஆனால் அப்படிக் கேட்கையில் தான் நமக்கு என்ன தெரியவில்லை என்பதே தெரியும். காரணம் நமக்கு அங்க விவசாய வேலை நடக்கிறது என்பதைத் தாண்டி ஒரு ஈரவெங்காயமும் தெரியாது. தயவுசெய்து நமக்கு தெரியாவிட்டால் பரவாயில்லை. நம் பிள்ளைகளாவது தெரிந்து கொள்ளட்டும். வேறதையும் விட அதுவே அவர்களுக்கு நாம் கொடுக்கும் மிகச் சிறந்த அவர்களின் உயிர் வாழ்தலுக்கான திறவுகோல். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916