ஆணி…
விளையாட்டில் முக்கியச் செய்திகள்
ஏன் தோற்றார்கள்?
எப்படித் தோற்றார்கள்?
ஏன் மூச்சு வாங்கினார்?
அவரை அணியில் எடுத்திருக்கலாம்?
வெப்பநிலை அதிகமாக இருக்கிறது?
நீர் சத்து குறைப்பாட்டால் அவதி?
அவர் ஆடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்?
இவரைக் கண்டிப்பாக அணியில் இருந்து நீக்க வேண்டும்?
அடுத்தப் போட்டியில் அதிரடி மாற்றம்?
தொடக்கம் நன்றாக இல்லை?
முக்கிய செய்திகள்
அவர் ஏன் இறப்புக்கு வரவில்லை?
மருத்துவமனைக்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும்?
எத்தனை ஆயிரம் பாடல்கள் பாடினார்?
எத்தனை மொழிகளில் பாடினார்?
இறுதி சடங்கில் பிரபலம் கண்டெடுத்த ஒற்றை செருப்பு யாருடையது?
கடைசி வரைப் போராடினார் காணொளிக் கண்ணீர்
இன்னமும் நம்ப முடியவில்லை
இனி ஒருவன் இப்படிப் பிறப்பானா?
மருத்துவமனைப் போகாமல் இருந்தால் காப்பாற்றி இருக்கலாமோ?
கலாச்சார உலகம் ஏழை ஆகிவிட்டதா?
உபரி செய்தி
நள்ளிரவில் எரித்தார்கள்
மேலே சொல்லியிருக்கும் விஷயங்களுக்கு தனியாக விளக்கம் தேவையில்லை. நம்முடையக் கேள்விகளும், ஆதங்கங்களும் எதனை நோக்கி இருக்கின்றன என்பதற்கு இதை விட உரைக்கும் படியாய் சொல்ல முடியாது. பள்ளியில் படிக்கும் காலங்களில் தினமும் பள்ளியில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கொண்டே இருப்பார். அது என்னவெனில், மாணவர்கள் ஆசிரியர்களை பார்த்து இரு கை கூப்பி வணக்க வேண்டும் என்ன சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் நாம் கேட்டால் தானே ஒரு கையை மட்டும் உயர்த்தி ஒரு மாதிரி நக்கலாக வணக்கம் சார் என்போம். இவையெல்லாம் தலைமை ஆசிரியர் காதுகளுக்குப் போகும். உடனடியாக அடுத்த நாள் பிராத்தனைக் கூட்டத்தில் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள், நீங்கள் எல்லாம் நல்ல மாடுகள் என நினைக்கிறேன் என்பார். அதனால் இரு கைகூப்பி வணக்குங்கள் என்பார். நம்முடைய பசங்க உடனே இல்ல சார். நாங்க எல்லாம் எருமை மாடு என சொல்லி நக்கல் அடிப்பார்கள். இன்றைக்கு நிலைமை அதே போல் தான் இருக்கிறது. மிகச் சிறந்த எருமை மாடுகளாய் ஆகிக் கொண்டே இருக்கிறோம். மேலே சொல்லி இருக்கும் கேள்விகளை பற்றி தினமும் ஏகப்பட்ட கட்டுரைகள், மிகப் பெரும் ஆராய்ச்சிகள், உடனடி நேரலை பதிவேற்றல்கள் என அதகளமாய் களமாடிக் கொண்டிருக்கிறோம். ஒரு வாரம் ஆகியும் துக்கம் போக மாட்டேன் என்கிறது. குரலைக் கேட்டவுடன் அப்படியே உருகுகிறோம். இன்னொரு பக்கம் இவர்கள் வேறு ஏற்கனவே இருக்கும் துக்கத்தை புரிந்து கொள்ளாமல் தோற்றுக் கொண்டே நம்முடைய கவலையை மேலும் மேலும் அதிகமாக்குகிறார்கள். எதற்காக துக்கப்படுவது, எதற்காக கவலைப்படுவது எனத் தெரியாமல் இரண்டைப் பற்றியும் கவலைப்பட்டு, கவலைப்பட்டு பலவிதமான ஆய்வறிக்கைகள், விவாதங்கள், விளக்கங்கள், அறிவுரைகள் என சமூக வலைதளமே அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஆனால் ஏன் எரித்தார்கள் என்கிற கேள்வி மட்டும் அப்படியே நிற்கிறது.
இறப்பிலிருந்து இன்று வரை எத்தனை ஆயிரம் கட்டுரைகள், மீள் பதிவுகள், நினைவலைகள் என மிக, மிகத் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு பத்து சதவீதம் கூட இன்றைக்கு ஏன் எரித்தார்கள் என்பதைப் பற்றி தப்பி தவறி எதனையும் சொல்வதில்லை, எழுதுவதில்லை. காரணம், அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை. அந்தக் கொலையும், எரிப்பும் நம்மையோ நம் ஆன்மாவையோ உலுக்காது. எரிக்கப்பட்டவர் நமக்காக ஏதாவது செய்திருக்கிறாரா என்ன?. அதனால், அதற்கென தனியாக போராளிகள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு, அந்தப் போராளிகளை ஊக்குவித்து, மறக்காமல் அவர்களின் போராட்டங்களுக்கு விருப்ப குறியிட்டனை இட்டு, நம்முடைய சமூக அக்கறையை பறைசாற்றி சிலாகித்தால் போதும். அதன் பின் மீண்டும் அந்த பாடல் எப்படியானது தெரியுமா என துக்கத்தைத் தொடங்கி, எவ்வளவு நாள் ஆனாலும் மறக்கவே முடியல இல்ல என்றோ, நாம மட்டும் அவன அணியில் சேர்த்திருதோம்னா கண்டிப்பா ஜெயிச்சிருக்கலாம் என்றோ, மிக அதி முக்கியமான சமூக மாற்றத்திற்கான நிகழ்வுகளுக்குள் அமிழ்ந்துவிடலாம் இல்லையா?. இப்படியான இந்த மொன்னைத் தனத்தை தான் ஒருவர் கேள்வி கேட்டார். ஆனால் நம்மை பொறுத்தவரை அவர் இந்த சமூகத்தின் எதிரி மட்டுமல்ல, அதனையும் தாண்டி அவரை என்னவெல்லாம் வசைப்பாட முடியுமோ அப்படியெல்லாம் வசைபாடி அசிங்கப்படுத்தி கேவலப்படுத்துவோம். அவரை அப்படி வசைபாடி அசிங்கப்படுத்திய எத்தனை பேர் அவர் இது சம்பந்தமாக எழுதிய நான்கு கட்டுரைகளை முழுவதுமாகப் படித்துப் பார்த்தார்கள். அப்படியே படித்தாலும் அதனை நிதானமாக புரிந்து படித்து உள்வாங்கினார்கள் எனத் தெரியவில்லை. பெரும்பாலும் அவர் எழுதிய கட்டுரையை படித்தேப் பார்க்காமல், அவர் என்ன எழுதினார், எங்கே எழுதினார் என்று கூடத் தெரியாமல், அவர் செஞ்சது அயோக்கித்தனம் என கூட்டத்தோடு கூட்டமாக அசிங்கப்படுத்தினோம். இதில் இன்னொன்றை வேறு பார்த்தேன். அவருடைய கட்டுரையை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்தற்காகவே, பகிர்ந்தவரை தன்னுடைய பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டேன், அதனால் தனக்கு நிம்மதி என பெருமையாக ஒருவர் சொல்லியிருந்தார். வாழ்க அவரின் சேவை. இதைத் தவிர வேறென்ன சொல்ல என தெரியவில்லை. அந்த எழுத்தாளரின் பெயர் சாரு. இப்பொழுது கூட ஒண்ணும் கெட்டு விடவில்லை சாரு எழுதியிருப்பதை போய் படித்துப் பாருங்கள்.
அப்பொழுதாவது நமக்கு எது புடுங்க வேண்டிய ஆணி என தெரிகிறதா எனப் பார்க்கலாம். ஒரு பக்கம் விவசாய விளைவிப்பிற்காக மிகப் பெரும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் நடுராத்திரியில் சக உயிரின் நாசமாக்கப்பட்ட உடல் கேட்க நாதியற்று எரித்து சாம்பலாக்கப்பட்டு, அந்த சாம்பல் கூட கண்ணில் பட்டுவிடா வண்ணம் ஒழிக்கப்படுகிறது. ஆனால் நமக்கு இவை எல்லாவற்றையும் விட ஏற்கனவே மிகப் பெரும் துக்கம் தொண்டை அடைக்கிற அளவுக்கான நிகழ்வுகள் இருக்கின்றன. நமக்கு ஒப்பாரி வைத்து கூப்பாடு போட அதுவே போதும் இல்லையா?. இது போக துக்கத்திற்கு யார் வந்தார்கள், யார் வரவில்லை என கேள்விகளுக்கு விடை வேறு தேட வேண்டியிருக்கிறது. என்ன மாதிரியான சிகிச்சைக் கொடுக்கப்பட்டது, எவ்வளவு செலவானது என்கிற மற்றும் இன்னபிற எண்ணற்ற விடைதெரியா மிக மிக முக்கியமான கேள்விகள் ஒரு பக்கம் வரிசை கட்டி நிற்கின்றன. இன்னொரு பக்கம் தகுதிச் சுற்றை தாண்டுவோமா, ஏன் தோற்கிறோம், அவரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என இந்த பக்கம் ஓராயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாமல் படுத்தால் தூக்கம் வருவதில்லை. இப்படியான இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கித் திணறும் எங்களைப் பார்த்தால் உங்களுக்கு பரிதாபம் தோன்றவில்லையா என கதறும் இந்த சமூகத்தின் கதறலுக்கு செவி கொடுப்போம். எவன் செத்தால் என்ன, எவ செத்தால் என்ன நாங்க சோகமா இருக்கோம் அவ்வளவு தான். போங்கடா என்பது தான் பதில். இதெல்லாம் ஒரு பக்கம் என்றால், எரித்ததை விட ஏன் பிடித்து தள்ளினார்கள் என்பதை நோக்கி விவாதம் பிரமாதமாக ஆரம்பித்திருக்கிறது. அடுத்து, அடுத்தடுத்து நீ மட்டும் தான் விழுவியா என ஒவ்வொருவராக கிழே விழ ஆரம்பித்திருக்கிறார்கள். சக உயிரின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையின் மீது, கொலையில் மீது கொஞ்சமாய் விழுந்த கவனக் குவிப்பும் எதனை நோக்கி நகர வேண்டும் என காய்கள் மிகச் சிறப்பாக நகர்த்தப்படுகின்றன. இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும், நடந்து முடிந்த கொடுரத்திற்காக நியாயம் கேட்டுப் போராட்டிக் கொண்டிருக்கும் நாம் கொலையானவரின் முகத்தை வைத்து வைத்து போராடுகிறோமா?, கொலை செய்தவர்களின் முகத்தை வைத்து போராடுகிறோமா? உண்மையில் யாரின் முகம் இந்த சமூகத்தால் உணரப்பட வேண்டும் என்கிற கேள்வி ஆழமாய் துளைத்தெடுக்கிறது. இப்படியான சமூகத்தில் கொலை செய்தவர்களின் முகங்கள் கண்டிப்பாக கடைசி வரை வெளிவரப் போவதில்லை. நாமும் அதனை கவனிக்கப் போவதுமில்லை. நாளையே கொலை செய்வதவர்களில் ஒருவன் நம்மிடமே வந்து பேசி விட்டு போகலாம், அவனை நாமே மிகச் சிறந்த பண்பாளனாக நம்பலாம், காரணம், நமக்கு தெரிய வேண்டிய முகம் எதுவென்று நாம் முடிவு செய்வதில்லை, இப்படிப்பட்ட நிலையில் இருந்து கொண்டு, நாமும் நியாயம் வேண்டும் என கொலையானவரின் புகைப்படத்தை எங்கெல்லாம் வைத்துப் போராட்டம் என்கிற ஆணியைப் புடுங்க முடியுமோ, அங்கெல்லாம் புடுங்கிக் கொண்டே இருப்போம். கடைசி வரை நமக்கு, நாம் புடுங்குவதெல்லாம் தேவையில்லாத ஆணிகள் தான் என்பது உரைக்கப் போவதே இல்லை.
கடைசியாக
அறிவாளி சமூகம் : ஜீ நீங்க எழுதினத படிச்சேன் செம்ம, சூப்பர்,
வாய்ப்பேயில்லை, கலக்கிடீங்க ஆனா ஒரு
சந்தேகம் நம்ம தல நம்மல பைனலுக்கு கூட்டிட்டு
போயிடுவாரா?
கூமுட்டை : கவலையே படாதீங்க, கண்டிப்பா ஆணிய
புடுங்கிடுவோம், மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916