வாழ்ந்து பார்த்த தருணம்…117

ரயா

சாருவின் கடவுளும் நானும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள மற்றொரு முக்கியமான விஷயம், கடவுளை உணரும் வழிகளில் முக்கியமானது இசை. தொடர்ச்சியாக சாருவும் இசையைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவரளவுக்கு இசைக்குள் ஆழ்ந்து போக முடியுமா எனத் தெரியவில்லை. இந்த கட்டுரையிலும் கடவுளும் நானும் புத்தகத்தை பற்றி எழுதக் காரணம் இந்த புத்தகத்தினுடைய வாசிப்பின் பாதிப்பு அப்படி. அதில் கடவுளும் உண்டு இசையும் உண்டு. சரி இசை என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு சில விதிவிலக்குகளை தவிர மற்றபடி இன்றைய இசை மிக, மிக மோசமாக வணிக வெற்றியை மட்டுமே குறிவைத்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதனால் தான், நீ என்ன வேணும் நாளும் தோணுறத எழுது என ஆளாளுக்கு கைக்கு வருவதை எழுத, அதனையும் பாட்டாக மாற்றிவிடலாம் என மனதுக்குள் சிக்குவதை எல்லாம் எழுதிப் பாட்டாக்கி விடுகிறார்கள். அதுவும் அந்த இசை வெளியான கொஞ்ச நாட்களுக்கு மட்டும் கூத்தடிக்க சிறப்பாகவே பயன்பட்டு, பின்னர் நினைவுகளில் இருந்து அழிந்தும் விடுகிறது. அதுவும் போக இன்றைய காலகட்டத்தில் பொதுவாக யாரும் எதனையும் ஆழமாக கேட்க, கொஞ்சம் உற்று கவனிக்க, இசையை உணர்ந்து உள்வாங்கி மெனக்கெடவெல்லாம் தயாராக இல்லை. இசையைக் கேட்க நேரமெல்லாம் ஒதுக்க முடியாது. நான்கு சக்கர வாகனத்திலோ அல்லது பேருந்திலோ பயணப்படும் போதோ அல்லது நேரம் போவதற்கோ இசை கேட்கப்படுகிறதே தவிர, இசை என்பதும் ஒரு வகை தியானம் தான், அதனை ஆழ்ந்து உணர்ந்து கேட்கும் போது நமது மனதளவிலும், உடலளவிலும் மிக, மிகச் சிறப்பானதொரு நேர்மறை சிந்தனையை, அமைதியை ஏற்படுத்த கூடியது என்பதனை இங்கே யாரும் பெரும்பாலும் உணர்வதே இல்லை. சரி நம் கதைக்கு வருவோம், வழக்கம் போல் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கையில் ஒரு அட்டகாசமான திரைப்பட முன்னோட்ட காட்சி ஒன்று காணக் கிடைத்தது.

அந்த திரைப்பட முன்னோட்டம், அடுத்த வருடம் வெளியாக இருக்கும் வால்ட் டிஸ்னியின் ரயா என்கிற அனிமேஷன் திரைப்படத்தின் முன்னோட்டம் தான் அது. பொதுவாக அனிமேஷன் திரைப்படங்கள் குழந்தைகளுக்கானது என்கிற பொதுவான மனநிலை தான் இங்கே பரவலாக இருக்கிறது. ஆனால் உண்மையில் அனிமேஷன் திரைப்படங்களுக்குள் பொதிந்திருக்கும் வாழ்வியல் கருத்துகள் மிக, மிக ஆழமானவை, அட்டகாசமானவை. நாம் தான் எப்பொழுதும் போல் நம்மை பெரிய படித்த அறிவாளிகளாக எண்ணிக் கொண்டு அப்படியானத் திரைப்படங்களைப் புறக்கணித்து விடுகிறோம். அந்த வகையில், ரயா என்கிற அனிமேசன் திரைப்படத்தின் முன்னோட்டம் அதகளம், குறிப்பாக திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பெற்றிருக்கும் பின்னனி இசை வாய்ப்பேயில்லை சும்மா அதிரவிட்டிருக்கிறது. ரயா திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்ததிலிருந்து, அந்த பின்னனி இசை மனதுக்குள் ஒரு ஓரத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அட்டகாசமான இசை கோர்வைக்காகவே தினமும் இரண்டு அல்லது மூன்று முறையாவது ரயா திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்து விடுகிறேன். சில இசை கோர்வைகள் மட்டுமே முதல் முறை கேட்கும் போதே மனதிற்குள் ஆழமாக ஊடுருவி செல்லும் தன்மையுடன் இருக்கும். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்ட பின்னனி இசையும் அப்படியானது தான், ஒருவித அதிரல் சத்தத்துடன் தொடங்கும் அந்த இசை, திரைப்படத்தினுடைய முன்னோட்ட காட்சிகளின் தன்மையை வேறு ஒரு தளத்துக்கு நகர்த்தி சென்று விடுகிறது.

பொதுவாக எந்த ஒரு திரைப்படத்திற்கும் உண்மையான ஆன்மா என்பது இசை தான். ஒரு திரைப்படத்தில் எந்தக் காட்சிகளுக்கு எல்லாம் இசை தேவையில்லை, அந்தக் காட்சியின் பின்னனியில் இருக்கும் இயல்பான சத்தங்களே மிகச் சிறந்த இசை தான் என்கிற புரிதலோடு காட்சியை அணுக தெரிந்தவரே நல்ல இசை அமைப்பாளர் என எங்கோ படித்திருக்கிறேன். இன்றைய இசையமைபாளர்களில் எத்தனை பேர் அப்படியானவர்களாக இருக்கிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். அந்த வகையில் ரயா திரைப்படத்தின் முன்னோட்ட இசையை பொறுத்த அளவில், மிகச் சிறப்பாகவே செதுக்கி இருக்கிறார்கள். அந்த பின்னனி இசையும் அதற்கேற்றார் போலான காட்சியின் நகர்வும், பின்னனி ஒளி அமைப்பும், அனிமேசன் கதாபாத்திரங்களின் முக பாவணைகளும், ரயா என்கிற அந்த பிரதான கதாபாத்திரம் தன்னை வெளிப்படுத்தும் இடமும், திரைப்படத்தின் பெயர் வெளிப்படும் இடம் என ஒவ்வொன்றிலும் மிகச் சிறப்பாக அதகளப் படுத்தி இருக்கிறார்கள். திரைப்படத்தின் பின்னனி இசை கோர்வை யாருடையது என இணையத்தில் தேடினால் கிடைக்கவில்லை. முன்னோட்டதிலும் பெயர் எதுவும் இடம்பெறவில்லை. அதுவும் போக ரயா என்கிற பெயருக்கான பாடல் ஒன்று இணையத்தில் இருக்கிறது, அந்தப் பாடலும் மிக சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் அந்தப் பாடல் இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ பாடலா எனத் தெரியவில்லை. அதுவும் போக முன்னோட்ட இசையை பற்றி இன்னும் நிறையவே எழுதலாம் போதும் படிப்பதை விட பார்த்து கேட்டு சிலாகியுங்கள். ரயா திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி மற்றும் ரயா என்கிற பெயருக்கான பாடலாக வெளியாகி இருக்கும் பாடலுக்கான இணைய சொடிக்கினை தேடிப் பார்த்து கேட்டு மகிழுங்கள். மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916