வாழ்ந்து பார்த்த தருணம்…118

நுணுக்கம்…

நேற்று இரவு மழை பெய்யலாமா வேண்டாமா என வானத்துடன் மேகங்கள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருக்க, சன்னமாய் குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. அதனை அனுபவித்தபடி வீட்டின் முன் மாடத்தில் இருந்து கொண்டு அலைபேசிக்குள் முகநூலில் அலைந்து கொண்டிருந்தேன். அதே நேரம் சாரு அவர்கள், அபிலாஷ் பதிவேற்றியிருந்த மரணம் பற்றிய இரண்டு கட்டுரைகளை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து சிலாகித்திருந்தார். அந்தக் கட்டுரைகளை தேடிப் போய் வாசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு கட்டுரைகளுமே அதகளம். ஒரு வித சின்ன புன்முறுவலுடன் இரண்டு கட்டுரைகளையும் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, பலவிதமான எண்ணங்கள் மனதினுள் எழுந்து அடங்கியபடி இருந்தது. உண்மையில் நாம் மரணம் என்பதை எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறோம் என்பதில் தான் நம்முடைய வாழ்தலின் சுவாரஸ்யமே அடங்கி இருக்கிறது என எனக்கு பல நேரங்களில் தோன்றியதுண்டு. இங்கேப் பெரும்பான்மையான மக்களுக்கு, அதுவும், வயது வித்தியாசம் இல்லாமல், மரணத்தை பற்றிய பய பிம்பமே அவர்களை அதிகமாக ஆட்கொண்டிருக்கிறது. அதனால் அத செய்யாம மரணித்து விடக்கூடாது, அத பாக்காம போய் சேர்ந்திடக் கூடாது, சாகுறதுக்குள்ள ஒரு தடவயாவது அத பண்ணிறனும் என எதனையுமே மரணத்தோடே தொடர்பு படுத்தி பேசுவதில் இங்கே பலருக்கு அலாதியான இன்பமாய் இருக்கிறது. உண்மையில் மரணம் என்பது என்னவென்று யோசித்தால், அது, முதலில் ஆழமாய் நுணுக்கமாய் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று எனச் சொல்வேன். அதற்கு மரணத்தை அருகில் இருந்து பார்க்கும் மனநிலையும், அதனை கண்டு பயப்படாமல் கவனிக்கும் மனநிலையும் தேவை, நம்முன் நிகழும் ஒரு மரணம் கற்றுக் கொடுப்பதை விட வேறேதுவும் இந்த உலகில் நமக்கு கற்றுக்கொடுத்துவிட முடியாது.

இங்கே பொதுவாக நாம் எதனையுமே ஆழமாய், நுணுக்கமாய், கூர்ந்து கவனிக்க தவறுகிறோம். அப்படியே ஒருவர் கூர்ந்து கவனிக்கிறார் என்றாலும் ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க என்கிறோம். எல்லாவற்றையும் மேலோட்டமாய் அணுக பழகிய இந்தச் சமூகத்திற்கு, அபிலாஷ் அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல், மரணம் தரும் துக்கத்தின் லாகிரியில், போதையில் திளைத்து, அந்த துக்கத்தில் போதையை அளவு கடந்து விரும்ப ஆரம்பித்து, அதனுள்ளே அமிழ்ந்து கிடக்க பழகிவிடுகிறது. அதிலிருந்து விடுபடவோ அல்லது அதனை புரிந்து கொள்ளவோ மனம் விரும்பவதே இல்லை. அதனால் தான் இங்கே பல பேருக்கு மரணம் என்கிற சொல்லை கேட்டவுடனே மிகப்பெரும் அசூயை எற்படுகிறது. அதனால் தான் தெருவில் ஒரு மரணத்திவரின் சடலத்தை எதிர்கொண்டால் கூட அந்த நபரின் முகத்தை பார்ப்பதை பெரும்பாலும் தவிர்க்கவே எத்தனிக்கிறோம். உண்மையில் மரணத்தை விட வெகு சுவாரஸ்யமானது இந்த உலகத்தில் வேறேதுவும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அதனை முழுமையாய் அழமாய் புரிந்து கொண்டு பயணிக்கையில், ஒரு விஷயம் மிக, மிக எளிதாய் விளங்கிவிடும். அது என்னவெனில் இந்த உலகமும், இந்த வாழ்வும் நிச்சயமற்றது என்பது தான் அது. அந்தப் புள்ளியை மிகச் சரியாய் விளங்கி கொள்ள முடிந்தால், கண்முன் நடக்கும் அத்தனைக்கும் பின்னால் இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் கூமுட்டைதனங்கள் மீதான நம்முடைய கேனத்தனமான நம்பகத்தன்மையை உடைத்துவிடலாம். ஆனால் இங்கே அந்த நம்பகத்தன்மை அப்படி உடைந்து போவதில் பெரும்பான்மை சமூகத்துக்கு விருப்பமில்லை. அதனாலே அந்த கூமுட்டை தனங்களையும், அதன் கட்டமைப்பையும் கட்டிக்கொண்டு சதா சர்வகாலமும் அதனுள் உழன்று கொண்டே இருக்கிறோம். அதுவும் கூட அந்த நம்பகத்தன்மையை குறை சொல்லியபடியே.

அபிலாஷ் அவரது கட்டுரையில் ஒரு விஷயத்தை மிக தெளிவாய் முன் வைக்கிறார். அது என்னவெனில், தற்கொலை எண்ணத்தை எப்படி கடக்கலாம் என்பதைத் தான். ஒப்பீட்டளவில் இந்த மனித சமூகத்தில் ஆண் பெண் என எவ்வித பாலின பாகுபாடும், வயது வித்தியாசமும் இல்லாமல் தங்களது வாழ்வில் ஒரு முறையேனும் தற்கொலை எண்ணம் தோன்றாத நபர்கள் இந்த உலகத்தில் யாராவது இருக்கிறார்களா என்பதே மிகப்பெரும் ஆச்சர்யமான கேள்வி தான். என்னளவில் மரணத்தை பற்றிய மிகச் சிறப்பாக ஆழமாக புரிந்து கொள்ள எத்தனிக்கும் புள்ளியில் இருந்து, தற்கொலை என்கிற எண்ணம் அழியும் புள்ளி தொடங்குகிறது என நினைக்கிறேன். இப்படியாக இந்த மனித வாழ்வில் மரணம் பற்றிய புரிந்தலை நோக்கி நாம் நகர்கையில், அதனைப் பற்றிய தெளிவான ஒரு புரிதலை அடைந்தவுடன், நம்முடைய அன்றாட வாழ்வில் முடிந்து போன ஒரு நாளில், நம்முடைய செயல்பாடும், பேச்சும், அடுத்தநாளே நமக்கு நகைச்சுவையாக தோன்றலாம். உண்மையில் அப்படியான எண்ணம் தான் பல நேரங்களில் எதிர்மறை விஷயங்களை பிடித்து தொங்கி கொண்டிருக்காமல் எளிதாய் கடந்து போக வைக்கிறது. அதே நேரம் மரணத்தை பற்றிய நம்முடைய பயம் தான், நம்முடைய வாழ்வில் அனைத்தையுமே சாகுறதுக்குள்ள என்கிற ரீதியில் இந்த சமூகம் கொடுக்கும் அழுத்தங்களுக்கு செவி சாய்க்கும் கூமுட்டைகளாய் மாற்றுகிறது. உண்மையில் நாம் மரணத்தை புரிந்துகொள்ள போகிறோமா அல்லது மரணத்தின் மீது இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் சாகுறதுக்குள்ள சாதிச்சிரணும் தம்பி என்கிற கூமுட்டையான கூக்குரலுக்கு செவிகொடுக்க போகிறோமா, விடை நமது கைகளில். காரணம், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பவர்களாய் இருக்க வேண்டும் எனில் மரணத்தை நுணுக்கமாய், ஆழமாய், கவனமாய் புரிந்து கொள்வோம், பயமில்லாமல் பயணிப்போம் மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916