வணிகக் கடவுள்…
முதலிலேயே தெளிவாக சொல்லிவிடுகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை முழுமையாய் உண்டு. ஆனால் அது கண்டிப்பாக இந்த வீணாய் போன மதத்தின் அடிப்படையில் இல்லை. என்றைக்கு மதம் என்கிற ஒன்றின் வழியே கடவுளை பார்க்க ஆரம்பிக்கிறோமா, அன்றிலிருந்து எது உண்மையான கடவுள் என்கிற கேள்வியும், கூடவே இப்படியான கேள்விக்கு நியாயம் செய்கிறேன் என்கிற பெயரில் ஏகப்பட்ட வியாக்கியானங்களும் வந்து விடுகிறது. அதனால் என்னுடைய கடவுள் நம்பிக்கை என்பது கண்டிப்பாக மதத்தினை அடிப்படையாக கொண்டது அல்ல. அதனால் இங்கே சொல்லப் போகும் நிகழ்வின் அடிப்படையில், நீங்கள் நம்பும் கடவுளை வைத்துக் கொண்டு, என் கடவுள் நம்பிக்கையை நீங்கள் தீர்மானிப்பீர்களானால், என்னிடம் சொல்ல ஒன்றுமில்லை. சரி விஷயத்திற்கு வருவோம். வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக மலையேற்றம் என்பது என்னுடைய வாழ்வின் ஒரு பகுதியான பிறகு, வாரத்தின் இறுதியில், சனிக்கிழமை மலையேற்றம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி நேற்று மலையேற்றம் செல்ல வேண்டிய நாள், ஆனால் முந்தைய நாள் இரவு கொஞ்சம் கடுமையான தலைவலியின் காரணமாக தூக்கம் என்பது அதோகதியானது, அதனால் சனியன்று அதிகாலை எழமுடியவில்லை, சரி மறுநாள் காலை செல்லலாம் என தீர்மானித்து, ஞாயிறு காலை, அதாவது இன்று அதிகாலை மலையேற வந்தாயிற்று. இன்றைக்கு கொஞ்சம் முக்கியமான விஷேசமான நாள் என்பதால், மலையை சுற்றுவதற்கு கூட்டம் அதிகம், கூட்டத்தினை கடந்து வந்து மலையேற ஆரம்பித்தேன், சில பேர் மலையடிவாரத்தை அடைத்துக்கொண்டு இன்றைக்கான சிறப்பை செவ்வென நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை மலையேற வருபவர்களுக்கு எவ்வளவு தூரம் இடைஞ்சலாக இருக்கும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை. வந்த கடமையை முடித்தோமா, கிளம்பினோமா என அதன் பின் என்ன நடந்தாலும் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான் என்கிற மலைநிலையிலேயே எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தார்கள். இந்த களேபரங்களை கடந்து மலையேற்ற படியில் கால் வைப்பதற்குள் மண்டை காய்ந்துவிட்டது. நாளை போய் இதே மலையேற்ற அடிவாரத்தை பார்த்தால், அந்த கடவுளே நம்மை மன்னிக்க மாட்டார், அந்த அளவு மோசமாய் குப்பை கூழமாய் கிடக்கும் இயற்கை கடவுளான அந்த மலைமகளின் மடி. சரி இந்தக் கூத்து ஒரு பக்கம் என்றால், மற்றும்மொரு கூத்தை மலையில் இருந்து இறங்கிய பிறகு தான் கவனித்தேன்.
பொதுவாக இன்றைய சமூகம் கோவில் வழிபாட்டுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்தால், அதற்காக முதலில் மிக சிறப்பானதொரு திட்டம் ஒன்று தயாராகும். அதுவும் விஷேசமான நாளில் கோவிலுக்கு செல்வதென்றால் கேட்கவே வேண்டாம். என்ன உடை உடுத்துவது என்பதில் ஆரம்பித்து, கோவிலுக்குள் சென்று என்னவெல்லாம் செய்ய வேண்டும், கோவிலில் முதலில் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், எந்தப் பகுதியை எத்தனை முறை சுற்ற வேண்டும் என்கிற கணக்கில் ஆரம்பித்து, எந்த இடத்தில் அமர்ந்து என்னவெல்லாம் வாங்கி சாப்பிட வேண்டும் என, ஒரு பெரிய பட்டியலே தயாராகும். சரி இவ்வளவு தூரம் மிகச் சிறப்பாய் திட்டமிட்டு விட்டு சரியான நேரத்திற்கு கோவிலுக்கு கிளம்புவோமா என்றால், அதற்கும் வாய்ப்பேயில்லை. எத்தனை மணிக்கு கிளம்பனும்னு நினைச்சேன் தெரியுமா, சே, தாமதமாகிவிட்டது என, கோவிலுக்கு கிளம்புகையில் ஆரம்பிக்கும் புலம்பல் நிற்காமல் தொடர்வதை எங்கே போய் சொல்வது எனத் தெரியவில்லை. கண்டிப்பாக, அப்படியான புலம்பல்களை மட்டும் அந்தக் கடவுள் காது கொடுத்து கேட்டால், தப்பித்தவறி கோவிலுக்குள் இருந்தால் கூட தலைதெறிக்க எங்காவது ஓடி ஒளிந்து கொள்வான். இது ஒரு பக்கம் என்றால், விஷேச நாளினை தங்களின் வணிகத்துக்கான நாளாக மாற்றும் மனிதர்களை என்ன சொல்வதென தெரியவில்லை. இன்றைக்கும் அப்படித்தான் மலையேறி விட்டு இறங்கிய பிறகு கவனித்தால், மலை மீது இருக்க வேண்டிய கடவுளின் பிரதிநிதி, கடவுளின் அருளை மலைமீதிருந்து வாங்கி, தன் தட்டில் வைத்துக்கொண்டு, கிழே ரோட்டில் வந்து அமர்ந்துவிட்டார். கூடவே மறக்காமல் காணிக்கை உண்டியலுடன், அதுவும் சரிதான். நமக்கும் நம்முடைய நேரத்தை மலையேறி வீணாக்காமல், உடம்பு நோகாமல் மலையடி வாரத்திலேயே கடவுளின் பிரதிநிதியிடம் பயபக்தியாய் நெற்றியை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு கிளம்பி போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான், இந்த கூத்து ஒரு பக்கம் என்றால், அதன் அருகிலேயே இன்னுமொரு கூத்தும் ஓடிக்கொண்டிருந்ததை கண்டிப்பாய் இங்கே சொல்லி ஆக வேண்டும்.
அதே மலையடி வாரத்தில் கடவுளின் பிரதிநிதி அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலேயே திடீரென தற்காலிக கடை ஒன்று முளைத்திருந்தது. அது என்னவென பார்த்தால் இன்றைய நாளின் சிறப்புக்கான கடை, அந்த கடைக்கு அருகிலேயே ஒரு நபர் மலையை சுற்றும் கூட்டத்தினரை பார்த்து, தொடர்ந்து கத்திக் கூவிக் கொண்டே இருந்தார், வாங்க இங்கே வந்து இத வாங்கி கடவுளை வழிபட்டால் நல்லது என அந்த நபரின் கூவலைக் கேட்டு, கடையில் வந்து வேண்டுதல் பொருளின் விலையை கேட்டவர்களுக்கு, ஒரு நிமிடம் தங்களின் கடவுள் நம்பிக்கையே கேள்விகுறியானது. அதில் சில பேரின் முகத்தில் இது நம்ம பிளான்லயே இல்லையே என்ன பண்ணுறது என யோசனை வேறு ஓடியது. இப்படியானவர்கள் குழப்பம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இன்னும் சில பேர், இப்ப இத செய்யாம போனா எதாவது தெய்வக்குத்தம் ஆகிருமோ என யோசித்தபடி கடந்து சென்றார்கள். இன்னும் சில பேருக்கு அன்றைய விஷேச நாளின் செலவு பட்டியலில் இதனை யோசிக்கவே இல்லையே என்கிற எண்ணம் ஓடியது. சரி இவையெல்லாம் ஒரு பக்கம் என்றால், இரண்டொரு நாள் கழித்து தற்செயலாய் தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் அசெளகர்யமான நிகழ்வை மலையடிவாரத்தில் கடவுளுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் வந்ததால் தான் நடந்தது என, ஆழமாய் உட்கார்ந்து யோசித்து, மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுக் கொண்டிருக்கையில், மிகச்சரியாய் அங்கே ஒரு பிரகஸ்பதி, அதுவும் கடவுள் அருள் வந்து ஆடும் பிரகஸ்பதி தோன்றி, கண்டிப்பாக அன்றைக்கு நீ மலையடிவாரத்தில் செய்ய வேண்டியதை செய்யாமல் வந்ததால் தான் இது மாதிரியான அசெளகர்யம் உன் குடும்பத்தில் நடக்கிறது எனச் சொல்லி, உடனே மலையடிவாரம் போய் செய்ய வேண்டியதை செய்துவிட்டு, அதோடு இதையும் சேர்த்து செய்துவிட்டு வா என கூடவே சில கூடுதல் வேண்டுதல் பிட்டுக்களையும் போட, வேறு வழியே இல்லாமல் கிளம்பி போய் எல்லாவற்றையும் செய்துவிட்டு வந்து கடவுளை கண்டடையும் மக்களை எந்தப் பட்டியலில் வைப்பது என அந்த கடவுளுக்கே புரியாது. இந்த லட்சணத்தில் இன்றைக்கு கடவுள் என்பதை வணிகம் என்று ஆக்கிவிட்ட இந்த சமூகத்தின் கடவுள் நம்பிக்கையை என்னவென்று சொல்ல. இவையெல்லாவற்றையும் பார்க்கையில் நாகேஷ், வி.கே.ராமசாமி நடித்து 1978ல் வெளியான ருத்திரதாண்டவம் என்கிற திரைப்பட காட்சி தான் மனதினுள் தோன்றி மறைந்தது. அந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட காட்சியின் காணொளியை இணையத்தில் தேடிப் பாருங்கள் உண்மையில் கோவில் என்பது எதற்கு என்பதை இந்தக் காட்சியை பார்த்தாவது புரிந்துகொண்டால் நலம், மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916