வாழ்ந்து பார்த்த தருணம்…125

டெனட்…

முதலிலேயே தெளிவாய் சொல்லி விடுகிறேன். இது டெனட் திரைப்படத்தின் விமர்சனம் அல்ல. டெனட் திரைப்படம் எனக்களித்த அட்டகாசமான திரை அனுபவம் பற்றிய பகிர்வு மட்டுமே. ஒரு வழியாக ஊரடங்கு எல்லாம் முடிந்து திரையரங்கு திறக்க அனுமதி கொடுக்கப்பட்டு ஐம்பது சதவீத இருக்கைகளோடு, திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. திரையரங்கு திறக்க அனுமதி அளித்ததில் இருந்து, திரையரங்கு சென்று திரைப்படம் பார்க்கும் அளவுக்கான ஈர்ப்பை, இது வரை வெளிந்த எந்த ஒரு திரைப்பட வெளியீடும் கொடுக்காத நிலையில், இந்த வெள்ளி டெனட் வெளியாகிறது என்கிற விளம்பரத்தை பார்த்தவுடன், மிக, மிக ஆவலாக காத்துக் கொண்டிருந்தேன். அதுவும் டெனட் தமிழில் வெளியானால் மட்டுமே பார்ப்பதாக உத்தேசம். காரணம் ஏற்கனவே நோலன் திரைப்படத்தை பார்த்த அனுபவத்தில், எனக்கிருக்கும் ஆங்கில புலமையை வைத்துக் கொண்டு, நோலன் திரைப்படத்தை பார்த்து புரிந்துகொள்வதெல்லாம் அசாதாரணமான விஷயம். அதுவும் போக மிகப் பெரும் நோய் தொற்று, அதிகநாட்கள் ஊரடங்கு, திரையரங்குகள் செயல்படாமல் இருந்தது என பல்வேறு தடைகளால் தமிழில் டெனட் வெளியாகுமா என்கிற சந்தேகம் எனக்கு வலுவாக இருந்தது. ஆனால் அந்த மாதிரி எவ்வித சந்தேகத்துக்கும் இடம் அளிக்காமல் மிகச் சிறப்பான மொழி மாற்றத்துடன் தமிழில் வெளியாகி இருக்கிறது டெனட். கிஸ்டோபர் நோலனைப் பற்றி தனியாக சொல்ல ஏதுமில்லை, ஏற்கனவே எக்கச்சக்கமாய் எழுதி, சொல்லித் தீர்த்துவிட்டார்கள், மனுசன் எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறானோ என்கிற அளவுக்கு, தன் திரைக்கதை புதிர் உத்திகளால் திரையரங்கு வரும் ரசிகனை, மிக, மிக சிறப்பாக மண்டையை பிய்த்து யோசிக்கவிடுவதில் வித்தகர் நோலன். அவரின் தனித்திறனான திரைக்கதை யுக்தியை டெனட்டில் ஒரு படி மேலே போய் அதகளபடுத்தியிருக்கிறார் என்று சொல்வதெல்லாம் சும்மா வெறும் வார்த்தை மட்டுமே.

பொதுவாக நோலனின் திரைப்படங்களைப் பார்க்க வேண்டுமெனில் அதற்கு குறைந்த பட்ச மெனக்கெடலோடு கூடிய மூளையை கசக்கி யோசிக்கும் திறன் வேண்டும், என்றைக்குமே நோலன் பார்வையாளனுக்கு ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் என்று ஒரே நேர்கோட்டில் கதை சொல்லி அனுப்பும் விளையாட்டு பிடிப்பதே இல்லை. நோலன் எப்பொழுதுமே பார்வையாளனோடு ஒரு அட்டகாசமான புதிர் விளையாட்டை விளையாட ஆசைப்படுகிறார். நீங்கள் அப்படியான புதிர் விளையாட்டை நோலனோடு சேர்ந்து திரையில் விளையாட தயாராய் இருந்தால் மட்டுமே, உங்களுக்கும் திரைப்படத்துக்குமான தொடர்பு அறுபடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதோடு மிக, மிக சிறப்பானதொரு திரையனுபவத்தையும் நீங்கள் பெறுவீர்கள். அதையும் தாண்டி மொத்த புதிருக்கான விடையையும் திரையில் ஒரே தடவையில் சொல்லி விடவும் மாட்டார் நோலன். அதுதான் நோலனின் மிகச்சிறப்பானதொரு தனித்துவம். ஒரே தடவையில் எல்லா புதிரையும் சொல்லிவிட்டால், நோலனுக்கும் நமக்குமான தொடர்பு அங்கேயே முடிந்துவிடுகிறது. ஆனால் நோலன் அதற்கு தயாராய் இல்லை. நோலன் தொடர்ந்து பார்வையாளனோடு புதிருடன் உரையாட அழைக்கிறார். இப்படி ஒரு அட்டகாசமான திரைப்புதிர் விளையாட்டை, நீங்கள் உங்களை ஆடுவதற்கு ஏற்ற நபராய் தயாராக்கினால் மட்டுமே, இந்த ஆட்டம் மிக, மிக சுவாரஸ்யமானதாய் இருக்கும். இல்லையெனில், ஒண்ணுமே புரியலப்பா என, எளிதாய் உங்களின் முன்னால் இருக்கும் ஒரு அதி அற்புதமான விளையாட்டை, விளையாடாமல் கடந்து போய்விடுவீர்கள். நீங்கள் ஆடத்தயாராய் இருக்கிறீர்களா, இல்லையா என்பதைப் பொறுத்து தான் டெனட் கொடுக்கும் பேரனுபவம் உங்களுக்கு பேரனுபவமாய் இருக்கும், இல்லையெல் உங்களின் மூளை சலிப்படைந்து விடும்.

டெனட்டை பொறுத்த அளவில், இதுவரை எனக்கு காணக்கிடைத்த நோலனின் திரைப்படங்களிலேயே, மிக சிக்கலான திரைக்கதை புதிர்களை உள்ளடக்கிய, மிகச் சிறப்பான, தரமான சம்பவமாக இருந்தது. என்னளவில் கண்டிப்பாய் முதல் முறையிலேயே டெனட் திரைப்படத்தின் ஒட்டுமொத்த கதையும் புரிவதற்கு வாய்ப்பு மிக, மிகக் குறைவு. ஆனாலும் டெனட் கொடுக்கும் திரையனுபவம் இருக்கிறது இல்லையா, அதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது, ஒரே வார்த்தையில் சொல்வதானால் புரிகிறதோ, இல்லையோ திரைப்படத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஒரே ஒரு முறையேனும், டெனட் திரைப்படத்தை திரையரங்கு சென்று காணும் பேரனுபவத்தை தவிர விட்டுவிடாதீர்கள் எனச் சொல்வேன். ஒரு நிமிடம் கூட கவனம் பிசக்காமல் பார்க்க வேண்டிய மிகச் சிறப்பானதொரு திரையனுபவம் தான் டெனட். முதல் முறையே கதை முழுமையாய் புரிவதற்கு வாய்ப்பு குறைவு என சொல்லக் காரணம், நோலன் உருவாக்கி திரையில் விளையாடியிருக்கும் திரைக்கதைக்குள், உள்ளடுக்கள் எக்கசக்கமாய் இருக்கின்றன. அதனை ஒரே தடவையில் புரிந்து கொள்வது மிக, மிகக் கடினம். அதற்காக திரைப்படம் சுத்தமாக புரியவில்லை என்பதும் கிடையாது. திரைப்படத்தை ஒட்டுமொத்தமாய் பார்த்து முடிக்கையில் எக்கச்சக்கமான கேள்விகள் விடைதெரியாமல் அந்தரத்தில் தொங்கும். அந்தக் கேள்விகள் அனைத்திற்கும் கண்டிப்பாக திரைப்படத்திற்குள் விடை இருக்கிறது. மீண்டும், மீண்டும் நாம் திரைப்படத்தை பார்க்கையில் ஒவ்வொன்றாய் புரிய ஆரம்பிக்கும். இங்கே சிக்கல் என்னவெனில் நாம் எதனையுமே மேலோட்டமாக பார்த்து, பார்த்து, பழகி, பழகி, அதுவும் வாசிப்பு என்கிற விஷயத்தையே மறந்து, எதையும் நேரடியாக எவ்வித மெனக்கெடலும் இல்லாமல் அடைய ஆசைப்பட்டு, எவ்வித வாழ்வியல் அனுபவத்தையும் நிறுத்தி நிதானமாக அனுபவிக்காமல், வாழைப்பழத்தை உறித்து வாயில் ஊட்டி விட்டு, இல்லாவிட்டால், அதுவே கஷ்டமாக இருக்கிறது என அதையும் குழைத்து கூலாக்கி குடிக்க கொடுத்தால், எவ்வித வேலையும் இல்லாமல் அந்த கூழ் நேரடியாக குடல் பகுதிக்கு சென்று சேர்ந்தால் நல்லது என யோசிப்பவர்களாக ஆகிவிட்டோம். தயவு செய்து இப்படியான மனநிலையில் இருப்பவர்கள் டெனட் திரைப்படம் வெளியாகி இருக்கும் திரையரங்கு பக்கம் தலைவைத்துக் கூட படுத்துவிடாதீர்கள். கண்டிப்பாய் உங்களுக்கு வாழைப் பழத்தை உறித்து கூழாக்கி ஊட்டிவிட ஒரு பிரகஸ்பதி வருவார். அதுவரை குந்தவைத்து காத்திருக்கவும், மகிழ்ச்சி…

பின்குறிப்பு :
கண்டிப்பாக, இன்னும் இரு முறையேனும் டெனட்டை திரையரங்கில் பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எத்தனை, எத்தனை கேள்விகளுக்கு நோலன் திரையில் விடை வைத்திருக்கிறார் எனும் ஆர்வம் மனதினுள் துள்ளியபடி இருக்கிறது. இன்னுமொரு விஷயத்தையும் சொல்ல மறந்துவிட்டேன் நோய்தோற்று அபாயத்தால், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டி இருப்பதால், ஒரு இருக்கை இடைவெளியோடு தான் பார்வையாளர்கள் அமரவைப்படுகிறார்கள். இதில் உள்ள பெரிய நல்ல விஷயம் என்னவெனில், என் எதிரில் இருக்கும் இருக்கையில் யாரும் அமர்வதில்லை, அதனால், உயரமான நபர் யாரெனும் வந்து எதிர் இருக்கையில் திரையை மறைத்து அமர்ந்து விடுவார்களோ என்கிற பயமே இல்லாமல் நிம்மதியாக திரைப்படம் பார்க்க முடிகிறது. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916