வாழ்ந்து பார்த்த தருணம்…131

சிதைவு…

முடிந்த ஞாயிறு மாலை (28.3.2021) என்னுடைய சகோதரனுடன் சேர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு “திரையரங்கில்” காங்கும் காட்ஸில்லாவும் திரைப்படம் பார்க்கப் போயிருந்தோம். நோய் தொற்றுக்கு பிறகு திரையரங்கு செல்ல மனம் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதற்கு நோய் தொற்று மட்டும் காரணம் அல்ல. கண்டிப்பாக திரையரங்கு சென்று பார்க்க வேண்டிய படம் என்கிற எண்ணம் எழுந்தால் ஒழிய போக வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுவதே இல்லை. எல்லாமே இணைய வழி தான். அதற்கு மிக முக்கியமான காரணம் நமக்கு வசதியான நேரத்தில், வசதியான சூழ்நிலையில் திரைப்படம் பார்க்கும் வசதி இணையத்தில் கிடைப்பது கூட காரணமாக இருக்கலாம். சரி இப்பொழுது விஷயத்திற்குள். காங்கும் காட்ஸில்லாவும் திரைப்படம் எப்படி இருந்தது என்பது பற்றி இங்கே எதுவும் பேசப் போவதில்லை. அதை பேச ஏற்கனவே நிறைய பேர் இருக்கிறார்கள். பொதுவாக இங்கே மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் திரைப்படத்தில் திரையின் கிழே போடப்படும் எழுத்துக்கள் என்பதற்கு வேலையே இருக்காது, ஆனால் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்று பேசும் திறன் இல்லாமல் இருப்பதால், அந்த கதாபாத்திரம் மற்றொரு கதாபாத்திரத்துடன் திரைப்படம் முழுவதும் சைகை மொழியிலேயே பேசுகிறது. அதனால் அவர்கள் இருவரும் பேசுவது பார்வையாளனுக்கு புரியவேண்டும் என்பதற்காக திரையின் கிழே எழுத்துக்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் போடப்படுகின்றன. இங்கு தான் சிக்கலே, ஆங்கிலத்தில் திரையில் தோன்றும் எழுத்துக்களில் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழில் போடப்படும் எழுத்துக்களை மிக, மிக மோசமாக சிதைத்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் திரையில் அப்படியான எழுத்துக்கள் தோன்றும் போது அதனை முழுமையாய் படிக்கவே முடியவில்லை. காரணம் அவர்கள் பயன்படுத்தியிருக்கும் எழுத்துருக்களில் மிக முக்கியமாக தமிழின் துணை எழுத்துகளான தமிழ் வார்த்தைகளில் வரும் சுழி, துணை கால்கள், இரட்டை கொம்பு எழுத்துக்கள், புள்ளிகள் என எல்லாமும் முற்றிலும் சிதைத்தே திரையில் காண்பிக்கப்படுகின்றன. அதனை பற்றி இது வரை யாரும் எங்கும் குறிப்பிட்டுச் சொன்னதாக தெரியவில்லை. இதே போன்றதொரு மோசமான அலட்சியத்தோடு ஒரு மொழியை கையாளும் போக்கு வேறு ஒரு மொழிக்கு நடந்திருந்தால் சும்மா விட்டிருப்பார்களா?.

அவ்வளவு ஏன் அண்டை மாநிலமான கர்நாடகாவிலோ, கேரளத்திலோ இப்படிச் செய்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதுவும் போக அங்கிருக்கும் திரைப்பட தணிக்கை அதிகாரிகளே மொழி விஷயத்தில் இவ்வளவு அலட்சியமாக இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் திரைப்பட தணிக்கை குழுவில் இருக்கும் அதிகாரிகளுக்கு உண்மையில் தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரியுமா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. காரணம் இன்றைக்கு நிறைய பேருக்கு தமிழில் எழுதப் படிக்க எனக்குத் தெரியாது என்று சொல்வதே மிகப்பெரும் கவுரமாக மாறிக் கொண்டே வருகிறது. அதனால் தான், தன் கண்முன்னால் தன்னுடைய தாய்மொழி திரையில் சிதைந்து கிடப்பதை பற்றி இங்கே யாருக்கும் கவலை இல்லை. இந்த லட்சணத்தில் கடந்த ஒரு வருடமாக இன்றைய இளைய தலைமுறையே ஒட்டு மொத்தமாக பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்லும் சூழல் இல்லை. அதனாலேயே பெரும்பாலும் எழுதுவது என்பதே இல்லை என்கிற நிலை தான். இன்றைய பெற்றோர்களும் அவர்களை எழுத வைக்க மெனக்கெடுவதெல்லாம் இல்லை. நம்மை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்கிற மனநிலை தான். இப்பொழுது வருட இறுதியில் தேர்வுக்காக மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் எத்தனை பேர் தமிழில் எழுதுகிறார்கள் என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது. அப்படியே குறிப்பாக தமிழில் எழுதுபவர்களும் பிழையில்லாமல் எழுதுகிறார்களா என ஆய்வு செய்து கணக்கெடுத்தால், கண்டிப்பாக அதன் முடிவு ஜீரணிக்கவே முடியாததாக இருக்கும். இப்படியான சூழ்நிலையில் மேலே சொல்லியுள்ள பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகும் சூழல் இல்லாது, தேர்வே எழுதாமல் தேர்வில் வெற்றி பெற்றுள்ள இன்றைய இளைய தலைமுறை கூட்டம் தான், இன்றைக்கு காங் காட்ஸியில்லா திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் கண்முன் திரையில் இரு கதாபாத்திரங்கள் சைகையில் பேசுவதை புரியவைக்க இருவேறு மொழிகள் (ஆங்கிலம், தமிழ்) திரையில் தோன்றுகின்றன. அதில் ஒரு மொழி எழுதுருவால் சிதைக்கப்பட்டிருக்கும் போது, அந்த இளைய தலைமுறை பார்வையாளன் எதனைப் படிப்பான், அதுவும் போக சிதைக்கப்பட்ட தமிழ் எழுத்துருவை அவன் என்னவாக பார்ப்பான்? கேள்வி, கேள்வி, கேள்வி மட்டுமே மிச்சமிருக்கிறது. ஆனால் விடை மட்டும் இல்லவே இல்லை.

இதனை படிக்கும் பலருக்கு அல்லது சிலருக்கு, சரி ஏன் மொழிக்காக இவ்வளவு பெரிய வியாக்கியானம் என தோன்றலாம். அதற்கு ஒரே ஒரு சின்ன வலிமையான உதாரணம் ஒன்றைச் சொல்ல முடியும். இது ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்டது தான் என்றாலும், எல்லோருக்கும் உரைப்பதற்காக மீண்டும் ஒரு முறை சொல்வதில் தவறொன்றுமில்லை என நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு வரை வீட்டில் யார் தவறு செய்தாலும், குறிப்பாக குழந்தைகள் தவறு செய்தால் வீட்டில் இருக்கும் பெரியவர்களோ அல்லது அந்த குழந்தையின் பெற்றோரோ உடனடியாக தவறு செய்த நபரையோ அல்லது குழந்தையையோ கூப்பிட்டு, மன்னிப்புக் கேட்கச் சொல்வார்கள். அதுவும் எப்படி? இனிமேல் இது போன்ற தவறைச் செய்ய மாட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என சொல்லச் சொல்வார்கள். ஆனால் அந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து, இன்று Sorry கேளு என ஒற்றை வார்த்தைக்குள் சுருங்கி அடங்கிவிட்டது. அந்த ஒற்றை வார்த்தைக்குள் மீண்டும் இதுபோன்ற தவறை செய்யமாட்டேன் என்கிற உறுதி மொழியும் இல்லை, ஒற்றை வார்த்தையில் கேட்கப்படும் மன்னிப்பும் தாய் மொழியில்லை. அதனால் இன்றைய இளைய தலைமுறை மிக மோசமான தவறு ஒன்றை செய்துவிட்டால் கூட மிக அலட்சியமாக Sorry என்கிற ஒற்றை வார்த்தையில் செய்த தவறை பற்றி கிஞ்சிதும் யோசிக்காமல் கடந்து போய்விட பழகிவிட்டது. அந்த அலட்சியம் இன்றைக்கு இளைய தலைமுறை தாண்டி எல்லொருக்குள்ளும் பரவ ஆரம்பித்துவிட்டது. அப்படி Sorry கேட்டு அலட்சியமாக கடந்து போகும் ஒருவரை கூப்பிட்டு, ஒரே ஒரு முறை இனி இது போன்ற தவறை செய்ய மாட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். கண்டிப்பாக மேலே சொல்லியுள்ளவற்றைச் சொல்ல மிகப்பெரும் தயக்கமும், நடுக்கமும் ஏற்படுவது உறுதி. காரணம், தாய்மொழியின் வழியே கேட்கப்படும் மன்னிப்பும், இனி செய்யமாட்டேன் என்கிற உறுதி மொழியும், அந்த மன்னிப்பை கேட்பவரால் எளிதில் அலட்சியப்படுத்த முடியாதவை. காரணம், அது உங்களின் ஆன்மாவில் இருந்து வெளிப்படுபவை, அப்படிப்பட்ட தாய்மொழி எனும் ஆன்மாவை சிதைத்துவிட்டுத் தான், நாம் நம் பிள்ளைகளையும், சமூகத்தையும் இரக்கமற்று இருப்பதாக குறை கூறிக் கொண்டே இருக்கிறோம். இன்றைக்கு பெரும்பாலான பெற்றோர்கள் இடத்திலும், ஆசிரியர்கள் இடத்திலும், பொது வெளியிலும் அடிக்கடி காதில் கேட்கும் ஒரு வார்த்தை இவ்வளவு மோசமான தப்ப பண்ணிட்டு, இல்ல நடந்துகிட்டு Easyயா Sorry கேட்டுட்டு போறாங்க பாருங்க என பலர் சொல்வதை காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அதற்கு ஏதோ ஒரு வகையில் அப்படியானவர்களுக்கு மொழியை கற்றுக்கொடுக்காதது, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தாதது, நம்முடைய தவறும் தான் என இங்கே யாருமே உணர்வதில்லை. எல்லா அலட்சிய படுத்தலுக்கும் ஒரு விளைவு கண்டிப்பாக உண்டு. நாம் நம் தாய்மொழியை தொடந்து அலட்சிய படுத்தியதின் விளைவு தான், இன்றைய சமூகமும், இளைய தலைமுறையின் அலட்சியமும், நாம் அதனை உணர்ந்து நம்மை திருத்திக் கொள்ளாதவரை, நாம் நம்முடைய மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து நம்முடைய பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்காதவரை, மற்றவர்களை குறை கூறி ஆகப்போவது ஒன்றுமில்லை. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916