வாழ்ந்து பார்த்த தருணம்…141

குரலில் தெறிக்கும் போதை…

அவளின் காந்தக் குரலின் போதையில் கலந்து, கரைந்து காணாமல் போனேன் எப்படி? பார்க்கலாம். இசையப் பற்றி ஏற்கனவே சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அதில் எல்லாவற்றிலும் மிக முக்கியமாக குறிப்பிடும் விஷயம் என்னவெனில், இசையைப் பற்றிய எழுதியுள்ள ஒவ்வொரு கட்டுரையுமே, அந்த இசையை உள்வாங்கி ஆழமாய் ரசிக்கும் ஒரு ரசிகனாகவும், அந்த ரசிப்பினிடையே, அந்த இசை எனக்குள் ஏற்படுத்தும் ரசவாதத்தை உணர்ந்தவனாகவும், அப்படி ரசித்ததையும், உணர்ந்ததையும் மட்டுமே வைத்து மட்டுமே எழுதுகிறேன். மற்றபடி எனக்கு ரசிப்புத் திறனைத் தாண்டி இசையை பற்றிய பெரிய அறிவெல்லாம் கிடையாது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். காரணம் இதனை, இசையைப் பற்றி ஓரளவுக்கேணும் தெரிந்தவர்கள் யாராவது படித்தால், இவனெல்லாம் இசையைப் பற்றி எழுதுகிறான் என தோன்றிவிடக்கூடாது இல்லையா. ஒவ்வொரு கட்டுரையிலுமே இதனைச் சொல்லக் காரணம், இதனை படிப்பவர்கள் ஏற்கனவே எழுதியிருந்ததை படித்திருப்பார்களா எனத் தெரியாது அதனால் தான். சரி விஷயத்திற்குள். ஒரு பத்து நாட்களுக்கு முன்னதாக ஒரு நெருக்கமான குடும்பரீதியான ஒரு நட்பு வட்டக் குழுவுடன் கலந்துரையாடல் சிறப்பாக போய்க் கொண்டிருக்கையில், அந்த குழுவில் இருந்த மிக நெருக்கமான ஒரு நபர், இந்த பாடலை கேட்டிருக்கியா என என்னை நோக்கி கேட்டு விட்டு, அந்தப் பாடலை உன்னுடைய பகிரி எண்ணிற்கு அனுப்புகிறேன் கண்டிப்பாக கேள் எனச் சொன்னார், அதோடு நில்லாமல் இந்த பாடலை உனக்கு பரிந்துரைக்கக் காரணம், கண்டிப்பாக இந்தப் பாடலை கேட்டால் அதனைப் பற்றி கண்டிப்பாக எழுதுவாய். உனக்கு எழுதுறதுக்கு ஒரு விஷயம் கிடைக்குமில்லையா என்றும் சொன்னார். அந்த நபர் அப்படிச் சொன்னவுடன் அப்படியென்னடா அந்த பாடலில் இருக்கிறது என்கிற ஆர்வம் இயல்பாக மனதினுள் தோன்ற, அலைப்பேசியின் வழியே ஒலிவாங்கியை காதில் மாட்டிக் கேட்டால், ஒரு குரல் அதுவும் அது பெண்ணின் குரல் அப்படியே கரைந்து கொண்டு உள்ளே இறங்கியது.

பொதுவாக ஒரு பாடல் நாம் அறிந்த மொழியில் இல்லாமல் வேறு ஒரு மொழியில் இருக்கிறதென்றால், அதனை லயித்துக் கேட்பது என்பது ஆகாத காரியம். ஆனால் அப்படியில்லாமல் நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு வரி கூட புரியாத ஒரு மொழியில் வெளியாகும் பாடலை, நாம் ரசித்து, லயித்து, சிலிர்த்துக் கேட்க வேண்டுமானால், அது அந்தப் பாடலை பாடியவரின் குரலும் மற்றும் அந்தப் பாடலுக்கான இசையமைப்பு இந்த இரண்டும் தான் முடிவு செய்யும். அப்படி சம்பந்தமே இல்லாத ஒரு வரி கூட தெரியாத சிங்கள மொழியில் வெளியாகி இணையத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பாடல் தான் Manike Mage Hithe என்கிற பாடல், இந்தப் பாடல் இந்த அளவு அதகளப்படுத்தக் காரணம். இந்தப் பாடலைப் பாடியிருக்கும் Yohaniயின் குரலும், இதன் மிக எளிமையான பின்னனி இசைக் கோர்வையும் தான். இந்தப் பாடல் பாடப்பட்ட விதம் இருக்கிறது இல்லையா, அது தான் அதகளம். இத்தனைக்கும் இந்த அசலான நேரடிப்பாடல் அல்ல, ஏற்கனவே 2020ல் வெளியான ஒரு பாடல் தொகுப்பில் இருந்து எடுத்து தற்பொழுது 2021ல் Yohaniயின் குழுவால் அந்த பாடல் மீண்டும் தங்களது பாணியில் பாடி வெளியிட்டப்பட்ட பாடல். 2020ல் வெளியிட்ட போது பிரபலமானதை விட பலமடங்கு அதிகமானப் பார்வையாளர்களோடு Yohaniயின் குரலில் இணையத்தில் அதகளப் படுத்திக் கொண்டிருக்கிறது. Manike Mage Hithe என்கிற பாடல், 2021ல் இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பால், இதன் அசல் எது என 2020ல் வெளியான பாடலையும் தேடிப் போய் பார்ப்பதால் அதன் பார்வையாளர் எண்ணிக்கையும் எகிறிக் கொண்டிருக்கிறது.

அப்படி என்ன இருக்கிறது இந்தப் பாடலில், முதலில் என் இதயத்தில் ஒரு குழந்தை இருக்கிறது, அதில் உள்ள எண்ணங்கள் உங்களை பற்றியது என தொடங்கும் இந்த பாடலைப் பாடிய Yohani என்கிற பெண்ணின் குரல் இருக்கிறது இல்லையா, இந்தப் பாடலை, அந்த பெண் பாடத்தொடங்கிய முதல் வரியில் இருந்து, அப்படியே உங்களில் மனதைத் திருடிவிடும். அப்படியொரு காந்தக் குரல் Yohaniனுடையது. வாய்ப்பேயில்லை. அந்தக் குரலுக்குள் எதோ ஒன்றை ரகசியமாய் ஒளித்து வைத்திருக்கிறார் Yohani. இந்தப் பாடல் முழுவதுமே Yohaniயின் முகத்தின் அண்மைக்காட்சிகளாலேயே நிரம்பியிருக்கிறது. அதிலும் அவர் கண்கள் இருக்கிறது இல்லையா, பேசும் கண்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதற்கு ஆகச் சிறந்த உதராணம் Yohaniயின் கண்கள் தான். யப்பா, அவளின் அந்த கருவிழிகளில் தெறிக்கும் உற்சாகத்துக்கும், காதலான போதைக்கும் அப்படியே அடிமையாகி விடுவோம் சந்தேகமே இல்லை. அந்தக் குரலில் ஒருவிதமான ரகளையான மிக, மிக ஈர்ப்பான போதை இருக்கிறது. அதுவும் அவள் பாடும் விதம், அதில் தெறிக்கும் ஒருவிதமான கிறக்கமான லயம், அதோடு சேர்ந்து பாடலின் காணொளியில் அவளின் அண்மைக்காட்சியில் கிறக்கும் கண்கள் எனச் சொல்ல, சொல்ல முடியவே இல்லை. இவ்வளவு இருப்பதால் தான் மொழியே புரியவில்லை என்றாலும், ஒரு மூலையில் இருக்கும் ஒரு நாட்டில் அவ்வளவாக அறிப்படாதக் குரல். இந்த ஒரே ஒரு பாடல் மூலமாய் மூன்று கோடி பார்வையாளர்களை நோக்கி அட்டகாசமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பாடலை கேட்டால் அதைப் பற்றி கண்டிப்பாக எழுதியே தீருவாய் என இந்தப் பாடல் பரிந்துரைக்கப்பட்ட போதே சொன்ன அந்த நபரின் வார்த்தைகள் நூறு சதவீதம் உண்மையானவை என ஒவ்வொரு முறை திரும்ப, திரும்ப இந்தப் பாடலை கேட்கும் போதும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. நீங்களும் கேளுங்கள் கண்டிப்பாக Yohani குரலுக்குள் கரைந்து போவீர்கள். காரணம் அந்த காந்தக் குரல் அப்படிப்பட்டது, மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916