வாழ்ந்து பார்த்த தருணம்…144

மிலாவினைத் தேடி ஒரு தோலிசைப் பயணம்…

உங்களால் மெளனத்தை அதன் வீரியத்தோடு, அதன் ஆழத்தோடு புரிந்து கொண்டு மெளனமாய் இருக்க முடியுமெனில், நீங்கள் இசையின் ஆன்மாவை மிகச் சிறப்பாக உணர்ந்து, உள்வாங்கி ரசிக்க முடியும். என்னளவில் உலகத்தின் ஆகச் சிறந்த இசை மெளனமே. அப்படியான மெளனத்தின் வழியே இசையை ரசிக்கும் ஒரு ரசிகனாக இந்த தொடர் கட்டுரையை எழுதுகிறேன். சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஜானகிராமன் தனது முகநூல் பக்கத்தில், அமேசான் பிரைமில் தான் பார்த்த ஒரு இசைத் தொடரை பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். அதில் ஒர் இடத்தில் இளையராஜாவின் அதியுச்ச ரசிகனாக எனக் குறிப்பிட்டு ஒரு விஷயம் சொல்லியிருந்தார். அது என்னை கொஞ்சம் சீண்டியது, அந்த சீண்டலின் அடிப்படையிலேயே அவர் சொன்ன அந்த இசைத் தொடரை பார்க்க வேண்டுமென முடிவு செய்தேன். ஆனால் அது ஒரு மிகச்சிறந்த அற்புதமான முடிவு என அந்த இசைத் தொடரின் முதல் பாகத்தை பார்க்க ஆரம்பித்த முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே விளங்கிவிட்டது. அதனால் மொத்தமாக ஐந்து பாகங்கள் கொண்ட அந்த இசைத் தொடரினைப் பற்றி தனித்தனியே எழுத வேண்டுமென தோன்றியது. அதன் முதல் அத்தியாயமே இது, இனி அமேசான் பிரைமில் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் வெளியான Harmony with A.R. Rahman என்கிற இசைத் தொடரினைப் பற்றி. இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருக்கக் கூடிய பராம்பரியமான இசைக் கலைஞர்களை சந்திக்கச் செல்லும் பயணமே இந்தத் தொடர். அப்படியான பயணத்தில் ரகுமான் சந்திக்கும் இசைக் கலைஞர்களின் வாழ்வியலோடு கலந்திருக்கும் பராம்பரிய இசைக்கருவிகளைப் பற்றியும், அந்த இசைக் கருவிகள் அவர்களது வாழ்வினுள் வந்த விதத்தைப் பற்றியும், இசை என்கிற ஒன்றை அந்தக் கலைஞர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பது பற்றியும், மிக, மிகச் சிறப்பான கலந்துரையாடலோடு, மிக, மிக அற்புதமான காட்சிக் கோர்வைகளோடு படமாக்கப்பட்டிருக்கிறது. அதில் முதல் அத்தியாத்தில் ரகுமான் பயணித்திருப்பது கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவியான மிலாவு என்கிற இசைக் கருவியினை நோக்கி.

மிலாவு கேரளத்தின் மிக முக்கியமான பராம்பரிய இசைக் கருவி. அந்தக் கருவியினை மிகச் சிறப்பாக வாசிப்பத்தோடு மட்டுமல்லாமல், அதனை இன்றைய தலைமுறைக்கு வெகு சிறப்பாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் சஞ்சீத் விஜயன் என்கிற இசைக் கலைஞரை, அவர் பணிபுரியும் மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 1930களில் நிறுவப்பட்ட கேரளா கலாமண்டலம் என்கிற கல்லூரிக்கே சென்று சந்தித்து உரையாடி, அப்படியே சஞ்சீத் விஜயனின் வாழ்வில் மிலாவு என்கிற இசைக் கருவி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன என கேட்கும் ரகுமான் மற்றும் சஞ்சித் விஜயனின் உரையாடல்கள் மற்றும் இரண்டு அற்புதமான இசைக் கோர்வைகளோடு மிக, மிக அற்புதமான இசைப்பயணமாக இருக்கிறது இந்த இசைத்தொடரின் முதல் பாகமான Entering the Kalari : Featuring Kalamandalam Sajith Vijayan என்கிற இந்த பயணத்தின் முதல் பாகம். இந்தத் தொடரின் முதல் பாகம், இசையை தான் என்னவாக பார்க்கிறேன் என்கிற ரகுமானின் கோணத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அதன் பின் சஞ்சித்தின் பார்வை கோணத்திற்கு மாறி, அவருடைய குரலின் வழியே கலாமண்டலம் சென்று, சஞ்சித்தை ரகுமான் சந்திக்கும் இடத்தில் இருந்து இருவருக்குமான அற்புதமான கலந்துரையாடலாக வடிவம் பெற்று, பின்னர் வேறு ஒரு தளத்திற்கு நகர்ந்தபடியே பயணிக்கிறது. அந்த கலந்துரையாடலின் வழியே நமக்கு சொல்லப்படும்,உணர்த்தப்படும் விஷயங்கள் ஏராளம், இப்படி போகும் இதன் தொடர்ச்சியில், ஓர் இடத்தில் மிலாவு இசைக்கருவி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு ரகுமானை சஞ்சித் விஜயன் அழைத்துச் செல்வார், அந்த இடத்தை அடைந்தவுடன், ரகுமான் அந்த இடத்தை உள்வாங்குமிடம் அற்புதம், அதன் பின் அங்கிருக்கும் மிலாவு இசைக்கருவியின் பின்னனி வரலாற்றை சஞ்சித் விளக்கிக் கொண்டே வர, பின்னனியில் மிலாவு இசைக் கருவியினை வாசிக்க தயார் செய்யும் காட்சிகள் ஓடும், அப்பொழுது ஓர் செம்பு பானையின் வாயினில், தோல் ஒன்று இழுத்துக் கட்டப்படும், அப்படி கட்டப்பட்ட தோல் தோய்வடையாமல் விறைப்பாக இருக்கிறதா என சஞ்சித் தன்னுடைய ஆள்காட்டி விரலினால் தொட்டுப்பார்ப்பார், இந்த ஒட்டு மொத்த காட்சியும், அதோடு அந்தக் காட்சிகள் நமக்கு கடத்தும் சிலிர்ப்புகள் ஏராளம். அதன் பின் மிலாவினை சஞ்சித் வாசிக்க ஆரம்பிப்பார், அதனை ரகுமான் ஒரு நிலையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார், அப்பொழுது ரகுமானின் முகத்தில் வந்து செல்லும் பலவிதமான உணர்வுகளையும், அதன் பின் அங்கேயே மிலாவினை பற்றிய இருவரது கலந்துரையாடலும் அதி அற்புதமானது.

இந்த தொடரின் மிக முக்கியமாக சில விஷயங்கள் சஞ்சித்தால் சொல்லப்படுகின்றன. இனி சஞ்சித் விஜயனின் குரலில், நான் எந்த தவறும் செய்யவில்லை, எனக்கு மிலாவை இசைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என தோன்றியது கற்றுக் கொண்டேன், கற்றுக் கொண்ட இசையை இசைக்க வேண்டும் எனத் தோன்றியது இசைத்தேன், அதனை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றியது அதனையும் செய்தேன். இதில் எந்த இடத்திலும் என்னுடைய தவறு எதுவுமில்லை, மிலாவு என்னை தேர்ந்தெடுத்தது அவ்வளவு தான். இன்று என் வாழ்வு வேறு, மிலாவு வேறெல்ல, மிலாவு என்கிற இசைக் கருவி தான் என் வாழ்வு என பல விஷயங்களை சொல்லிச் செல்கிறார். சஞ்சித் ஏன் என் மீது தவறில்லை எனச் சொல்கிறார் என்பதை நீங்களே அந்த தொடரினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு இடத்தில் சஞ்சித் சொல்லும் விஷயம் மிக அட்டகாசமாய் இருந்தது, கூடியாட்டம் என்கிற ஒரு ஆட்டத்தின் பின்னால் இருந்து மிலாவை இசைக்க வேண்டும், அந்த நேரம் வாசிப்பவனுக்கு ஆடுபவரின் முக பாவங்களோ அல்லது அவர்களின் கை முத்திரைகளோ தெரியாது, ஆனாலும் மிலாவை வாசிப்பவன் தன்னுடைய மனக் கண்ணால் அதனை கண்டுணர்ந்து வாசிக்க வேண்டும் எனச் சொல்லுமிடம் சிலிர்த்தது. இப்படியான சிலிர்ப்பான பல தருணங்கள் இந்த முதல் பாகம் முழுவதும் உண்டு. இதன் பின் ஒரு இடத்தில் சஞ்சித் தனக்கு மிலாவை கற்றுக் கொடுத்த ஆசானை ரகுமானுக்கு அறிமுகப்படுத்துகிறார், அந்த ஆசானுக்கும் ரகுமானுக்குமான கலந்துரையாடலும், ரகுமான் ஆசானிடம் கேட்கும் கேள்விகளும், அதற்கு ஆசான் அளிக்கும் பதில்களும், இன்று கடவுளை வழிபடும் விஷயத்தில் நாம் மொன்னையாக தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பல அவலங்களுக்கு சாட்டையடி பதிலாய் இருந்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக சஞ்சித்தின் மிலாவுடன் ரகுமானின் புதிய தொழில்நுட்ப இசை ஒன்றிணையும் தருணம் ஒன்று இந்த பாகத்தின் இறுதியில் இருக்கிறது. அதில் ரகுமான சஞ்சித்திடம் தான் வாசிக்கப் போகும் நவீன கருவியினை பற்றிச் சொல்வார், அந்த இடத்தில் சஞ்சித் என்ன லயத்தில் வாசிக்க வேண்டுமென ரகுமானிடம் கேட்க, அதற்கு ரகுமான் உங்களுக்கு தோன்றுவதை வாசியுங்கள், உங்களின் இசை அதிர்வோடு என்னுடைய இசையை இணைத்துக் கொள்கிறேன் எனச் சொல்லிவிட்டு இசைக்க ஆரம்பிப்பார் பாருங்கள், அந்த தருணத்தில் சஞ்சித் முகத்தில் தென்படும் ஒருவிதமான ஆச்சர்யம் கலந்த பூரிப்பை இங்கே வார்த்தைகளால் விவரிக்க இயலாது. பாரம்பரியமும், நவினமும் இணைந்து கலக்கும் அந்த தருணத்தை என்னவென்று சொல்ல வாய்ப்பேயில்லை அதகளம். உங்களுக்கு இசைப் பிடிக்குமெனில் இந்த தொடரை தவறவே விடாதீர்கள். உறுதியாக என்னால் சொல்ல முடியும், இந்தத் தொடரின் முதல் பாகமான Entering the Kalari : Featuring Kalamandalam Sajith Vijayanக்கு நீங்கள் ஒதுக்கப் போகும் 40:45நிமிடங்கள் கண்டிப்பாக தனித்துவமானது. உங்களின் அலைபேசி மற்றும் தொல்லைக்காட்சிகளை அணைத்து எறிந்து விட்டு, மிகச் சிறப்பானதொரு இசைப் பயணத்துக்கு தயாராகி பயணியுங்கள். அடுத்த பாகத்தின் எழுத்தில் மீண்டும் வேறு ஒரு இசையோடு சந்திக்கலாம் மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916