மரம் மரமாய் இருக்கிறது…
ஏன் டா மரம் மாதிரி அப்படியே அசையாம நின்னுகிட்டே இருக்க, கேட்ட கேள்விக்கு ஏதாவது பதில் சொல்லித் தொல, என் வாழ்நாள் முழுவதும் பல்வேறு தருணங்களில், என்னை நோக்கியோ அல்லது யாரோ ஒருவர் வேறு யாரோ ஒருவரை நோக்கியோ மேலே இருக்கும் கேள்வியை கேட்பதை அல்லது கேட்கப்படுவதை பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறேன். இன்று மட்டும் ஏன் இதை பற்றி இவ்வளவு விரிவான சிந்தனை, காரணம் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் நோய் தொற்று உச்சத்தில் இருந்த சமயம், மருத்துவமனை எல்லாம் போய் திரும்பிய பிறகு, வீட்டில் இருப்பவர்களின் உடல் நலனுக்காக ஆவி பிடித்தல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம், ஆவி பிடித்தலுக்காக நொச்சி இலை தேவை எனச் சொன்னார்கள். எங்கே கிடைக்கும் எனத் தெரியாமல் நாட்டு மருந்து கடையில் போய் கேட்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில், வீட்டின் அருகாமையில் இருந்த நண்பர் ஒருவரிடம் விசாரித்து கொண்டிருந்த போது, என்னப்பா கிராமத்து பக்கத்துல இருந்துட்டு இதுக்கெல்லாம் கடைக்குப் போறியா, இங்கவா அந்தா வயலுக்கு நடுவுல தெரியுது பாரு அது தான் நொச்சி மரம், போய் எவ்வளவு வேணுமோ பறிச்சிக்கோ எனச் சொன்னார். அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அந்த மரம் இருக்கும் இடத்துக்குப் போனேன். அந்த மரம் இப்பொழுது நாங்கள் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவாய் வயலுக்கு நடுவில் இருந்தது. அப்பொழுதைய நேரம் வயலில் நெல் பயிரிடல் ஆரம்பிக்காத சமயம், அதனால் வரப்பு எல்லாம் சற்று வறண்டே இருந்ததால், போகும் பாதையில் சகதி எதுவும் இல்லாமல் எளிதாக நடந்து போய் பறிக்க ஏதுவாக இருந்தது. மரத்துக்கு பக்கத்தில் போய் பார்த்த போது தான் தெரிந்தது மரம் பெரியதாக இருந்தாலும் இலைகள் குறைவாகவே இருந்தன. காரணம் முன்னெச்சரிக்கையாக பல வீடுகளில் ஆவி பிடித்தல் நடக்கிறது என மரத்தை பார்த்ததும் தெரிந்தது. கிருமி காட்டிய மரண பயம் அப்படி. நான் போன சமயத்தில், ஒரு குடும்பமே அதாவது அப்பா, மகன், மகள் என மூவரும் மரத்தை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசுவதிலிருந்து அவர்களும் ஆவி பிடிக்கத் தான் இலை பறிக்க வந்திருக்கிறார்கள் எனத் தெரிந்தது.
ஆனால் அவர்கள் மூவரும் கைகளில் பறித்து வைத்திருந்த இலைகளைப் பார்த்தால், அதில் பத்து குடும்பங்கள் ஆவி பிடிக்கலாம், ஒவ்வொருவர் கையிலும் அவ்வளவு நொச்சி இலை இருந்தது. சரி நோய் கிருமி நன்றாகவே மரண பயத்தை காட்டிக் கொண்டிருக்கிறது என நினைத்துக் கொண்டேன். அவ்வளவு இலைகளை பறித்துப் போய் என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை. அப்பொழுது அந்த நொச்சி மரத்தை பார்த்த போது பரிதாபமாக இருந்தது. அந்த மரத்துக்கு மட்டும் பேசும் திறன் இருந்தால் இவர்களிடம் என்ன சொல்லும் என யோசித்தேன், மனதுக்குள் சிரிப்பு தான் வந்தது. பின்னர் வீட்டில் உள்ளவர்கள் ஆவி பிடிக்கத் தேவையான அளவு மட்டும் இலைகளை பறித்துவிட்டு வந்தேன். அப்படி அன்றைய நாட்களில் நான்கைந்து முறை போய் இலைகளை பறித்து வந்தேன், அதன் பின் இயல்பு வாழ்க்கை திரும்பி அன்றாட வாழ்வியல் ஓட்டத்தில் கலந்த பிறகு, அந்த மரம் இருப்பதே மறந்து போனது, எதுவுமே தேவை என்கிற ஒன்று வரும் போது தானே மனிதனுக்கு ஞாபகம் வரும். இப்படியே ஓடிக் கொண்டிருக்கையில், இன்று மீண்டும் வீட்டில் ஒரு மருத்துவ தேவைக்காக நொச்சி இலை வேண்டுமெனக் கேட்டார்கள். அப்பொழுது தான் நொச்சி மரம் மீண்டும் ஞாபகமே வந்தது. இந்த முறை வீட்டில் உள்ளவர்கள் கேட்டவுடன் கூட ஞாபகம் வரவில்லை, எனக்கு அந்த நொச்சி இலையை பறித்த மரத்தை நினைவு அடுக்குகளில் இருந்து ஞாபகப்படுத்தி எடுக்கவே சில நிமிடங்கள் ஆனது. அதன் பின் இன்று காலை மரமிருக்கும் இடத்தை நோக்கி பழைய ஞாபகத்திலேயே காலில் செருப்போடு போய் விட்டேன், அருகில் போன பிறகு தான் கவனித்தேன், வயல் முழுவதும் கடந்த இரண்டு மாதமாக நெல் பயிரிடல் நடந்து இடுப்பளவு நெற் கதிர்கள் வளர்ந்திருந்தன, வரப்பில் ஏறும் முன்னர் செருப்பை கழட்டி வைத்துவிட்டு வரப்பில் ஏறினால், ஈரம் கலந்த அந்த சகதி மண்ணும், ஈரம் படிந்த புல்லும் காலுக்குள் குளிர்ச்சியை ஏற்றியது. அதனை ரசித்துக் கொண்டே நடந்தால், சில அடிதூரத்தில், ஒரு செவ்வகமாக குச்சியை ஊன்றி அதனை சுற்றி சேலையை வைத்து மறைத்து கட்டியிருந்தார்கள், கிராமத்தில் எல்லாம் பெண்கள் குளிக்குமிடத்தில் மறைவுக்கு கட்டியிருப்பார்களே அதனைப் போல, அருகில் போய் பார்த்தால் அகத்திக் கீரை வளர்ந்து வந்து கொண்டிருந்தது. ஆடு எதுவும் மேய்ந்து விடாமல் இருப்பதற்காக மறைத்திருக்கிறார்கள் எனப் புரிந்தது. பச்சை பசேல் என இருக்கும் வயலுக்கு இடையில் ஒரு சேலைக்கட்டிய அகத்தி.
அதனைத் தாண்டி வரப்பில் நடந்து போனால் நெற்பயிர்களின் மேல் படிந்திருந்த பனித்துளிகளின் மேல் இளம் காலை மஞ்சள் வெயில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது. எங்கெங்கு காணினும் ஈரம், அப்படியே அந்தத் துளிகளை என் கைப்பேசியில் புகைப்படமெடுக்க போராடினால் நான் நினைத்தது போல் எடுக்க முடியவில்லை. அதற்கு கொஞ்சம் உயர்ரக புகைப்படக் கருவி இருந்திருக்க வேண்டும், அதன் பின் அந்த பனித்துளிகளை வருடிக் கொண்டே நடந்தால், காலுக்கடியில் ஏதோ குறுகுறுப்பு, குனிந்து பார்த்தால் தொட்டால் சிணுங்கிச் செடி, என் கால்களின் தொடுதலில் தன்னை சுருக்கிக் கொண்டிருந்தது. தொட்டால் சிணுங்கி செடியைப் பார்த்தாலே உள்ளிருக்கும் குழந்தைத் தனம் தானாக குதியாட்டம் போட்டு வெளிவந்து விடுகிறது. உடனடியாக கைகள் அதனை சிணுங்க வைக்கத் தொடங்கிவிடுகின்றன, இவை அனைத்தையும் கடந்து நொச்சி மரத்திற்கு அருகில் போனால், கடந்த நாட்களில் பெய்த மழை, தொடர்ந்து வயலுக்குள் பாய்ச்சப்படும் தண்ணீர், அதைத் தாண்டி இன்றைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்ட மனிதனுக்கு அந்த இலையின் தேவை இல்லை என்பதால், மிகச் செழிப்பாக இலைகளால் நிரம்பியிருந்தது அந்த நொச்சி மரம். பார்க்கவே சந்தோசமாக இருந்தது. இப்படி நம்மைச் சுற்றி ரசிக்க, சந்தோசப்பட ஓராயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் நாம் தான் அதனையெல்லாம் அலட்சியப்படுத்தி, புறந்தள்ளி விட்டு வேறு எதை எதையோ தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். அதை எல்லாம் தாண்டி, பொதுவாக எந்த மரத்தில் இருந்தாவது இலைகளையோ, காயோ அல்லது பூவோ பறிக்கிறேன் என்றால் அதனிடம் சிறிது பேசுவேன். அதனிடம் பறித்துக் கொள்ள அனுமதிக் கேட்பேன். அதன் பின் என்ன நோக்கத்திற்காக பறிக்கிறேனோ அது நிறைவேற வேண்டுமென வேண்டுவேன். என்னுடைய பேச்சை அந்த மரம் கேட்டுக் கொண்டிருக்கிறது என்கிற ஆழமான நம்பிக்கை எனக்கு எப்பொழுதும் உண்டு. அப்படித் தான் இன்றும் நொச்சி மரம் செழிப்பாக இருப்பதை பார்த்த சந்தோசத்தில், எப்படி இருக்கிறாய் எனக் கேட்டுவிட்டு, இலைகளை பறிக்க ஆரம்பித்தேன். அப்பொழுது தான் கவனித்தேன் மரத்தின் கிளையில் இருந்து முளைக்கும் இலைகள் மூன்று மூன்றாக முளைத்து, முக்கோண வடிவத்தை போல் இருந்தன. கடந்து முறை பறிக்க வந்த போது இவ்வளவு உன்னிப்பாக கவனிக்கவில்லை. அந்த வடிவமே அழகாக இருந்தது, இன்று ஏனோ அதனுடன் சிறிது நேரம் நின்று பேச வேண்டும் எனத் தோன்றியது. பேசிக் கொண்டிருந்தேன். அதனிடம் எந்த சலனமுமில்லை, பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. கண்டிப்பாக இனி வாரம் ஒரு முறையேனும் உன்னை வந்து பார்க்கிறேன் எனச் சொல்லிவிட்டு வந்தேன். அந்த நேரம் சில்லென்ற காற்று அடிக்க மரம் அசைவது என் பேச்சை அது ஆமோதிப்பது போல் இருந்தது. அப்பொழுது தான் ஒரு விஷயம் சட்டென மனதினுள் தோன்றியது, இதற்கு முன்னரும் சரி, இப்பொழுதும் சரி அந்த நொச்சி மரம் தன்னிடம் உள்ளதை எனக்கு கொடுத்து விட்டு, எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அப்படியே இருந்தது. அந்த மரம் தன் வாழ்நாள் முழுவதும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் கிளைக் கரங்களின் வழியே இலைகளை கொடுத்துக் கொண்டே அப்படியே இருக்கும். நொச்சி மரத்தின் அந்த நிலையை யோசிக்கையில் அந்த யோசனை என்னை என்னவோ செய்தது. எனக்கு எதோ ஒன்றை உணர்த்தியது, என்றைக்கும் எதிர்பார்ப்பு இல்லா அன்பு உன்னதமானது தான். அதனால் தான் மரம் என்றுமே மரமாய் இருக்கிறது. ஆனால் நாம் மனிதர்களாய் இருக்கிறோமா, இனிமேல் யாரேனும் என்னை மரம் மாதிரி நிக்கிற என்று சொன்னால் கண்டிப்பாக பெருமைப்படுவேன். மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916