வாழ்ந்து பார்த்த தருணம்…146

கலைந்து கூடும் உலகம்…

அப்பா இன்னைக்கு உங்களுக்கு இரண்டு ஆச்சர்யம் இருக்கு கண்ண மூடிகிட்டே வீட்டுக்குள்ள வாங்க, ஒவ்வொரு நாளின் மாலையும் வீட்டினுள் நுழைகையில் எனக்கு என் மகள் கொடுக்கும் ஆச்சர்யம் இல்லாமல் இருந்ததே இல்லை. இப்படியான ஆச்சர்யம் நிறைந்த என்னுடைய வீட்டில், ஒவ்வொரு வாரமும் வியாழன் என்பது வீட்டை சுத்தப்படுத்தும் நாளாக என்னுடைய அம்மாவால் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்கம். இன்றும் அப்படித் தான் காலை வீட்டில் எந்த இடத்தையெல்லாம் நீ சுத்தப்படுத்த வேண்டும் என்கிற கட்டளை காலைப் பிறப்பிக்கப்பட்டது. நம்முடைய வீட்டை நாம் சுத்தப்படுத்துவது என்பது ஒருவிதமான ரசனையான, ரகளையான வேலை. அப்படியான வேலையை முடித்துவிட்டு சுத்தப்படுத்தப்பட்ட இடங்களைப் பார்க்கையில் ஒரு விதமான ஆத்ம திருப்தி வருமில்லையா, அதற்கு இணை ஏதுமில்லை. அப்படி இன்று காலை பிறபிக்கப்பட்ட உத்தரவில் முக்கியமானது வீட்டின் பிரதான அறையில் இருக்கும் நீள் சாய்விருக்கையை (Sofa) சுத்தப்படுத்தி விடும்படி சொல்லப்பட்டது தான். கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய மகள் வீட்டில் இல்லை, மூன்று நாட்களுக்கு முன்னதாக என் மகள் என்னை ஆச்சர்யப்படுத்த உருவாக்கியிருந்த உலகம் அந்த பிரதான அறையில் இருக்கும் நீள் சாய்விருக்கையின் மேல் அப்படியே இருந்தது. அதனையும் சுத்தப்படுத்த வேண்டும். மற்ற வேலைகளை எல்லாம் முடித்து விட்டு கடைசியாக அதனை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தேன். அவள் உருவாக்கி வைத்திருந்த உலகத்தில் இருந்த ஒவ்வொரு பொருட்களாக எடுத்து ஒரு பையில் வைத்து ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தேன், என் மகளின் பார்வையில் சொல்வதானால், அவள் உருவாக்கியிருந்த உலகத்தை கலைத்துக் கொண்டிருந்தேன். என் மகளுடைய பார்வையில் இருந்து என்னுடைய செயலை யோசிக்கையில் மனதின் ஓரத்தில் ஒரு வித வலி தோன்றி மறைந்தது. அவள் மீண்டும் வந்து பார்த்தால் என்னப்பா எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டிங்களா என சாதாரணமாக சொல்லிவிட்டு, வேறு ஒரு ஆச்சர்யமான உலகத்தை உருவாக்க ஆரம்பித்துவிடுவாள்.

பொதுவாக இங்கே மனிதர்களுக்கு இரண்டு வகையான உலகங்கள் உண்டு, ஒன்று புறவயமானது, மற்றொன்று அகவயமானது. ஒரு வயதுக்கு மேல் அகவயமான உலகத்தைப் பற்றி வெளியே மூச்சு விட மாட்டோம், காரணம், நம்மை பற்றி நாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பமே அதனைத் தடுத்துவிடும். ஆனால் குழந்தைகள் அப்படி இல்லை, அவர்கள் அகம், புறம் இரண்டும் ஒன்று தான். அகத்தில் என்ன யோசிக்கிறார்களோ அதனை அப்படியே வெளியே ஆச்சர்யமான உலகமாக்கி விடுவார்கள். இப்படி ஒவ்வொரு நாளின் மாலையும், என் வீட்டின் வெவ்வெறு இடங்களில், வெவ்வேறு உலகங்கள் உருவாக்கப்பட்டு எனக்கான ஆச்சர்யமாக காட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சில நேரங்களில் என்னுடைய வருகை மிக தாமதமாக ஆகிவிடும். என் மகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பாள், காலை எழுந்தவுடன் அப்பா அந்த இடத்த பார்க்கலையே என்பாள். நானும் பார்க்கவில்லை கண்ணு என்று சொன்னவுடன், அப்ப கண்ண மூடுங்க எனச் சொல்லி விட்டு, என்னை கூப்பிட்டுப் போய் உங்களுக்காக நான் உருவாக்கிய எதிர்பாரா ஆச்சர்யம் இது தான் என அவள் காட்டுகையில், முந்தைய நாள் இரவு அதனைப் பார்த்திருந்தாலும், என்னுடைய ஆச்சர்யம் கலந்த விழிகள் அவளை புன்னகைக்க வைக்கும் பாருங்கள், அதற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும், அவளுக்காக ஆச்சர்யத்தோடு விழிகளை உயர்த்தலாம். என் மகள் உருவாக்கிய உலகம் எத்தனையோ முறை வீட்டின் சுத்தப்படுத்தலுக்காக கலைப்பட்டிருக்கின்றன. ஏன், அவளே கூட, நானே சுத்தம் பண்ணிடுறேன் என, தான் உருவாக்கிய உலகத்தை தானே கலைத்து விடுவாள். அவளுடைய முகத்தில் அப்பொழுதும் ஒரு வித புன்னகை தான் இருக்கும். காரணம் மீண்டும் ஒரு உலகத்தை தன்னால் உருவாக்கிட முடியும் என்கிற மிகப் பெரும் நம்பிக்கை.

அதனால் தான் குழந்தைகளின் உலகம் அழகானது எனச் சொல்கிறோம். அதே போல் நாமும் குழந்தைகளாக இருந்தவர்கள் தான், அப்படியான நாளில் நாமும் பல விஷயங்களை உருவாக்கி அழித்து, அதன் பின் பலமுறை மீள் உருவாக்கம் செய்து கொண்டே இருந்திருக்கிறோம். ஆனால் இன்று ஒரே ஒரு சொல் போதும் நம்முடைய அக புற இரண்டு உலகங்களையுமே கலைக்க, காரணம், நம்மால் இன்னும் ஒன்றை உருவாக்கிட முடியும் என்கிற நம்பிக்கையை காலம் சிதைத்து விட்டது என நம்புகிறோம். ஆனால் குழந்தைகள் காலத்தையும் நம்பவில்லை, தன் உலகத்தை யாரோ சிதைத்து விட்டார்கள் என்பதையும் யோசிக்கவில்லை. இந்த உலகம் போனால் என்ன என, ஒவ்வொரு நாளும் புதிது புதிதான உலகத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி என்னுடைய இன்றைய உலகத்தில் இருக்கும் நவீன மடிக்கணினி உட்பட்ட எல்லாமுமே சிறு அட்டை கொண்டு என் மகளால் அழகாக உருவாக்கப்பட்டு விடுகிறது. அதனை செய்து முடித்துவிட்டு, என்னுடைய மடிக்கணினி எப்படி இருக்குப்பா என அவள் கேட்கும் போது, அவள் கண்களில் தெறிக்கும் ஆச்சர்யம் கலந்த நம்பிக்கையை விட, இந்த உலகத்தில் வேறு ஏதேனும் நம்பிக்கை உள்ளதா எனத் தெரியவில்லை. குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கான உலகம் அவர்களிடம் தான் இருக்கிறது. அதனை அவர்கள் எவ்வித யோசனையும் இல்லாமல் அப்படியே நம்புகிறார்கள். ஆனால் இன்று நமக்கான உலகம் நம்மிடம் இருப்பதாக யாரும் நம்பவில்லை. அது வேறு ஒருவரிடமோ அல்லது வேறு எங்கோ ஒரு மூலையிலோ இருக்கிறது என நாம் ஆணித்தரமாக நம்புகிறோம். நம்முடைய உலகமும், நம்முடைய மகிழ்ச்சியும் நம்மிடம் மட்டுமே இருக்கிறது என்கிற ஆணித்தரமான நம்பிக்கையை நம்முள் உருவாக்கினால், நம்முடைய உலகம் எத்தனை முறை கலைக்கப்பட்டாலும், குழந்தைகளைப் போல் அத்தனை வேகமாக இல்லையென்றால் கூட, வெகு சீக்கிரமே நம்மால் வேறு ஒரு உலகத்தை படைத்து, அதில் மகிழ்வாய் இருக்க முடியும். உருவாக்குதலை எவ்வளவு எளியதாக குழந்தைகள் எடுத்துக் கொள்கிறார்களோ, அதே போல் தான் கலைத்தலையும், அதனால் தான் குழந்தைகளால் எளிதாக இன்னொன்றை உருவாக்கிட முடிகிறது. நமக்குள் இருக்கும் குழந்தையை நம்மால் கண்டுணர முடிந்தால் நம்மாலும் முடியும். மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916