வாழ்ந்து பார்த்த தருணம்…150

நெடுமுடி வேணு…

காலையில் எழுந்ததும் உங்கள் அலைப்பேசியில் என்ன தேடுகிறீர்கள்?, மிக முக்கியமான விஷயமாக இதனை நான் பார்க்கிறேன். காரணம், இப்பொழுது எல்லாம் பெரும்பான்மையோருக்கு ஒவ்வொரு நாளின் தொடக்கமும் கண்டிப்பாக அலைபேசியுடன் தான் தொடங்குகிறது. முடிவதும் அலைப்பேசியுடன் தான் முடிகிறது. அப்படியான விஷயத்தில் அலைப்பேசியில் எதைப் பார்த்து அந்த நாளை தொடங்குகிறீர்கள் என்பது மிக முக்கியமானதாக மாறிவிடுகிறது. இன்றைக்கும் அப்படித்தான் சாரு தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருந்த நெடுமுடி வேணு பற்றிய மம்முட்டியின் அஞ்சலி குறிப்பில் இருந்து தொடங்கியது இன்றைய நாள். மிக பிரமாதமான அஞ்சலி குறிப்பு அது, ஏன் பிரமாதமான அஞ்சலி குறிப்பு அது என்பதை சாருவே சொல்லியிருக்கிறார். அதனை வாசிக்க வேண்டும் என விரும்பவர்கள் சாருவின் பக்கத்திற்கு சென்று வாசிக்கலாம். நெடுமுடி வேணு பற்றிய மம்முட்டியின் அஞ்சலி குறிப்பை படித்ததும் தான் இரண்டு நாள் முன்னதாக கடந்த 11ம் தேதி நெடுமுடி வேணு இறந்துவிட்டார் என்பதே எனக்குத் தெரிந்தது. அதனைப் படித்தவுடன் நெடுமுடி வேணு என்கிற திரைக்கலைஞனின் சில காட்சிகள் நினைவடுக்குகளின் வழியே ஓடி ஒருவிதமான சலனத்தை அவை மனத்திற்குள் ஏற்படுத்தின. நெடுமுடி வேணு என்கிற ஒரு நடிகர் ஒரு வகையில் தமிழ் திரையுலகில் அறியப்படாத காலத்தில், ஒரு திரைப்படம் மிகச் சிறப்பாக அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது. அன்றிலிருந்து இன்று வரை நெடுமுடி வேணு நடித்த பல திரைப்படங்கள் பார்த்திருந்தாலும், என்னுடைய நினைவடுக்குகளில் அவர் முதன் முதலில் எனக்கு அறிமுகமான இந்தியன், சமீபத்தில் வெளியான சார்லி (மலையாளம்) மற்றும் என்றும் என் வாழ்நாளில் மறக்கவே முடியாத நார்த் 24 காதம் (மலையாளம்) என்று மேலே சொல்லியுள்ள மூன்று திரைப்படங்களும் என்னளவில் மிக, மிக முக்கியமானவை.

1996ல் இந்தியன் திரைப்படம் வெளியான சமயம், அப்பொழுதைய காலகட்டத்தில் உணவுத்துறை சார்ந்தப் பணியில் இருந்த நேரம், வேலை நேரம் போக ஒய்வு நேரங்களில், பணியிடங்களில் உருவாகும், உருவாக்கும் மன அழுத்தங்களை மறக்க, அப்பொழுதைய காலகட்டத்தில் இரண்டு விஷயங்கள் மட்டுமே எனக்கு கை கொடுத்தன, அதில் ஒன்று பெரும்பான்மையான நேரங்களில் திரைப்படங்கள், சில நேரங்களில் வார, மாத பத்திரிக்கை வாசிப்புக்கள் போன்றவையாக இருந்தன. அந்தக் காலகட்டதில் தான் இந்தியன் வெளியாகி இருந்தது. இந்தியன் திரைப்படம் பார்ப்பதற்கு முன்னதாக நெடுமுடி வேணு என்றால் யார் என்றே தெரியாது. அன்றைய காலகட்டத்தில் இந்தியன் திரைப்படம் பார்க்கப் போனது மூவருக்காக, அதில் முதலாவது கமல், இரண்டாவது ஷங்கர், மூன்றாவது ரகுமான். அப்படியிருக்கும் போது படம் பார்த்துக் கொண்டிருக்கையில், அன்றைய காலகட்டத்தில் கமல் எப்பேர்ப்பட்ட நடிகர் என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால் அவருடன் தமிழுக்கு அறிமுகமே இல்லாத ஒரு நடிகரை மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக விஷயம் இருக்கும் என்று மட்டும் விளங்கியது, அதற்கு ஏற்றார் போல் மனிதர் அந்த குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரி பாத்திரத்தை சர்வ அலட்சியமாக மிக, மிகச் சிறப்பாக செய்திருந்தார். இன்றைக்கு வரை இந்தியன் திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக அந்த காவல்துறை அதிகாரி பாத்திரத்தை மறக்கவே மாட்டார்கள். கிட்டத்தட்ட திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரமான வயதான கதாபாத்திரத்திற்கு இணையாக இன்றும் எல்லோராலும் நினைவு கூறப்படுகிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் நெடுமுடி வேணு தான், அதில் மாற்றுக் கருத்தேயில்லை.

பொதுவாக கமல் போன்ற ஒரு நடிகருடன் யாராவது புதியதாக வந்து நடித்தால் கண்டிப்பாக பம்முவார்கள், காரணம் கமல் போன்ற நடிகரைப் பற்றிய பிம்பத்தை அப்படியே கட்டியெழுப்பி அவர் யார் தெரியுமா, நீ யார் கூட நடிக்கப் போற தெரியுமா என்கிற மாதிரியான கண்ணாமூச்சிகள் கண்டிப்பாக, நெடுமுடி வேணுவிடமும் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அதையெல்லாம் அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை என்பது, அவர் ஏற்று நடித்திருந்த அந்த காவல்துறைப் பாத்திரத்தை தனக்கேயுரிய பாணியில் அவர் கையாண்ட விதத்தில் திரைப்படம் முழுவதும் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். குறிப்பாக இந்தியன் கமலிடம் அவர் வர்ம கலையினால் வீழ்த்தப்பட்ட பிறகான காட்சிகளில், அவரின் உடல்மொழியில் சின்ன சின்ன நுணுக்கங்களை மிகப் பிரமாதமாக கொண்டு வந்திருப்பார். அதுவும் தன்னுடைய அடிப்பட்ட கையை மற்றொரு கையால் பிடித்தவிட்டபடியே பேசும் காட்சிகள், அதிலும் அடிப்பட்டதினால் உண்டான வேதனையை தன் முகத்தில் வெளிப்படுத்திய படி பேசும் விதம் என அவரின் ஒவ்வொரு நுணுக்கமான வெளிப்பாட்டையும் மிகவும் ரசித்தேன். அதையும் தாண்டி என் வாழ்நாளில் என்றும் மறக்கவே முடியாத நார்த் 24 காதம் (மலையாளம்) திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த பாத்திரத்தில் வேறு ஒருவரை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதுவும் அந்த திரைப்படத்தின் இறுதி நிமிடங்களில் தன்னுடைய ஊரை வந்தடைந்து, தன்னுடைய வீட்டை நோக்கி வாகனத்தில் பயணிக்கும் போது, தன் மனைவி பற்றின நினைவுகளைப் பகிர்ந்தபடியே வந்து, வீட்டின் அருகில் வந்து இறங்கியதும், கொஞ்சம் தூரம் நடக்கணும் என பகத்திடமும், ஸ்வாதியிடமும் சொல்லிவிட்டு, அவர் தன்னுடைய வருகைக்காக காத்திருக்கும் ஒவ்வொருவரின் முகங்களையும் கண்டு கொண்டு பேசியபடி வீட்டை நோக்கி நடந்து போய், தன் வீட்டில் கிடத்தப்பட்டிருக்கும் அவருடைய மனைவியின் மீது கட்சிக் கொடியினை போர்த்தும் வரைக்குமான முழு நீளக் காட்சியில் அவரின் அந்த ஒட்டுமொத்தமானப் பாத்திர வெளிப்பாடு அப்படியே நம்மைக் கலங்கடித்து விடும். இன்று மீண்டும் ஒரு முறை அந்தக் காட்சியை அவரின் நினைவுகளோடே பார்த்துக் கொண்டிருந்த போது கண்களில் வழிந்த நீரை என்னால் நிறுத்தவே முடியவில்லை. கண்டிப்பாக ஒரு ஆகச் சிறந்த கலைஞனை இந்திய சினிமா இழந்திருக்கிறது. ஒரு சிலருக்கு மட்டுமே, தன் வாழ்நாளில் தன்னுடைய இருத்தலை வேறு எவராலும் இட்டு நிரப்ப முடியாத ஒரு இடத்திற்கு நகர்த்த முடியும். அப்படியான இட்டு நிரப்பவே முடியாத ஒரு வெற்றிடத்தைத் தான் நெடுமுடி வேணு விட்டுச் சென்றிருக்கிறார். என்ன இருந்தாலும் எனக்கு நார்த் 24 காதம் (மலையாளம்) திரைப்படத்தின் இறுதி காட்சி போதும் அவர் என்றென்றும் என் ஆன்மாவில் நீங்காமல் நிலைத்திருக்க. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916