வாழ்ந்து பார்த்த தருணம்…153

மேய்ப்பனைத்தேடி…

உங்களின் இதுவரைக்குமான வாழ்நாளில் என்றாவது, மனிதன் உயிர் அல்லாத வேறு ஒரு சக உயிர் ஒன்று உங்களைத் தேடி உதவி கேட்டு வந்திருக்கிறதா?!. அந்த உயிர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது நாய், பூனை, கோழி, ஆடு, மாடு இன்னும, இன்னும் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இல்லையென்றாலும் ஒன்றும் பிரச்சனையில்லை. பொதுவாக எனக்கு சிறு வயதில் இருந்தே நாய் என்றால் அதீத பயம் உண்டு. காரணம் நான்காம் வகுப்போ அல்லது ஐந்தாம் வகுப்போ படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய நண்பன் ஒருவன் அப்பொழுது நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்புறமுள்ள காலி இடத்தில் எங்களுடன் மட்டையாட்ட விளையாட்டை விளையாட வந்திருந்தான். அப்படி விளையாடிக் கொண்டிருக்கையில் நாங்கள் அடித்த பந்து பக்கத்து வீட்டின் காலி இடத்தில் போய் விழுந்து விட்டது. அதனை எடுப்பதற்காக என்னுடைய நண்பன் சடாரென சுவர் ஏறிக் குதித்து பக்கத்து வீட்டின் பின்புறம் இறங்கி விட்டான். அந்த வீட்டில் ஒரு வளர்ப்பு நாய் இருந்ததை அவன் கவனிக்கவில்லை. பந்தை எடுத்துவிட்டு அவன் சுதாரிப்பதற்குள், அந்த நாய் மிக வேகமாக வந்து அவன் கால்களை பின்னால் இருந்து கடித்து விட்டது, இவையனைத்தும் ஒரு ஐந்து நிமிடத்திற்குள் என் கண்முன்னே நடந்தது. அந்த நிகழ்வு கொடுத்த அதிர்ச்சி கலந்த பயத்தில் இருந்து விலக எனக்குப் பல வருடங்கள் பிடித்தது. ஆனால் இன்றைக்கு அப்படியில்லை, ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமெனில், கடந்த சில மாதங்கள் முன்னர் ஒரு சின்ன வேலையாக. ஒரு கிராமத்து விவசாயின் தோட்டத்துக்கு போக வேண்டி இருந்தது, அப்படி போகையில் என்னுடன் பணிநிமித்தமான நண்பர்களும் உடனிருந்தார்கள், அந்த விவசாயின் வீட்டைத் தாண்டி அவரின் தோட்டத்துக்குள் போகையில், அந்த விவசாயி வீட்டில் அவரின் வளர்ப்பு நாயொன்று எங்களைப் பார்த்து கடுமையாக குரைக்க ஆரம்பித்தது, குரைப்பதை விடவே இல்லை. அதனைப் பார்த்ததும் அந்த நாயைப் பார்த்து என்னடா கண்ணா உனக்கு பிரச்சனை என்ன உனக்கு பிடிக்கலையா எனக் கேட்டுவிட்டு, அவரின் தோட்டத்துக்குள் போய்விட்டேன்.

உள்ளே போய் அவரிடம் பேசி விட்டு வெளியே வருகையில். மீண்டும் அந்த நாய் குரைத்தால் அதனுடன் பேசி சரி பண்ணிவிடலாம் என யோசித்துக் கொண்டே வந்தால், அந்த நாய் அமைதியாக என் அருகில் வந்து என்னை கொஞ்ச ஆரம்பித்துவிட்டது, கொஞ்ச நேரம் அதனுடன் பேசி விட்டு அப்புறமாக அங்கிருந்து கிளம்பினேன். பொதுவாக நாம் விலங்கு என்பதை பற்றி, நம் பொதுப் புத்தியில் நம்மை சுற்றி இருக்கும் சமூகத்தால் நம் மூளைக்குள் ஏற்றப்பட்ட பிம்பத்திலிருந்து சற்றே விலகி, அதுவும் நம்மைப் போன்ற ஒரு சக உயிர் என்கிற மனநிலையை நோக்கி நகர்ந்து வந்து விட்டாலே, நமக்குள் செலுத்தப்பட்டுள்ள விலங்குகள் பற்றிய பிம்பமும், பயமும் காணாமல் போய்விடும். ஆனால் அப்படியான ஒரு புரிதலை நாம் நமக்குக் கொடுப்பதே இல்லை. இப்படியான நிலையில், இப்பொழுது நாங்கள் குடியிருக்கும் வீட்டின் எதிர்புறம் ஒரு பெரிய கிணறுடன் கூடிய விவசாய நிலமொன்று இருக்கிறது, பெரும்பாலான நேரங்களில் அந்த கிணற்றின் நீர் மட்டம் நிரம்பிய நிலையில், கிணற்றின் மேல்முனை வரை அதாவது கைகளால் தொட்டு விடும் அளவிலேயே இருக்கும். அந்த கிணற்றில் இருக்கும் மீன்களுக்கு பொரி போடச் சொல்லி வீட்டில் இருந்து உத்தரவு வரும் போது எல்லாம், அந்த மீன்களுக்கு உணவளிக்கப் போவதுண்டு, அப்படி ஒவ்வொரு முறை பொரி கொண்டு போகும் போதும், அந்த தோட்டத்தில் இருக்கும் ஒரு இளம்வயது ஆடு ஒன்று, அந்தப் பொரியில் தனக்கும் பங்கு வேண்டும் என அருகில் வந்து நிற்கும், அதற்கும் அந்த கிணற்றின் முனையிலேயே பொரியைப் போட்டால் சமத்தாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும். மீன்கள் பொரி சாப்பிடுவதை கொஞ்சம் நேரம் வேடிக்கைப் பார்த்து விட்டு, அதன்பின் அந்த ஆட்டுடன் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருப்பேன். இதுவரைக்கும் என்னுடைய அனுபவத்தில் நாய் மற்றும் பூனை தான் என்னிடம் மிக நெருக்கமாக வந்து உரசியபடி உறவாடுவதை பார்த்திருக்கிறேன், ஆனால் ஆடு அப்படியில்லை, பெரும்பாலும் அருகில் போனாலே ஓடிவிடும். அதுவும் நான் வளர்க்காத ஆடு எனும் போது கேட்கவே வேண்டாம் அருகிலேயே வராது. ஆனால் இந்த ஆடு அப்படியில்லை அந்த தோட்டத்திற்குள் செல்லும் போதெல்லாம் (பத்து  நாட்களுக்கு ஒரு முறையாவது அந்தத் தோட்டத்திற்கு போகாமல் இருந்ததில்லை) என்னிடம் வந்து விளையாடாமல் இருந்ததில்லை. அந்த ஆடும் பெரும்பாலும் அந்தத் தோட்டத்தின் பிரதான இரும்பு வாயிற் கதவைத் தாண்டி வராது. சில நாட்கள் மட்டும் விதி விலக்காக வெளியே வந்து மேயும்.

பொதுவாக என்னிடம் ஒரு பழக்கம் இருக்கிறது, அது மரம், செடி, கொடி, மலை, மழை, சக உயிர் இப்படி எல்லாவற்றுடனும் பேசுவேன். அதுவும் கண்டிப்பாக வெறுமனே மேம்போக்காக அல்ல. ஒரு ஆட்டைப் பார்த்து என்ன கண்ணா சாப்பிட்டியா என கேட்கும் போதே, அந்த ஆடு நூறு சதவீதம் என்னுடைய வார்த்தைகளை கண்டிப்பாக உள் வாங்கி கேட்கிறது என்கிற நம்பிக்கை எனக்கு ஆழமாக உண்டு. அப்படியான வார்த்தைகள் தான், அதனை, என்னை நோக்கி இழுத்து வந்தது என நினைக்கிறேன். இப்படியான நிலையில் கடந்த ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பு இரவு மணி சுமார் ஒன்பது மணி இருக்கும் என நினைக்கிறேன், வீட்டிற்குள் எதையோ உருட்டிக் கொண்டிருந்தேன், அப்பொழுது வெளியில் ஆடு கனைக்கும் சத்தம் கேட்டது. கேட்டவுடன் தெரிந்து விட்டது, அது வீட்டின் எதிர்புற தோட்டத்து ஆடு தான் என்பது, உடனடியாக வெளியே வீட்டின் மாடத்தில் இருந்து பார்த்தால், அந்த ஆடு வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் சாலையின் ஓரத்தில் நின்று கத்தியபடி இருந்தது, யாரோ வாயிற் கதவை திறந்த பொது ஆடு வெளியே மேய வந்திருக்கிறது, ஆடு வெளியே இருப்பதை கவனிக்காமல், வாயிற் கதவை சாத்திவிட்டு போய்விட்டார்கள், அது இரும்பினால் ஆன பெரிய கதவு என்பதால் திறப்பது கொஞ்சம் சிரமம், அதனால் தான் ஆடு சாலையில் நின்று கொண்டு இருக்கிறது எனப் புரிந்துவிட்டது. சாலையில் நின்று கொண்டு இருந்த ஆடு மாடத்தில் என் முகத்தைப் பார்த்ததும், நேரே ஓடி வந்து நான் குடியிருக்கும் வீட்டின் கீழே முன்புற கதவின் அருகில் வந்து நின்றுவிட்டது, முதல்தளத்தில் இருந்து இறங்கிபடியே தோட்டகாரருக்கு அழைத்துப் பேசுங்கள் என வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு, கீழே வந்து கதவை திறந்தால், ஆடு என் காலருகில் வந்து நின்று கொண்டு தோட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தது, தோட்டக்காரர் அங்கேயே பிடிச்சு கட்டி வைங்க கொஞ்சம் நேரம் கழித்து வருகிறேன் எனச் சொல்லிவிட்டார், ஆனால் எனக்கு அதனைக் கட்டி வைக்க மனமில்லை, காரணம், தோட்டத்தில் ஒரு நாள் கூட அதனைக் கட்டிப் போட்டு பார்த்ததில்லை. அதனால், இந்த நேரம் தோட்டத்தின் வாயிற் கதவு பூட்டப்படாமல் இருக்குமா என்கிற மனதிற்குள் தோன்றிய சந்தேகத்துடனே, ஆட்டிடம் வா போய்ப் பார்க்கலாம் என அதன் கழுத்தில் இருந்த கயிற்றை பிடித்து அழைத்தேன், அதுவும் துள்ளியபடி கூடவே வர ஆரம்பித்துவிட்டது. போய் பார்த்தால் சங்கிலியால் இரும்பு கதவுகள் பிணைக்கப்படிருந்ததே தவிர பூட்டப்படவில்லை, சங்கிலிகளை எடுத்துவிட்டு, கதவின் ஒரு பக்கத்தை மட்டும் திறந்து, உள்ள போடா கண்ணா என்றவுடன் உற்சாகமாக ஆடு உள்ளே ஓடிவிட்டது. மீண்டும் கதவை மூடி சங்கிலிகளைப் பிணைத்துவிட்டு வீடு வந்தவுடன் சிறிது நேரம் வீட்டின் மாடத்தில் நின்று அந்த தோட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது எங்கோ எப்பொழுதோ படித்த ”நீ ஒரு உயிரை நேசிப்பது நிஜமெனில் அதை சுதந்திரமாய் பறவையைப் போல் பறக்க விடு. அது உன்னை நேசிப்பது நிஜமெனில் உன்னிடமே திரும்பி வரும்” என்கிற கவிதை மூளையின் ஞாபக அடுக்குகளில் வந்து போனது, மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916