வாசிப்பும், வாசிப்பின் ஒலியும்…
ராஸலீலா – சாரு நிவேதிதா 639 பக்கம் (202வது பக்கம்)
வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் – விக்டர் பிராங்கல் 189 பக்கம் (63வது பக்கம்)
நான் தான் ஒளரங்கசீப் – சாரு நிவேதிதா அத்தியாயங்கள் இன்னும் தொடர்கின்றன (19வது அத்தியாயம்)
மேலே குறிப்பிட்டிருப்பது தற்பொழுது என்னுடைய வாசிப்பில் இருப்பதைத் தான், அந்த வாசிப்பில் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை அடைப்புக் குறிக்குள் கொடுத்திருக்கிறேன். இதெல்லாம் போக இணைய பக்கங்களின் வழியே வாசிப்பது தனி. இதெல்லாம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, கடந்து சில நாட்களுக்கு முன் முடிந்த பதிமூன்றாம் தேதி சாரு தன்னுடைய இணைய பக்கத்தில் எழுத்தாளர் வளன் எழுதி அரூ இணைய பக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான கார்தூஸியர்களின் பச்சை மது என்கிற கதையை, சாரு குறிப்பிட்ட நாளின் இரவு க்ளப் ஹவுஸில் பாத்திமா பாபு அவர்கள் வாசிக்கிறார், நானும் கலந்து கொள்வேன் வாருங்கள் இரவு சந்திப்போம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதே போல் ஏற்கனவே ஒரு முறை என்னுடைய நாவலை பாத்திமா பாபு வாசிக்கிறார் என சாரு சொல்லியிருந்த போது, அன்றைய வாசிப்பில் க்ளப் ஹவுஸில் தாமதமாக போய் இணைந்து ஒரு மிக முக்கியமான வேலை பளு காரணமாக பதினைந்தே நிமிடங்களில் வெளிவர வேண்டியதானது. அதே போல் இந்த முறையும் சாரு குறிப்பிட்டிருந்த பதிமூன்றாம் தேதிக்கு அடுத்த நாள் தான் அவரின் இணையப் பக்கத்தில் சாருவின் அழைப்பைப் போய் பார்த்தேன். சரி இந்த முறையும் நமக்குக் கொடுப்பினை இல்லை என நினைத்துக் கொண்டே, பாத்திமா பாபுவின் குரலில் அந்தக் கதையை கேட்க முடியாவிட்டால் என்ன, நேரடியாக நாமே வாசித்து விடலாம் என சாரு கொடுத்திருந்த கதைக்கான இணைய சொடுக்கின் வழியே போய் கார்தூஸியர்களின் பச்சை மது கதையை வாசிக்க ஆரம்பித்தேன். இதற்கு முன்னர் இந்த கதையை வாசித்திருக்கவில்லை. இது தான் முதல் முறை, கதையை இயல்பாக வாசிக்க ஆரம்பித்தேன். நான் வாசித்துக் கொண்டிருந்தது என் அலுவல்களுக்காக பயன்படுத்தும் கொஞ்சம் பெரியதான கணினியின் திரையில்.அந்தக் கதையை வாசித்து முடிக்கையில் பாத்திமா பாபுவின் குரலில் இந்தக் கதையை கேட்காமல் விட்டது தான் மிகச் சரி என எனக்குத் தோன்றிவிட்டது. அப்படித் தோன்றியதற்கு சில காரணங்கள் இருந்தன, கார்தூஸியர்களின் பச்சை மது கதையை வாசிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே உட்கார்ந்திருந்த இருக்கையில் இருந்து கணினியின் திரையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் நகர ஆரம்பித்திருந்தேன்.
காரணம், இந்தக் கதை கொடுத்த ஒருவிதமான பரபரப்பான சுவாராஸ்யமும், அந்த கதை சொல்லப்பட்ட விதமும் அப்படியானது. அந்தப் பரபரப்பின் உச்சத்திற்கு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமெனில், கதையை வாசித்துக் கொண்டிருந்த போது என்னுடைய அறைக்குள் என்னிடம் ஏதோ சந்தேகம் கேட்க வந்த நபரை நான் ஏறிட்டு பார்த்த பார்வையிலேயே, அந்த நபர் நீங்க ஏதோ முக்கியமான வேலையில இருக்கீங்க போல அப்புறமா கேட்டுக்கிறேன் என வந்த வேகத்தில் வெளியே போய்விட்டார். அப்படியான பரப்பரப்போடு முழுவதுமாய் வாசித்து முடிக்கையில் கார்தூஸியர்களின் பச்சை மது என்கிற அந்த மொத்த கதையும் என்னை முழுமையாய் ஆக்கிரமித்திருந்தது. இதில் குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. ஒரு கதையை நான் வாசிக்கையில் எவ்வளவு நேரத்தில், எப்படியான மனநிலையில், எப்படியான உச்சரிப்பில் வாசிக்கிறேன் என்பது எனக்கு முக்கியமானது. இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கொடுத்துள்ள மூன்று புத்தகங்களும் வெவ்வெறு களத்தினைக் கொண்டவை. ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாதவை. அந்தந்த நேரத்து மனநிலையைப் பொறுத்து ஒவ்வொன்றையும் தேர்தெடுத்து வாசிப்பது என்னுடைய பாணி. சில நேரம் பத்தேப் பக்கம் தான் வாசிக்கும் சூழல் வாய்க்கும், சில நேரங்கள் 200 பக்கங்கள் கூட வாசிப்பேன், இப்படித்தான் என்னுடைய வாசிப்பின் பாணி இருக்கும். இப்படியான வாசிப்புத் தான் எனக்கு உகந்ததாக இருக்கிறது. இது எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்குமா எனத் தெரியவில்லை. இவையெல்லாவற்றையும் விட மிக முக்கியமான காரணம் ஒன்று, இனி எக்காரணத்தை கொண்டும் கதை வாசிப்பவரின் குரலில் கதையோ, நாவலோ கேட்கவே கூடாது என்கிற மனநிலையை கார்தூஸியர்களின் பச்சை மது என்கிற கதை என் மனதுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.
அப்படி எனக்குள் ஒரு எண்ணம் ஏற்பட அடிப்படைக் காரணம் கதை வாசிப்பவரின் குரல். சாரு ஏற்கனவே அவருடைய நாவலை பாத்திமா பாபு வாசிக்கையில் மிகச் சிறப்பாக, அற்புதமாக வாசித்தார் எனச் சொல்லியிருக்கிறார். எல்லாம் சரி, ஆனால் அப்படி வாசிப்பவரின் குரல் என்னுடையது இல்லையே, அது தான் எனக்கு இடிக்கிறது. இது என்ன முட்டாள்தனமான வாதமாக இருக்கிறது வாசிப்பவரின் குரல் எப்படி உன்னுடைய குரலாக இருக்க முடியும் எனக் கேட்டால், கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக என்னுடைய வாசிப்பு பழக்கத்தின் வழியே என்னுடைய குரல் எனக்குள் ஆழமாய் ஊடுருவி இருக்கிறது. அந்தக் குரலில் உள்ள லயம் ஒரு விதமான அலைவரிசையில் என்னுடன் பின்னிப் பிணைந்து கலந்திருக்கிறது. அப்படியிருக்கையில் இன்னொருவரின் குரலின் வழியே ஒரு கதையை கேட்பது என்பது கண்டிப்பாக என்னுடைய அடி ஆழம் வரை போக முடியாது. உதாரணமாக கார்தூஸியர்களின் பச்சை மதுவையே எடுத்துக் கொள்வோம் என்னுடைய வாசிப்பின் வழியே அந்த கதையுடன் பயணிக்கையில் என்னுடைய கற்பனைக்குள் அந்த கதையுடைய உலகம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. நான் அந்த உலகத்தில் ஒருவனாக பிரதானக் கதாபாத்திரமாக மாறிக் கொண்டே வந்து முடிவில் இந்தக் கதை ஏற்படுத்தும் ஒருவித அதிர்வுடன் முடிகையில், அந்தக் கதை கொடுத்த அதிர்வை என்னால் என்னுள் உணரமுடிகிறது. இத்தகைய அதிர்வும், மாற்றமும் வேறு ஒருவரின் குரலின் வழியே எனக்குள் நிகழ வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்டால் கண்டிப்பாக வாய்ப்பேயில்லை. இதனை முழுவதுமாய் உணர்ந்தே சொல்கிறேன், அதுவும் போக கார்தூஸியர்களின் பச்சை மது ஒரு முறை மட்டுமே வாசித்துக் கடந்து விடக்கூடிய கதையும் அல்ல. இதற்காகவே இந்தக் கட்டுரை எழுதுவதற்கு முன்னதாக என்னுடைய அலைபேசியில் க்ளப் கவுஸில் கடந்து பதிமூன்றாம் தேதி பாத்திமா பாபு குரலில் வாசிக்கப்பட்ட கார்தூஸியர்களின் பச்சை மது கதையைத் தேடி எடுத்துக் கேட்டேன். ஆனால் அவரின் குரலோடு கார்தூஸியர்களின் பச்சை மது கதைக்குள் என்னால் பயணிக்க இயலவில்லை. மற்றொரு வேறுபாட்டையும் என்னால் உணர முடிந்தது. வேறு ஒருவரின் குரலில் கதை வாசித்துக் கேட்கையில் அந்தக் குரலை கவனிப்பதிலேயே மனம் போகிறது, இதனால் அந்தக் கதை உருவாக்கும் நிலப்பரப்பை என்னால் என்னுள் உருவாக்க இயலவில்லை. இவை எல்லாமே என்னுடைய அனுபவம் மட்டுமே. இதனை வாசிப்பவர்கள் மேலே சொல்லியுள்ள என்னுடைய கருத்துடன் முரண்படலாம் அதற்கும் வாய்ப்பிருக்கிறது. என்னளவில் வாசிப்பும், வாசிப்பின் ஒலியும் இரண்டுமே என்னுடையதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அதுவே என்னை எனக்கு மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது, ஒரு சின்ன உதாரணத்துடன் முடிக்கிறேன். குடைக்குள் இருந்து மழையை ரசிப்பதை விட, மழைக்குள் கரைந்து மழையை ரசிப்பது தான் எனக்குப் பிடித்திருக்கிறது, என் மேல் விழும் மேகத்தின் துளிகள் கொடுக்கும் சிலிர்ப்பை என் தேகம் உணர்க்கையில் கிடைக்கும் அனுவத்தை வேறு எதனுடன் ஒப்பிட முடியாது. மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916