கலக்கல் கலாவதி…
அதென்ன கலக்கல் கலாவதி, பார்க்கலாம். ஒரு பக்கம் அரபிக் குத்து கொல குத்து குத்திக் கொண்டிருக்கிறது. சாருவும் தன் முகநூல் பக்கத்தில் அதனைப் பற்றி எழுதிவிட்டார் அரபிக் குத்து வருவதற்கு முன்பாகவே, அந்தப் பாடலினை பற்றி வெளிவந்த முன்னோட்டம் என்னவோ ரசிக்கும்படியாகவே இருந்தாலும், இவர்கள் முன்னோட்டம் என்கிற பெயரில், அந்தப் பாட்டில் இருந்த சுவாரஸ்யத்தை எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற அளவுக்கு, இவர்களாகவே ஊருக்கெல்லாம் டமாரம் அடித்து சொல்லிவிட்டார்கள். அதனால் முன்னோட்டத்தில் என்ன சொல்லப்பட்டதோ அதனைத் தாண்டி பாடலில் எதுவுமில்லை. பாடல் துள்ளல், ரகளை எல்லாம் சரி. ஆனால் ஆச்சர்யமான சுவாரஸ்யம் ஏதாவது தென்பட்டதா என்றால் என்னளவில் இல்லை. அந்தப் பாடலின் பாணி என்ன வகைமையில் இருக்கும் எனச் சொல்லப்பட்டதோ அதனைப் போலவே இருந்தது. ஆனால் இந்தப் பாடலுக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது காதலர் தினத்துக்கு முன்னதாக ஒரு பாடல் தெலுங்கில் வெளியானது. அந்த தெலுங்கு பாடலுக்கும் முன்னதாகவே, முடிந்த பதினோராம் தேதியே முன்னோட்டமும் வெளியாகி இருந்தது. நான் அந்த முன்னோட்டத்தையும் கேட்டிருந்தேன். அதில் வழக்கமான பெண்கள் குழுவின் சேர்ந்திசையும், சித்ஶ்ரீராமின் குரலும் மட்டுமே இருந்தது. அதனைக் கேட்டவுடன் எனக்கு முதலில் தோன்றியது, இந்தப் பாடல் மற்றுமொரு சித்ஶ்ரீராமின் பாடல் என்பது தான். அதற்கேற்றார் போல் சில நாட்களுக்கு முன்னதாக, ஜெகன் வேறு மேடையில் சித்ஶ்ரீராமின் குரலை வைத்து ஒரு நகைச்சுவை பேச்சை காணொளியாக இணையத்தில் பதிவேற்றி இருந்தார். ஆனாலும், இதனையெல்லாம் தாண்டி, அந்த தெலுங்குப் பாடலின் முன்னோட்டத்தில் ஒரு சின்ன ஈர்ப்பு இருந்ததென்னவோ உண்மை. சரி பாடல் வரட்டும் எனக் காத்திருந்தேன், பிப்ரவரி பதிமூன்றாம் தேதி பாடலும் வெளியானது.
சரிப் பாடலின் காணொளியை ஓடவிட்டு ஒலிவாங்கியை காதில் பொருத்தினால் மிக சாதாரணமாக வழக்கமான சித்ஶ்ரீராமின் குரலில் பாடல் ஆரம்பமாகியது. பியானோ, எலக்ட்ரிக் கிடார் என ஆரம்பித்த அந்தப் பாடல், 46வது நொடியில் இருந்து தனக்குள் ஒளித்து வைத்திருந்த சுவாராஸ்யத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்க, அட என சுவாரஸ்யம் கலந்த ஒருவிதமான சின்ன ஆச்சர்யத்தோடு கேட்க ஆரம்பித்தேன். அந்த ஆச்சர்யத்தை கடைசி வரை தக்க வைத்தபடியே இருந்தது அந்தப் பாடல், அந்த ஆச்சர்யம் வெறுமனே இசையில் மட்டுமே வெளிப்படாமல், படமாக்கப்பட்ட விதத்திலும் வெளிப்பட்டது தான் மிகச் சிறப்பான சம்பவம். இந்த தெலுங்கு பாடலுடைய முழுப்பாடலின் காணொளியும் வெளியாக விட்டாலும், பாடலின் வரிக்களுக்கு இடையில் சின்ன துணுக்குகளாக வெளிப்பட்ட பாடலுக்காக படமாக்கப்பட்ட காணொளியும், அட்டகாசமாக, ரகளையாக இருந்தது மற்றொருமொரு சுவாரஸ்யம். அதுவும் போக பாடலின் காணொளியில் பாடலுக்காக பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவங்களுக்கும், அந்த எழுத்துக்கள் தோன்றும் பின்னனிக்கும் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள், அதனைப் பயன்படுத்திய விதம் என எல்லாமே அட்டகாசம். பொதுவாக தெலுங்கு திரைப்படங்களின் பாடல்கள், பெரும்பாலும் மிகப் பெரும் உள் அரங்குகளில் தான் படமாக்கப்படும். விதிவிலக்காக சில நேரங்களில் வெளிபுற படபிடிப்புக்கு வெளிநாட்டிற்கு போவார்கள். அப்படி போகையிலும் பாடலின் பின்னனியோ நடனமாடுபவர்களோ பெரிய சுவாரஸ்யத்தை கொடுப்பதில்லை. ஆனால் இந்தப் பாடலில் அதுவுமே அதகளமாய் இருந்தது தான் சிறப்பு. சரி இதற்கு மேல் தாங்காது என்பதால் அது என்ன பாடல் எனச் சொல்லிவிடுகிறேன்.
அந்தப் பாடல் மகேஷ் பாபுவின் நடிப்பில் 2022 மே மாதம் வெளியாகப் போகும் Sarkaru Vaari Paata என்கிற திரைப்படத்துக்காக வெளியிடப்பட்ட முதல் பாடல் தான் அது. பாடலின் பெயரே கலாவதி(Kalaavathi) தான். கலாவதி பாடல் மேலே சொல்லியிருந்தது போல் 46வது நொடியில் பியானோவில் இருந்து அப்படியே தவிலுக்கு மாறி அதகளமாய் பயணித்தபடி போய்க் கொண்டிருக்கும் போது, மீண்டும் 2:46வது நொடியில் மீண்டும் தாளம் என்கிற இசைக்கருவியின் தாளத்தில் அப்படியே மீண்டும் உள்ளிழுத்து பயணிக்கும் பாருங்கள் அது செம்ம. இந்த பாடலின் இசையமைப்பாளர் தமன். தமன் சமீப காலங்களின் அட இது செம்மமல என சில ஆச்சர்யங்களை கொடுத்துவிடுகிறார். அப்படியான சமீபத்திய உதாரணம் எனிமியில் வந்த டும் டும் பாடல். அதன்பின் இந்தப் பாடலைச் சொல்லலாம். இன்றைக்கு வெளிவரும் பெரும்பாலான பாடல்கள் ரகளையாக இருக்கின்றன. ஆனால், அட செம்மமல என ஆச்சர்யமான சுவாரஸ்யத்தை ரசிக்கும்படியாக நமக்குள் கடத்துகின்றனவா என்றால் பெரும்பாலும் இல்லை. ஆனால் கண்டிப்பாக கலாவதி என்னளவில் சுவாரஸ்யமான ஆச்சர்யம் தான். இறுதியாக கலாவதி பாடல் பாடமாக்கப்பட்ட பின்னனி பற்றி விளக்கமோ, இசைக் கோர்வைக்குள் ஒளிந்திருக்கும் வேறு பல இசைக்கருவிகளை பற்றி எழுதுவதையோ தவிர்த்திருக்கிறேன். அதனையெல்லாம் நீங்களே கேட்டும், பார்த்தும் ரசியுங்கள். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916