வாழ்ந்து பார்த்த தருணம்…180

யூதாஸின் நற்செய்தி…

கார்தூஸியர்களின் பச்சை மது கதையைப் பாத்திமா பாபு கிளப்ஹவுசில் வாசிப்பதாக சாரு தன் இணையப் பக்கத்தில் 2021, டிசம்பர் 13 பகிர்ந்திருந்தார். அதனைப் பார்த்த அன்றே அந்த கதையை அரூ இணையதளத்தில் போய் வாசித்து விட்டு ஒரு பதிவு எழுதியிருந்தேன். அது என்னுடைய 156வது பதிவு. சாரு கார்தூஸியர்களின் பச்சை மது கதையைப் பற்றிச் சொல்லியிருந்த அதே நேரம் வளனின் யூதாஸ் நாவலைப் பற்றியும் சொல்லியிருந்தார். கார்தூஸியர்களின் பச்சை மது ஏற்படுத்தியிருந்த தாக்கத்தில் யூதாஸ் நாவலையும் உடனடியாக வாசிக்க வேண்டும் என்கிற உந்துதல் காரணமாக, யூதாஸ் நாவலை தேடினால் நான் இப்பொழுது இருக்கும் பகுதியில் எங்கும் கிடைக்கவில்லை. சரியென விட்டுவிட்டேன். சிறிது நாட்கள் கழித்து சென்னை புத்தகக் கண்காட்சி நேரம் என நினைக்கிறேன். உடனடியாக சென்னையில் இருக்கும் நண்பன் ஒருவனிடம் விஷயத்தை சொல்லி எனக்காக அந்தப் புத்தகத்தை வாங்கி யார் மூலமாவது அனுப்ப முடியுமா எனக் கேட்டேன். அவன் எனக்கும் ஊரில் ஒரு வேலை இருக்கிறது நானே வருகிறேன். அதனால் நானே கொண்டு வந்துக் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி, கொண்டு வந்து கொடுத்தும் விட்டான். அந்த நண்பனின் பெயர் சிவா. புத்தகம் கைக்கு வந்தவுடன் ஒரே மூச்சில் வாசித்தும் முடித்தாயிற்று. அதனைப் பற்றி எழுத வேண்டும் என்கிற செயல் தான் வழக்கம் போல் நடக்கவில்லை. வேலைச் சூழல் எனச் சொல்லலாம், ஆனால் அதனை என் மனசாட்சியே நம்பாது என்பதால், உண்மையான காரணம் வேறு என்ன சோம்பேறித்தனம் தான். எழுத்து என்று வரும் போது அதற்கான மெனக்கெடல், யோசனை எல்லாவற்றின் மீதும் கவனம் குவிக்க வேண்டி இருப்பதால். அதற்குரிய ஆற்றலைக் கொடுப்பதற்கு யோசித்துக் கொண்டே அப்புறம் எழுதலாம் எனப் பல நேரங்களில் சோர்வான சிந்திக்கத் தூண்டாத சோம்பேறித்தனம் தான் தடையாக வந்துவிடுகிறது.

சரி யூதாஸிற்குள் போகலாம், பொதுவாக வளனின் யூதாஸை பற்றி கொஞ்சம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் கிறிஸ்துவத்தின் அடிப்படையான இயேசுவின் வரலாறும், அதில் யூதாஸின் இருப்பும் பற்றித் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். அந்த வகையில், நான் என்னுடைய பள்ளி பருவ காலங்களில் ஒரு ஆறு வருடங்களை கிறிஸ்துவ பள்ளிலேயே படித்தேன் என்பதால் அதன் அடிப்படை தெரிந்தே வளர்ந்தேன், அந்நாட்களில் ஞாயிறு ஆனால் தேவாலயம் செல்லும் பழக்கமும் என்னிடமிருந்தது. விவிலியத்தையும் வாசித்திருக்கிறேன். அந்நாட்களில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாகவும் பல முறை பார்த்திருக்கிறேன். அதன் அடிப்படையில் யூதாஸிற்கு கடவுளிடம் மன்னிப்பே கிடையாதா?. கிடையாது எனில், ஏன் கிடையாது என்கிற கேள்வி என்னை பலமுறை யோசிக்க வைத்திருக்கிறது. மனித மனம் என்பது எப்பொழுதுமே தனக்கு தானே நல்லவன் என நிருபித்துக் கொள்ள வேண்டிய ஒரு வித அழுத்தத்தோடு கூடிய கட்டாயத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே அதற்கு ஒரு பலி ஆடு தேவை. அப்படி யாராவது மாட்டிவிட்டால் கெட்டதின் மொத்த உருவமாக அவனைக் காட்டி விட்டு தன்னை நல்லவனாக நிலை நிறுத்திக் கொள்ளும். மற்றவனை கெட்டவனாக காட்டிக் கொள்வதின் அச்வழியே தன்னை நல்லவனாக நிலை நிறுத்திக் கொள்வதில் மனித மனதுக்கு இணையான ஒன்று இந்த உலகத்திலேயே கிடையாது. அப்படி மாட்டிய பலியாடு தான் யூதாஸ். யூதாஸின் மீது இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன் என்கிற மிகப் பெரும் குற்றச்சாட்டை சுமத்துவதன் வழியே தன்னை யோக்கியவானாக காட்டிக் கொண்டது இந்த மனித சமூகம். அதனால் தான் ஜி. நாகராஜன் சொல்லியது போல் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல். உண்மையில் யூதாஸ் மீது சுமத்தப்பட்ட இயேசுவையே காட்டிக் கொடுத்தவன், கெட்டவன், அயோக்கியன் என்கிற பிம்பம் சரியானதா, அப்படியெனில் யூதாஸின் மீது குற்றம் சுமத்தும் நாமெல்லாம் யோக்கியவான்களா? என்கிற கேள்வியை மையச்சரடாக வைத்துத் தான் யூதாஸ் என்கிற மொத்த நாவலும் எழுதப்பட்டிருக்கிறது.

வெறும் 30 வெள்ளிக் காசுக்காக இயேசுவை காட்டிக் கொடுத்தவரா யூதாஸ் என்றால், ஒரு கோணத்தில் அது தான் சரி என வைத்துக் கொள்வோம். இப்பொழுது மீதமிருக்கும் இயேசுவின் 11 சீடர்களுக்கும் யூதாஸிற்கு கிடைத்த அதே 30 வெள்ளிக் காசு என்கிற வாய்ப்பு தரப்பட்டிருந்தால், அதனை அவர்கள் மறுத்திருப்பார்களா என்கிற கேள்விக்கு விடை இங்கே யாரிடம் இருக்கிறது என்று கேட்டால், எல்லோரிடம் இருக்கிறது. ஆனால் உண்மையை சொல்ல மாட்டோம். அதனைத் தாண்டி இயேசுவின் வாழ்வில் நடந்த மிக முக்கியமான நிகழ்வும். அதற்கு இயேசு சொன்ன தீர்ப்பும் இங்கே மிக, மிக முக்கியமானது. அந்த நிகழ்வு ஊரே சேர்ந்து பாலியல் தொழிலாளி ஒருத்தியை கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும் என இயேசுவின் முன் கத்திக் கொண்டிருக்கையில் அவர் அமைதியாக, உங்களில் பாவம் செய்யாதவன் இவள் மேல் முதல் கல்லை எறியட்டும் என்று சொல்கிறார். அதன்பின் ஒரு கல் கூட அவளின் மேல் வீசப் படவில்லை. ஆனால் யூதாஸின் மீது இன்றைக்கு வரை வரலாறு முழுவதும் இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன் என்கிற கல் வீசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படியெனில் நாமெல்லாம் பாவம் செய்யாதவர்களாக மாறிவிட்டோமா என்ன? இல்லை, நாம் செய்த, செய்து கொண்டிருக்கும் பாவங்களை மறைக்க யூதாஸின் மீது தொடர்ந்து கல்லெறிந்து கொண்டே இருக்கிறோம். ஒரு வேளை நாம் கல்லெறிவதை நிறுத்தினால் நம் பாவங்கள் வெளியே தெரிந்துவிடும். ஒரு வகையில் யூதாஸ் என்கிற வளனின் இந்த நாவல் என்னுள் பலவருடங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருந்த யூதாஸிற்கு கடவுளிடம் மன்னிப்பே கிடையாதா? என்கிற கேள்விக்கு மிக, மிக சிறப்பானதொரு முக்கியமான பதில் சொல்லியிருக்கிறது. நான் மட்டுமல்ல இங்கே எல்லோருமே கல்லெறிவதற்கு முன் நாம் பாவம் செய்திருக்கிறோமா என்கிற சுயவிமர்சனதோடு இந்த நாவலை வாங்கி வாசித்தல் நலம். அப்படி ஒரு மனநிலையோடு யூதாஸ் என்கிற நாவலை வாசிக்கையில் நம் கையில் கல் இருக்குமா என்கிற கேள்வி எனக்கு மிக முக்கியமானதாக படுகிறது. நம் கைகளில் கல் இருக்குமா, இருக்காதா என விருப்பமிருப்பவர்கள் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916