வதை…
ஒரு நபரை முக்கியமான தகவல் ஒன்றுக்காக அலைப்பேசியில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். அது என்ன தகவல் என்றால், ஒரு வீட்டில் ஒரு வயதான நபரை பார்த்துக் கொள்ள முடியாமல், ஒரு இல்லத்தில் சேர்க்க வேண்டிக் கேட்டிருந்தார்கள். காரணம், அந்த வீட்டில் வயதானவரை பார்த்துக் கொள்ள வேண்டிய இருவருக்குமே உடல் நலனில் கடும் பிரச்சனை. அதில் ஒருவருக்கு பெரிய அறுவை சிகிச்சை வேறு நடந்திருந்தது. அத்தோடு சேர்த்து இவரையும் பார்த்துக் கொள்வதில் மிகுதியான சிரமம் இருப்பதால், இந்த விசாரணை ஓடிக் கொண்டிருந்தது. அலைப்பேசியில் என்னுடன் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்தவர் சொன்ன தகவல்களில் முக்கியமானவற்றை பார்க்கலாம். ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் ஆகும் சார். மருந்து செலவுக்குத் தனியாக கொடுத்திரணும். டோக்கன் அட்வான்ஸ் இருபது ஆயிரம் ரூபாய். குளோஸ் பண்ணும் போது ஐய்யாயிரம் தான் திருப்பிக் கொடுப்போம். உங்களுக்கு ஒகேன்னா இந்த நம்பருக்கே திரும்ப கூப்பிடுங்க என் பெயர் ………. எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார். இதில் “குளோஸ்” பண்ணும் போது ஐய்யாயிரம் ருபாய் மட்டுமே திருப்பி கொடுக்கப்படும் என்பதற்கான அர்த்தத்தை நீங்களே உங்கள் அனுபவத்தில் இருந்து புரிந்து கொள்ளுங்கள். பேசி முடித்துவிட்டு வழக்கமான அலுவல்களுக்கு வீட்டில் இருந்து கீழ் இறங்கி வந்தால், ஒரு தகவல் நேத்து ஒரு குட்டி நாய அடிச்சி போட்டுட்டு போயிட்டாங்க, அத, அதோ அங்க இருக்க, இப்ப நட்டு வச்சம்ல அந்த மரத்துக்கு கிட்ட தூக்கி போட்டிருக்காங்க எனத் தகவல் சொன்னார்கள். அவர்கள் சொன்ன இடத்தில் பார்த்தால் நேற்று என் கண்முன்னே குட்டியாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த ஒரு உயிர் இன்று வெறும் உடலோடு சலனமில்லாமல் கிடந்தது. அதனைப் பார்த்துவிட்டு அமைதியாக என்னுடைய வாகனத்தை எடுத்து, அதனைச் சொடுக்கி விட்டு, அந்த இடத்தை விட்டு வேகமாகக் கிளம்பினேன். மனம் எங்கெங்கோ அலைந்தபடியே இருந்தது. இப்படித் தான் சில மாதங்களுக்கு முன் ஒரு நீயா நானா விவாதத்தில் ஒரு பெண், நான் கார்ல வேகமாக போகும் போது நாய் குறுக்க வந்தா, நான் பேசாட்டுக்கு அடிச்சுப் போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன். அதுக்காக வருத்தப்பட்டுட்டு இருக்க முடியாது இல்லையா. எனக்கு என்னோட சேப்டி முக்கியம் எனச் சொன்னார். அந்த பேச்சுக்கு அந்த விவாதத்தில் சொல்லப்பட்ட விளக்கம், பக்கா பிராக்டிக்கலா பேசுராங்கப்பா அவங்க என்பதாக இருந்தது. இவையெல்லாம் மனதுக்குள் ஒரு வித வதை உணர்வை மேல் எழுப்பிக் கொண்டே இருந்தது.
இதனை மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஜெயமோகனின் யானை டாக்டர் சிறுகதை மனதிற்குள் வந்து போனது. ஏற்கனவே பலமுறை வாசித்தது தான் என்றாலும், இப்பொழுது இருக்கும் மனநிலையில் மீண்டும் அதனை வாசிக்க வேண்டும் எனத் தோன்றவே மீண்டும் ஜெயமோகனின் தளத்திற்கே போய் யானை டாக்டரை தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு இடம் அதனை அப்படியே கிழே தருகிறேன்.
“நான் பெருமூச்சுடன் ‘அந்த நாய் உங்கள அடையாளம் கண்டது அமேஸிங்கா இருந்தது…’ என்றேன். ‘நாய்னா என்னன்னு நினைச்சே? சச் எ டிவைன் அனிமல்…மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கெடையாது பகுத்தறிவு கெடையாது. அவனோட எச்சப்புத்தியிலே ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டுபண்ணி வச்சிருக்கானே அதில மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்ஸென்ஸ்…’ டாக்டர் கே முகம் சிவந்தார். ‘பைரன் கவிதை ஒண்ணு இருக்கு. ’ஒரு நாயின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகம்’ . படிச்சிருக்கியா?’
‘இல்லை’ என்றேன். அவர் காட்டையே சிவந்த முகத்துடன் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு திடீரென்று மந்திர உச்சாடனம் போலச் சொல்ல ஆரம்பித்தார். ‘When some proud son of man returns to earth, Unknown to glory, but upheld by birth..’ நான் அந்த அவ்வரிகளை அவரது முகமாகவே எப்போதும் நினைத்துக்கொள்வேன்.”
மேலே சொல்லியுள்ளதை வாசித்துக் கடக்கையில் மனம் கதறிவிட்டது. அந்த கதறலோடே மொத்த சிறுகதையையும் வாசித்து முடிப்பதற்குள் நிறையவே அழுதிருந்தேன். மொத்த சிறுகதையையும் வாசித்து முடித்துவிட்டு, உட்கார்ந்திருந்த இருக்கையில் தலையைப் பின்னால் சாய்த்து அமர்ந்திருந்தேன். கண்களின் ஓரத்தில் நீர் வழிந்து ஓடியபடியே இருந்தது. என் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்த வதைக்கு அது தேவையாய் இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு உடல் மனம் இரண்டும் ஆசுவாசமானது. யோசித்துப் பார்த்தால் டாக்டர் கே குறிப்பிட்ட “மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான்” எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் எனத் தோன்றியது. யானை டாக்டர் சிறுகதையை ஒவ்வொரு முறை மீள் வாசிப்பு செய்யும் போதும், ஒரு குறிப்பிட்ட இடத்தை இரண்டு மூன்று முறையேனும் திரும்ப திரும்ப வாசிப்பேன், அது டாக்டர் கேவுக்கும், வனத்துறை அதிகாரிக்கும் இடையே நடக்கும் ஒரு விவாதம். காட்டைப் பற்றியும் அதிகாரத்திற்கு பின்னால் அலையும் மனிதனைப் பற்றியும், அவனது கேவலமான கீழ்மைகள் பற்றியதான விவாதம் அது. ஒவ்வொரு முறையும் இருவரது உரையாடலை வாசிக்கும் போதும், மனிதனின் கீழ்மைகள் குறித்து நிறைய மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும். ஒரு இடத்தில் உன்னை இந்த நாட்டின் ஜானதிபதி, பிரதமர் போன்றவர்களுக்கு தெரியும் என்பதை விட வெளியே நிக்குற செல்வா என்கிற யானைக்குத் தெரியும் என்பது எவ்வளவு உயர்வான விஷயம், அவன விடவா பெரிய சொந்தக்காரன் இருக்கப் போறான். அற்பதனமே இல்லாத அந்த கடல் மாதிரி மனசுக்கு முன்னால மனிதனெல்லாம் ஒண்ணுமேயில்ல எனச் சொல்வார். சத்தியமான வார்த்தைகள்.
யானை டாக்டர் சிறுகதையில் வாசித்த மறக்கமுடியாத வாசகம் ஒன்று உண்டு, அது, பிச்சைகாரனின் தட்டில் விழுந்த தங்க நாணயத்தைப் போல் என்கிற வாசகம், வாசிப்பு என்பது என்னளவில் இந்த முட்டாள் பிச்சைகாரின் தட்டில் விழுந்த தங்க நாணயத்தைப் போலத் தான். காரணம், நான் மீள் வாசிப்பு செய்யும் வாசிப்புக்கள் அனைத்தும் மனிதனின் கீழ்மைகளில் இருந்து என்னை விலக்கியே வைத்திருக்கின்றன, அதில் மிக முக்கியமான மீள் வாசிப்புகள் சாருவின் தொழுகையின் அரசியல், கர்மா – 1, கர்மா – 2, ஜெயமோகனின் யானை டாக்டர், அறம், சோற்றுக் கணக்கு போன்றவைகள் முக்கியமானவை. இப்படியான மீள் வாசிப்புத் தான், இன்றளவும் என்னை பல நேரங்களில் டாக்டர் கே குறிப்பிட்டது போல் கீழ்மையான மனிதனாக மாறவிடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறது. பல நேரங்களில் வாசிப்பு என்பது ஒரு வகை வதை தான். ஆனாலும் அந்த வதை என் தட்டில் விழும் தங்க நாணயத்தைப் போல, அது தான் என்னைப் பற்றி, என் கீழ்மைகள் பற்றி பலவிதமான புரிதல்களை எனக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது. என்னளவில் தன்னைப் பற்றி முழுமையாக உணராத அல்லது உணரத் தயாராக இல்லாத எந்த ஒரு மனிதனும், சக உயிர் மீது கவனம் செலுத்துவானா என்பதே மிகப் பெரும் கேள்விக்குறி தான். அதனையும் தாண்டி சில வருடங்களுக்கு முன் ஒரு முக்கியமான உளவியல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தேன், அந்த வகுப்பில் நம் மனதிற்குள் நம்மை வதைத்துக் கொண்டிருக்கும், கடந்த கால நிகழ்வுகளிலிருந்து சில குறிப்பிட்ட பயிற்சியின் வழியே வெளிவருவதற்கான வழி முறைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. ஆனால் நான் அதனைப் பயிற்சி செய்யவே இல்லை. காரணம் சாட்சியாய் இரு என்கிற எனது 185வது கட்டுரையில், நான் குறிப்பிட்ட அந்த கோழி குஞ்சின் இறப்பு இன்று வரை எனக்குள் எங்கோ ஒளிந்திருந்து வதைத்தபடியே இருக்கிறது. ஆனாலும், அந்த வதை ஏதோ ஒரு வடிவத்தில் என்னுள் சக உயிர்கள் மீதான நேசத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது, அதனையும் தாண்டி, அந்த நேசத்தை என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கும் கடத்துகிறேன். நீங்கள் உங்களின் வதையை ரசிக்கத் தயாராயிருந்தால், அதிலிருந்து கற்றுக் கொள்ளத் தயாராக இருந்தால், அந்த வதை உங்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆயிரம் இருக்கிறது. அந்த வதை சொல்லிக் கொடுப்பது போல் வேறெதுவும் உங்களுக்குச் சொல்லிக் கொடுக்க முடியாது. மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916