வாழ்ந்து பார்த்த தருணம்…192

த அவ்ட்ஸைடர் (The outsider)

கடந்த 18ம் தேதி விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா மாலை 5:30 மணிக்கு சாருவுக்கு விருது கொடுக்கும் நிகழ்வுக்கு முன்னதாக சாருவைப் பற்றி அராத்து இயக்கியுள்ள த அவ்ட்ஸைடர் ஆவணப்பட திரையிடலுக்கு ஒரு முப்பது நிமிடங்கள் முன்னதாகவே இருக்கையில் போய் அமர்ந்தாயிற்று. விஷ்ணுபுரம் வட்டத்தில் சாருவின் ஆவணப்படம். அதுவும் அங்கே தான் முதல் முறையாக திரையிடப்படுகிறது என்பது சாருவின் ரசிகனுக்கு எப்பேர்ப்பட்ட உணர்வைக் கொடுக்கும் என்பதை அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியது. முதலில் விஷ்ணுபுரம் வட்டத்துக்கு நன்றிகள் பல. காரணம், ஆவணப்பட திரையிடலுக்கான அரங்க ஒலி, ஒளி ஒழுங்குகள், ஓரளவு சிறப்பாகவே இருந்தன. ஆவணப்படம் திரையிடலில் பெரும்பாலும் அரங்கு நிறைந்து இருக்கும் எனச் சொல்ல முடியாது. இதற்கு முன்னால், சில வருடங்கள் முன்பு திரைத்துறையில் பணியில் இருக்கையில், பல முறை இதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன் என்பதால், அதற்கு நேர் எதிராக, அரங்கத்தின் இருக்கைகள் நிறைந்திருந்ததைத் தாண்டி, பார்வையாளர்கள் நின்று கொண்டும் இருந்தது உள்ளுக்குள் ஒருவிதமான உற்சாக மனநிலையைக் கொடுத்தது. ஆவணப்படம் ஆரம்பித்து திரையில் எழுத்துக்கள் தோன்ற ஆரம்பிக்க, எழுத்துக்கள் திரையில் வடிவமைக்கப்பட்ட விதமே அட்டகாசமாய் இருந்தது. அதற்கான பின்னனி இசையும் செம்ம. எழுத்துக்கள் போய்க் கொண்டிருக்கும் போதே சாரு திரையில் தோன்றும் அந்த முதல் பிரேம் இருக்கிறது இல்லையா அது அட்டகாசம். கூட்டத்தின் நடுவில் சாரு நடந்து வர, சாருவின் முகத்தை திரையில் பார்த்த நொடியில் விசிலைப் பறக்க விட்டேன். நான் விசில் அடிக்கும் சத்தத்தை கேட்டதும், முன்னால் இருக்கையில் இருந்த சில பேர் திரும்பிப் பார்க்க, திரும்பியவர்களின் பார்வை விஷ்ணுபுர வட்டத்தில் விசிலா என்பது போல் இருந்தது. அதனைப் பற்றி தனிப் பதிவே எழுத வேண்டும், அதனால் அதை இங்கே பேச வேண்டாம். யார் எப்படி திரும்பிப் பார்த்தாலும் goosebump ஆன காட்சிகளில் கட்டுப்படுத்த முடியாமல் விசில் அடித்தபடியே இருந்தேன்.

சரி த அவ்ட்ஸைடர் ஆவணப்படம் எப்படி, என்னை அசத்திய முதல் மூன்று விஷயங்களை சொல்லிவிடுகிறேன். முதல் விஷயம் படத்தொகுப்பு, இரண்டாவது ஒளிப்பதிவு, மூன்றாவது இயக்கம். 45 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படத்தை கொஞ்சம் கூட தொய்வே இல்லாமல் அட்டகாசமாக படத்தொகுப்பு செய்திருந்த அத்தியப்பன் சிவா மற்றும் அவரோடு சேர்ந்து பணியாற்றிய கணேசன் அன்பு இருவருக்கும் வலிமையான கைகுலுக்கல்கள். அதுவும் 10 நாட்களுக்குள் அந்தப் பணியை இந்தளவு நேர்த்தியாக செய்வதெல்லாம் வாய்ப்பேயில்லை செம்ம. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், ஆவணப்படத்தில் சாருவைப் பற்றி பேசும் பலரின் நேர்காணல்களை கட் செய்திருந்த விதம் ரகளை. ஒவ்வொருவரின் பேச்சின் தொடர்ச்சியையும் மற்றவர்களின் பேச்சோடு இணைத்து மிக நுட்பமாக கட் செய்திருந்த விதம் ரிதமாக, மிக, மிக சுவாரஸ்யமாக இருந்தது. அடுத்ததாக ஒளிப்பதிவு பல காட்சிகளின் கோணங்கள் அட்டகாசம். சாரு அமர்ந்து பேசும் பெரும்பாலான இடங்களின் சட்டகம் (Frame) செம்ம. கடற்புறக் காட்சிகள் மற்றும் பயணக் காட்சிகள் மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தன. அதுவும் தாய்லாந்து பப்புகளில் சாருவின் ஆட்டம் அதகளம். இதற்கெல்லாம் விசிலடிக்காமல் இருந்தால் எப்படி வாய்ப்பேயில்லை. அடுத்ததாக இயக்கம், மேலே சொல்லியுள்ள இரண்டுமே இயக்கத்துக்குள் வரும் என்பதால், மூன்றாவதாக இயக்கத்தைப் பற்றி. சாருவை பற்றிய ஆவணப்படம் எங்கிருந்து தொடங்கி எதனை நோக்கிப் போக வேண்டும், அது எந்தெந்த வழிகளில் பயணிக்க வேண்டும் என்கிற தெளிவானதொரு பயணம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை மிகச் சீராக, சிறப்பாக இருந்தது. இடையில் அதனைத் தன்னுடைய நேர்காணல் வாயிலாகவே அராத்து விளக்கியது, விளக்கிய விதம் இரண்டுமே தரமான சம்பவம். சாரு எழுதியிருந்ததை வைத்து குறைவான நாட்களில் மிக, மிக நிறைவானதொரு ஆவணப்படத்தை சாத்தியமாக்கிய அராத்துவிற்கு சாருவின் ரசிகனாக இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

ஆவணப்படத்தின் இறுதியில் வரும் அராத்துவின் வருகையை இன்னும் கொஞ்சம் அதகளமாய் எடுத்திருக்கலாமோ எனத் தோன்றியது. அராத்துவின் பார்வையில் த அவ்ட்ஸைடர் ஆவணப்படம் இன்னும் முழுமை பெறவில்லை என்பதால், மீண்டும் ஒரு அதகளமான காட்சியை எடுத்து இணைக்க வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி இசை பல இடங்களில் மிக அருமையாக, துள்ளலாக இருந்தது. இறுதி வடிவத்தில் அது இன்னும் மெருகேறும் என நம்புகிறேன். ஆவணப்படத்தின் இறுதியில், இதன் தொடர்ச்சி சிலேயில் சாருவுடன் என முடித்திருந்தது. பார்வையாளர்கள் அனைவரையும் சீலேவில் சாருவைப் பார்க்க மரண வெயிட்டிங்கில் இருக்க வைத்திருக்கிறது. எனக்குத் தெரிந்து தமிழில் சாரு போன்ற ஒரு மாபெரும் எழுத்தாளுமையின் வாழ்வியல் பயணத்தை, ஆவணப்படமாக, அதுவும் எழுத்தாளரே தன் வாழ்வியல் பயணத்தை அவரின் நேர்காணல் வழியாகவே சொல்லிச் செல்வது போல் எடுத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த வகையில் இல்லை என்றே நினைக்கிறேன். அந்த வகையில் தமிழில் மிக, மிக முக்கியமான ஆவணப்படமாக இது மாறியிருக்கிறது. ஆவணப்படம் என்றாலே அது ஒரு மென் சோகத்தோடு, மெதுவாகத் தான் நகரும் என்கிற மனநிலையை அடித்து நொறுக்கியிருக்கிறது த அவ்ட்ஸைடர். ஒட்டு மொத்த குழுவுக்கும், அராத்துவுக்கும் மீண்டும் ஒரு முறை இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள சாருவின் புகைப்படத்தை அனுப்பியது நண்பர் சுதர்ஷன். சுதர்ஷனுக்கு நன்றியும், மகிழ்வும்…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916