அன்பு எனும் வெங்காயம்…
உரிக்க, உரிக்க ஒன்றுமே இல்லை வெங்காயம் என்கிற சொலவடை மிகப் பிரபலமானது இல்லையா?. அன்பும் அப்படித் தான் ஒன்றுமேயில்லாத வெங்காயமாக எப்படி இருக்கிறது என்பதை அன்பு நாவலில் தோலை உரித்துத் தொங்கவிட்டிருக்கிறார் சாரு. நாவல் கைக்கு வந்து இரண்டு நாட்களில் கிடைக்கிற கேப்பில் எல்லாம் வாசித்து முடித்தாயிற்று, அதனைப் பற்றி எழுதத் தான் மிகத் தாமதமாகி விட்டது. சரி அன்பு என்பது இங்கே என்ன லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் பார்க்கலாம். முதலில் விலங்கிடம் இருந்து ஆரம்பிக்கலாம். காட்டு விலங்குகளில் மிக, மிக முக்கியமானது யானை. விலங்குகளில் மிகவும் பலம் மிக்கதும் கூட, புத்திசாலி. ஒரு காட்டையே உருவாக்கக் கூடிய திறனை தன்னகத்தே கொண்டது என யானைப் பற்றி சொல்ல இங்கே ஏராளமாக உள்ளது. ஆனால் அதனைப் பற்றி பேசுவது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். அப்படிப்பட்ட விலங்கான யானையையே நம்முடைய சுயநலத் தேவைக்காக, அன்பாக பார்த்துக் கொள்கிறோம் என்கிற போர்வையில் என்ன செய்து வைத்திருக்கிறோம் என யோசித்தால், இந்த மனிதனின் குரூரமான அயோக்கியத்தனம் பல்லிளிக்கும். இந்த மனிதன் என்கிற சமூக விலங்கு, அன்பு என்கிற அயோக்கியத்தனத்தின் பேரில் யானையை அது சுதந்திரமாக சுற்றித் திரிந்த காட்டில் இருந்து பிரித்துக் கொண்டு வந்து, வேடிக்கை வித்தை காட்ட வைத்து அன்பாக பார்த்துக் கொண்டிருக்கிறான், கேட்டால் அதனை எவ்வளவு அக்கறையாக, கரிசனமாக பார்த்துக் கொள்கிறோம் தெரியுமா, அதுக்கு எத்தனை விதமான மொழி தெரியும், தெரியுமா என சிலிர்க்க வைத்து நெஞ்சை நக்கி எடுத்து விடுவார்கள். அந்த யானை தான் பாவம் எனக்கு இத்தன மொழிய சொல்லிக் குடுன்னு நான் உன்கிட்ட கேட்டனா என மனதுக்குள் யோசிப்பதை வெளியில் சொல்ல முடியாமல், பரிதாமாய் நின்று கொண்டிருக்கும். மனிதனிடம் சிக்கிய பலம் மிக்க விலங்கின் நிலையே இப்படி எனில், மனிதனிடம் சிக்கிய சக மனிதனின் நிலை.
அந்த நிலை எப்படியானதாக இருக்கும் என அணு, அணுவாக ரத்தமும் சதையுமாக அன்பு நாவல் முழுமைக்கும் விவரித்து செல்கிறார் சாரு. சக மனிதன் மீது செலுத்தப்படும் அன்பு. அவனை எப்படிப் பார்க்க வைக்கிறது என்றால், அவனுக்கு ஒன்றுமே தெரியாது சரியான முட்டாக் கூமுட்டை, நாம் தான் அவன் மீது அன்பு செலுத்தி, அவனை வழி நடத்திக் கொண்டு போக வேண்டும் என்கிற உன்னதமான மனநிலைக்கு இட்டுச் செல்கிறது. அன்பு செலுத்துபவன் தான் அன்பு செலுத்துவதாக சொல்லும் நபரை மேலே சொன்ன கண்ணோட்டத்தில் தான் பார்ப்பான் என்றால், அன்பு செலுத்தப்படுபவரின் கதி என்னவாகும் என யோசித்துப் பாருங்கள். அன்பின் பெயரால் தான் முட்டாளாக நடத்தப்படுவதின் வலி எப்படியானதாக இருக்கும் என உணர்ந்திருக்கிறீர்களா. வாழ்வில் அதனை ஒரு முறையாவது உணர்வதற்காகவாவது அன்பு நாவலை வாசியுங்கள். அன்பு நாவலை எவ்விதமான முன் முடிவும் இல்லாமல், திறந்த மனதுடன் வாசிக்கும் ஒருவன், சத்தியமாய் தன் வாழ்நாளில் அன்பு என்று சொல்லிக் கொண்டு எவர் ஒருவரையும் வதைக்கும் நிலைக்குப் போக மாட்டான். அப்படியான வலியான வதையை நக்கல் நையாண்டியோடு ஒருவரால் எழுத முடியுமா எனக் கேட்டால், முடியும் என்பதற்கு சாட்சி சாருவின் அன்பு நாவல். வாசிக்கும் போது பல இடங்களில் வெடித்து சிரித்தும், சில இடங்களில் ஆழ்ந்த மெளனத்தோடும் மற்றும் சில இடங்களை மிகப் பெரும் வலியோடும் வாசித்து முடித்தேன். பிணங்களின் மீது நின்று கொண்டு தான் எழுதுகிறேன், சமயத்தில் என் பிணத்தின் மீதும் என சாரு பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை அன்பு நாவலில் ஓரிடத்தினை வாசிக்கும் போது உணர்ந்தேன். அந்தப் பகுதியை கடந்து போக எனக்கு வெகு நேரம் ஆகியது. நாவலில் வரும் அந்த இடத்தை பக்கத்தினை குறிப்பிட்டு எழுத வேண்டும் என நினைத்தேன், இதனை வாசிக்கிறவர்கள் நேராக அந்த பக்கத்திற்கு போய் வாசிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால் தவிர்த்து விட்டேன்.
நாவலில் ஓரிடத்தில் அவங்க ரெண்டு பேர் நம்பரையும் பிளாக் பண்ணிருங்க என்கிற உத்தரவு சாருவுக்கு வருகிறது, அவரும் சரி எனச் சொல்லிவிடுகிறார். சத்தியமாய் சொல்கிறேன் அந்த இடத்தினை கண்டிப்பாக என்னால் சும்மா வாசித்துவிட்டு கடந்து போக முடியவேயில்லை. நம்பர பிளாக் பண்ணிடுங்க என்று சொன்னதற்கு பதிலாக அவரை நிற்க வைத்து உயிரோடு எரித்திருக்கலாம் என என் மனதுக்குள் தோன்றியது. அப்படித் தோன்றியது எனக்கு மட்டும் தானா அல்லது நாவலை வாசிக்கும் எல்லோருக்குமா எனத் தெரியவில்லை. அன்பு என்பது எந்த அளவுக்கு ஒருவனின் உயிரோட்டமான உணர்வை நிற்க வைத்து எரிக்கும், செருப்பால் அடிக்கும் என்பதற்கான சாட்சி அந்த இடம். இப்படி நாவல் முழுமைக்கும் பல சம்பவங்கள் விரவிக் கிடக்கின்றன. இவ்வளவு நடக்கிறது இல்லையா. அதில் சாரு என்னவாய் இருக்கிறார் என்றால், ஒரு முறை சாரு ஒரு நிகழ்வையோ அல்லது ஒரு நபரையோ திட்டி எழுதியிருந்தார். அன்றோ அதற்கு அடுத்த நாளோ அவரிடம் அது பற்றி கேட்ட போது, அந்தக் கோபமெல்லாம் ஒரு நாள் தான் வெங்கட் எனச் சொன்னார். ஆனால் அவர் எழுதியிருந்த விஷயத்தை வேறு யார் அணுகியிருந்தாலும் அந்த நிகழ்வின் மீதோ அல்லது அந்த நபரின் மீதான வன்மத்தை, கோபத்தை தன் வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டே இருப்பார்கள். அவ்வளவு ஏன், இந்த நாவலில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் வேறு ஒருவரின் வாழ்வில் நடந்திருக்குமானால், அந்த நபர் என்னவாக இருப்பார் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க இயலவில்லை. இவ்வளவையும் சாரு என்னாவாக தன்னுள் எடுத்துக் கொள்கிறார் என்பது தான் நாவலின் ஆன்மாவே. இவ்வளவு நடக்கிறது, அன்புக்கு எதிரான நாவல் என்று வேறு நம் மனதுக்குள் யோசிக்கிறோம் இல்லையா?. அப்படியானால், அன்புக்கு எதிரானது எது என கண்ணை முடிக் கொண்டு யோசித்தால், உடனடியாகச் சொல்லிவிடலாம் வெறுப்பு. ஆனால், அன்பு நாவலில் எப்படித் தேடினாலும் எங்குமே வெறுப்பைக் காண முடியாது. அப்படியானால் அன்பு என்பது என்ன? நாவலை வாங்கி வாசியுங்கள் புரியும். மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916