வாழ்ந்து பார்த்த தருணம்…202

பயத்திரை…

இன்று அமாவாசை இல்லையா. அதற்கான சில பிரத்யேகமான பின்பற்ற வேண்டிய மரபுகள் சில உண்டு. ஓடிக் கொண்டே இருக்கும் வாழ்வில் அது பற்றியெல்லாம் நினைவுகளில் தங்குவதில்லை. வீட்டில் இருப்பவர்கள் சொன்னவுடன் மண்டைக்குள் செய்ய வேண்டிய மரபுகள் ஞாபகம் வரும். அதில் முக்கியமானது. காலையில் எழுந்து குளித்து. முதல் வேலையாக பசுவுக்கு உணவளிப்பது. அதில் பச்சரிசி, வெல்லம், எள்ளு, வாழைப்பழம் மற்றும் அகத்தி. காலை எழுந்ததும் முதல் வேலையாக அதற்குரிய பொருட்கள் வாங்கி வந்து அதனைத் தயாரித்து பசு மாட்டிற்கு கொடுப்பதற்காக எடுத்துப் போனேன். கிராமத்தின் நுழைவாயிலில் தான் வீடு என்பதால், அங்கிருக்கும் தெரிந்த நட்பு வட்டத்தில் சொல்லி, அவர்கள் மாடு வளர்க்கும் தொழுவதுக்கு சென்றிருந்தேன். மற்ற பொருட்கள் எல்லாம் என்னிடம் இருந்தன. அகத்தி மட்டும் நண்பரின் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி அவர் வாங்கி வந்திருந்தார். தொழுவத்தின் அருகே போய் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அவருடன் தொழுவத்திற்குப் போனால், பிரதான இரும்பு வாயிலை அடைந்தவுடன், அங்கே இருந்த நான்கைந்து ஆடுகள் வாயிலுக்கு அருகே வந்துவிட்டன. அவைகள் நண்பரின் கையில் இருக்கும் அகத்தியை பார்த்ததும், வாயிலை திறக்கும் போதே அவரின் கைகளை நோக்கி தவ்வ ஆரம்பித்து விட்டன. அவர் அந்த ஆடுகளை நெட்டித் தள்ளியபடி, நீங்க வாங்க தம்பி என மாடு கட்டியிருந்த தொழுவத்திற்கு கூட்டி போனார். அங்கே ஒரு பசு மாடு அத்தோடு பத்து நாட்கள் முன்பு அந்த பசு ஈன்றிருந்த கன்றுக்குட்டி மற்றும் நல்ல திமிழுடன் நிற்கும் காளை மாடு ஒன்றும் இருந்தன. நல்ல நீளமான கொம்பிருக்கும் அந்தப் பசுவைப் பார்த்ததும் அருகில் செல்ல சிறிது யோசித்தேன், ஆனால் அந்தப் பசு என் கையிலிருந்த பைக்குள் வாழை இலையுடன் வைத்திருந்த பச்சரிசி கலவையைப் பார்த்ததும் சாதுவாக பையையேப் பார்த்துக் கொண்டிருந்தது. அது என் பையை கவனிப்பதைப் பார்த்ததும் யோசிக்காமல் அதன் அருகில் போய் வாழை இலையை விரித்து, கொண்டு வந்திருந்த பச்சரிசி கலவையை அதில் பரப்ப, பரப்பிக் கொண்டிருக்கும் போதே தன் கொம்புகள் என் மேல் இடிப்பதை எல்லாம் பற்றிக் கவலைப்படாமல் அதனைச் சாப்பிட ஆரம்பித்து விட்டது.

அங்கிருந்த கன்றுக்குட்டிக்கு சின்ன வாழைப்பழம் ஒன்றினை கொண்டு போயிருந்தேன், பிறந்து பத்து நாட்கள் தான் ஆகிறது என்பதால், கூட வந்தவரிடம், வாழைப்பழம் கொடுத்தா சாப்பிடுமா எனக் கேட்டேன். வாய பிடிச்சு ஊட்டுனா சாப்பிடும் எனச் சொன்னார். வாழைப்பழத்தை உரித்து சிறிது மட்டும் வலது கைகளில் எடுத்து அதன் வாய் அருகில் கொண்டு போனேன். அது சாப்பிட மறுத்துக் கொண்டிருந்தது. அந்த இடைவெளியில் இடது கையில் இருந்த மீதி பழத்தை யாரோ பிடுங்குவது போல் இருக்க, திரும்பினால் அங்கிருந்த ஆடு ஒன்று அதனை கபளீகரம் செய்து கொண்டிருந்தது. இடது கையில் வைத்திருந்த மீதி பழம் மொத்தமும் அதன் வாய்க்குள் போய்விட்டது. சரியென நண்பர் எடுத்து வந்திருந்த அகத்தியையும் வாங்கி கொஞ்சம் பசு மாட்டுக்கு வைத்துவிட்டு. மீதியை ஆடுகளுக்கு கொடுத்து விட்டுத் திரும்பினால். நடந்த எல்லாவற்றையும் அங்கிருந்த காளை மாடு கவனித்தபடி இருந்தது. உள்ளே வந்து அந்த தொழுவத்தில் இருந்த அனைத்திற்கும் உணவுக் கொடுத்தாகி விட்டது. அந்தக் காளை மாட்டைத் தவிர. எல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, என்னை ஒரு பார்வைப் பார்த்தது பெரிய திமிலுடன் இருந்த அந்தக் காளை மாடு. அந்தப் பார்வை என்னை என்னவோ செய்தது. அதனை எதிர் கொண்ட எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காளை மாட்டுக்கு எதுவும் கொடுக்க வேண்டும் என எனக்கு ஏன் தோன்றவில்லை என யோசித்தேன். பயம். ஒரு நிமிடம் அந்த பயத்தை சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு. ஆட்டிற்கு போட்டிருந்த அகத்தியில் இருந்து சில கொப்புக்களை எடுத்து, கொஞ்சம் கூட பயமே இல்லாமல் அந்தக் காளை மாட்டுக்கு அருகில் போய் அதற்குச் சாப்பிடக் கொடுத்ததும், அது எவ்வித சலனமும் இல்லாமல் அதனை வாங்கி சாப்பிட்டவுடன் மனதிற்குள் அப்படி ஒரு திருப்தி. நமது சக உயிரான விலங்கிற்கு மனிதனின் மரபெல்லாம் தெரியாது இல்லையா. அந்த நேரத்தில் அதற்கு தெரிந்தது எல்லாம் பசி மட்டுமே. நம்ம சக பங்காளிங்க எல்லாத்துக்கும் சாப்பாடு கொடுத்துட்டு நம்மள மட்டும் கண்டுக்காம போறாங்கே என அது யோசித்ததில் தப்பு எதும் இல்லை. தவறு என் மீது தான். மன்னிச்சுடு தங்கம் என்று சொல்லியபடி தான் காளை மாட்டுக்கு அகத்தியைக் கொடுத்தேன்.

நம் மனதில் எப்பொழுதுமே நம்மை சுற்றியுள்ள சக உயிர்கள் பலவற்றைப் பற்றிப் பலவிதமான பிம்பங்கள் உருவாக்கப்பட்டு உலவவிடப்பட்டிருக்கின்றன. அதில் மிகப் பெரும்பான்மையானவை பயத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அந்த பயத்தின் காரணமாகவே எறும்பில் இருந்து எண்ணற்ற உயிர்களை கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் சித்திரவதை செய்தோ அல்லது கொன்று குவித்தோ கொண்டு இருக்கிறோம். இரண்டு நாட்கள் முன்னால் கூட என் மகளை பள்ளியில் இறக்கிவிட சென்றிருக்கும் போது. அந்தப் பள்ளியைப் பார்த்துக் கொள்ளும் பாட்டி ஒருவர் தான் வளர்க்கும் நாயை அருகில் கூப்பிட்டுக் புலம்பிக் கொண்டிருந்தார். நாய்ன்னா குரைக்கத்தான் செய்யும். அதுக்காக கல்ல கொண்டி எறிவியா. அதுவும் கண்ண பாத்து எறிஞ்சிருக்கானுவ. படுப்பாவிப் பசங்க, அவிங்க கை அவிஞ்சு தான் போகும் எனப் புலம்பியபடியேத் திட்டிக் கொண்டே இருந்தார். அப்பொழுது தான் கவனித்தேன். எப்பொழுதெல்லாம் என் மகள் படிக்கும் பள்ளிக்குள் காலடி எடுத்து வைக்கிறேனோ, அப்பொழுதெல்லாம் என் கால்களை வந்து முகர்ந்து பார்த்து வாலாட்டும் மணி என்கிற அந்த நன்றியுள்ள ஜீவனின் வலது கண்ணின் அருகில் ஆழமான வடு ஒன்று கீறியிருந்ததை. அதனைப் பார்த்த ஒரு நிமிடம் என் மனதினுள்ளும் அந்த வலியின் கீறல் ஒன்று தோன்றி மறைந்தது. ஒரு வகையில் இங்கே உருவாக்கப்பட்டுள்ள பயம், மிகப் பெரும்பாலும் சக உயிர்கள் மீதானது. ஆனால் அனுபவத்தின் அடிப்படையில், மனிதனைப் போல் மிக மோசமாக பயமுறுத்தும் வேறு உயிர் ஒன்று கண்டிப்பாக இந்த உலகத்தில் இல்லை. மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும். மனிதனைப் போல் சிந்தித்து, சித்திரதை செய்து காயப்படுத்துவது, கொல்வது எல்லாம் கிடையாது. நமக்குள் நமக்கு நாமே ஆயிரத்தெட்டு பயங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு. சக உயிர்களைப் பற்றிக் குழந்தையிலிருந்து பயத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பது எந்த வகையில் ஏற்புடையது என என்ன யோசித்தும் விளங்கவில்லை. ஒரு வேளை மனிதன். தான் விலங்கை விட மோசமானவன் என்பதை வக்கனையாக மறைக்கத்தான். சக உயிர்கள் மீது பயத்தை உருவாக்கி உலவவிட்டுக் கொண்டிருக்கிறானோ என்னவோ. மனிதன் தானே, அப்படிச் செய்யும் வாய்ப்பு கண்டிப்பாக இருக்கிறது. காரணம் அவனால் மட்டுமே அப்படிச் செய்ய முடியும்.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916