முகிற்…
எழுதுவதற்கு எப்பொழுது நேரம் ஒதுக்குகிறீர்கள் என்கிற கேள்வி என்னுடன் இந்த வணிக வாழ்வியலுக்காக ஓடிக் கொண்டிருக்கும் சக ஓட்டக்காரர்கள் பல பேரால், பல முறை கேட்கப்பட்டிருக்கிறது. காரணம், இங்கே உயிர் வாழ்தலுக்காக ஓடும் நிலையில் இருக்கும் பல கோடி பேருடன் ஓடிக் கொண்டிருக்கும் ஒருவன் நான். அப்படியிருக்கையில் இவனுக்கு எழுத, அந்த எழுத்தைப் பற்றி யோசிக்க, சிந்திக்க. அப்படி சிந்திப்பதையும், யோசிப்பதையும் எழுதி பதிவேற்ற எப்படி நேரம் கிடைக்கிறது என்பது தான், அந்த சக ஓட்டக்காரர்களின் மனதினுள் கூடாயும் கேள்வி. அவர்களின் கேள்வி ஒரு பக்கம் ஓரமாய் இருக்கட்டும். ஒரு வகையில் எனக்கு என்னுடைய எழுத்து என்பது, அப்படி உயிர் வாழ்தலுக்காக ஓடும் ஓட்டம் எனும் பெரும் வறண்ட பாலவனத்தின் இடையில், பாறைகளில் இருக்கும் இடுக்களில் இருந்து வழியும் நீர் கசிவை போலானது. அந்த நீர் கசிவை தக்க வைக்க பல நூறு முறை போராட வேண்டியிருக்கிறது. ஓடும் ஓட்டம் ஒரு பக்கம் அழுத்தம் என்றால், எழுதாமல் இருப்பது மற்றொரு வகையில் மிக பெரும் அழுத்தம் தான். எழுத்துக்காக மனதில் தோன்றும் எண்ண அலைகளைத் தக்க வைத்து, அதற்கான தலைப்புக்குள் மொத்த எண்ண அலைகளையும் அடைத்து வைத்து விடுகிறேன். அப்படி அடைத்து வைக்கப்பட்ட தலைப்பு மட்டுமே நிறைய இருக்கிறது. இப்படி தலைப்பாக மட்டும் வரிசையாக அடுக்கிக் கொண்டே போனால், எப்பொழுது எழுதுவது. சரி இந்த அழுத்தத்தில் இருந்து வெளிவந்து எழுத வேண்டும் என்றால், ஒரு வகையில் எதன் மீதாவது பித்து பிடித்து திரிய வேண்டும். அதற்கு சரியான வ(லி)ழி இசை தான். அப்படி எந்த இசைக் கோர்வையாவது மொத்தமாக கவனக்குவிப்பில் என்னுடைய மனதை நிலை நிறுத்திவிட்டால், எல்லாவிதமான அழுத்தங்களும் கரைந்தோடி விடும். மேற்சொன்ன அழுத்தங்கள் ஒவ்வொரு முறையும் அதிகமாகும் போதெல்லாம், அப்படி ஒரு பாடல் ஒன்று என்னை மீட்டி, மீட்டுக் கொண்டு வந்துவிடும். இப்பொழுதும் அப்படியே. அப்படி ஒரு பாடலை, ஒரு நாளைக்கு குறைந்தது பத்து முறையேனும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
சில இசைக் கோர்வைகளில் மட்டுமே தமிழ் வார்த்தைகளைக் கொண்டு அட்டகாசமாக விளையாட முடியும். அதுவும் காதல் என்கிற பதம் வருகையில் இசையமைப்பாளர்களால் கோர்க்கப்பட்ட இசைக்குள் வார்த்தைகளை உட்கார வைக்க சில நேரங்களில் அருமையாக, அதகளமாக அந்த வார்த்தைகளின் உள்ளே விளையாட முடியும். அப்படி ஒரு அட்டகாசமான விளையாட்டினைத் தான் சமீபத்தில் வெளியாகி உள்ள தெலுங்கு குஷி படத்தின் தொடக்கப்பாடலாக இடம் பெறும் பாடலின், தமிழ் மொழி பெயர்ப்புக்காக எழுதப்பட்டிருக்கிறது. பாடலின் அடிநாதம் காதல். அதனை மூன்றே நிலையில் அணுகி அதகளம் ஆடியிருக்கிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கி. முதலில் தன் காதலியைப் பற்றிய தன்னுடையப் புரிதல் கலந்த கற்பனை, இரண்டாவதாகத் தனது புரிதல் நடந்தால் என்கிறக் கற்பனைக் கலந்த கேள்வி. மூன்றாவதாக அந்தக் கற்பனை நிஜமானால் நான் என்னவாக ஆவேன் என்கிற அறிக்கை. காதலுக்குள் கற்பனை குதிரை என்கிற ஒன்றினை தட்டிவிடும் போது, அது என்ன மாதிரியான வார்த்தை ஜாலங்களை எல்லாம் செய்யும் என்பதை இந்தப் பாடலின் வரிகளை வரி வரியாய் கேட்கும் போது புரிந்து கொள்ள முடியும். சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார் மதன் கார்க்கி. அதற்கு ஏற்றார் போல இசைக் கோர்வையும் சரியான துள்ளலோடு தெறிக்க விட்டிருக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் என்றால். பாடலின் வரிகளில் வெளிப்படும் காதலின் பித்து நிலையை சரியாக உள்வாங்கி பாட வேண்டும் இல்லையா. அதனையும் இந்தப் பாடலைப் பாடியிருக்கும் அனுராக் குல்கர்னியும் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். மொத்தத்தில் இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் இசையும், வார்த்தைகளும், பாடப்பட்ட விதமும் எத்தனை முறை திரும்ப, திரும்பக் கேட்டாலும் ஒவ்வொரு முறையும் மனதுக்குள் முழுமையாய் நிறைந்து சிம்மாசனமிட்டு அமர்ந்துவிடுகிறது.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக எல்லாவிதமான அழுத்த நிலையில் இருந்தும், இந்தப் பாடல் என்னை வெளியில் இழுத்துக் கொண்டு வந்தபடி இருக்கிறது. அப்படி இந்தப் பாடல் வரிகளை கவனித்துக் கேட்கையில் தான் முகிற் என்கிற வார்த்தையைப் பற்றி இணையத்தில் தேட. முகிற் என்றால் மேகக் கூட்டம் என்கிற விஷயம் தெரிய. அதனைத் தாண்டி தேடுகையில் முகிற் என்பது வெறுமனே மேகக் கூட்டத்தை குறிக்கும் சொல் அல்ல. அதற்கு தனித்துவமான அர்த்தம் இருக்கிறது என்பதும் தெரிந்தது. அப்படி இணையத்தில் தேடிக் கண்டடைந்தது என்னவென்றால், முகிற் என்றால் கிமுளுஸ் மேகங்களை(Cumulus Clouds) , முகிற் கூட்டத் திரள் என்று அழகு தமிழில் சொல்வர். இவை , ஒன்றன் மேல் ஒன்றாக , அழகாக , குவிக்கப்பட்ட , திகைப்பு ஊட்டக்கூடிய வெள்ளை மேகங்கள். இவ்வகை மேகங்கள் , சிறு சிறு தண்ணீர் துளிகளை தன்னுள்ளே கொண்டது! 3)சிர்ருஸ் மேகங்களை(Cirrus clouds) உயர் வானத்து முகில் வகை என்று குறிப்பிடுவர். சரி இதனைத் தாண்டி இந்தப் பாடல் இசையமைக்கப்பட்ட அசல் மொழியான தெலுங்கில் எப்படி இருக்கிறது என்பதையும் கேட்டேன். அப்பொழுது தான் தெரிந்தது. இந்த இசைக் கோர்வைக்கு ஏற்றார் போலான தெலுங்கு வார்த்தைகளை கண்டடைய முடியாமல் ஹிந்தி வார்த்தைகளை மிக முக்கியமான இடங்கில் பயன்படுத்தி “படுத்தி” இருக்கிறார்கள். அதனைக் கேட்ட உடனே தெரிந்து விட்டது. இந்தப் பாடல் இசையமைக்கப்பட்ட அசல் மொழியான தெலுங்கினை விட தமிழில் ஒரு படி மேலாக அதகளப்படுத்தியிருக்கிறது என்பது. இன்னும் குறிப்பாக, இறுதியாக விழா, இரு”ப்பாயா” , இரு”ந்தால்”, இரு”க்கையில்” என்கிற வார்த்தை விளையாட்டுக்குள் ஒளிந்திருக்கும் காதலான வரிகளின் விழாவாய் என் காதருகில் இந்தப் பாடலிருந்தால் குஷி. மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916